கேள்வியும் உத்தரமும் தம்பிக்கும் அண்ணனுக்கும் தம்பிக்கும் வாசக்காரிக்கும் சம்பாஷணை
சித்திரபுத்திரன்
தம்பி@ அடே அண்ணா உன்னை சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை, தயவு செய்து பதில் சொல்லுகிறாயா? அப்புறம் மார்க்கு தருகிறேன்.
அண்ணன்@ அய்யா தம்பி கேள் பார்ப்போம். ஒரு கை பார்க்கிறேன்.
தம்பி@ அடேய் அண்ணா பார்ப்பனரல்லாதார்களில் அயோக்கியர் களைக் கண்டுபிடிப்பதற்கு ஏதாவது தர்மா மீட்டர் இருக்கிறதா?
அண்ணன்@ இது தானா பெரிய கேள்வி இதற்கு பதில் நம்ம வீட்டு வாசக்காரி அம்மா சொல்லி விடுவார்களே.
தம்பி@ எனக்குத் தெரியவில்லையே.
அண்ணன்@ சொல்லச் சொல்லுகிறேன் கேள். அம்மா வாசக்காரி தம்பிக்கு சில கேள்விகளுக்குப் பதில் வேண்டுமாம் சொல்லுகிறாயா?
வாசக்காரி@ தெரிஞ்ச வரையில் சொல்லுகிறேன்.
அண்ணன்@ தம்பி பார்ப்பனரல்லாதார்களில் அயோக்கியர்களைக் கண்டுபிடிக்க ஏதாவது தர்மா மீட்டர் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு பதில் சொல்லம்மா பார்ப்போம்.
வாசக்காரி@ இதுதானா ஒரு பிரமாதமான கேள்வி? சொல்லுகிறேன் கேளுங்கோ தம்பி! எந்த எந்தப் பார்ப்பனரல்லாதாரைப் பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள், இந்து முதல் ஆனந்த விகடன் வரை புகழ்ந்து பேசு கின்றனவோ அந்தப் பார்ப்பனரல்லாதார்களும் சி. இராஜகோபாலாச்சாரியார் முதல் சத்தியமூர்த்தியார் வரை எந்த எந்தப் பார்ப்பனரல்லாதாரை புகழ்ந்து பேசுகிறார்களோ அந்த பார்ப்பனரல்லாதாரும் முதல் நெம்பர் வடிகட்டின விபூஷணாள்வார்கள் ஆஞ்சனேய ஆழ்வார்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்த இருவர்களும் சகோதரத் துரோகி, குலத் துரோகி, காட்டிக் கொடுப்பவர், சுயநலத்துக்கு எவ்வளவு இழிவான காரியமும் செய்பவர்கள், என்றெல்லாம் ஆன பின்பு தானே “”ராம பிரானால்” (ஆரியக் கதைகளில்) ஆழ்வார்களாக சீரஞ்சீவிகளாக கூறப்பட்டிருக்கிறது. ஆதலால் அந்த விபூஷணர், அனுமார் ஆகியவர்களைவிட 100 மடங்காவது அதிகமான………..வர்களாய் இல்லாவிட்டால் எந்தப் பார்ப்பனரல்லா தாரையாவது பார்ப்பனப் பத்திரிகைகளும் பார்ப்பனர்களுமான இந்தக் காலம் ராமாயணம் ராமபிரான் ஆகியவைகள் பார்ப்பனரல்லாதார்களைப் புகழ்ந்து கூறுமா? இது தெரியாமல் போயிற்றே உங்களுக்கு?
தம்பி@ எல்லாரையும் அப்படி சொல்லிவிட முடியுமா?
வாசக்காரி@ முடியாது என்று காணப்பட்டால் அப்படிப்பட்டவர்களை (பார்ப்பனர்களால் புகழ்ந்து கூறப்பட்டவர்களை) முட்டாள்கள், முழு மூடர்கள் என்கின்ற கலத்திலாவது போட்டுத்தான் ஆக வேண்டும். அயோக்கியர்கள் என்பதிலிருந்து (உதுஞுட்ணீtடிணிண) எக்ஸ்செம்ஷன் செய்து விடலாம்.
தம்பி@ இவ்வளவு பரந்த உலகில் எவ்வளவோ பெருமை பெற்றதாக சரித்திரத்தில் கூறிக் கொள்ளும் தமிழ் மக்களில் சிலராவது இவ்வளவு இழிவான நிலையை அடைவானேன்?
வாசக்காரி@ சிலருக்கு பிழைப்புக்கு வேறு மார்க்கமில்லை; சிலருக்கு உத்தியோகத்துக்கு வேறு மார்க்கமில்லை; சிலருக்கு விளம்பரத்துக்கு வேறு மார்க்கமில்லை; சிலருக்கு “இன்னது இன்னது கெட்டால் இன்ன இன்ன இடம் தான் போய்ச் சேர வேண்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. அந்த மாதிரி பார்ப்பனரல்லாத சமூகக் குழுவாகிய தங்கள் இனத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு இந்நாட்டில் பார்ப்பனக் குழுவில்லாமல் வேறு புகல் இடம் இல்லாமல் போய்விட்டதல்லவா? ஆகையால் தான்.
தம்பி@ உண்மையிலேயே நல்ல நிலைமையில் நல்ல எண்ணத்தோடு பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் யாருமில்லையா?
வாசக்காரி@ நீங்கள் தான் சொல்லுங்களேன் பார்க்கலாம். ஒரு பார்ப்பனரல்லாதார் பெயரையாவது. தோழர்கள் சி.ஆர். ரெட்டியார் முதல் அ.கு. முதலியார் வரை உள்ள கூட்டங்களை பார்ப்பனரல்லாதார் சமூக இயக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்குமானால், அவர்கள் தேவைகளை அரைகுறையாகவாவது கவனிக்கப்பட்டிருக்குமானால் அவைகள் பார்ப்பனர்கள் பின்னால் வால்களை ஆட்டிக் கொண்டு திரியுமா? நேரில் சென்று ரகசியமாய் கேட்டால் இந்தப் பிழைப்பு பிழைக்கிறதற்கு அவர்கள் அடையும் வெட்கம் இன்னது என்பது விளங்கும்.
தம்பி@ அப்படியா! இந்த இழிவான நிலை எப்பொழுது மாறும்?
வாசக்காரி@ அந்த ராமாயண காலத்திலேயே இருந்து ஆரம்பித்த காரியம் இந்த ராமாயணம் பொப்பிலி அயனம் ஆகிய காலத்தில் மாற்றப்பட்டுவிட முடியுமா? தமிழ் மக்களில் அனேகருடைய ரத்தத்தையே அடியோடு சிரிஞ்சு செய்து எடுத்துவிட்டு நல்ல சுத்த ரத்தத்தை இஞ்ஜக்ட் செய்ய வேண்டும். அப்படி சுத்தப்படுத்த இன்னும் குறைந்தது 2, 3 ராமாயணம், பொப்பிலி அயனமாவது ஆய்தான் தீர வேண்டும்.
தம்பி@ சரி அப்புறம் இன்னொரு கேள்வி.
இந்தப் பார்ப்பனர்களும் அவர்களுடைய பத்திரிகைகளும் பார்ப்பன ரல்லாதார் தலைவர்களை ராக்ஷதர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும் படம் போட்டு வைகின்றனவே. இதற்கெல்லாம் கேள்வி முறை இல்லையா? மற்றும் ஒரு தலைவரை, “”அவர் ஜாதிப் புத்தியைக் காட்டிவிட்டார்” என்று ஜனங்களுக்கு சொல்லாமல் சொல்லிக் காட்ட செக்கு போட்டுக் காட்டி இழிவுபடுத்தினதன்றோ அதற்கும் ஒன்றும் கேள்வி முறை இல்லையா? மற்றும் பல பார்ப்பனப் பத்திரிகைகள் பார்ப்பனரல்லாத தலைவர்களை குலாம், தாசர், அடிமை, தேசத் துரோகி, பாவி என்றும் இன்னும் சில பார்ப்பனர்கள் பொப்பிலி ராஜா, ஷண்முகம் செட்டியார், ராமசாமி முதலியார் முதலியவர்களை அவன், இவன், அயோக்கியன் என்றெல்லாம் வெட்டவெளியாய்க் கூட்டங்களில் பேசுகிறார்களே, மற்றும் ஒரு பார்ப்பனப் பெண், கடலூர் ஜில்லாவில் பேசும் பொழுது அந்த ஜில்லா போர்டு மெம்பராய் இருக்கும் பெண்களைப் பற்றி இழிவாகச் சொல்லிற்றாம். இதற்கெல்லாம் கேள்வி முறை இல்லையா? நமது பொருமைக்கு எல்லை வேண்டாமா? அவ்வளவு அநாகரிக கேள்வி கேட்பாரற்ற ராஜ்ய பாரத்திலா நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.
வாசக்காரி@ அப்படி ஒன்றும் இல்லை. “”குட்டி நாய் குறைத்ததற்கு ஆக பட்டி நாய்களை உதைப்பது அழகா” என்றபடி சிறிது நிதானித்தோம். நாம் நிதானித்ததைப் பார்த்து பட்டி நாய்கள் நம்மை பயங்காளிகள் என்று நினைத்துக் கொண்டு பரிகாசம் செய்தன. இப்போது பட்டி நாயுக்கும் குட்டி நாயுக்கும் சேர்ந்து புத்தி கற்பிப்பதுபோல வைதவர்களுக்கும், வையத் தூண்டி வைவதைப் பார்த்து சிரித்தவர்களுக்கும், புத்தி வரும்படியும் நல்ல பிள்ளைகளாகும்படியும் நம்மால் ஆனதைச் செய்யத் தொடங்கி இருக்கிறோம். சீக்கிரம் அடங்கிவிடக் கூடும். தோழர் சுந்திராம்பாள் நடிப்பையும், பாட்டையும் பற்றி தங்கள் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கவில்லையே என்கின்ற ஆத்திரத்துக்கு ஆகவும், ஒரு பார்ப்பனரல்லாத பெண் பிரபல மாகிவிடுமே என்கின்ற துஷ்டப் புத்தியாலும் இழித்துப் பழித்துக் கூறின பத்திரிகைகளுக்கு புத்தி வரும்படி செய்யவில்லையா? (அவர்கள் தோல் மொத்தமானதால் அவ்வளவு சீக்கிரம் புத்தி வராது) அதுபோலவே சுவாமி வேதாசலம் அவர்கள் புத்தகத்தைப் பற்றி பொறாமையும், ஆத்திரமும் கொண்டு செய்த சூழ்ச்சிக்கு தமிழ் மக்கள் தக்க புத்தி கற்பிக்க ஆரம்பித்தவுடன் “”பிச்சை போடாவிட்டாலும் நாயைப் பிடித்துக் கட்டுங்கள்” என்பது போலவும், “”உடும்பு வேண்டாம் கையை விட்டால் போதும்” என்பது போலவும் இப்பொழுது பார்ப்பனர்கள் “”இன்னம் இரண்டு புஸ்தகத்தை வேண்டுமானாலும் பாடப் புத்தகமாக வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு ஆக இன்னமும் புத்தி கற்பிக்காதீர்கள்” என்று கெஞ்சும்படியான நிலைக்கு வந்து விடவில்லையா? அதுபோல் நாம் முன்னமேயே கவனிக்க ஆரம்பித்து இருந்தால் பார்ப்பனர் களும், அவர்களது பத்திரிகைகளும், அவர்களது கூலிகளும் வெகு நாளிலேயே அடங்கி இருக்கும்.
தம்பி@ ஏன் பார்ப்பனரல்லாதார் அவ்வப்பொழுது முயற்சி எடுத்து தானே வந்திருக்கிறார்கள்.
வாசக்காரி@ எங்கு எடுத்து வந்திருக்கிறார்கள்? “”குடி அரசு” பொது உடமையில் புகுதாமல் இருந்திருந்து, “திராவிடன்’ நாட்டுக் கொட்டை செட்டியார் கைக்குப் போய் பார்ப்பனர் தயவுக்கு அஞ்சி ஒழியாமல் இருந்திருக்குமானால் இந்த 3 வருஷத்தில் எவ்வளவோ காரியம் ஆயிருக்கும் என்பதோடு பார்ப்பனர்களுக்கு இவ்வளவு வாலும் வளர்ந்திருக்காது. அவர்களுடைய பத்திரிகைகளுக்கு இவ்வளவு திமிரும் ஏற்பட்டிருக்காது என்பது மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களுக்கு இவ்வளவு பார்ப்பனரல்லாத கூலிகளும், காலிகளும் கிடைத்து இவ்வளவு அயோக்கியத்தனமாக குறைக்கவும் முன் வந்திருக்க மாட்டார்கள்.
சாதாரணமாக தோழர் ஆர்.கே. ஷண்முகம் அவர்களைப் பற்றி ஆனந்த விகடன் செக்கு போட்டு ஓட்டுகிற மாதிரி படம் போட்ட காலத்தில் தக்கதொரு கிளர்ச்சி செய்திருந்தால் இத்தனை நாள் அது தேய்ந்து மாய்ந்து ஒழிந்து போய் இருக்கும். சர்க்காருக்கு எடுத்துக்காட்டி இருந்தாலும் அடங்கி இருக்கும். அப்பொழுது “”குடி அரசு” சிறிது வீரம் பேசி விட்டு அடங்கி விட்டது. அதிலிருந்து அதற்கு (ஆனந்த விகடனுக்கு) தைரியம் அதிகமாய் விட்டது. இப்போது அது பார்ப்பனர்களுக்கு தலைசிறந்த ஆயுதமாக விளங்குகிறது.
அதாவது, பார்ப்பனரல்லாத வகுப்பு தாசிகள், பார்ப்பனரிடம் சினேகம் இருப்பதாய் சொல்லிக் கொள்ளுவதில் பெருமை அடையும் அற்ப புத்தி போல் நமது குழந்தைகளும் பெண்மணிகளும் ஆனந்தவிகடன் படிக்கவும் ஆசைபடவும் அனுமதிப்பது போன்ற அற்ப காரியங்கள் செய்து வருகிறோம். தமிழ் மக்களின் ரத்த பரிøக்ஷக்கு ஆனந்த விகடன் படிப்பது என்கின்ற மானமற்ற தன்மையே தர்மாமீட்டர் ஆகும் என்பதுதான் என் அபிப்பிராயம்.
“”சூதாடுவதற்காக அதை வாங்கினோமே ஒழிய படிப்பதற்காக அதை யாரும் வாங்குவதில்லை” என்று சில சிகாமணிகள் சமாதானம் சொல்லக்கூடும். அதுதான் எப்படி யோக்கியமான பதிலாகும்?
ஒரு மனிதன் சூதாட்டம் ஆட வேண்டும் என்றால் பார்ப்பான் இடம் போய்தானா ஆட வேண்டும். மோக்ஷத்திற்குப் பார்ப்பானிடம் திரவுகோல் இருப்பதுபோல் அந்தப் பார்ப்பானிடம் தானா சூதுக்கும் திரவுகோல் இருக்க வேண்டும்? அந்தப் பணங்களையும் பார்ப்பான் தானா திங்க வேண்டும்? அதிலும் நம்மை கீழ் ஜாதி என்றும், ராக்ஷதன் என்றும் சொல்லுபவனா திங்க வேண்டும்? பார்ப்பனரல்லாதாரிலும் அதுபோலவே சிலர் ஆயத்துரை (சூதாடு தொழில்) வைத்து நடத்துகிறார்களே அதில் போய்ச் சேருவதுதானே. அவர்கள் பார்ப்பனர்கள் போல் இவ்வளவு கேவலமாகவும், இவ்வளவு இழிவாகவும் வைய மாட்டார்களே, இதையாவது கவனிக்க வேண்டாமா? பார்ப்பான் நமது ஜனங்களை, போதை வேண்டுமானால் கள்ளுக் குடியுங்கள், சீமைச் சாராயம் குடிக்காதீர் என்கிறானே அதன் அர்த்தம் என்ன? அதுபோல் சூதாட பார்ப்பானிடம் போகாதீர்கள் என்று சொல்லுகிறேன்.
வாசக்காரி@ தம்பியாரே இன்னும் கேளுங்கள். எந்தப் பார்ப்பானாவது பார்ப்பானைத் திட்டுகிறானா? பார்ப்பானை திட்டுகிற பத்திரிகையைப் படிக்கிறானா? இதைப் பார்த்தாவது நமக்குப் புத்தி வர வேண்டாமா?
சத்தியமூர்த்தியாரிடம் என்ன குணம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? அவர் “”தமிழ்நாட்டுத் தலைவர்” ஆனதினால் நான் ஒன்றும் சொல்லக் கூடாது என்றாலும், உதாரணத்துக்குத் தானே சொல்லுகிறேன். அவரைப் பற்றி அவர் முதல் முதல் சீமைக்கு போனது முதல் நாளது வரை நடந்ததை, எந்தப் பார்ப்பானாவது எந்தப் பத்திரிகையாவது ஏதாவது மூச்சு காட்டி எழுதுகின்றனவா? பேசுகின்றார்களா? ஒரே அடியாய் விளம்பரம் செய்து ஆகாயத்தில் தூக்கி வைத்து அவரை “”ஒரு நாளாவது மந்திரி ஆக்கிப் பார்க்காமல் இருப்பதில்லை” என்று விரதம் எடுத்துக் கொண்டு இருப்பதோடு, அனேக பார்ப்பன அம்மாமார்களும் அதுவரை தலை முடிவதில்லை என்று சபதம் கூறி இருக்கிறார்கள். அது தான் கிடக்கட்டும் தோழர் சர்.ஆர்.கே. ஷண்முகத்தைப் பற்றி அனேக பார்ப்பனரல்லாத கூலிகளும், காலிகளும் குரைக்கின்றனவே அவரிடம் சொந்த நடவடிக்கைகளில் தனிப்பட்ட ஒழுக்கங்களில் சமூக கௌரவங்களில் எவ்வித கெட்ட நடத்தையும் இல்லை என்பதை நம்மிடம் ஒப்புக் கொண்டு, பார்ப்பனர்களிடம் போய் கூலிகள் பெற்று பல பார்ப்பனரல்லாத காலிகள் குரைக்கின்றனவே. ஆனால் தோழர் சர்.சி.பி. ராமசாமி அய்யர்வாள் அவர்களைப் பற்றி எந்தப் பார்ப்பனனாவது எந்தப் பார்ப்பனப் பத்திரிகையாவது மூச்சு பேச்சு காட்டுகின்றனவா? எவ்வளவு கீழான மாமா பார்ப்பானாவது பேசுகிறானா? அவரும் ஒரு சமஸ்தானத்துக்கு ஒரு வேலை இல்லாத உத்யோகஸ்தர் ஆக N 4000, 5000 சம்பாதித்தார். அதுவும் போதாது என்று இன்னும் பெரிய உத்தியோகம் பெறப் பார்க்கிறார். “”லார்டு வில்லிங்டன் துரை மகனாருக்கு ரொம்ப வேண்டியவர்” என்கின்ற சேதி அடிபடுகின்றது. லார்டு வில்லிங்டன் துரையிடம் ஆக வேண்டிய காரியங்களுக்கு இவரே பூசாரி என்கின்றார்கள். இன்னமும் சி.பி. அவர்களைப் பற்றி என்ன என்னமோ மார்க்கட்டு, நாடகக் கொட்டகை எல்லாம் கத்தரிக்காய் கடை முதல் தப்பட்டை அடிக்கப்படுகிறது. அதைப் பற்றி படமா கேலியா………. ஒன்றும் இல்லாமல் காப்பிக் கடையிலும், வக்கீல் குமாஸ்தா அரைகளிலும், “”பிறந்தால் சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்களுக்கு கை, கால்களாகவாவது பிறந்த சுகம் அனுபவிக்க வேண்டும்” என்று தானே புகழ்ந்து கூறி மகிழ்ச்சி அடைகின்றார்கள். இதிலிருந்து யார் கெட்டிக்காரர்கள்? யார் புத்திசாலிகள்? யார் மடையர்கள்? யார் சமூகத் துரோகிகள்? யார் வயிற்றுப் பிழைப்புக் கூலிகள்? என்பதையாவது உணர்ந்து பாருங்கள்.
சரி. பொப்பிலி ராஜாவை எதற்காக ராக்ஷதர் என்று சொல்ல வேண்டும்? ராவணனாவது ராமர் பெண்டாட்டியைத் தூக்கிக் கொண்டு போய் என்ன என்னமோ செய்தான் என்பதாக சொல்லி அதனால் ராக்ஷதன் என்று சொன்னார்கள். பொப்பிலி ராஜா யார் பெண்டாட்டியை அடித்துக் கொண்டு போனார்? என்ன செய்தார்? ஏன் அவரை ராக்ஷதர் என்று சொல்ல வேண்டும்? இனி மேலாவது, எந்தப் பார்ப்பானாவது பொப்பிலியை ராக்ஷதன் என்று சொன்னாலும் படம் போட்டாலும் சரி உடனே நம்ம ஆள் ஒருத்தர் அந்தப் பார்ப்பான் வீட்டுக்கு ஓடிப் போய் பார்த்து அவன் பெண்டாட்டி வீட்டில் இருக்கிறார்களா? இல்லையா என்று தெரிந்து விட்டு வந்து அந்தப் பார்ப்பானை “”அட மடையா உன் பெண்டாட்டி உன் வீட்டில் தான் இருக்கிறார்கள். இப்பொழுதுதான் நான் பார்த்துவிட்டு வந்தேன். எவனோ ஒரு ஏகாலி பேச்சைக் கேட்டுக் கொண்டு பொப்பிலி மீது சந்தேகப்பட்டு அவரை ராக்ஷதன் என்று சொல்லுகிறாயே உனக்கு புத்தியில்லையா” என்று கேட்பதோடு அதுபோலவே எழுதுவதோ ஆகிய காரியம் வைத்துக் கொண்டால் இனி எவனும் அந்த மாதிரி காரியம் செய்யவே மாட்டான்.
தம்பி@ அப்படியெல்லாம் கேட்பது நல்லதா? நாய் கடித்தால் நாமும் அதைக் கடிக்கலாமா?
வாசக்காரி@ கடிக்க வேண்டாம். தடி எடுத்து விரட்டியாவது துறத்த வேண்டாமா? “”நாய்ச் சாமிக்கு மலைக் கொழுக்கட்டை ஆராதனை” என்பதுபோல் அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள வேண்டியது மனிதத் தன்மை மாத்திரமல்லாமல் அறிவாளியான வீரன் செயலுமாகும்.
நல்ல குதிரைக்கு சவுக்கு ஆட்டினால் போதும். தோல் மொத்தமாய் இருக்கிற மந்தி குதிரை அல்லது எருமைக் கிடாவை மொத்தமான தொண்ணைக் கம்பால் இருக்கினால் தான் நகரும்.
அதுபோல் நம்ம தற்காப்பைப் பொருத்த வரையாவது, “”பதிலுக்குப் பதில் செய்யத் தயாராய் இருக்கிறோம் எங்களால் முடியும்” என்றாவது காட்டிக் கொள்ளாமல்கூட இருப்பதென்றால் நம்மை நாம் மனிதர் என்று சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம்கூட இல்லை.
அன்றியும், அப்படி இருந்ததாலேயேதான் எச்சைக்கலைப் பார்ப்பான்கூட நம்மை ராக்ஷதன் என்கிறான்.
தம்பி@ இந்தப்படியெல்லாம் நாம் நடந்தால் பாமர மூடஜனங்களுக்கு நம்மிடம் இன்னும் அதிக வெறுப்பு ஏற்படும்படியாக இந்தப் பார்ப்பனர்கள் செய்துவிட மாட்டார்களா?
வாசக்காரி@ செய்து விட்டுப் போகட்டுமே அதனால் என்ன முழுகிப் போகும்?
தம்பி@ நம்மவர்களுக்கு மந்திரி வேலை போய் விடாதா?
வாசக்காரி@ போய்த்தான் தொலையட்டுமே பார்ப்பான் மந்திரியாய் வந்துவிட்டால் உலகமே முழுகிப் போய்விடுமா?
“”ஒரு வண்டி செங்கல்லும் பிடாரி ஆனது” என்பது போல், எல்லாப் பார்ப்பானுமே மந்திரிகளாய் விடட்டுமே நம்மை இனி என்ன அசைத்து விட முடியுமா?
மந்திரி அதிகாரம் நம்மை விட்டுத் துலைந்தால் நமது நிலை என்ன தான் ஆகிவிடும் என்பதைத் தெரிந்து கொள்ளுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்படவாவது மந்திரி உத்தியோகம் நம்மை விட்டுத்தான் ஒரு தடவையாவது தொலை யட்டுமே. பாமர ஜனங்களுக்குப் புத்தி வர ஒரு சந்தர்ப்பமாவது கொடுக்கலாமே?
இப்பொழுது “”பார்ப்பனர்கள் மந்திரிகளாய் விட்டால் பரிசம் இல்லாமல் பெண் கிடைக்கும். ஆளுக்கு 2, 3 கூடக் கிடைக்கும்” என்று நினைத்துக் கொண்டிருக்கிற முட்டாள் பயல்களுக்கு அவனவன் வீட்டிலுள்ளதையாவது காப்பாற்ற முடிகின்றதா அல்லது மனுநீதிபோல் நடக்க வேண்டி வருமா என்பதையாவது தெரிந்து கொள்ளட்டுமே.
தம்பி@ அப்படியானால் இப்போது ஏன், “”மந்திரி வேலை நம்ம கையை விட்டுப் போகக் கூடாது” என்று கருதுகின்றவர்களுடன் கூடிக் கொண்டு என்னையும் பாடுபடச் சொல்லுகிறாய்.
வாசக்காரி@ இது கூடவா தம்பி உங்களுக்கு தெரியவில்லை?
தம்பி@ தெரியவில்லை.
வாசக்காரி@ பார்ப்பான் சங்கதி வெளியாக்குவதற்கு ஏதாவது ஒரு சாக்கு வேண்டாமா? அதற்காக வேண்டி நானும் கூட்டத்தில் கோவிந்தாப் போடுகின்றேன்.
நான் கூப்பாடு போடாவிட்டாலும், நீ கூப்பாடு போடாவிட்டாலும் மந்திரி வேலை நம்ம ஆளுகள் கையை விட்டு ஒரு நாளும் போய்விடப் போவதில்லை.
ஆனாலும் நம்ம பிரசார சங்கதி நடத்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் வேண்டாமா? அன்றியும் நம்ம ஆளுகளை இந்தப் பார்ப்பனர்கள் இவ்வளவு அயோக்கியத்தனமாய் தாக்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டா இருப்பது? அதற்காகத்தான்.
தம்பி@ சரி இன்னம் ஒரு நாளைக்கு சந்திக்கலாம். நான் போய் வருகிறேன்.
குடி அரசு உரையாடல் 08.09.1935