சபாஷ் பம்பாய்!

 

பம்பாய் மாகாணம், காங்கிரஸ் உணர்ச்சி மிக்க பிரதேசம். பம்பாய் நகரமும் அப்படியே. உப்புப் போர் பம்பாய் மாகாணத்திலேயே ஆரம்பமாயிற்று. உலகப் பிரசித்திபெற்ற காந்தியாரின் தண்டியாத்திரை தமாஷ் மூலம், பகுத்தறிவற்ற பாமர ஜனங்களுக்கும், கிராம வாசிகளுக்கும் காங்கிரஸ் மீது ஒரு குருட்டு பக்தி ஏற்பட்டது. பாமர மக்களின் குருட்டு பக்தியை காங்கிரஸ் சார்பாக திருப்ப வேண்டுமென்ற அந்தரங்க நோக்கத்துடனேயே காந்தியார் சபர்மதியிலிருந்து தமது சத்தியாக்கிரக கோஷ்டியுடன் தண்டிக்குக் கால்நடையாகப் பிரயாணமானார். பத்திரிகை நிருபர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். காந்தி கோஷ்டியாருக்கு வழிநெடுகக் கிடைத்த ராஜோபசாரங்களை ஒன்றுக்குப் பத்தாக வர்ணித்து அவர்கள் பத்தி பத்தியாய் பத்திரிகைகளில் எழுதினார்கள். ஒரு குக்கிராமத்திலே ஒரு நாவித மாது காந்தியாருக்கு öக்ஷளரம் செய்த அதிசயத்தைக்கூட பத்திரிகை நிருபர்கள் விட்டுவிடவில்லை.  öக்ஷளரக் கூலி கொடுக்க வேண்டிய காந்தியார் அந்த சாதுப் பெண்ணின் காதணியைக் காணிக்கையாகப் பெற்றதையுங்கூட பத்திரிகை நிருபர்கள் மறவாமல் பத்திரிகைகளுக்கு எழுதியனுப்பினார்கள். இத்தகைய விளம்பரங்களினால் பம்பாய் மாகாணத்துக்கு காந்தி பைத்தியமும், காங்கிரஸ் பித்தும் பிடித்தது.

கடைசியாக உப்புப்போர் ஆரம்பமான போது ஆயிரக்கணக் கானவர்கள் தடியடிப் பட்டார்கள்; சிறை புகுந்தார்கள். அக்காலத்திலே பம்பாய் நகரம் பட்ட பாட்டைச் சொல்லி முடியாது. உப்புப் போருடன் விதம் விதமான மறியல்களும் பம்பாயில் நடைபெறத் தொடங்கின. தேச சேவிகைகளும் மறியலில் கலந்துகொண்டதினால் மறியல்களுக்கு ஒரு தனிப் பகட்டும் ஏற்பட்டது. தொண்டர்களும் சேவிகைகளும் சிறைபுகச் சிறைபுக அவர்களது ஸ்தாபனங்களுக்கு  மேற்கொண்டும் பலர் முன் வந்து கொண்டிருந்தனர். உப்புப் போரிலும், மறியலிலும் பம்பாய் நகரமே சாம்பியன் மெடல் பெறத்தகுந்ததென்றும் கூறப்பட்டது. அத்தகைய காங்கிரஸ் பக்தி  காந்திப் பித்து மிக்க பம்பாய் நகரத்தின் இன்றைய நிலைமை என்ன? அந்தோ! சொன்னால் வெட்கக்கேடு. டிசம்பர் 28ந் தேதி நடக்கப் போகும் காங்கிரஸ் ஜுப்பிலியைப் பாராட்டி ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்று காங்கிரஸ் சமதர்மிகளான தோழர்கள் எம்.ஆர்.மாசானியும், மேஹர் அலியும் கொண்டுவந்த தீர்மானம் பெரும்பான்மையான வோட்டுகளினால் பம்பாய் நகர சபையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டன. அவர்கள் கொண்டு வந்த தீர்மானங்களோ மிக மிக மிதமானவை.காசு பணம் செலவில்லாதவை. தேசீயக் கொடி ஏற்ற வேண்டுமென்றோ, தீபாலங்காரங்கள் செய்ய வேண்டுமென்றோ, அன்னதானம் செய்ய வேண்டுமென்றோ, ஊர்வலம் நடத்த வேண்டுமென்றோ அவர்கள் வற்புறுத்தவில்லை. காங்கிரஸ் ஆரம்பமாகி 50 ஆண்டு பூர்த்தியானதற்குத் தமது சந்தோஷத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும், தேச மகாஜனங்களுக்கு தேசீய உணர்ச்சியையும், தியாக உணர்ச்சியையும் எழுப்பிய காங்கிரசைப் பாராட்டுவதாகவும் மட்டுமே அத் தீர்மானங்கள் கூறின. இந்த சாரமற்ற தீர்மானங்களையும்கூட, காங்கிரசுக்காகப் பலமுறை சிறைச் சென்ற தோழர் நாரிமனை மேயராகக் கொண்ட பம்பாய் நகரசபை கவிழ்த்துவிட்டதென்றால் பம்பாய் நகரத்தில் காங்கிரஸ் பித்து தெளிந்து வருகிறதென்பதற்கு வேறு அத்தாட்சி வேண்டுமா! காந்தீயம் தாண்டவ மாடும் ஆமதாபாத் ஜில்லா போர்டும் ஜூபிலி விழாக் கொண்டாடத் தேவையில்லையென முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில், 500 ரூபாய் செலவு செய்து காங்கிரஸ் பொன் விழாக் கொண்டாட வேண்டுமென்று சென்னை நகரசபை தீர்மானித்திருப்பது வெகு வேடிக்கையாகவே இருக்கிறது. முதலில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது நகரசபை அதற்கு அனுமதியளிக்கவே இல்லை. இரண்டாம் முறை, மிதித்த காலுக்கு முத்தம் கொடுக்கும் ஐரோப்பிய மெம்பர்கள் நடுநிலைமை வகித்ததினாலும், ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்கள் பலர் அக் கூட்டத்துக்கு விஜயம் செய்யா திருந்ததினாலும் பொன் விழாக் கொண்டாட்டத் தீர்மானம் நிறைவேறிற்று. மற்றும் வெளி ஜில்லாக்களிலுள்ள பல நகரசபைகளும், ஜில்லா போர்டுகளும் பொன்விழாக் கொண்டாடத் தீர்மானித்திருக்கின்றன. பொன்விழாக் கொண்டாடத் தீர்மானத்தை தூத்துக்குடி நகரசபைத் தலைவர் நிராகரித்து விட்டாலும், மீண்டும் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சி நடைபெற்று வருகிறதாம். முடிவு என்னாகுமோ தெரியவில்லை. சென்னை நகரசபைத் தீர்மானம் சர்க்காருக்குச் சென்றிருப்பதாயும், அது விஷயமாக என்ன செய்வதென்று சர்க்கார் யோசித்துக் கொண்டிருப்பதாயும் சொல்லப்படுகிறது. நாட்டிலுள்ள எத்தனையோ அரசியல் கட்சிகளுள் காங்கிரஸ் கட்சியும் ஒன்று. அது பழமையான கட்சியாக இருக்கலாம்; வலிமை பொருந்திய கட்சியாக இருக்கலாம். இருந்தாலும் இந்தியாவிலுள்ள எத்தனையோ கட்சிகளுள் அதுவும் ஒன்றென்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே அத்தகைய ஒரு அரசியல் கட்சியின் பொன்விழா கொண்டாட்டத்துக்காக ஸ்தல ஸ்தாபனங்கள் பொதுப் பணத்தைச் செலவு செய்யலாமா என்னும் விஷயம் முக்கியமாய்ச் சிந்திக்கத் தக்கது. மேலும் “”இந்தியாவைப் போன்ற வறுமை மிகுந்த நாட்டில், இவ்வளவு பொருளாதார மந்தம் தாண்டவமாடும் சமயத்தில் ஜனங்கள் தீபாலங்காரம் என்ற வெளிப் பகட்டுக் காரியத்தில் பணத்தை விரயம் செய்யக் கூடாது” என்று பலர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பொன் விழாவின்போது தீபாலங்காரம் வேண்டாமென்று காங்கிரஸ் தலைவர் தோழர் ராஜேந்திரபிரசாதும் கட்டளையிட்டிருக்கிறார். அம்மட்டோ! அபிப்பிராய பேதத்துக்கு இடமில்லாத முறையில் விழாக் கொண்டாட வேண்டுமென்றும் காங்கிரஸ் தலைவர் வற்புறுத்தியிருக்கிறார். காங்கிரஸ் பக்தர்களோ, ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் தேசீயக் கொடியைப் பறக்கவிட வேண்டுமென்கிறார்கள். காங்கிரஸ்காரரின் மூவர்ணக் கொடி எவ்வாறு தேசீயக் கொடியாகும். எல்லா அரசியல் கட்சியாரும் ஒப்புக் கொண்ட கொடியைத்தான் “”தேசீயக்கொடி” என்று கூறலாம். காங்கிரஸ்காரரின் ராட்டைக்கொடி தேசீயக் கொடியாகா தென்றும், தேசீயக் கொடியை நிர்ணயம் செய்யும் உரிமை வட்டமேஜை மகாநாடு போன்ற சர்வகட்சி மகாநாட்டுக்கே உண்டென்றும் தேசீய தினசரியான “”தமிழ்நாடு” வெகு காலத்துக்கு முன்னேயே கூறியிருக்கிறது. விவாதத்துக்கு இடமாகவிருக்கும்போது தேசீயக் கொடியை ஸ்தல ஸ்தாபனக் கட்டிடங்களில் பறக்கவிடுவது காங்கிரஸ் தலைவர் கட்டளைக்கு முரணாகாதா? “”இந்தியாவைப் போன்ற வறுமை நாட்டில் இவ்வளவு பொருளாதார மந்தம் தாண்டவமாடும் இக்காலத்து” சென்னை நகரசபை, பொன்விழாவுக்காக 500 ரூபா செலவு செய்வது நீதியாகுமா? இதர ஸ்தல ஸ்தாபனங்கள் பணச்செலவு செய்யலாமா? சொந்தப் பணத்திலிருந்தோ, காங்கிரஸ் நிதியிலிருந்தோ, விழுங்கி யேப்பமிட்டது போக மீதமா யிருக்கும் திலகர் சுயராஜ்ய நிதியிலிருந்தோ, பொன் விழாக் கொண்டாட காங்கிரஸ்காரர் செலவு செய்வதை நாம் ஆட்சேபிக்கவில்லை. அது அவர்கள் சொந்த விஷயம். பொதுப் பணத்திலிருந்துசெலவு செய்வதையே நாம் ஆட்சேபிக்கிறோம்.

கொடியேற்று விஷயமாக சர்க்கார் பிறப்பித்திருக்கும் உத்தரவை அரசியல் ஞானமும், நேர்மையும் உடையவர்கள் எல்லாம் ஆதரிப்பார்கள் என்பது நிச்சயம். 1932ம் வருஷத்தில் தேசீயக் கொடி சம்பந்தமாக சர்க்கார் பிறப்பித்துள்ள தடை யுத்தரவை காங்கிரஸ் பொன்விழா சமயத்து ஞாபகத்தில் வைக்கும்படியும், அமல் நடத்தும்படியும் சென்னை சர்க்கார் ஸ்தல ஸ்தாபனங்களுக்கெல்லாம் தெரிவித்திருப்பதாக அறிகின்றோம். எனவே தேசீயக் கொடித் தொல்லை ஒழிந்துவிடுமென்று நம்பலாம். பொன் விழாவுக்கு ஸ்தல ஸ்தாபன பணத்தைச் செலவு செய்வது சம்பந்தமாக சர்க்கார் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை தேசமக்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

குடி அரசு  கட்டுரை  22.12.1935

You may also like...