விஜயராகவாச்சாரியார்

 

சேலம் தோழர் விஜயராகவாச்சாரியார் அவர்களின் காங்கிரஸ் சேவையைப் பாராட்டி அவருக்குப் பகுமானம் அளிக்க சில பார்ப்பனர்கள் முயற்சித்துப் பலரிடம் கையெழுத்து வாங்கி வருகிறார்கள்.

அதில் பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சி என்னவென்றால், காங்கிரசைக் கண்டிக்கும் ஜஸ்டிஸ் கட்சியாரிடமும் கையெழுத்து வாங்கி காங்கிரசை எல்லோரும் ஒப்புக் கொண்டது போல் உலகத்துக்குக் காட்டச் சூழ்ச்சி செய்து வருகிறார்கள் என்பதாகும்.

தோழர் விஜயராகவாச்சாரியார் பெரியவர். நல்ல கிரிமினல் வக்கீல். அரசியல் விஷயங்களைப் பற்றி விவகரிக்கத் தகுந்த நல்ல ஞானமுடையவர். அவரது பெயர் காங்கிரசிலும், பழய கால அரசியல் பிரதிநிதித்துவத்திலும் பல நாளாய் அடிபட்டு வருகிறது.

சுமார் 50 வருஷத்துக்கு முன் சேலம் கலகத்தில் அவர் கைதியாக்கப் பட்டார்.இவைகள் அவருடைய யோக்கியதாம்சங்களாகும் என்பதில் யாருக்கும் எவ்வித ஆ÷க்ஷபணையும் இருக்காது. இவைகளைப் பொருத்தவரை பற்றுள்ளவர்கள் பாராட்டிக் கொள்ளலாம்.

ஆனால் இவைகளைப்பற்றி மாறுபாடான அபிப்பிராயமுள்ளவர்கள் இதை எப்படிப் பாராட்ட முடியும் என்பது நமக்கு விளங்கவில்லை.

இன்றைய தினம் அவர் காங்கிரசுக்கு உழைத்ததைப் பற்றி காங்கிரஸ் பொன் விழாவின் போது பகுமானமளிக்க சிலரிடம் பார்ப்பனர்கள் கையெழுத்து வாங்குவதில் ஜஸ்டிஸ் கட்சியார் சிலரிடம் சென்று எதற்கு ஆக கையெழுத்து கேட்க வேண்டும்? அவர்களும் புத்தி இல்லாமல் எப்படி ஏமாந்து கையெழுத்துப் போடுகிறார்கள் என்பது நமக்கு ஆச்சரியமாய் இருக்கிறது.

இந்த முட்டாள்தனத்துக்கு எங்கு போய் முட்டிக் கொள்வது என்பது நமக்கு விளங்கவில்லை. சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் இரண்டொருவர்களைக் கேட்க அவர்கள் நாங்கள் காங்கிரசை ஒப்புக் கொள்ளாதவர்கள் ஆனதால் இதில் கையெழுத்துப் போட முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.

தங்களால் வெறுக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்துக்கோ கொள்கைக்கோ உழைத்தவர்களைப் பாராட்டுவது என்றால், இதில் அறியாமை அல்லது கோழைத்தனம் அல்லது கவலை ஈனம் என்பவை அல்லாமல் வேறு எவ்வித புத்திசாலித்தனமோ யோக்கியமோ இருக்க நியாயமில்லை.

உதாரணமாக தோழர் காந்தியாரை ஏன் பஹிஷ்கரித்தோம்? ஸ்தல ஸ்தாபனங்களில் ஏன் வரவேற்புக் கூடாது என்றோம்? ஏன் கருப்புக்கொடி பிடித்தோம்? காந்தியாரின் தந்திர புத்தியைப் பாராட்டுவதை நாம் ஆ÷க்ஷபிக்க மாட்டோம்.

ஆனால் அவர் “”சத்தியாக்கிரக”த்துக்கும் “”சுயராஜ்ஜிய”த்துக்கும் உழைத்ததை நாம் பாராட்டி வரவேற்க முடியுமா அல்லது அதற்காக அளிக்கப்படும் நற்சாட்சிப் பத்திரத்தில் கையொப்பமிட முடியுமா என்று கேட்கின்றோம்.

அதுபோலவே தோழர் விஜயராகவாச்சாரியார் இவ்வளவு காலம் பிழைத்திருப்பதையும் அவர் கிரிமினல் வக்கீலாக 80 வருஷம் வரையில் உழைத்ததையும் பாராட்டலாம்.

ஆனால், காங்கிரசுக்கு உழைத்ததைப் பாராட்ட பார்ப்பனர்களுக்கு விட்டுவிட வேண்டுமே ஒழிய நம்மவர்கள் அதில் கலந்து கொள்வது திருடர்களைப் பாராட்டத் திருட்டுக் கொடுத்தவர்களும் சேர்ந்து கொள்வது போலவே ஆகும்.

பார்ப்பனர்கள் தாங்கள் எந்த ஒரு கூட்டத்தை  தனிப்பட்ட நபரை வைகிறார்களோ குறை கூறுகிறார்களோ அவர்களிடமே வெட்கமில்லாமல் போய் அவர்கள் பாராட்டுதலைப் பெற்று விளம்பரம் செய்து கொள்வதில் கை தேர்ந்தவர்கள் என்பதோடு அவர்களது சூழ்ச்சிக்கு ஏமாந்து போவதில் பார்ப்பனரல்லாதவர்கள் கை தேர்ந்தவர்கள் என்பதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ஆகவே பார்ப்பனரல்லாத தலைவர்கள் என்பவர்கள் இனியாவது தங்கள் புத்தியையும், வீரத்தையும் பறி கொடுத்து முட்டாள்தனத்தைத் தேடிக் கொள்ளாமல் இருக்க வேண்டுகிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  17.11.1935

You may also like...