கல்வி மந்திரிக்கு ஜே!

 

பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை ஆண் பள்ளிக் கூடமாயின் ஜில்லாக் கல்வி உத்தியோகஸ்தர்களின் உத்திரவின்றியும், பெண் பள்ளிக்கூடமாயின் இன்ஸ்பெக்டர்சுகளின் உத்திரவின்றியும் 5 வருஷத்திற்கு முன்னதாக மாற்றக்கூடாதென்று உத்திரவு பிறப்பித்ததற்காகக் கல்வி மந்திரியைப் பாராட்டுகிறோம்.

இவ்வுத்திரவுப்படி கல்வி விஷயத்தில் நாம் எதிர்பார்க்கும் முழுப் பலனும் கிடைத்து விடாதென்பது நிச்சயமாயினும் நாம் சென்ற 10.2.35ல் நமது பத்திரிகையின் உப தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி அரசாங்கத்தார் இந்த உத்திரவையாவது பிறப்பித்ததற்காகச் சிறிது சந்தோஷம் அடைகின்றோம்.

பாடப் புத்தகங்களை மாற்றும் அதிகாரத்தைக் கல்வி யதிகாரிகளுக்கு ஒப்பித்திருப்பதைப் புத்தக வியாபாரிகள் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளுவார்கள் என்பது மறுக்க  முடியாததாகும். புத்தக வியாபாரிகள் தங்களுடைய பணத்தைக் கொண்டும், மேல் உத்தியோகஸ்தர் களின் சிபார்சுகளைக் கொண்டும், கட்சி செல்வாக்குகளைக் கொண்டும், 5 வருஷங்களுக்கு முன்னதாகவே ஏதோ நொண்டிச் சமாதானங்களைக் கொண்டு பாடப் புத்தகங்களை மாற்றச் செய்து தங்களுடைய புத்தகங்களை திணித்துக் கொள்ளை லாபம் சம்பாதிக்கவே முயற்சிப்பார்கள் என்பதிலும் இந்த முயற்சியில் வெற்றியடைவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

ஆகையால் உண்மையில் புத்தகங்கள் விஷயமாகப் படிப்பவர்களுக்குக் கஷ்டமும் படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு பொருள் நஷ்டமும் உண்டாகாமல் இருக்க வேண்டுமாயின் பாடப் புத்தகங்களை எழுதி அச்சிட்டு விற்பனை செய்வதையும் அரசாங்கத்தாரே மேற்கொள்வதுதான் பொது ஜனங்களுக்கு நன்மை செய்வதாகும்.

இக்காரியத்தைச் செய்வதினால் சர்க்காருக்கு எவ்வகையிலும் நஷ்டமேற்படாது என்பதையும் இதனால் லாபமே ஏற்படுமென்பதையும், அந்த லாபத்தையும் கல்வி அபிவிருத்திக்குச் செலவு செய்வதனால் தேசத்தில் இன்னும் அதிகமாக கல்வியைப் பரவச் செய்யலாம் என்பதையும் முன்பே விளக்கிக் கூறியிருக்கிறோம்.

ஆகையால், கல்வி மந்திரி கனம் குமாரசாமி ரெட்டியார் அவர்கள் கல்வி வளர்ச்சிக்காக ஏதாவது ஒரு நிலையான காரியத்தைச் செய்ய வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுபவராயிருந்தால் இந்தக் காரியத்தை புத்தக வியாபாரிகளின் கூப்பாடுகளுக்கும் சிபாரிசுகளுக்கும் பயப்படாமல்  தைரியமாகச் செய்து முடிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

குடி அரசு  துணைத் தலையங்கம்  31.03.1935

You may also like...