கடவுள் சக்தி
விதண்டாவாதம்
நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம்.
* * *
ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங்களையும் பார்த்தும் ஒன்று கூட விடாமல் பதியவைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புகூறி, தண்டனை கண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவைகளில் கஷ்டப்படுத்திவைக்கவும் முடியுமாம்.
* * *
நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது!
* * *
அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறிஸ்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்தபிறகு, எல்லார் குற்றம் குறைகளையும் ஒன்றாய் பதியவைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குளியிலிருந்து எழுப்பிக் கணக்குப்பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லி விடுமாம்.
* * *
இந்துக்களுடைய கடவுள்கள் அதாவது, சைவர்கள் கடவுள்களும், வைணவர்களுடைய கடவுள்களும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி யாகவே அவ்வப்போது அவனைச் சுட்டு எரித்தபின் கண்களுக்குத் தெரியாத அவனுடைய ஆத்மாவை பிடித்து வைத்து, அதற்கு ஒரு சூட்சம சரீரமும் கொடுத்து அந்த சரீரத்திற்கு அதற்குத்தக்க தண்டனை கொடுக்குமாம். அது பெரிதும் அடுத்த ஜென்மத்தில் இன்னின்ன ஜந்துவாய் பிறந்து, இன்னின்ன பலன் அனுபவிக்கவேண்டும் என்று கட்டளையிடுமாம்.
* * *
கிறிஸ்துவ சமயத்தில் உள்ள கடவுள் சக்திப்படி எல்லா மனிதனும் பாவம் செய்தேதான் தீருவானாம்.
* * *
அந்தப் பாவம் ஏசுகிறிஸ்து மூலம்தான் மன்னிக்கப்படுமாம்.
* * *
மகம்மதிய மார்க்கப்படி மகம்மது நபிகள் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம்.
* * *
சைவ சமயப்படி சிவன் மூலமாகத்தான் மன்னிக்கப்படுமாம். அவருக்குத்தான் பரத்துவம் உண்டாம்.
* * *
வைணவ சமயப்படி விஷ்ணு மூலமாகத்தான் முடியுமாம். விஷ்ணுவுக்குத்தான் பரத்துவம் உண்டாம்.
* * *
ஆனால் சைவ வைணவ சமயங்கள்படி மக்கள் பாவமே செய்வது மாத்திரமல்லாமல் புண்ணியமும் செய்யக்கூடுமாம்.
* * *
அதற்காக சொர்க்கம், வைகுண்டம், கைலாசம் என்கின்ற பதவிகள் உண்டாம்.
* * *
அப்புறம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஜன்மங்களும் உண்டாம்.
* * *
இந்த அபிப்பிராயங்கள் எவ்வளவு குழப்பமானதாய் இருந்தாலும் பார்ப்பானுக்கு அழுதால் மேல் கண்ட மோக்ஷங்களோ அல்லது நல்ல ஜன்மமோ எதுவேண்டுமோ அது கிடைத்து விடுமாம்.
* * *
ஆகவே பொதுவாகக் கடவுள்களுடைய சக்திகள் அளவிட முடியாது என்பதோடு, அறிந்துகொள்ள முடியாது என்பது மாத்திரமல்லாமல் அதைப்பற்றியெல்லாம் நாம் சிந்திப்பதோ சிந்திக்க முயற்சிப்பதோ மகா மகா பெரிய பெரிய பாவமாம்.
* * *
அதாவது, எந்தப் பாவத்தைச் செய்தாலும், எவ்வளவு பாவத்தைச் செய்தாலும், அவைகளுக்கெல்லாம் பிராயச்சித்தமும் மன்னிப்புமுண்டாம்.
* * *
ஆனால் கடவுளைப்பற்றியோ அவரது சக்தியைப்பற்றியோ ஏதாவது எவனாவது சந்தேகப்பட்டுவிட்டானோ பிடித்தது மீளாத சனியன்.
* * *
அவனுக்கு மன்னிப்பே கிடையாது. கிறிஸ்துநாதரைப் பிடித்தாலும் சரி, மகம்மது நபி பெருமானைப் பிடித்தாலும் சரி அல்லது இவன் விஷ்ணு, மகேசன் ஆகிய எவரைப் பிடித்தாலும் சரி, ஒரு நாளும் அந்தக் குற்றம் (எந்தக் குற்றம் கடவுளை சந்தேகிக்கப்பட்ட குற்றம்?) மன்னிக்கப்படவே மாட்டாது.
* * *
ஆனால், இந்த எல்லா கடவுள்களுக்கும் அவர்களால் அனுப்பப்பட்ட பெரியார்களுக்கும் அவர்களுடைய அவதாரங்களுக்கு கடவுளைப்பற்றியும், அவர்களுடைய சக்தியின் பெருமைகளைப்பற்றியும் மக்களை சந்தேகப் படாமல் இருக்கும் படிக்கோ, அல்லது அவநம்பிக்கைப்படாமல் இருக்கும் படிக்கோ செய்யவிக்க முடியாதாம்.
* * *
ஏனென்றால், அவ்வளவு நல்ல சாதுவான சாந்தமான கருணையுள்ள சர்வ சக்தி பொருந்திய சர்வ வியாபகமுள்ள கடவுள்களாம்.
* * *
பாவம் நாம் ஏன் அவற்றை தொந்திரவு செய்ய வேண்டும்.
* * *
எல்லாம் கடவுள் செயல் என்று சும்மா இருந்து விடுவோம்.
பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை செப்டம்பர் 1935