தர்மராஜ்ய ஸ்தாபனம்
(ஒரு ஜோஸ்யம்)
எவர் எழுதினால் என்ன?
1.9.35ந் தேதி குடி அரசில் தர்ம ராஜ்ஜிய விளம்பரம் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தோம். இப்போது தர்மராஜ்ய ஸ்தாபனத்தைப் பற்றி ஒரு மானச ஜோசியம் எழுதுகிறோம்.
1936ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 8ந் தேதி டெல்லியில் தர்மராஜ்ய ஸ்தாபனம் என்பதாக எங்கும் ஒரே முழக்கம். நாலு பேர் சேர்ந்த இடத்தில் எல்லாம் அதே பேச்சு. பத்திரிகைகளில் எல்லாம் அதே எழுத்து. தர்மராஜ்ய பூபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்ட ராமராஜ கிருஷ்ண தேவ புஷ்ய மித்திர வர்மனுடைய வம்ச பரம்பரைப் பழமையைப் பற்றியும், அவருடைய குலப் பெருமையைப் பற்றியும், அவரது குணாதியசங்களைப் பற்றியும், பத்திரிக்கைகளில் எல்லாம் வானமளாவிய புகழ் மாலைகள். தர்மராஜ்யத்தின் அமைப்பு, அதன் சட்ட திட்டங்கள், அதன் புதிய அதிகாரிகள், அவர்களின் யோக்கியதாம்சங்கள், அன்று நடைபெறவிருக்கும் மகுடாபிஷேக வைபவத்தின் சிறப்பு, நிகழ்ச்சிக் குறிப்பு, நகரில் அதற்காகச் செய்யப்பட்டுள்ள அலங்காரங்கள் முதலானவற்றைப் பற்றிய செய்திகளும், வர்ணனைகளும், கட்டுரைகளுமே அன்றைய பத்திரிக்கைகளில் எல்லாம் நிறைந்திருந்தன. அன்றைய பத்திரிக்கைகளில் வெளிவந்த அபிப்பிராயங்களில் சிலவற்றின் சாராம்சத்தைக் கீழ்க் காண்க.
ஆரிய தர்மம் என்ற பத்திரிகையில் இந்தியாவை இனி மேற்கொண்டு, “ஆரிய வர்த்தம்’ ஒரு குடும்பத்தவர் போல் ஐக்கியமாயிருந்து தென்னாட்டிலுள்ள அசுரர், அரக்கர், ராக்ஷஸக் கூட்டங்களைத் தலையெடுக்கவொட்டாமல் அடக்கி வதைத்து, நாட்டை ஆரியர்களின் போக பூமியாக்கி இமயம் முதல் குமரி வரை எங்கும் ஆரிய மணம் கமழும்படி செய்ய வேண்டும், ஆரியர்களின் இம்முயற்சிக்கு அரசன் பூர்ண உதவி புரிய வேண்டும் என்று ஒரு தலையங்கம் எழுதியிருந்தது.
மனுதர்மம் என்ற பத்திரிகையில், இந்திய நாட்டின் தலைநகர் டெல்லியாகவே யிருக்கலாம். ஆனால் இது முதற்கொண்டு டெல்லி என்ற பெயரை மாற்றி, இந்திரப் பிரஸ்தம் என்றே வழங்க வேண்டும். இந்தப் புதுப்பெயரை ஒத்துக் கொள்ளாத ஒரு மகம்மதியப் பத்திரிகையின் அபிப்பிராயத்தை மறுத்தும் ஒரு தலையங்கம் இருந்தது.
பிரசீன தர்மம் என்ற பத்திரிகையில், அன்று நடக்க வேண்டிய மகுடாபிஷேக வைபவம் எவ்விதம் நடத்தப்பட வேண்டுமென்றும், அதற்குப் பூர்வாங்கமாகச் செய்யப்படவேண்டிய யாக மெக்ஞாதிகள் என்னென்னவென்றும் சாஸ்திரோத்தமாகப் பல மேற்கோள்களுடன் ஒரு சங்கராச்சாரியார் எழுதிய கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருந்தது.
ராஜதர்மம் என்ற பத்திரிகையில் பரத கண்டத்தின் ஏக சக்ராதிபதியாக, முனிபுங்கவர்களாலும், சற்ஜனர்களாலும் நிச்சயிக்கப்பட்டிருக்கும் கோசல நாட்டு க்ஷத்திரிய பரம்பரையின் பூர்வோத்தரம், குடிப் பெருமைகளை விளக்கியும், இப்போது பட்டத்துக்குத் தெரிந்தெடுக்கப்பட்டுள்ள ராமராஜ பூபதியின் பிறப்பு, வளர்ப்பு, குணாதிசயங்களை விவரித்தும், அவருக்குச் சூட்டப்படும் பட்டப் பெயராகிய “”பாரத தேச, வீரகேசரி, பரசமய கோளரி, ஆர்யப் பிரிய பிராமணதாஸ, விப்பிரமித்திர, ராஜராஜ, ராமராஜா, கிருஷ்ண தேவ, புஷ்யமித்ர, மஹாவீர பூபதி” என்பதன் அர்த்தத்தை விளக்கியும் ஓர் விரிவான தலையங்கம் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
வைதீக தர்மம் என்ற பத்திரிகையில், மன்னர்பிரானின் மகுடாபிஷேகத்தை யொட்டி தேசத்தில் உள்ள வைதீர்களுக்கெல்லாம் வழங்க வேண்டியதான தரும வகைகளைப் பற்றியும், வைதீகர்கள் செய்ய வேண்டிய தப, ஜப, யாக, யெக்ஞாதிகளைக் குறித்தும் விவரமான ஒரு கட்டுரை மிளிர்ந்தது.
ஸ்திரீ தர்மம் என்ற பத்திரிகையில், ராஜ தர்பாரில் நடனம் முதலிய பணி செய்வதற்குத் தேவலோகத்திலிருந்து அப்ரஸ்திரீகளை வரவழைக்கும் வழக்கத்தை ஒழிக்க வேண்டுமென்றும், ஆரியர்கள் காஷ்மீரம் முதலான வடநாட்டு மலைநாடுகளில் இருந்த பழைய காலத்திற்றான் அவ்வாறு செய்ய அவசியமிருந்ததென்றும், தற்காலத்திலோ, அப்ரஸ்திரீ வர்க்கம் தேசமெங்கும் குடியேறிப் பரவியிருப்பதால், நாலாபக்கங்களிலும் தூதர்களை அனுப்பித் தேவையான அப்ஸர்ஸ்களை அவ்வப்போது கொணர்ந்து அரசனுடைய அந்தப்புறத்திலும், அயோத்தியை அடுத்துள்ள பர்ன சாலைகளிலும் குடியேற்றி வைப்பதே தருமம் என்றும் ஒரு கட்டுரை வரையப்பட்டிருந்தது.
வர்ண ஸ்ரம தர்மம் என்ற பத்திரிக்கையில், நாட்டில் வர்ணாஸ்ரம தர்மம் சீர்குலைந்திருப்பதைப் பற்றியும், ஜாதி சங்கமங்களின் கெடுதலைக் குறித்தும், சண்டாளர், சூத்திரர் முதலான கீழ் வர்ணத்தார்கள், மேல் வர்ணத்தார்கள் செய்யக் கூடிய தொழில்களைச் செய்து வருவதால் ஏற்படும் கெடுதல்களைக் குறித்தும், வர்ணாஸ்ரம நெறியை மீண்டும் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தைக் குறித்தும், அதற்காக அரசன் எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சியைக் குறித்தும் பழைய காலத்தில் வர்ணாஸ்ரம தர்மத்தை நிலைநாட்டுவது இராமபிரான் எடுத்துக் கொண்ட நடவடிக்கையை உதாரணங் காட்டியும் ஒரு கட்டுரை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
பிராமண தர்மம் என்ற பத்திரிக்கையில், பிராமணர்கள் பிற மதத்தினராலும், பிற வர்ணத்தாராலும் அடைந்து வரும் கஷ்டங்களைக் குறித்தும், வேத நெறி வீழ்ந்துபட்டதால் இதுவரை நாட்டிற்கேற்பட்ட துன்பங்களைப் பற்றியும், இனிமேல் தர்ம ராஜ்ஜியத்தில் பிராமணர் துன்பம் நீங்கி வாழ முடியும் என்று நம்புவதாகவும், பிராமண குல வைரிகளாகிய சமணர், பௌத்தர், பஞ்சமர், சங்கமர், விஸ்வகருமர் முதலிய சமூகங்களை பண்டைக் காலத்தில் எப்படி இழிவுபடுத்தி அடிமைப்படுத்திக் கொண்டார்களோ, அப்படியே அதுபோல, இக்காலத்தில் தென்னாட்டில் தோன்றியிருக்கும், ஜஸ்டிஸ் கட்சி, சுயமரியாதைக் கட்சி யென்ற அரக்கர் கூட்டத்தையும், அழிக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்தும் அதற்காக ஒவ்வொரு பிராமணனும் எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சிகளைக் குறித்தும் ஒரு விரிவான கட்டுரை எழுதப்பட்டிருந்தது.
பத்திரிக்கைகளைப் பார்த்தால் எங்கும் தர்ம மயமாகவேயிருந்தது. நாலு பாதங்களில் நடமாட வேண்டிய தர்ம தேவதை ஆயிரம் பாதங்களோடும், பதினாயிரம் வாய்களோடும் தவழ்ந்ததாகச் சொல்லலாம்.
மகுடாபிசேக வைபவம்
தர்பார் மண்டபம் இந்திரசபை போலவே சித்திரித்து அலங்கரிக்கப் பட்டிருந்தது. சுமார் 50000 பெயர் உட்காரக்கூடிய விஸ்தீரணம் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. உயர்ந்த மேடையின் மீது சிங்காதனம் நாட்டப் பட்டிருந்தது. அதன் இருபுறமும் வரிசையாக ஆசனங்கள், அதற்கடுத்த கீழ்படியில் வேறு பல ஆசனங்கள், மண்டப மத்தியில் பெரிய ஓமகுண்டத்தி லிருந்து புகையெழுந்து சூழ்ந்து கொண்டிருந்தது. ஓம குண்டத்தின் அருகில் முனிபுங்கவர்கள் வேத மந்திரமோதிக் கொண்டிருந்தனர். மண்டப வாயிலில் இருந்த சாரணர்கள் சங்கநாதம் செய்தனர். மந்திரி பிரதானிகள் புடைசூழ தேவமாதர் முன் செல்ல, ஆடையாபரண அலங்கிருதனாய் அரசன் ராமராஜவர்மன் மண்டபத்துள் நுழைந்தான். உடனே மண்டபத்திலிருந்த அனைவரும் எழுந்து, “”ஜயவிஜயீபவ! ஜயவிஜயீபவ!! ஜயவிஜயீபவ!!! என்று வாழ்த்தினர். அரசன் ஓமகுண்டத்திற்கருகில் சென்று வேள்வியாளரை வணங்கி, அவர்கள் சொற்படி அக்கினிபகவானுக்கும்; இந்திரனுக்கும் ஆகுதி கொடுத்து அங்கிருந்த அந்தணாளரின் அடிகளைப் பூஜித்து அவர்களால் ஆசீர்வதித்துப் பெற்ற பின் மேடைக்குச் சென்று அங்கு அமைந்திருந்த அலங்காரச் சிங்காதனத்தமர்ந்தனன். அமர்ந்ததும் மஹாத்மா காந்தி எழுந்து, சபையில் உள்ள வேத வித்தகர் பிராமண உத்தமர்க்கெல்லாம் தன் வணக்கத்தைத் தெரிவித்துவிட்டுச் செய்த பிரசங்கத்தின் சாராம்ஸமாவது@
பல நூற்றாண்டுகளாக அந்நிய ஆட்சியினால் நமது நாடு அடைந்துள்ள கஷ்ட நஷ்டங்களைக் கூறி, இந்நாள் தன் இஷ்டதேவனாகிய தோழர் இராமச்சந்திரனுடைய கருணையினாலும், பெரியோர்கள் செய்த தபோ மகிமையினாலும், நமது நாட்டிற்கு உகந்த அரசாட்சியை நாமே ஏற்படுத்திக் கொண்டு ஒரு மாத காலம் நம் இஷ்டம்போல் ஆட்சி செய்ய உரிமை பெற்றிருப்பதாகவும், இந்த ஒரு மாத காலத்தில் நாட்டில் யாதொரு குறையும் நேராமல் ஆட்சி புரிந்து காட்டுவோமானால், நம்முடைய தர்மராஜ்யத்தை சாஸ்வதமாக அங்கீகரித்துக் கொள்வதாக இங்கிலீஷ் அரசாங்கத்தார் வாக்களித்திருப்பதாகவும், இந்த ஏற்பாட்டுக்கு இணங்காத மகம்மதிய மாகாணங்களாகிய, பஞ்சாப், வங்காளம் இவ்விரண்டு மாகாணங்களைக் குறித்து வருந்துவதாகவும், நாளடைவில் தர்மராஜ்யத்தின் செங்கோன்மையைக் கண்டு அவர்களும் தங்கள் தப்பிதத்தை யுணர்ந்து, தர்மராஜ்யத்திற்குட்பட்டு விடுவார்கள் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாகவும், இன்று ஸ்தாபிக்கப்படும் தர்மராஜ்யத்தின் அமைப்பைப் பற்றி தானும், ராஜாஜீயும், ராஜேந்திரரும், சத்தியமூர்த்தியும் தீர்க்காலோசனை செய்து நமது நாட்டுக்குக் முடியரசுதான் ஏற்றதென்று தீர்மானித்ததாகவும், அதன்படி பழய ராஜவம்சத்தின் வழி வந்த பழமையான ஒரு ராஜ பரம்பரையைச் சேர்ந்த ராமராஜவர்மனைத் தர்மராஜ்ய பூபதியாகத் தெரிந்தெடுத்ததாகவும், ஜனங்கள் ஏகமனதாக ஒப்புக் கொண்டு விட்டதாகவும், இன்று ஏற்படுத்தும் தர்மராஜ்யம் சாஸ்வதமாக இருக்க வேண்டி தோழர் ராமச்சந்திர மூர்த்தியைப் பிரார்த்திருப்பதாகவும், தர்மராஜ்ய பூபதி, நமது நாட்டு வழக்கங்களுக்கிணங்கவும், வேத நெறி வழுவாமலும், மனு முறைப்படி ஆட்சி செய்து வர்ணாஸ்ரம தர்மத்தையும், சனாதன தர்மத்தையும், நிலைபெறச் செய்வார் என்று தான் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறி, ரத்தினங்கள் இழைத்து ஒளி வீசும் கிரீடம் ஒன்றை எடுத்து மேடைக்குச் சென்று அங்கு வீற்றிருந்த லோககுரு சங்கராச்சார்ய ஸ்வாமிகள் பாதத்தில் வைத்து அன்னவர் திருக்கரங்களால் அரசனுக்கு முடி சூட்டும்படி கேட்டுக் கொண்டு மேடையினின்றும் இறங்கி வந்து தன் ஆசனத்தில் அமர்ந்தார்.லோக குருவும் தன் கமண்டலத்திலிருந்து கங்காஜலம் அதன் மீது புரோச்சித்து கிரீடத்தை எடுத்து வேதமந்திர உச்சாடனஞ் செய்து அரசன் தலையில் சூட்டி ஆசீர்வதித்தார். அப்போது விண்ணவர் பூமாரி பெய்தனர். மண்டபத்தில் உள்ளவர்கள் “”ராமராஜவர்மனுக்கு ஜே! ஆர்யப் பிரியருக்கு ஜே! பிராமணதாசருக்கு ஜே! விப்பிரமித்திரருக்கு ஜே! பூசுரகாவலர்க்கு ஜே! திராவிட வைரிக்கு ஜே! அரக்கரை அழிக்க வந்தவனுக்கு ஜே!” என்று வாழ்த்தி ஆர்ப்பரித்தனர்.
அமளி அடங்க அரைமணி நேரமாயிற்று. அரசன் எழுந்து தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் செய்த பெரும் உபசாரத்திற்காகப் பாரத நாட்டு ஜனங்களைப் பாராட்டுவதாகவும், நன்றி செலுத்துவதாகவும், தன்னால் இயன்ற வரை முன்னோர் முறைப்படியும், வேத சாஸ்திர விதிப்படியும் ரிஷிகள், முனிவர்கள் யோசனைப்படிக்கும் தர்மராஜ்ய பரிபாலனம் செய்வதாக உறுதி கூறி அமர்ந்தார். மீண்டும் அரசனுக்குப் பல ஜே கூறப்பட்டது. அதன்பின் அரச சமூகத்தில் சில அப்ஸர ஸ்திரீகள் தோன்றி நடனம் செய்து அரசனைக் களிப்பித்தனர். பிறகு தர்பார் கலைந்தது.
குறிப்பு@ அடுத்த வெளியீட்டில் ஒரு கனவு வெளிவரும். பர்.
குடி அரசு கட்டுரை 15.09.1935