மூடநம்பிக்கை

 

வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்

சித்திரபுத்திரன்

நகை வியாபாரி:  ஐயா, தாங்கள் என்னிடம் காலையில் காசுமாலை வாங்கிவந்தீர்களே அது தங்களுக்குத் தேவையா இல்லையா என்பதைத் தெரிவித்துவிட்டால் அதை வேறு ஒருவர் வேண்டுமென்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக்கொண்டிருக்கிறார். அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கின்றேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்துவிடுங்கள்.

வைதீகர்:  செட்டியாரே, அந்த நகை தேவையில்லை.  வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குருக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன்.  வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மாலையிலுள்ளக் காசை எண்ணிப்பார்த் தார்கள்.  அதில் 68காசுகளிருந்தது.  எட்டு எண்ணிக்கைக் கொண்டது எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயி  வருவதில்லை.  அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை.

நகை வியாபாரி:  அப்படியானால், தயவு செய்து கொடுத்துவிடுங்கள்.  வேறு ஒருவர் காத்துக்  கொண்டிருக்கின்றார்.

வைதீகர்:  ஆஹா, கொடுத்துவிடுவதில் ஆ÷க்ஷபனையில்லை.  காலமே நேரத்தில் வாருங்கள் கொடுத்துவிடுகின்றேன்.

நகை வியாபாரி:  அவர் இன்று இராத்திரிக்கு ஊருக்குப் போகின்றவர்.  ஆனதால் தயவு செய்து இப்பொழுதே கொடுத்துவிடுங்கள்.

வைதீகர்:  செட்டியாரே, தாங்களென்ன நாஸ்திகராய் இருக்கின்றீர்கள்.  வெள்ளிக்கிழமை அதுவும் விளக்கு வைத்த நேரம், இந்த சமயத்தில் நிறைந்த வீட்டிலிருந்து பொன் நகையை வெளியில் கொடுக்கலாமா?  அது லக்ஷிமி அல்லவா?

நகை வியாபாரி:  என்ன ஐயா, வியாபாரத்திற்காக பெண்டுகளுக்கு காட்டிவிட்டு கொண்டுவருகிறேன் என்று எடுத்துக்கொண்டுவந்த நகையை வேறு ஒருவர் அவசரமாகக் கேட்கின்றார்கள் என்று வந்து கேட்டால், வெள்ளிக் கிழமை விளக்கு வைத்த நேரம் என்கின்றீர்களே இது என்ன ஒழுங்கு. ஊரார் நகைக்கு நாள் என்ன, நேரமென்ன என்பது எனக்கு விளங்கவில்லையே.

வைதீகர்:  (தனக்குள்ளாகவே “இந்த இளவு நகையை நாம் ஏன் இந்த மனிதனிடம் வாங்கிவந்தோம்’ என்று நினைத்துக்கொண்டு) என் புத்தியை விளக்குமாற்றால் புடைக்க வேண்டும்.  உம்ம கடைக்கு வந்ததே பிசகு, தவிரவும் உம்மிடம் நகையை எடுக்கும்போதே மணி பத்தரை இருக்கும்.  நல்ல ராகு காலத்தில் எடுத்துவந்தேன்.  அது எப்படியானாலும் கலகமாய்த் தான் தீரும், எனக்குப் புத்தி வந்தது.  இனி இந்த மாதிரி செய்யமாட்டேன்.  தயவு செய்து நாளைக்கு வாருங்கள்.

நகை வியாபாரி:  இது என்ன ஐயா, தமாஷ் செய்கின்றீர்களா என்ன?  உங்கள் நகையை யாராவது கேட்டால், நாள் கோள் எல்லாம் பார்த்துக் கொள்ளுங்கள். ஊரார் நகைக்கு இதையெல்லாம் பார்க்கச் சொல்லி உங்களுக்கெவன் புத்தி சொல்லிக்கொடுத்தான்.  அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் அவனுக்கு நல்ல புத்தி கற்பிக்கின்றேன்.  மரியாதையாய் நகையைக் கொடுங்கள் நேரமாகுது.

வைதீகர்:  நீங்கள் “குடி அரசு’ பத்திரிகை கக்ஷியைச் சேர்ந்தவர்களா என்ன? நாளையும் கோளையும் சாஸ்திரத்தையும் கேலி செய்கின்றீர்களே, அந்தக் கூட்டத்திற்குத்தான் நல்லது இல்லை, கெட்டதில்லை,  மேல் இல்லை, கீழ் இல்லை, கோவில் இல்லை, குளமில்லை, சாஸ்திரமில்லை, புராணமில்லை, பரையனும் பாப்பானும் ஒண்ணு என்று ஆணவம் பிடித்து நாஸ்திகம் பேசிக்கொண்டு திரிகிறார்கள்.  நீங்களும் அதுபோல் பேசுகின்றீர்களே.

நகை வியாபாரி:  நீரே ரொம்பவும் ஆஸ்திகராயிருந்து கொள்ளும்,  அதைப்பற்றி நமக்கு கவலையில்லை. மரியாதையாய் நகையைக் கொடுத்து விடும், பவுன் விலை இறங்கப்போகின்றது.  இன்றைக்கு விற்காவிட்டால் எனக்கு நஷ்டம் வந்துவிடும்.  வேறொரு ஆசாமியும் மிகவும் ஆசையாய் காத்திருக்கின்றார்.  இனி தாமதம் செய்யாதீர் இருட்டாகப்போகிறது, சீக்கிரம் எடுத்துக்கொண்டுவாரும்.

வைதீகர்: (வீட்டிற்குள் போய் சம்சாரத்துடன் யோசிக்கின்றார்) என்ன, ஏன் பேசவில்லை, செட்டியார் காசுமாலை கேட்கின்றார்.

அம்மா:  வெகுநேர்த்தி இன்றைக்கு வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், லக்ஷிமியை வீட்டை விட்டு வெளியில் கொடுக்கலாமா?

புருஷன்:  எல்லாம் நான் சொல்லிப்பார்த்தாய்  விட்டது.  செட்டியார் ஒரே பிடியாய் இப்போதே கொடுத்தாகவேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கொண்டு வெளியில் காத்துக்கொண்டிருக்கிறார்.

அம்மா: (பலமாய் சத்தம்போட்டுக்கொண்டு வெளியில் வருகிற போது பேசிக்கொண்டு வருவதாவது)  செட்டியாருக்குத்தான் புத்தியில்லை.  உங்களுக்குமா புத்தியில்லை. அவர் என்ன செட்டியா மட்டியா?  வீடுவாசல் வைத்து பிழைத்த மனிதனா, நாடோடித்  தடம்போக்கியா? நிறைந்த வீட்டில் விளக்கு வைத்த நேரத்தில் கலகம் பண்ண வந்திருக்கிறார்.  நான் போய் கேட்கிறேன், (என்று வெளியில் வந்து) என்ன செட்டியாரே உமக்கு புத்தியில்லையா?  இப்பொழுதுதான் ஏதோ கொஞ்சம் ஓஹோ என்று எங்கள் குடும்பம் தலை எடுக்கின்றது. அதுக்குள் நீர் எமனாய் வந்து விட்டீர்.  நாளைக்கு காலமே வாருமே. அதற்குள் என்ன நீர் கொள்ளையில் போய் விடுவீரா, அல்லது ஏதோ ஒரு மனிதன் நகை வாங்க வந்தவன் காத்திருக்கிறான் என்கிறீரே அவன் தான் கொள்ளையில் போய்விடுவானா? உமக்குத்தான் புத்தியில்லாவிட்டாலும் அவனுக்காவது புத்தியிருக்க வேண்டாமா?  வெள்ளிக்கிழமை நகையைப்போய் கேட்கச்சொல்லலாமா என்கிற அறிவில்லாமல் உம்மை இங்கே அனுப்பி ரகளை பண்ணச்சொல்லி இருக்கிறானே,  அத்தனை அவசரம் என்ன அவனைக் கொண்டுபோகிறது?

இந்தச்சமயத்தில் மகன் வந்துவிட்டான்.

மகன்:  என்ன அம்மா கூச்சல் போடுகிறாய்?  இவர் யார்?

தாயார்:  இவரா?  இவர் ஒரு நகை வியாபாரியாம்.  இவர் தலையில் நெருப்பைக் கொட்ட!  வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் காசி மாலையைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டுமாம்.  ரகளைக்கி நிற்கிறார்.

மகன்:  அதெல்லாம் இருக்கட்டும் ஜாஸ்தி பேசாதே?  நமக்கு காசிமாலை யேது?  நம் வீட்டில் காசிமாலை இல்லையே, நேற்றுத்தானே அப்பா ஒரு காசிமாலை வாங்கவேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார்.  அதற்குள்ளாகவா வாங்கி ஆய்விட்டது காசிமாலை?

தாயார்:  உங்கப்பா யார் முகத்தில் முழித்தாரோ, இன்று காலையில் கடைக்குப்போனார், இந்த செட்டியாரிடம் மாலை ஒன்று இருந்தது, அதை எனக்குக் காட்டுவதற்காக வாங்கி வந்தார்.  நேற்று நினைக்கும்போதே ராகு காலம், இன்று செட்டியார் கடையில் நகை வாங்கும்போதும் ராகு காலம், வழியில் வரும்போதும் பூனை குறுக்கே போச்சுதாம்;  அப்பொழுதே உங்கப்பா வேண்டாமென்று தலைசுத்தி யெறிந்துவிட்டு வரவேண்டாமா?  அப்படிச் செய்யாமல் என்னிடம் கொண்டுவந்து கொடுத்தார். அது கொஞ்சம் நன்றாய் இருந்தது. நானும் ஆசைப்பட்டு வாங்கலாம் என்று முடிவுகட்டி எண்ணிப்பார்த்தேன்.  காசு அறுபத்தி எட்டாயிருந்தது,  உடனே தலையைச் சுற்றி எரிந்துவிட்டேன்.  உங்கப்பா பெட்டியில் வைத்துவிட்டார்.  இப்ப வந்து செட்டியார் அவசரப்படுகிறார்; யாரோ வேறே கிராக்கி காத்துக்கொண்டிருக்கின்றதாம்; வெள்ளிக்கிழமை, விளக்கு வைத்த நேரம், முதலாவது பெட்டியைத் திறக்கலாமா? நீயே சொல்லு பார்ப்போம்.

மகன்:  ஐயய்யோ!  இதென்ன பெரிய அழுக்கு மூட்டையாயிருக்கிறது.  குருட்டு நம்பிக்கைப் பிடுங்கலாயிருக்கின்றது; வெள்ளியாவது, சனியாவது,  ராகாவது, கேதாவது! ஊரார் வீட்டு நகையை வாங்கிக் கொண்டுவந்து பெட்டியில் வைத்து பூட்டிக்கொண்டு வெள்ளியுஞ் சனியும் பேசுவது வெகு ஒழுங்காய் இருக்கின்றது. பேசாமல் எடுத்துக்கொண்டுவந்து கொடுத்து விடு;  இல்லாவிட்டல் பெட்டியை உடைத்து விடுவேன் தெரியுமா?

அதற்குள் அப்பா வந்துவிட்டார்.

அப்பா:  என்னடா பயலே. பலே அதிகப்பிரசங்கியாய்ப்போய் விட்டே.  நான் அப்போதே உன்னை “”குடி அரசு” பத்திரிகையைப் படிக்க வேண்டாம்.  கெட்டுப்போவாய் என்று சொன்னேனா இல்லையா? அது போலவே படித்து கெட்டுக் குட்டிச்சுவராய் போய்விட்டாயல்லவா? கர்மம்! கர்மம்!!  இந்த இழவு பத்திரிகை ஒன்று முளைத்து ஊரிலுள்ள சிறு பிள்ளைகளை யெல்லாம் நாஸ்திகமாக்கி விட்டது.

மகன்:  “”வெகு நன்றாயிருக்கிறது”  என்று சொல்லிக்கொண்டு உடனே அம்மாள் இடுப்பில் சொருகி இருந்த சாவியை பிடுங்கிக்கொண்டு போய் பெட்டியைத் திறந்து நகையை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்து செட்டியாரை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டான்.

பிறகு புருஷனும் பெண்ஜாதியும் ராகுகாலத்தில் அந்த செட்டி இடம் நகை வாங்கிவந்ததே பிசகான காரியம்.  இதுவும் வரும் இன்னமும் எவ்வளவோ கெடுதியும் வரும்.  என்னை அடிக்க வேண்டும்……..லே என்று ஒருவருக் கொருவர் பேசிக்கொண்டார்கள்.

பகுத்தறிவு (மா.இ.)  உரையாடல்  ஆகஸ்ட்டு 1935

You may also like...