ராமகிருஷ்ணா மடம்

சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மடம் என்பது சுவாமி விவேகானந்தருக்கு ஏற்பட்ட செல்வாக்கை ஒட்டி பார்ப்பனர்கள் உபயோகப்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சி முறையில் ஏற்படுத்தப்பட்ட மடம். இதற்குப் பச்சை வர்ணாச்சிரம பார்ப்பனர்களே காரியத்தில்  சர்வாதிகாரியாய் இருப்பது வழக்கம். இம் மடத்தில் இன்னும் பார்ப்பனருக்கு வேறு இடம், பார்ப்பனரல்லாதாருக்கு வேறு இடம் என்கின்ற பிரிவு பல காரியங்களில் இருந்து வருவதோடு பிள்ளைகளுடைய பிரார்த்தனை விஷயத்தில்கூட வ.வெ.சு. அய்யர் குருகுலத்தில் இருந்தது போலவே நடந்து வருகிறது. ஆனால் இதற்கு பணவருவாய் மாத்திரம் பெரிதும் ஏன் முக்கால் பாகத்துக்கு மேல் பார்ப்பனரல்லாதாரிடையே இருந்துதான் வருகிறது.

சர்க்காரில் மிக செல்வாக்குள்ள உத்தியோகத்தில் இருக்கும் பல பார்ப்பனர்கள் தாங்கள் உத்தியோக செல்வாக்கை உபயோகித்து பாமர மக்களுடைய பணம் தங்களுக்கு வந்து சேரும்படி பல வித தந்திரங்கள் செய்து பணம் சேர்க்கிறார்கள்.

இது தவிர அரசாங்கத்தாரிடம் இருந்தும் பண வருவாய் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தடவை சட்டசபையில் இவ்விஷயத்தைப் பற்றி விவாதிக்க ஏற்பட்டதில் சர்க்காரில் செல்வாக்குள்ள உத்தியோகத்தில் உள்ள பார்ப்பனர் களின் வேண்டுகோளால் பின் வாங்கிக் கொள்ளப்பட்டது.

இப்போதும் அந்த மடத்தில் ஜாதி வித்தியாசமும் இடப் பிரிவும் இருப்பதோடு அதன் பேரால் உள்ள பத்திரிகையானது பார்ப்பனப் பிரசாரம் செய்வதோடு மாத்திரமல்லாமல், எந்தக் கூட்டத்தாரை ஏமாற்றிப் பணம் கொள்ளை கொள்ளுகின்றதோ அந்தக் கூட்டத்தாரையும் இழித்துரைத்து விஷமப் பிரசாரம் செய்கின்றது.

இதைப் பற்றி விடுதலைப் பத்திரிகை எடுத்துக் காட்டியதற்கு ஆக அம்மடத்திற்கு, வெறும் நிமித்திய மாத்திரமாய் பெயருக்கு இருக்கும் தலைவரான ஒரு அமிர்தேஸ்வரானந்த சுவாமி என்பவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது ராமகிருஷ்ண மடத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையானது ஜஸ்டிஸ் கக்ஷியை தாக்கி எழுதியிருப்பதற்கு ஆக நான் மிகுதியும் வருந்துகிறேன். இனிமேல் இம்மாதிரி நடப்பதில்லை என்பதாக எழுதிக் கொண்டிருக்கிறார்.

இந்த மன்னிப்பை விடுதலை ஒப்புக்கொண்டு இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிப்புடன் நின்று விட்டது.

ராமகிருஷ்ண மடத்தில் நடக்கும் பார்ப்பனீய விஷமம் இது ஒன்று மாத்திரமல்லாமல் இப்போது மாத்திரமல்ல இருந்து வருகிறது என்பதைப் பார்ப்பனரல்லாத மக்கள் உணர வேண்டுகிறோம்.

சுருங்கச் சொன்னால் காந்தியாரின் பெயரை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் எவ்வளவு தொல்லை விளைவிக்கிறார்களோ அதைவிடக் கொஞ்சமென்று சொல்லிவிட முடியாது.

அது ஒரு பார்ப்பன அக்கிரகாரம் மாத்திரமல்லாமல் பெரிதும் பார்ப்பனர்களுக்கு மாத்திரம் சோறு படி போடும் ஒரு தர்ம சத்திரம் போன்றதென்றே சொல்ல வேண்டும். ஆகையால் பார்ப்பனரல்லாத சட்டசபை மெம்பர்கள் இதில் பிரவேசித்து சர்க்காரிலிருந்து அதற்கு இனி பணம் போகாமல் இருக்கும்படிக்கும் பொது ஜனங்களிடம் டிராமா, கதை, காலட்÷க்ஷபம், பஞ்ச நிவர்த்தி, வெள்ளக் கஷ்ட நிவர்த்தி, புயல் கஷ்ட நிவர்த்தி, பூகம்பக் கஷ்ட நிவர்த்தி என்னும் பேரால் பணம் அச்சங்கத்துக்குப் போகாமல் இருக்கும்படியாகவும் பார்த்துக்கொள்ள வேண்டியது முக்கிய கடமை ஆகும்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  03.11.1935

You may also like...