காங்கிரசின் அலங்கோலம்

 

காங்கிரசிலிருந்து தோழர்கள் காந்தி “”விலகினார்”

அன்சாரி “”விலகினார்”

ராஜகோபாலாச்சாரியார் “”விலகினார்”

இவர்கள் விலகிக் கொண்டதாக காட்டிக் கொண்டதில் ஆச்சரிய மொன்றுமில்லை.

ஏனெனில் இவர்கள் காங்கிரசிலிருந்து கொண்டு செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லை.

காங்கிரசினுடைய வேலை இப்போது ஓட்டுப் பிரசாரம் செய்வதைத் தவிர வேறு ஒன்றுக்கும் இடமில்லாமல் போய்விட்டது.

நிர்மாண திட்டங்கள் நிர்வாணத் திட்டங்களாக ஆகி விட்டது.

இந்து முஸ்லீம் ஒற்றுமை விஷயம் “”சுயராஜ்ஜியம் ஏற்பட்டால் ஒழிய, முடியாது” என்று தோழர் காந்தியாரே வட்டமேஜை மகாநாட்டில் சொல்லி விட்டார்.

மதுவிலக்கு விஷயம் அதுபோலவே “”சுயராஜ்ஜியம் கிடைத்தால் தான் செய்ய முடியுமே ஒழிய மற்றபடி யார் பாடுபட்டாலும் முடியாது” என்று சத்தியமூர்த்தியாராலேயே சொல்லப்பட்டாய்விட்டது.

கதர்

இனி கதர் விஷயமாக “”ஒரு காலத்தில் கதர் என்கின்ற ஒருவித துணி கையால் நூற்று, கையால் நெய்தது இருந்து வந்தது” என்று சொல்லும் படியாக ஆகிவிட்டது.

காந்தி கதர் ஆலயத்தில் தோழர் இராஜகோபாலாச்சாரியாரின் மேல் பார்வையில் இருக்கும் காந்தி ஆஸ்ரமத்தில் சுமார் 50 ஆயிரம் ரூ. பொருமான கதர் துணி தூங்குகின்றது.

தமிழ்நாடு காதி வஸ்திராலயத்தில் லட்சக்கணக்கான ரூ. பொருமான கதர் துணி தூங்குவதோடு பூசனம் பிடித்து இத்து மடிகின்றது.

தமிழ்நாட்டில் பல ஜில்லாக்களிலும் உள்ள கதர் ஸ்தாபனங்கள் மூடப்படுகின்றன.

கதர் ஸ்தாபனத்தில் N. 100, 200 ரூ. சம்பளங்களில் இருந்து வந்த பார்ப்பன தேச பக்தர்கள்  இப்போது அதை மெள்ள நழுவ விட்டு விட்டு காங்கிரஸ் செல்வாக்கில் வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழி தேடிக் கொண்டார்கள்.

இன்றைய தினம் காங்கிரசில் கதருக்கு உள்ள யோக்கியதை யெல்லாம் மூடர்களும், பார்ப்பன அடிமைகளுமல்லாமல் வேறொருவரும் காங்கிரசுக்குள் நுழையாமல் இருப்பதற்கு ஆக காவலாய் கதர் வைக்கப்பட்டிருக்கிறது என்பதல்லாமல் வேறொன்றுமில்லை.

எப்படி என்றால் “”காங்கிரசு நிர்வாக ஸ்தாபனங்களின் தேர்தலுக்கு நிற்கின்றவர்கள் கதர் கட்டிக் கொண்டிருக்கிறவர்களாய் இருக்க வேண்டும்.”

“”காங்கிரஸ் கமிட்டிகளுக்கு தேர்தலுக்கு ஓட்டுக் கொடுப்பவர்கள் கதர் கட்டிக் கொண்டிருக்க வேண்டும்”

என்கின்ற இரண்டு காரியத்துக்கும் கதர் நிபந்தனை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

ஆகவே ஒரு மனிதன் எவ்வளவு யோக்கியனாகவும் தேசாபிமானி யாகவும் அஹிம்சையில், சத்தியத்தில் உண்மையான நம்பிக்கை உடையவ னாகவும் இருந்தாலும் அவன் கதர் கட்டி இருந்தால்தான் காங்கிரசில் ஸ்தானம் வகிக்க முடியும் பங்கு எடுத்துக் கொள்ள முடியும் என்பதாகும்.

ஒரு சமயம் காங்கிரசின் மற்ற எல்லா திட்டங்களிலும் நம்பிக்கை இருந்து கதரில் மாத்திரம் நம்பிக்கை குறைவானவராய் இருந்து விட்டால் அவர் இந்திய தேசிய ஸ்தாபனம் என்று சொல்லப்படும் பொது ஸ்தாபனம் என்பதில் ஸ்தானம் வகிக்க அருகதை அற்றவராகி விடுகிறார்.

ஆகவே கதரானது இன்று ஒரு சுயநல காரியத்துக்கு அதாவது தங்கள் (பார்ப்பனர்கள்) அடிமைகள் அல்லாதவர்களை விலக்கி துரத்தி அடிப்பதற்கே ஒரு சாதனமாய் இருந்து வருவதல்லாமல் மற்றபடி அதில் எவ்வித தத்துவமும் இல்லை என்பது முடிவடைந்த விஷயமாகும்.

இன்று திருப்பூர் காதி வஸ்திராலய நிர்வாகமும் கதரின் பேரால் காங்கிரசுக்கு மக்களிடத்தில் ஏதாவது ஒரு பிடிமானம் இருக்க வேண்டும் என்பதும், அதனால் ஏதோ சிலருக்கு வயிற்றுப் பிழைப்புக்கு மார்க்கம் இருக்கும்படி செய்து அவர்களை தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தவிர வேறு ஒரு காரியமும் இல்லாமல் போய்விட்டது.

தீண்டாமை

“”இனி தீண்டாமை விலக்கு என்பது தீண்டப்படாதவர்கள் சமூகத் துறையில் இந்துக்களாகவே இருக்க வேண்டும்” அவர்கள் வேறு மதங்களுக்கு போய் அம்மத எண்ணிக்கையை பெருக்கிக் காட்டக் கூடாது என்பதற்கும், அரசியல் துறையில் அவர்கள் இந்துக்களின் எண்ணிக்கையை பெருக்கிக் காட்டவும், இந்துக்கள் என்பவர்களுக்கு ஒரு பெருங் கூட்டம் பிறவி அடிமையாய் இருந்து தங்களுக்கு பயன்பட்டு வரவேண்டும் என்பதற்கும் மாத்திரமே தீண்டாமை விலக்குப் பிரசாரம் இருந்து வருகின்றதே ஒழிய மற்றபடி மனித சமூகத்தில் பிறவியில் வித்தியாசமில்லாமல் யாவரும் சமமாய் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆக சிறிதும் இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இந்து முஸ்லீம்

ஆகவே நிர்மாணத் திட்டங்கள் என்பவைகள் இந்த நிலையை அடைந்துவிட்டது மாத்திரமல்லாமல் காங்கிரசு நிர்மாணத் திட்டம் என்பதை காங்கிரசால் ஏற்படுத்தப்பட்ட பிறகே காங்கிரசினிடத்தில் முஸ்லீம்களுக்கும் நம்பிக்கை அற்றுப் போனதோடு மாத்திரமல்லாமல் துவேஷமும் வெருப்பும்கூட ஏற்பட்டுவிட்டது என்று சொல்லலாம்.

எப்படியெனில் 1919, 1920 ம் வருஷங்களில் காங்கிரஸ் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று சொன்னவுடன் முகமதிய தலைவர்களான அலி சகோதரர்களும் மகம்மதலி ஜின்னா அவர்களும் மற்றும் முஸ்லீம் மத சம்பந்தமான பெரியார்கள் என்பவர்களும் காந்தியாருக்கு ஒரு தீர்க்க தரிசிக்கு செய்யும் மரியாதை போல் செய்து வந்தார்கள்.

கடைசியாக அவர்கள் எல்லோருமே ஒருவருக்குப் பின் ஒருவராய் காந்தியார் மீதும், காங்கிரசின் மீதும் குறைக் கூறிக்கொண்டே நழுவி விட்டதோடு மாத்திரமல்லாமல் காங்கிரசுக்கு எதிர்ப்பாய் இருக்கிற தோடல்லாமல் “”காந்தியார் இந்தியாவில் இந்துக்கள் ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறார். ஆதலால், முஸ்லீம்களே உஷாராய் இருங்கள்” என்று சொல்ல வேண்டியவர்களாகி விட்டார்கள்.

பார்ப்பனரல்லாதார்

பார்ப்பனரல்லாதாரிலும் காங்கிரசின் தயவால் பிழைப்பு நடத்த வேண்டிய நிலையில் இல்லாத பார்ப்பனரல்லாதார் எவ்வளவோ பேர் காங்கிரசுக்கு ஆக குடும்பத்துடன் உயிரைக் கொடுக்கத் தயாராய் இருந்து காந்தியாருக்கு சீஷர்கள் போல் இருந்தவர்கள் எல்லாம் கடசியாக காந்தியாரை ஒரு கபட சன்யாசி என்று சொல்லுவதோடல்லாமல் காங்கிரஸ் பார்ப்பன ஆட்சியை நிலைநாட்டப் பார்க்கிறது என்றும், காந்தியார் பார்ப்பனர்களின் அடிமை என்றும் சொல்லி காங்கிரசையே ஒழிக்க முயற்சிக்கிறார்கள்.

தீண்டாமை விலக்கு விஷயத்தில் ஏதோ மாத சம்பளமாகவோ கைக் கூலியாகவோ அல்லது அன்றாட வயிற்றுப் பிழைப்புக்கு ஆவது ஒரு அணா, இரண்டு அணா என்றோ ஏதாவது பணம் உதவாவிட்டால் காங்கிரசில், ஒரு தீண்டப்படாதவராவது இல்லை என்கின்ற நிலையில் தான் இன்று காங்கிரசுக்கும் தீண்டப்படாதவருக்கும் உள்ள சம்பந்தம் இருந்து வருகின்றது.

அது மாத்திரமல்லாமல் தங்கள் சுயமாய் காங்கிரஸ் தயவில்லாமல் வயிற்றுப் பிழைப்பை நடத்திக் கொண்டு போகலாம் என்று எண்ணக் கூடிய தன்னம்பிக்கை உடைய தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லோருமே இன்று “”காங்கிரஸ் தீண்டப்படாத மக்கள் என்பவர்களுக்கு எதிரிடையான ஸ்தாபனம்” என்றும் “”காங்கிரசினால் ஒரு நாளும் தீண்டப்படாத மக்களுக்கு விடுதலை ஏற்படாதென்றும்” ஆதலால் “”காங்கிரசில் விழுந்து மாயவேண்டாம்” என்றும் தங்கள் சமூகத்தாருக்கு எச்சரிக்கை செய்வதோடு நூற்றுக்கணக்கான கூட்டங்களிலும் தீர்மானமும் செய்து வருகிறார்கள்.

அதற்கேற்றாற்போல் காங்கிரஸ்காரர்கள் செய்து வரும் செய்கை களும் தீண்டப்படாதவர்கள் என்பவர்களின் கூற்றை ஆதரித்தே வந்து கொண்டிருக்கிறது.

ஆலயப் பிரவேசம்

உதாரணமாக ஆலயப் பிரவேசம் என்கின்ற விஷயத்தில் பூனா ஒப்பந்தத்தின் போது தோழர்கள் மாளவியா, காந்தி, ராஜகோபாலாச்சாரியார் முதலிய தலைவர்கள், தீண்டப்படாத மக்களுக்கு உறுதி கொடுத்துவிட்டு இப்போது காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்கு மெஜார்ட்டியாக வந்து விட்டவுடன் “”பொதுஜன அபிப்பிராயத்தை சரி செய்து கொண்டாலல்லாமல் ஆலயப் பிரவேச விஷயம் மாத்திரமல்லாமல்  வேறு எந்தவிதமான சமுதாய சீர்திருத்தங்களும் செய்யக் கூடாது” என்று சொல்லிவிட்டார்கள்.

அப்படியாவது காங்கிரஸ்காரர்களோ அல்லது அதன் முக்கிய தலைவர்களோ என்று சொல்லப்பட்ட தோழர்கள் காந்தி, மாளவியா, ராஜகோபாலாச்சாரியார் ஆகிய பெரியார்கள் பூனா ஒப்பந்தத்துக்குப் பிறகு ஆலயப் பிரவேச விஷயமாகவோ, சமுதாய விஷயமாகவோ ஏதாவது பிரசாரம் செய்தார்களா? அல்லது சீர்திருத்த மகாநாடுகள் கூட்டி ஜனங்களுக்கு ஏதாவது எடுத்துச் சொன்னார்களா? அல்லது யாரையாவது கேட்டுக் கொண்டார்களா? அல்லது தீண்டாமை ஒழிப்புக்கு விரோதமாய் பார்ப்பனர் களும், சங்கராச்சாரியார்கள் என்பவர்களும், சனாதனிகள் என்பவர்களும் செய்து வரும் விஷமப் பிரசாரத்துக்காவது ஏதாவது சமாதானம் சொன்னார்களா? என்று பார்த்தால் அது விஷயத்தில் திருடனைத் தேள் கொட்டியதுபோல் வாயை வெகு பத்திரமாக மூடிக் கொண்டு அவ்விஷமப் பிரசாரத்துக்கு இடம் கொடுத்துக் கொண்டே வருகிறார்கள்.

தீண்டாமை விலக்கின் பேரால் பொது மக்களிடம் இருந்து ஏமாற்றிக் கொள்ளை அடித்த ரூபாய்களைப் பார்ப்பனர்களுக்கும் அவர்களது அடிமைகளுக்குமே கொடுத்து காப்பாற்றி வருகிறார்களே அல்லாமல், ஒரு பத்திரிகை மூலமாயாவது இப்படிப்பட்ட விஷமப் பிரசாரங்களுக்குப் பதில் கொடுக்கக்கூட இல்லை.

சங்கராச்சாரியார்

சங்கராச்சாரியார் என்னும் ஒரு பார்ப்பனர் “”பார்ப்பனனுக்கும் பரையனுக்கும் பிறவியிலேயே சரீரத்தில் ரத்தபேதம் இருக்கின்றது” என்றும் “”பரையன் ரத்தத்தையும் பார்ப்பனன் ரத்தத்தையும் வேறு வேறாய்ப் பரீட்சித்துப் பார்த்தால் பர ரத்தம் இன்னது என்றும் பார்ப்பன ரத்தம் இன்னது  என்றும் தெரிவித்து விடலாம்” என்றும் அபிப்பிராயம் கொடுத்தார்.

இதைப் பற்றி எந்தக் காங்கிரஸ் பார்ப்பனராவது தீண்டாமை விலக்குக் கமிட்டிக்கு தலைவராய் இருந்து தீண்டாமைக் கமிட்டி பண்டை சுவஹா செய்கின்ற பார்ப்பனனாவது ஒரு வார்த்தைகூடப் பேசவே இல்லை. கழுதையோ குதிரையோ யாராய் இருந்தாலும், சங்கராச்சாரியார் வாயிலிருந்து வந்தது என்று சொன்னால் அது மதிக்கத்தக்க வார்த்தையாகத்தானே மக்கள் மதிக்கிறார்கள். அப்படிக்கு இருக்க இந்த மாதிரி விஷமத்தனமானதும் போக்கிரித்தனமானதுமான “ஸ்ரீமுகத்துக்கு’ யாரும் பதில் சொல்லவில்லை யானாலும் “”தீண்டாமையை அடியோடு ஒழிப்பதற்காகவே உயிர் வாழ் கின்றேன்” என்று சொல்லி பொது மக்களிடம் இருந்து 10 லட்சக்கணக்கான ரூபா வசூல் செய்த தோழர் ஆகிய காந்தியாருக்காவது இப்படிப்பட்ட விஷமப் பிரசாரத்துக்கு பதில் சொல்ல வேண்டும் என்கின்ற அறிவு இருக்க வேண்டாமா என்று கேழ்க்கின்றோம்.

சங்கராச்சாரி இப்படி சொன்ன பிறகும் இதற்கு எந்த காங்கிரஸ்வாதியும், காந்தியாரும், எந்த சீர்திருத்தப் பார்ப்பனரும், தீண்டாமை விலக்கு கமிட்டித் தலைவர்களும் யாதொரு பதிலும் சொல்லாத காரணத்தால் இன்று அந்த சங்கராச்சாரி சொன்னபடியே எல்லா பார்ப்பனர்களும் காப்பிக்கடை, ஓட்டல், வக்கீல், வக்கீல் குமாஸ்தா, புரோகிதன், அர்ச்சகன், வைத்தியன், தூதுவன் ஆகிய எல்லாப் பார்ப்பனர்களும் அதையே சொல்லிக் கொண்டு தீண்டப்படாதவர்கள் என்பவர்களை முன்பைவிட மோசமாய் நடத்துகிறார்கள்.

அனுபவத்தில் அடக்கு முறை

தவிரவும் காங்கிரசுக்காரர்கள் தீண்டாமை விலக்கு விஷயத்தில் காரியத்தில் அனுபவத்தில் எப்படி நடந்து வருகிறார்கள் என்பதைப் பற்றி சென்ற வார தலையங்கத்தில் குறிப்பிடுகையில் தோழர் சன்யாசி என்ற ஆதி திராவிடரை காங்கிரசார் எப்படி நடத்தினார்கள் என்பதைக் குறிப்பிட்டிருந்தோம்.

அதன் பயனாக இவ்வாரம் தீண்டாமை விலக்கு கமிட்டியில் இருந்து தோழர் சன்யாசியை நீக்கி விட்டார்கள் என்கின்ற செய்தி கிடைத்திருக்கிறது.

திருச்சி “”நகர தூதன்” பத்திரிகையில் சென்ற வாரமே இச்செய்கையை தீர்க்கதரிசனமாக குறிப்பிட்டிருந்தது.

அதாவது, “”தோழர்கள் சன்யாசியை வேலையை விட்டு நீக்கி விடுவார்கள்” என்று எழுதியிருந்தது. அதுபோலவே நடந்து விட்டது.

காங்கிரசில் இருக்கும் அடக்குமுறைக்கும், கொடுமை முறைக்கும் இதைவிட வேறு எதை ஆதாரம் காட்ட வேண்டும் என்பது நமக்கு விளங்க வில்லை. “”குதிரை கீழே தூக்கிப் போட்டதுமல்லாமல் புதைக்க குழியும் பரித்தது” என்பது போல் தோழர் சன்யாசியை இழிவுபடுத்தி அவமானப் படுத்தியது மாத்திரமல்லாமல் அவரை உத்தியோகத்தில் இருந்தும் நீக்கிவிட்டார்கள் என்றால்,

அடக்கு முறையையும் தண்டனைகளையும் பிரிட்டிஷ் அரசாங்கம் மாத்திரமல்லாமல் உலகிலுள்ள ஏனைய அரசாங்கங்களும் இந்திய தேசீயக் காங்கிரசினிடமும் இந்தியப் பார்ப்பனர்களிடமும் தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சிபார்சு செய்ய வேண்டிய அளவுக்கு வந்துவிட்டது என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

தோழர் காந்தியார் இதற்கு என்ன பதில் சொல்லுவார்?

குடி அரசு  தலையங்கம்  28.07.1935

 

You may also like...