மதம் போய் விடுவதால் கடவுள் ஒழிந்துவிடாது

 

ஓர் சமதர்மி

சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் குடி அரசில் ஜாதிகள் ஒழிக்கப் படுவதினால் மதம் ஒழிந்து விடாது என்பதாக விளக்கி இருந்தேன்.

இவ்வாரம் இக்கட்டுரையில் மதம் போய்விடுவதால் கடவுள் ஒழிந்து விடாது என்பதைப் பற்றி எழுத ஆசைப்படுகிறேன்.

முதலில் மதம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

மதம் என்பதைப் பற்றி இருவிதமான அபிப்பிராயங்கள் மக்கள் உலகில் நிலவி வருகின்றன.

ஒன்று: மதங்கள் என்பவைகள் பெரிதும் கடவுள்களாலும், கடவுளைக் கண்ட பெரியார்களாலும், கடவுள் குமாரர்களாலும், கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்களாலும், கடவுள் அவதாரங்களாலும், கடவுள் தன்மை கொண்ட ஆழ்வார்கள் நாயன்மார்களாலும் ஏற்பட்டவை என்றும், அம்மதங்களுக்கு ஆதாரமான வேதங்கள் என்று சொல்லப்பட்டவைகள் அக்கடவுள்களின் வாக்குகள் என்றும், கடவுள்களின் அபிப்பிராயங்கள் என்றும், கடவுள் அருள் பெற்றவர்களால், தீர்க்கதரிசிகளால் சொல்லப் பட்டவைகள் என்றும், கடவுள் கட்டளையின் மீது வெளியாக்கப்பட்டவை என்றும், அசரீரியாக ஆகாயத்தில் இருந்து சப்த மூலமாக வந்தவைகள் என்றும், அவை எக்காலத்துக்கும் ஏற்றவைகள் என்றும், அவைகளிலிருந்து ஒரு எழுத்துக்கூட மாற்றக் கூடியது அல்ல வென்றும், அவைகளிலுள்ள படியே மக்கள் சமூகம் எக்காலத்திலும் நடந்து தீர வேண்டியது அவசியம் என்றும், மதத்தினாலல்லாது  மதம் கண்ட அருளாளர்கள் மூலமாய் அல்லது மனிதனுடைய பாவங்கள் மன்னிக்கப்பட மாட்டாது என்றும், கடவுளின் அடியை அடைய முடியாது என்றும், அம் மதக் கட்டளைகள் அம்மத வேத வாக்குகள் மனிதனுடைய அறிவுக்கும் நடப்பிற்கும் மற்றும் விஞ்ஞானத்திற்கும், நிரந்தர உண்மைக்கும் எவ்வளவு தூரம் மாறுபட்டிருந்த போதிலும் மனித சமூக வாழ்க்கை நடப்புக்கும், கூட்டுறவுக்கும் எவ்வளவு தூரம் பயன்படாததாகவும் கேட்டை விளைவிக்கக் கூடியதாகவும் இருந்த போதிலும் நம்பித்தான் ஆகவேண்டும் என்றும்  ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும் என்றும்  பின்பற்றித்தான் தீர வேண்டும் என்றும் சொல்லப் படுவதும் தான் மதம் என்ற அபிப்பிராயம் பெரும்பாலும் இருந்து வருகின்றது.

இரண்டாவது@ மதம் என்பது ஒரு கொள்கை என்றும், அது மனித சமூகக் கூட்டு வாழ்க்கைக்கு ஏற்ற திட்டங்களையே பெரிதும் கொள்கையாகக் கொண்டதென்றும், அக் கொள்கைகள் காலக்கிரமங்களில் ஒவ்வொரு அறிஞர்களால் புதுப்பிக்கப்பட்ட ஒவ்வொரு கொள்கையின் கர்த்தாக்கள் பேராலும் அவ்வக்கொள்கைகளையே ஒவ்வொரு மதமாகக் கருதப்படுகின்றன வென்றும், அக்கொள்கைகளைப் பலப்படுத்தவும் நிலை நிறுத்தவுமே மதங்களோடு கடவுள்களைச் சம்மந்தப்படுத்த வேண்டியதாயிற்று என்றும், நாளாவட்டத்தில் மதப்பிரசாரகர்களின் சுயநல வாழ்க்கையை முன்னிட்டு கொள்கைகளின் தத்துவங்கள் விளக்கப்படாமல் கண்மூடித்தனமாக நம்பிக்கையின் மேல் மக்கள் மதங்களோடு சம்மந்தப்பட வேண்டியதாயிற்று என்றும், எந்த மதக் கொள்கைகளானாலும் அவை கால தேசவர்த்தமானங் களுக்குத் தகுந்த வண்ணம் மாற்றப்பட வேண்டியதே என்றும், மற்றொரு கூட்டத்தாரால் கருதப்படுகின்றது. இக் கூட்டத்தார் மதத்தோடு கடவுளைச் சம்மந்தப்படுத்துவதில்லை.

மற்றொரு மூன்றாவது கூட்டத்தார் மதசம்மந்தமான எந்தக் கொள்கையும் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஒத்து இருக்க வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுபவர்கள். மேல் காட்டிக் கொண்டு மதக் கொள்கைகள் என்பவைகள் அறிவுக்கும், உண்மைக்கும், அனுபவத்திற்கும் ஏற்றவைகள்தான் என்றும், அவைகளை அறியவும், உணரவும் சில மனிதர்களுக்குப் போதிய அறிவில்லை என்றும், சாமானியர்களுக்கு அவை விளங்காதென்றும்  இப்படியாகச் சொல்லுபவர்களும் உண்டு.

இரண்டாவது கொள்கைக்காரர்களுக்கு நான் சமாதானம் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில் அவர்கள் மதத்தோடு கடவுளை சம்மந்தப் படுத்துவதில்லை என்று சொல்லி விடுகிறார்கள். ஆதலால் பிரஸ்தாப விஷயத்திற்கும், அவர்களுக்கும் சம்மந்தமில்லை.

முதலாவது மூன்றாவது கொள்கைக்காரர்களுக்குச் சமாதானம் சொல்ல வேண்டியது அவசியமாகும்.

இன்று உலகில் பல்வேறு மதங்கள் இருக்கின்றன. பல்வேறு மத ஆதாரங்களாகிய வேதங்களும் இருக்கின்றன. அவற்றின் கட்டளைகள் வெவ்வேறாகவும் இருக்கின்றன. அவ்வளவோடல்லாமல் ஒன்றுக்கொன்று மாற்றமுடையவைகளாகவும், எதிர்மறைக் கருத்துக்கள் கொண்டதாகவும் இருக்கின்றன. ஒரே கடவுள் இவ்வளவு மதங்களுக்கும் இவ்வளவு மத ஆதாரங்களாகிய வேதங்களுக்கும் கர்த்தாவாக இருந்திருப்பார் என்று யாராவது சொல்ல முடியுமா?

பல கடவுள்கள் இருப்பதாக எந்த மதக்காரர்களும் ஒப்புக் கொள்ளுவதுமில்லை. ஆனால் ஒவ்வொரு மதக்காரர்கள் கடவுள்களுக்கும் ஒவ்வொரு மாதிரியான குணங்கள் செய்கைகள் கற்பிக்கப்படுவதோடு, ஒவ்வொரு ஆதாரங்களும் பெரிதும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டவைகளாகவும் இருக்கின்றன.

ஒருவர் கடவுளையும், ஒரு வேதத்தையும் மற்றொரு மதக்காரன் ஒப்புக் கொள்வதில்லை என்பதோடு ஒவ்வொரு மதக்காரனும் என் கடவுள்தான் உண்மையாக எல்லோருக்கும் ஆதாரமான கடவுள் என்றும், தனது மத வேதம்தான் உண்மையானது  உண்மையான கடவுளால் சொல்லப்பட்டதுமாகும் என்றும் வாதாடுவதோடு மற்றக் கடவுள்களையும் வேதங்களையும் பரிகசிக்கிறார்கள், வெறுக்கவும் செய்கிறார்கள்.

ஆகவே எல்லா மதக்கடவுள்களும் உண்மையாய் இருக்க முடியாது என்றாலும், எல்லா வேதங்களும் கடவுள்களால் சொல்லப்பட்டிருக்காது என்றாலும் ஏதாவது ஒரு மதக்காரனுடைய கடவுளையாவது ஏதாவது ஒரு மத (வேத)த்தையாவது (விவகாரத்துக்காக) உண்மை என்று வைத்துக் கொண்டாலும் அம்மதத்துக்கு உண்மையிலேயே கடவுள் சம்மதமிருந்து அந்த வேதம் உண்மையிலேயே கடவுளால் அல்லது கடவுள் சம்மதத்தின் மீது அல்லது கடவுள் அருளால் வெளியாக்கப்பட்டிருக்குமானால் அது எல்லா மனிதர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததாய் இருக்க முடியுமா? அல்லது அதை எந்த மனிதனாவது ஆட்சேபிக்க முடியுமா?

மனித சமூக நன்மைக்காக கடவுளால் ஏற்படுத்தப்பட்ட மதம், கடவுளால் வெளியாக்கப்பட்ட வேதம் ஆகியவைகளை மக்கள் ஒப்புக் கொள்ளும்படியும் செய்வது எந்தக் கடவுளுக்கும் கஷ்டமான காரியமாகி விடுமா? அல்லது கடவுளே ஏற்படுத்திவிட்டு கடவுளே அவைகளை மனிதனை ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றும் எதிர்த்துப் பேசும்படியும் செய்து அப்படிப்பட்டவனை தண்டனைக்குள்ளாக்குவது என்பது கடவுளின் வேலையாய் இருக்க முடியுமா? அப்படிக்கு இல்லையானால் கடவுள் வாக்கையும், கடவுள் கட்டளைகளையும் கடவுளால் அனுப்பப்பட்டவர்களின் உத்திரவுகளையும் மீறி நடக்கும்படியான சக்தி இந்த சாதாரண மனிதர்களுக்கு இருக்கிறது என்று சொல்லிவிட முடியுமா?

அல்லது மூன்றாவது கூட்டத்தார்கள் சொல்லும் அபிப்பிராயப்படி கடவுள் தத்துவங்களையும், வேதங்களின் உண்மைகளையும் பற்றி அவை பகுத்தறிவுக்கும், அனுபவத்திற்கும் ஒத்துத்தான் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி அறிய மனிதனுக்கு சக்தி இல்லை என்பது வாஸ்தவமாய் இருக்குமானால் இன்று இவ்வுலகில் உள்ள 200 கோடி மக்களில் ஒருவராவது அறியக்கூடியவர்கள் இருக்க வேண்டாமா? அந்தப்படி இருந்தால் அவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டி மெய்ப்பித்து ஒப்புக் கொள்ளச் செய்திருக்க வேண்டாமா? அப்படியும் இல்லையானால் மனிதனால் தெரிந்து கொள்ள முடியாத உண்மைகளை நம்பி உலகம் நடப்பதனால் நீதி விளங்குமா?

எவ்வளவோ அற்புதங்களைக் கண்டுபிடித்து மக்கள் அறிவுக்கும் பிரத்தியட்ச அனுபவத்திற்கும் மெய்பித்துக் காட்டி பயன்படச் செய்து இருக்கையில் அப்படிப்பட்ட மக்களாலும் இந்த மத விஷயமான காரியம் அதுவும் சர்வ வல்லமையும் சர்வ வியாபகமும் உள்ள கடவுளால் கடவுளுக்காக அதாவது கடவுளை அறிவதற்காக மனிதனுடைய நன்மைக்கென்றே ஏற்பட்ட மதமும், வேதமும் மனிதனுக்கு அதுவும் ஆறு அறிவு படைத்து கடவுளை உள்ளத்தில் கொண்ட மனிதனுக்கு விளங்கும்படி செய்ய முடியவில்லை என்றால் இம் மதங்களும் வேதங்களும் கடவுளால் ஏற்பட்டதென்றோ கடவுள் சம்பந்தமுடையதென்றோ கடவுளை அடைவதற் கென்றோ ஏற்பட்டதென்று ஞானமுள்ள எவனாவது சொல்ல முடியுமா?

இன்று மதம் மனதாரவே விவகாரத்திற்கிடமில்லாமல் ஒவ்வொரு வருக்கும் மனதிற்கும் புத்திக்கும் அனுபவத்திற்கும் தெரியும்படியாகவே மனித சமூகத்தைப் பிரித்திருக்கிறது என்பதும், மதம் காரணமாகவே மனித சமூகத்தில் பல இயலிலும் வேறுபாடு நிலவி வருகின்றதென்பதும் மனிதப் பிறவியில் மனிதன், மற்ற ஜீவப் பிராணிகளைவிட மேலான அறிவையும் நிலையையும் பெற்றவன் என்பதை அடியோடு அழித்து சகல ஜீவப் பிராணி களைவிடக் கேடானவன் என்று சொல்லத்தகுந்த அளவும், குறைவும், கவலையும் அனுபவித்துக் கொண்டே வந்திருக்கிறான் என்பதும் தெரியவில்லையா?

இப்படிப்பட்ட காரியங்கள் மாற்றமடைந்து மனித சமூகம் உண்மை யிலேயே மேம்பாடு அடைவதற்கு இம்மதங்கள் ஒழிக்கப்படுவதாய் இருந்தால் ஒழிந்து போவதற்காகவே இருந்தால் இந்தக் காரணத்தினாலேயே கடவுள் ஒழிந்து விடுமா? அல்லது மறைந்துவிடுமா? என்பதை யோசித்துப் பாருங்கள். சர்வ வல்லமை சர்வ சக்தி உள்ள கடவுளைக் காப்பாற்ற  ஒரு மதம்  வேண்டியதாயிருக்குமானால்  அல்லது ஒரு வேதம்  வேண்டியதாய்  இருக்குமானால் அக் கடவுளை நாம்  சர்வ சக்தி சர்வ வியாபகம் உள்ளது என்று எப்படிச் சொல்ல முடியும்.

கடவுள் உருவம், குணம், விருப்பு, வெறுப்பு அற்றவர் என்றும், யாராலும் அறியப்படாதவர் என்றும், அவர் ஆதி அந்தமில்லாமல் எக்காலத்திலும் இருப்பவர் என்றும் சொல்லப்பட்ட பிறகு,

கோலம்

தலைவிரிகோலமாய் உள்ள மதம் என்பது போய்விட்டதினாலேயே ஒழிந்து போவார் என்று யாராவது நினைப்பார்களேயானால் அவர்கள் கடவுளை, சர்வசக்தி, சர்வவியாபகம் உள்ளவர் என்று கருதியிருப்பவர் களாவார்களா? இருந்தால் அப்படிப்பட்டவர்களை நாஸ்திகர்கள், கடவுள் தன்மை அறியாத கசடர்கள் என்று தானே சொல்ல வேண்டும்? ஆகவே எப்படிப்பட்ட ஆஸ்திகர்களும், மதம் ஒழிந்து போவதால், கடவுள் ஒழிந்து போய் விடுவார் என்று கவலைப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

குடி அரசு  கட்டுரை  05.05.1935

You may also like...