ஆச்சாரியார் இந்திரஜாலம்!
சேலம் தகராறு மறுக்கமுடியாத ருஜúக்கள்
பொம்மைப் பிரதிநிதிகள் மெளனம்!
சேலம் தண்ணீர்த் திட்டத் தகராறு விஷயமாக சுகாதார மந்திரி கனம் டாக்டர் ராஜன் சார்பில் பிரதம மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார் சென்னை அசம்பிளியில் கூறிய சமாதானம் வழக்கம் போல் மழுப்பல் சமாதானமாகவே இருக்கிறது. தகராறு பற்றிய பூரா விஷயங்களையும் அசம்பிளியில் விளக்கிக் கூறாமல் அவரது செயலுக்கு ஆதாரமாக விஷயங்களைத் திரித்துக் கூறுவது காங்கரஸ் ராஜ்ய தந்திர முறையானால் அந்த முறை ஆதரிக்கத்தக்கதா என்பதை சேலம் நகரத்தாரே முடிவு செய்ய வேண்டும். தண்ணீர் திட்டச் செலவு 24 லட்சம் ரூபாயில் 12 லக்ஷத்தைக் கடனாகவும் 12 லக்ஷத்தை மானியமாகவும் சர்க்கார் கொடுப்பதினால் தண்ணீர்த் திட்ட விஷயத்தில் சர்க்கார் அதிக கவலை செலுத்துவதை எவரும் ஆட்சேபிக்கவில்லை. தண்ணீர் திட்டத்துக்கு செலவாகும் 24 லக்ஷமும் பாழாகக் கூடாதென்னும் விஷயத்தில் சர்க்காருக்கு எவ்வளவு கவலையும் பொறுப்பும் உண்டோ அவ்வளவு கவலையும் பொறுப்பும் சேலம் நகரசபையாருக்கும் உண்டு. சிக்கனத்தைக் கருதியும் உறுதியைக் கருதியும் பத்ராவதி டெண்டர் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பது உண்மையானால் சேலம் நகரசபையார் குறுக்கே விழுந்து தடை செய்யவே மாட்டார்கள். ஆனால் சென்னை சர்க்கார் ஆதரிக்கும் பத்ராவதி கம்பெனியாரின் வார்படக்குழாய் உறுதியற்றதாகவும் அதிகச் செலவு பிடிக்கக் கூடியதாயும் இருப்பதால் சேலம் நகரசபையார் நம்புவதினாலேயே அவர்கள் பத்ராவதி கம்பெனியார் டெண்டரை ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள். நீண்ட நாள் அனுபவத்தினால் உறுதியுடையதாக மதிக்கப்படும் பழைய வார்ப்பட இரும்புக் குழாய்களே மேலானவையென கனம் ஆச்சாரியார் கூறுவதற்கு ஆதாரமென்ன? கனம் ஆச்சாரியார் அபிப்பிராயப்படி உறுதியானதாய் மதிக்கப்படும் வார்ப்பட இரும்புக் குழாயை சேலம் தண்ணீர்த் திட்ட வேலைக்கு சர்க்கார் நிபுணர்களிடம் அபிப்பிராயம் கேட்டபோது உபயோகிக்கக் கூடாதென்றும் சிமண்டு குழாய்களையே உபயோகிக்க வேண்டுமென்றும் சென்ற டிசம்பர் 4ந்தேதி ஜி.ஒ.நெ.1580- உத்தரவு அனுப்பியதை கனம் ஆச்சாரியார் அறியாரா? டிசம்பர் 4ந் தேதி பத்ராவதி கம்பெனி குழாய்களை ஒப்புக்கொள்ளக் கூடாதெனக் கூறிய ஆச்சாரியார் சர்க்காரின் நிபுணர், டிசம்பர் 30ந் தேதி அதாவது 26 நாட்களுக்குப் பிறகு பத்ராவதி குழாய்களை ஒப்புக்கொள்ளுமாறு அபிப்பிராயத்தை மாற்றிக் கொண்டதின் மர்மம் என்ன? கரூர், திருப்பூர், பெஜவாடா முனிசிபாலிட்டிகள் தண்ணீர் திட்டங்களுக்கு ஹியூம் கம்பெனி குழாய்களை உபயோகித்து வரும்போது சேலத்துக்கு மட்டும் ஹியூம் கம்பெனி குழாய்கள் ஏன் விஷமாக வேண்டும். நாகப்பூர் நகரசபையில் தண்ணீர்த் திட்ட விஷயமாகக் கிளம்பிய ஒரு தகராறில் வார்ப்படக் குழாயை உபயோகிப்பதா சிமெண்டு குழாயை உபயோகிப்பதா என்னும் விஷயத்தை முடிவு செய்ய (1) மைசூர் சர்க்கார் மாஜி இஞ்சிநீயர் ரங்கையாவையும் (2) நைஜாம் சர்க்கார் சீப் இஞ்சீனியர் நவாப் எ.ஹசன் எர்டிங் பகதூரையும் (3) மத்திய மாகாண சர்க்கார் எக்ஸிகியூட்டிவ் இஞ்சினீயர் மெக்கல்லி அவர்களையும் ஒரு கமிட்டியாக நியமித்தபோது அவர்கள் பரிசீலனை செய்து முடிவு செய்தபடி நாகப்பூர் நகரசபையார் சிமெண்டு குழாய்களை உபயோகித்து வேலை நடத்தி வருவதை கனம் ஆச்சாரியார் இதுவரை அறியவில்லையானால் இனியாவது அறிய முயல்வாரா? மற்றும் நாகப்பூர் நகரசபையாருக்கு பத்ராவதி கம்பெனியார் அந்தர் எடை 5ரூபா விகிதத்துக்கு வார்ப்படக் குழாய்களுக்கு டெண்டர் போட்டிருக்கையில் சேலம் திட்டத்துக்கு அந்தர் எடை 8 ரூபாய் விகித டெண்டர் அனுப்பியிருப்பது நயமானதென்றும் இலாபகரமானதென்றும் கனம் ஆச்சாரியார் கூறுவதற்கு ஆதாரமென்ன? சேலம் நகரசபையார் விளம்பரம் செய்திருந்தபடி வந்த 16 டெண்டர்களில் இந்தியன் ஹியூம் கம்பெனி டெண்டர் உட்பட மூன்று டெண்டர்கள் தானே சர்க்கார் நிபந்தனைப்படி பூர்த்தியான டெண்டர்களாயிருந்தன. அத்தகைய பூர்த்தியான டெண்டர்களில் உட்படாத பத்ராவதி கம்பெனி டெண்டருக்கு ஆச்சாரியார் சர்க்கார் சலுகை காட்டக் காரணம் என்ன? சர்க்கார் விதிப்படி பூர்த்தியான அந்த மூன்று டெண்டர்களில் எதை ஒப்புக்கொள்ளலாமென சேலம் நகரசபையார் சென்னை சர்க்கார் சானிட்டரி இன்சினீயரின் அபிப்பிராயம் கேட்ட போது ஹியூம் கம்பெனி டெண்டரே எல்லா வகைகளிலும் சிலாக்கியமானதென்றும் சீக்கிரத்தில் வேலை பூர்த்தியாகக் கூடியதென்றும் சென்ற நவம்பர் 11ந் தேதி அபிப்பிராயம் கூறியதை கனம் ஆச்சாரியார் மறைப்பதின் நோக்கம் என்ன? வார்ப்பட இரும்புக் குழாய்களே சிலாக்கியமானவை என கனம் ஆச்சாரியார் முடிவு கட்டியதற்கு ஆதாரமென்ன? வார்ப்பட இரும்புக் குழாய்களை உபயோகித்தால் வருஷா வருஷம் தண்ணீர் பம்பு செய்யும் போது துருப்பிடித்து தண்ணீர் வரும் அளவு குறைந்துவிடுமென்று 11.12.37ல் வெளிவந்த “ஹிந்து” பத்திரிகையில் லண்டன் இஞ்சினீயர்கள் சங்க அங்கத்தினரும், பெர்மிங்காம் தண்ணீர் சப்ளை பிரதம இஞ்சினீயருமான எப்.டப்ளியூ மெக்காலே எழுதியிருப்பதை கனம் ஆச்சாரியார் படித்துப் பார்ப்பாரா? அந்த வியாசத்தில் சிமெண்டு குழாய்களே சிலாக்கியமானவை யென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சேலம் தண்ணீர்த் திட்ட தகராறு விஷயங்கள் இவ்வளவு தெளிவாக இருந்தும் கனம் ஆச்சாரியார் திறந்த சட்டசபையிலே இந்திரஜாலம் செய்து ஏய்க்கத் துணிந்து நிற்பதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த விஷயங்கள் எல்லாம் சேலம் நகரசபை மெம்பர் தோழர் வெங்கடப்ப செட்டியாருக்கும் தோழர் சடகோப முதலியாருக்கும் செவ்வையாகத் தெரிந்திருந்தும் அசம்பிளியிலும் கெளண்சிலிலும் அவர்கள் இவ்விஷயங்களை விளக்கிக் கூறாதது ஆச்சரியமாகவே இருக்கிறது. சேலம் ஜில்லாப் பிரதிநிதிகளாக அசம்பிளியிலும் கெளண்சிலிலும் சுமார் அரை டஜன் பேர் இருந்தும் காங்கரஸ் கட்டுப்பாட்டுக்கு பயந்து அவர்கள் வாய்மூடி மெளனிகளாகவே இருந்து வருகிறார்கள். இத்தகைய பொம்மைப் பிரதிநிதிகளால் சேலம் ஜில்லாவுக்கு ஏற்படப்போகும் நன்மை என்ன? மஞ்சள் பெட்டியை நிரப்பியதற்கு சேலம் ஜில்லா வாசிகளுக்குக் கிடைத்த பலன் இது தானா?
குடி அரசு – கட்டுரை – 27.03.1938