பிரிட்டிஷ் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?

 

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆக்ஷி ஏற்பட்டு 200 வருஷ காலத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட நன்மை தீமைகள் என்பவை எவ்வளவோ இருந்தாலும் பிரிட்டிஷாரது ஆக்ஷியின் கொள்கைகள் பழய கால ஆரிய அரசர்கள் என்பவர்களின் ஆரிய மத சாஸ்திரங்கள் மனுநீதி தர்மங்கள் ஆகியவைகள் போல் அல்லாமல் “”இந்தியாவின் சகல பிரஜைகளையும், சமமாய்ப் பாவித்து நடத்துவது” என்கின்ற ஒரு கொள்கையை முக்கியமாய்க் கொண்டிருப்பதாகச் சொன்னது இந்திய மக்களுக்கு “”வரப்பிரசாதம்” போன்றது என்பதை நடுநிலைமைப் புத்தி கொண்ட எந்த மனிதனும் மறுக்க மாட்டான்.

ஆனால் அது காரியத்தில் கிரமமாய் நடந்து வந்திருக்கிறதா என்பதை எந்த நடுநிலைமைக்காரனும் ஒப்புக் கொள்ளத் தயங்கியே தீருவான். அப்படி அக் கொள்கை காரியத்தில் நடவாததற்குக் காரணம் பிரிட்டிஷாராய் இருந்தாலும் இருக்கலாம்; அல்லது மேல் ஜாதிக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு சகல பிரஜைகளையும் சமமாய் மதிப்பது தோஷமானது, பாவமானது என்கின்ற நீதியை பின்பற்றுகின்ற  பார்ப்பனர்களாக இருந்தாலும் இருக்கலாம்.

எப்படி இருந்தாலும் சகல பிரஜைகளையும் சமமாய் நடத்துவது, பாவிப்பது என்கின்ற கொள்கை இன்று பிரிட்டிஷ் ஆட்சியில்  இந்தியாவில் அநேக விஷயங்களில் 100க்கு 5, 10 வீதம்கூட நடைமுறையில் இல்லை என்பதை நாம் தைரியமாய்ச் சொல்வோம்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆக்ஷி ஏற்பட்டதின் பயனாய் ஆக்ஷியின் நன்மைக்கு ஆகவானாலும் சரி பிரஜைகளின் நன்மைக்காகவானாலும் சரி மக்களுக்கு சிறிது கல்வி வசதி ஏற்பட்டது என்பது உண்மையாகும்.

ஆனால் அந்தக் கல்வி எல்லா மக்களுக்கும் சரிசமமாய்ப் பரவுவதற் கில்லாமல் போய் யாருடைய கெட்ட எண்ணத்தாலோ அல்லது நல்ல எண்ணத்தாலோ நமது நாட்டில் பார்ப்பனர்கள் மாத்திரமே அதிகமாய் படிக்க முடிந்தது.

இந்தப் படிப்பின் பயனாய்த்தான் ஆக்ஷி நிர்வாகத்தில் பிரிட்டிஷாரிட மிருந்து இந்தியர்களுக்கு என்று ஒரு பங்கு கேழ்க்க வேண்டியதாயிற்று என்பதோடு அதற்கு ஆக கிளர்ச்சி செய்ததிலும் பாமர மக்கள் பேராலேயே அக்கிளர்ச்சி செய்யப்பட்டு நிர்வாகத்தில் ஒரு அளவு பங்கு பெறவும் முடிந்தது.

இப்பொழுது பிரதிநிதித்துவம் அல்லது சுயாக்ஷி கேழ்ப்பது எப்படி. ஆக்ஷி நிருவாகத்தில் பங்கு கேழ்ப்பதாக மதிக்கப்படுகின்றதோ அதுபோல் தான் சுமார் 25, 30, 40, 50 வருஷங்களுக்கு முன் பெரும் சம்பள உத்தியோகத்தில் பங்கு கேழ்ப்பது நிருவாகத்தில் பங்கு கேழ்ப்பது போலவும், குடிகள் ஆக்ஷி கேழ்ப்பது போலவும் மதிக்கப்பட்டது.

இந்தத் தேவை அல்லது வேண்டுகோள் ஒரு அளவுக்கு கை கூடியதும், எல்லா ஜனங்களும் எங்கு அந்த உத்தியோகத்தில் பங்கு போட வந்து விடுவார்களோ என்னவோ என்று நமது பார்ப்பனர்கள் பயந்து உத்தியோகங்களுக்குப் படிப்பு நிபந்தனைகளை அதிகப்படுத்தி அந்த அதிகப்படுத்திய நிபந்தனைகளையும் தங்களைத் தவிர மற்றவர்களால் நிறைவேற்ற முடியாத அளவு கஷ்டமுண்டாக்க கல்வியின் ஆதிக்கம் பூராவும் தங்கள் கைக்கே வரும்படியாகச் செய்து கொண்டு ஆட்சியில் பங்கு என்று சொல்லப்பட்ட நிருவாக உத்தியோகங்கள், குமாஸ்தா உத்தியோகங்கள் கவுரவ உத்தியோகங்கள் பூராவும் என்று சொல்லத்தக்க மாதிரியில் பார்ப்பனர்கள் தாங்களே அடையும்படியான மார்க்கத்தைச் செய்து கொண்டு பிரிட்டிஷார் சக்ராதிபத்தியத்தில் பார்ப்பனர்கள் ஆட்சி என்பதாக ஏற்படுத்திக் கொண்டு அதையே “”பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்குப் பங்கு” என்றும் சுயாட்சிக்கு மார்க்கம் என்றும் பெயர் கொடுத்துக் கொண்டார்கள்.

சுமார் 15, 20 வருஷ காலமாக இந்தச் சூக்ஷியை அறிந்த சில பார்ப்பனரல்லாத மக்கள் இதை வெளியாக்கி பிரிட்டிஷ் ஆட்சியில் சகல பிரஜைகளும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் சகல பிரஜைகளுக்கும் சம சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்கின்ற கொள்கையைக் காரியத்தில் கொண்டுவர பிரிட்டிஷாரை நிர்ப்பந்தப்படுத்தி அதற்காக வேண்டிய கிளர்ச்சிகளை எல்லாம் செய்ய ஆரம்பித்தார்கள்.

இதன் பயனாய் பார்ப்பனர்களே ஏகபோகமாய் அடைந்த சுயஆட்சி (உத்தியோக பங்கில் ஒரு சில அதுவும் சிந்தினதும் சிதரினதும் பார்ப்பன ரல்லாதாருக்குக் கிடைக்கும் படியாக ஏற்பட்டது என்றாலும் அதுவும் பெரும் பாகம் மகம்மதியருக்கும் கிருஸ்தவருக்கும் மலையாளிகளுக்கும் தான் கிடைக்கும்படியாக ஆயிற்றே ஒழிய தமிழ்நாட்டுப் பார்ப்பனரல்லாதார்) மக்களுக்கும் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் (மற்றவர்கள் ஒன்றுக்கு இரண்டாய் மூன்றாய் அனுபவிக்கும் போது) பகுதியோ நாலில் ஒரு பங்குக்கோ 8ல் ஒரு பங்குக்கோ கூட மார்க்கமில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் போதே இந்த சிறு முயற்சியைக்கூட பார்ப்பனர்களும் சில பார்ப்பனப் படுபாவிப் பத்திரிக்கைகளும் கொஞ்சம்கூட நாணயம், யோக்கியதை, மானம், அவமானம் இல்லாமல் இம்முயற்சிகளைத் தேசத் துரோக முயற்சி என்றும், சர்க்கார் தாசர் முயற்சி என்றும் குலாம்கள் முயற்சி என்றும் வெட்கம் கெட்ட முயற்சி என்றும் பேசியும் எழுதியும் வருகின்றன.

இந்த போக்கிரித்தனமான பிரசாரத்தை நம்பி பார்ப்பனரல்லாதார் களில் சில மடையர்களும் அயோக்கியர்களும் எது செய்தும் வயிறு வளர்க்க ஆசைப்படும் மானங்கெட்ட கூலி  இழி மக்களும் பார்ப்பனர்கள் சாப்பிட்டு வீதியில் எரிந்த எச்சியிலையை நக்கிப் பிழைக்கும் ஊர் சுற்றிகளும் இந்த பார்ப்பனர்கள் விஷமத்தை ஆமோதிப்பதுடன் ஆதரித்துக் கூத்தாடுவதுடன் உலக மக்களுக்குத் தப்பபிப்பிராயம் உண்டாகும்படி ஊளை இட்டுக் கொண்டும் திரிகின்றனர்.

இப்படிப்பட்ட அயோக்கியர்களின் யோக்கியதையை வெளியாக்கி பாமர மக்கள் அம் முயற்சிக்குப் பாடுபடும் மக்கள் மீதும், அதை ஆதரிக்கும் நம் மீதும் தப்பபிப்பிராயம் கொள்ளாதிருக்கவும் கேவலமாய் மதித்து அம் முயற்சிக்கு இடையூறு செய்யாமல் இருக்கவும் சில உண்மைகளை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி விட்டோம்.

இன்று உண்மையில் உத்தியோகம் பார்ப்பதையும் உத்தியோகம் சம்பாதிக்க முயற்சிப்பதையும் குலாம் என்றும் பிரிட்டிஷாருக்கு “”குலாம்”களாய் “”அடிமைகளாய்” “”காலை நக்கிப் பிழைக்கின்றவர்களாய்” “”கோடாலிக்காம்புகளாய்” இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுமானால் அந்தக் காரியத்தில் எந்தக் கூட்டத்தார் வெற்றிப் பெற்று இருக்கிறார்கள் என்பதைத் தயவு செய்து பாமர மக்கள் உணரும்படி சில கணக்குகள் வெளியிடுகிறோம்.

இந்நாட்டில் வெள்ளைக்காரர்கள் பார்த்த உத்தியோகங்களை இந்தியர்கள் பார்க்க வேண்டும் என்றும், இந்தியர்களுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்றும், அதற்காக ஐ.இ.கு. உத்தியோகத்தில்கூட இந்தியர்களை நியமிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கேட்டதின் பயனாய் அந்த ஐ.இ.கு. உத்தியோகம் அதாவது மாதம் 3000 ரூபா வரை சம்பளமுள்ள உத்தியோகம்கூட இந்தியனுக்குக் கொடுக்கப்பட்டது. அதுபோலவே மற்ற உத்தியோகங்களும் கொடுக்கப்பட்டன. ஆனால் அவைகளை யார் அனுபவிக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்.

  1. ஐ.இ.கு.

இந்தச் சென்னை மாகாணத்தில் இன்று 70  இந்தியர்கள் ஐ.இ.கு. உத்தியோகத்தில் இருக்கிறார்கள். அதில் 40 உத்தியோகம், 100க்கு 3 வீத ஜனத் தொகையுள்ள பார்ப்பனர்கள் அடைந்திருக்கிறார்கள்.

10  உத்தியோகம் மலையாளிகள் அடைந்திருக்கிறார்கள்.

7  உத்தியோகம் கிருஸ்தவர்கள் அடைந்திருக்கிறார்கள்.

6  உத்தியோகம் மகமதியர்கள் அடைந்திருக்கிறார்கள்.

பார்ப்பனரல்லாத தமிழர்கள் 7 ஏழே ஏழு உத்தியோகம்தான் அடைந்திருக்கிறார்கள்.

ஆகவே யார் குலாம்கள் யார் அடிமைகள் யார் நக்கிப் பொறுக்கிகள்  என்பதைப் பொது ஜனங்கள் உணர வேண்டுகிறோம். இது போலவே.

  1. ஹைகோர்ட் ஜட்ஜ்

இந்தியர் பார்க்கும் ஹைகோர்ட் ஜட்ஜு ஸ்தானம் 8ல் பார்ப்பனர்கள் 4 ஸ்தானம், மலையாளிகள் 2 ஸ்தானம்.

பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் 2 இரண்டே இரண்டு ஸ்தானம்தான் அடைந்திருக்கிறார்கள்.

  1. போர்ட் மெம்பர்

போர்ட் மெம்பர் முதலிய 1250 முதல் 2500 ரூபாய் வரை சம்பளமுள்ள இந்தியர் பார்க்கும் உத்தியோகங்கள் 8ல் பார்ப்பனர்கள் 4  ஸ்தானம், மலையாளி 1, மகமதியர் 1, கிருஸ்தவர் 1.

பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் 1 ஒரே ஒரு உத்தியோகம்.

  1. டிப்டி கலக்டர்கள்

மாதம் 500 ரூபா முதல் 800 ரூபாய் சம்பளம் வரை பெறும்படியான இந்தியர் பார்க்கும் டிப்டி கலெக்டர்கள் உத்தியோகம் 115ல்

பார்ப்பனர்கள் 45, மகமதியர்கள் 22, கிறிஸ்தவர் 12, மலையாளி 9.

பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் 27. இது தவிர,

  1. சர்வே இலாக்கா

சர்வே அசிஸ்டெண்ட் டைரக்டர்கள் வேலை இந்தியர்கள் பார்க்கும் மாதம் 800 ரூபா சம்பளமுள்ள 4 ஸ்தானங்களும் பார்ப்பனர்களே பார்த்து வருகிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் யாருக்கும் ஒன்றுகூட இல்லை.

  1. எக்ஸைஸ்

சால்ட் அசிஸ்டெண்ட் கமிஷனர் வேலை 4ல்

பார்ப்பனர் 3, மலையாளி 1.

பார்ப்பனரல்லாதார் 0 தான்.

  1. எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர்

சால்ட் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்கள் முதல், இரண்டாவது கிரேட் உத்தியோகம் இந்தியர் பார்ப்பது 17ல்

பார்ப்பனர்கள் 9, மகமதியர் 5, கிருஸ்தவர் 1.

பார்ப்பனரல்லாதார் இரண்டே இரண்டு தான்.

மூன்றாவது கிரேடில் 12ல் பார்ப்பனர் 5, மலையாளியும் தமிழரும் 5, மகமதியர் 1, கிருஸ்தவர் 1.

þ நான்காவது கிரேடில் 31 உத்தியோகத்தில், பார்ப்பனர் 16, மலையாளியும், பார்ப்பனரல்லாத தமிழனும் 10, மகமதியர் 2,  கிருஸ்தவர் 3.

  1. ஹைகோர்ட்டிலுள்ளபெரிய உத்தியோகங்கள்

9ல் பார்ப்பனர்கள் 7; மலையாளி 1, பார்ப்பனரல்லாத தமிழர் 1.

  1. லா ஆபீசர்கள் வேலை

7ல் பார்ப்பனர்கள் 6; பார்ப்பனரல்லாத தமிழன் 1.

  1. சபார்டினேட் ஜட்ஜுகள்

காயம் ஜட்ஜுகள் 30; ஆக்டிங் ஜட்ஜுகள் 41 ஆக 71 ஜட்ஜிகளில், பார்ப்பனர் 51; மலையாளிகள் 11; மகமதியர் 4; கிருஸ்தவர் 1.

பார்ப்பனரல்லாதார் காயம் 1, ஆக்டிங் 3. ஆக 4 நாலே நான்கு ஸ்தானங்கள் தான்.

  1. டிஸ்டிரிக்ட் ஜட்ஜுகள்

இந்தியர்கள் பார்க்கும் ஸ்தானங்கள் 21ல் பார்ப்பனர்கள் 11, மலையாளிகள் 4, மகமதியர்கள் 3.

பார்ப்பனரல்லாத தமிழர் 3.

  1. ஜில்லா முனிசீப்கள்

ஸ்தானங்கள் பர்மெனண்ட்  126ல், பார்ப்பனர் 80, மலையாளி 12, மகமதியர் 7, கிருஸ்தவர் 4.

பார்ப்பனரல்லாதார் தமிழர் 23.

ஆக்டிங் முனிசீப் 59ல் பார்ப்பனர் 35, மலையாளி 5, மகமதியர் 3, கிருஸ்தவர்கள் 2.

பார்ப்பனரல்லாதார் தமிழர் 13.

  1. ஜில்லா சூப்ரண்ட் வேலை

ஜில்லா சூப்ரண்ட் வேலைகள் 9ல் பார்ப்பனர் 4, மலையாளி 2, மகமதியர் 1, பார்ப்பனரல்லாத தமிழர் 2.

இதில் அசிஸ்டென்ட் பிரபேஷனரி சேர்க்கவில்லை.

  1. டிப்டி சூப்ரண்ட்

டிப்டி சூப்ரண்ட் வேலை இந்தியர்கள் பார்ப்பது 42ல் பார்ப்பனர் 16, மகமதியர் 9, கிருஸ்தவர் 5, மலையாளியும், பார்ப்பனரல்லாதார் தமிழரும் 12.

  1. கல்வி இலாக்கா

எஜுகேஷனல் சர்வீஸ் பெரிய உத்தியோகங்கள் இந்தியர்கள் பார்ப்பது  12ல் பார்ப்பனர் 6, மகமதியர் 1, கிருஸ்தவர் 3.

பார்ப்பனரல்லாத தமிழர் 2.

  1. ஜில்லாக் கல்வி அதிகாரிகள்

ஈ.உ.O. வேலை 37ல் பார்ப்பனர் 10, மலையாளி 3, மகமதியர் 6, கிருஸ்தவர் 7.

பார்ப்பனரல்லாத தமிழர் 11.

  1. காலேஜ் உத்தியோகம்

காலேஜ்களில் பிரின்ஸ்பாலாகவும் புரபசர்களாகவும் மற்றும் பெரிய வேலைக்காரர்களாகவும் உள்ள உத்தியோகம் 45ல்,

பார்ப்பனர்கள் 32, மலையாளி 4, மகமதியர் 1, கிருஸ்தவர் 1, பார்ப்பனரல்லாத தமிழர்கள் 7.

  1. வைத்தியம்

ராணுவப் பட்டம் உள்ள பெரிய டாக்டர்கள் இந்தியர் பார்க்கும் வேலை 10ல் பார்ப்பனர் 8, மலையாளி 1, மகமதியர் 1, பார்ப்பனரல்லாத தமிழர்  0

  1. 500 முதல் 900 வரை சம்பளமுள்ள

இந்திய டாக்டர்கள்  43ல்

பார்ப்பனர் 24, மலையாளி 5, கிறிஸ்தவர் 4, பார்ப்பனரல்லாத தமிழர் 10.

  1. அசிஸ்டென்ட் சர்ஜன்

500 ரூபாய்க்குக் கீழ்ப்பட்ட இந்திய டாக்டர்கள் 221ல்

பார்ப்பனர் 100, மலையாளி 20, மகமதியர் 5, கிருஸ்தவர் 43.

பார்ப்பனரல்லாத தமிழர் 48.

  1. சுகாதார அதிகாரிகள்

ஹெல்த் ஆபீசர்கள் 60ல் பார்ப்பனர் 38, கிருஸ்தவர் 9, பார்ப்பன ரல்லாதவர்கள் மலையாளி உட்பட 13.

  1. ஜில்லா போர்டு இஞ்சினீர்கள்

இந்திய டிஸ்ட்ரிக்ட் போர்டு இஞ்சினீர்கள் வேலை 20ல்

பார்ப்பனர் 15, மலையாளி 1, கிருஸ்தவர் 1, பார்ப்பனரல்லாத தமிழர்கள் 3.

இஞ்சினீர் இலாக்கா சப் ரிஜிஸ்டரர் இலாக்காக்களுக்கும், மற்றும் உபாத்தியாயர், குமாஸ்தா, கீழ்த்தர உத்தியோகம், ரிவனியு இன்ஸ்பெக்டர், மேஜிஸ்ட்ரேட், தாசில்தார், போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப். இன்ஸ்பெக்டர் முதலிய வேலைகளையும் பற்றி கணக்குப் பார்த்தால் எவ்வளவு மோசமாய் இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்ட வேண்டுமா? அவற்றைப் பின்னால் தெரிவிப்போம்.

ஏனெனில் இந்த மேல்கண்ட பெரிய உத்தியோகஸ்தர்களால் தானே கீழ்க்கண்ட கீழ்த்தர உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்படுகின்றார்கள். ஆகவே மேல் உத்தியோகங்களில் பார்ப்பனர்களே அதிகமாயிருந்திருக்கிறபோது அவர்கள் தங்களுக்குக் கீழ் யாரை நியமித்து இருப்பார்கள் என்பதை வாசகர்களே யோசித்துப் பார்த்தால் விளங்கிவிடும்.

நாம் இரண்டு வாரத்துக்கு முன் பார்ப்பன ஆக்ஷி ஒவ்வொரு ஊரிலும் எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு ஈரோட்டின் நிலையை எடுத்துக்காட்டிவிட்டு மற்ற ஊர்களிலும் உள்ள பார்ப்பன உத்தியோக எண்ணிக்கையை தெரிவிக்கும்படி கேட்டு இருந்தோம். அந்தப்படி சிலர் அனுப்பினார்கள். அதில் பெருந்துரையைப் பற்றிச் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. இவ்வாரம் திருச்செங்கோடு தோழர் விபரமாய் அனுப்பியிருக்கும் கணக்கை இதில் வேறு பக்கம் பிரசுரிக்கிறோம். மற்ற ஊர்கள் விஷயமும் வரவர தெரிவித்துக் கொண்டே வர எண்ணியுள்ளோம்.

பார்ப்பனரல்லாதார் தமிழ் மக்கள் இந்தப் பார்ப்பனர்களிடமும், பார்ப்பனக் கூலிகளிடமும் கெட்ட பெயர் வாங்கி உத்தியோகத்தில் ஒரு சிறு பங்கு பெற்றும் அவை பெரிதும் மலையாளிக்கும், கிருஸ்தவருக்கும், மகமதியருக்கும் தான் போய்விட்டதே ஒழிய தமிழ் மக்களுக்கோ, தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ யாதொரு பயன் இல்லை. அப்படி இருந்தாலும் பார்ப்பனரல்லாதாருக்கு பயன் ஏற்படாத இந்த உத்தியோக எண்ணிக்கை மொத்தம் கொஞ்சமானாலும் இந்த ஆட்சிகளால் உத்தியோகம் பெற்ற அந்த சமூகத்தார் பயன் அடைவது போலவே பார்ப்பனரல்லாதார் சிறிதாவது அடைந்திருப்பார்களே ஒழிய உத்தியோகம் பார்த்தவர்களேதான் அடைந்தார்கள் என்று சொல்வது அறிவுடைமை ஆகாது.

இந்த அளவு கூட இப்பொழுது இந்த 20 வருஷ காலமாய் ஜஸ்டிஸ் கட்சியும் சிறப்பாக இந்தப் பத்து வருஷ காலமாய் சுயமரியாதைக் கட்சியும் பாடுபட்டதால் வந்ததா அல்லவா? இதைத் தானே காங்கிரஸ்காரர்கள் (பார்ப்பனர்கள்) பார்ப்பனரல்லாத கூலிகளைப் பிடித்து  கைவசப்படுத்திக் கொண்டு பார்ப்பன உத்தியோகம் என்கின்ற வார்த்தைக்கு சுயராஜ்யம் என்றும், பார்ப்பனரல்லாதார் அடைவதை தேசத் துரோகம் என்றும் வேறு வார்த்தைகளைப் பார்ப்பனரல்லாத மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஏமாற்றி வருகிறார்கள் என்பதை எந்தப் பிரபல பார்ப்பனரல்லாதாராவது தேசீயப் பார்ப்பனரல்லாதாராவது மறுப்பார்களேயானால் அவர்களிடம் பந்தயம் கட்டி அவர்கள் வாயாலேயே முன் சொல்லி இருக்கும் வார்த்தைகளைக் கொண்டு ருஜுப்பிக்க தயாராய் இருக்கிறோம்.

ஆகவே இன்று இத் தென்னாட்டில் நடைபெறும் ஆட்சி பிரிட்டிஷ் ஆட்சியா பார்ப்பன ஆட்சியா என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இதைப் பற்றி மந்திரிகளும் ஜஸ்டிஸ் கட்சி அங்கத்தவர்களும் கவனித்துப் பார்ப்பனர்கள் தங்கள் விகிதாச்சாரம் உத்தியோகக் கணக்குக்கு வரும் வரை அவர்களுக்கு உத்தியோகம் கொடுப்பதை நிறுத்தியும் மற்ற வகுப்புக்காரர்கள் அவரவர்கள் விகிதாச்சாரம் அடையும்படியாவது கவனித்து உத்தியோகம் அளிக்கும் முறையை திருத்தியும் தக்க ஏற்பாடு செய்ய வேண்டியது அவசியமாகும்.

குடி அரசு  தலையங்கம்  05.05.1935

You may also like...