காங்கிரஸ்காரர்களின்  தகுடுதத்தம்

 

கராச்சியில் காங்கிரஸ்காரர்கள் கூடிச் செய்த தீர்மானங்களில் ஒன்று சம்பளத் திட்டத்தைக் குறித்ததாகும். அதில் இந்தியாவிலே உயர்ந்த சம்பளம் எனப்படுவது ரூ.500க்கு மேற்படக் கூடாது என்றும், இப்பொழுது கொடுத்து வரும் சம்பளக் கொள்ளையைக் குறைக்க வேண்டுமென்றும் எந்தக் காங்கிரஸ் காரர்கள் பேசினார்களோ அதே காங்கிரஸ்காரர்கள் இன்று பம்பாய் நகரசபை (இணிணூணீணிணூச்tடிணிண)யில் உதவிக் கமிஷனர் பதவியிலிருந்து வரும் தோழர் எ.பி.சிவதாஷனி என்பவர் வாங்கி வந்த ரூ.1750 ஐ ரூ.2000மாக மாற்று வதற்காக ஒரு தீர்மானத்தைக் காங்கிரஸ்காரர்களே ஆதரித்தவர்களுமாய்ப் பொறுப்பாளிகளுமாயிருக்கிறார்கள் என்று அறிவீர்களேயானால், அக்காங்கிரஸ் காரர்களின் தகுடுதத்தத்தை என்னென்று நினைக்கிறீர்கள்.

அகில இந்திய சட்டசபையில் காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் சகலரும் கராச்சித் தீர்மானத்தின்படி சம்பளத் திட்டத்தை ரூ.500 றாகக் குறைக்க வேண்டும் என்று வாய் வீச்சு வீசுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் பம்பாயில் இன்று அவர்கள் அதிகாரவர்க்கத்தில் இருக்கிற தங்களது கட்சிக்காரர் என்ற ஒரு எண்ணத்திற் காகவே இம்மாதிரிக் காரியங்கள் செய்யப்பட்டு வருமேயானால் அவர்களது யோக்கியதை எவ்வளவு தூரம் நாணயமானது என்பதை வாசகர்களே யோசித்துப் பாருங்கள்.

இத் தீர்மானத்தை ஆதரிக்கிறவர்கள் சொல்லும் சமாதானமாவது ஐ.சி.எஸ். படித்து லாபகரமான உத்தியோகத்தை விடுத்து இம் முனிசிபல் உத்தியோகத்திற்கு என்று உழைக்க முன் வந்தவருக்கு இவ்வளவு ஆவது சம்பளம் அளிக்கப்பட வேண்டாமா என்பதாகும். ஆனால் இன்று கல்கத்தா நகர சபையில் அதே உத்தியோகம் பார்த்து வருபவரும் ஐ.சி.எஸ். படித்து வந்தவருமான தோழர் சுபாஷ் போஸ் என்பவருக்கு ரூ.1200 வழங்கப்படுவது எப்படி நியாயமானதாகும்.

“”மக்களுக்காகவே உழைக்கிறோம் என்று சொல்லிவரும் ஐ.சி.எஸ். படித்துத் தனது லாபகரமான அல்லது ஆதாயகரமான உத்தியோகத்தை விட்டுவிட்டு வருபவர்களுக்கு ரூ.1750 என்பது ஒரு அற்பமான ஊதியமாக நினைக்கப்படுமானால் ஐ.சி.எஸ். படித்து விட்டு தங்கள் நாட்டை விட்டு 6000 மைல் கடந்து வந்து சேவை செய்யும் வெள்ளைக்கார ஐ.சி.எஸ். 5000 வாங்குவதில் தப்பென்ன?”

குடி அரசு  செய்தி விமர்சனம்  29.09.1935

You may also like...