விஜயராகவ  ஆச்சாரியார்க்கு

பீஷ்மப்  பட்டம்

தோழர் விஜயராகவ ஆச்சாரி அய்யங்காருக்கு பீஷ்ம பட்டம்  அளிப்பதற்கு  அய்யங்கார்கள்  ஒரு  பெரும்  கூட்டம்  கூட்டி  ஆடம்பரம்  செய்து  பீஷ்ம  பட்டாபிஷேகம்  செய்து  விட்டார்கள்.

இக்கூட்டத்திற்கு  வரவேற்புத்  தலைவர்  சி.ஆர். சீனிவாச  அய்யங்கார்.  அதற்கு  தலைமை  வகித்தவர்  எஸ். சீனிவாச  அய்யங்கார்.  கூட்டத்தில்  பிரசங்கம்  செய்தவர்  சி. ராஜகோபாலாச்சாரி  அய்யங்கார்.  வந்தனோபசாரம்  சொன்னவர்  வி.வி. சீனிவாச  அய்யங்கார்.  ஆகவே  ஆரம்பம்  முதல்  கடசிவரை  5  அய்யங்கார்கள்  முக்கியஸ்தராய்  கூடி  ஒரு  அய்யங்காருக்கு  பீஷ்மப்  பட்டம்  அளித்தார்கள்  என்றாலும்,  யாருக்கு  என்பதை  உணர்ந்தால்  அவர்களது  தேசாபிமான  சூட்சி  விளங்காமல்  போகாது.

விஜயராகவாச்சாரியார்  ஒரு  வக்கீல்.  வேண்டுமானால்  கெட்டிக்கார  வக்கீல் என்று சொல்லலாம். 70  வயதுக்கு மேல்  கூட  வக்கீல்  வேலை  பார்க்கிறவர்.  வக்கீல்கள்  தங்கள்  தொழில்  விருத்திக்கு  தேசாபிமானத்  பேச்சு  பேசுவதும்,  தேசாபிமானச்  சடங்குகளில்  கலந்து கொள்வதும்  போல  கலந்து  கொண்டு  தேசாபிமானி  ஆனவரே  தவிர  தோழர்  ராஜகோபாலாச்சாரியார்  போல்  ஒரு  பொது  லட்சியத்துக்காக  “”தேசாபிமானி”  ஆனவரல்ல.  அப்படிப்பட்ட  தேசாபிமானத்துக்காக  ஒரு காசு  நஷ்டமோ  ஒரு  எறும்புக்கடி  கஷ்டமோ  அடைந்தவருமல்ல. அவருடைய  காங்கிரஸ்  பக்திக்கும்  உதாரணம்  சொல்ல வேண்டுமானால்  சுதேசமித்திரன்  27  தேதி  தலையங்கம்  2ம்  பத்தியில்,

“”இப்பால்  காங்கிரஸ்  கொள்கையில்  ஏற்பட்ட மாறுதலால்  விஜயராகவாச்சாரியார்  முன்போல்  காங்கிரஸ்  வேலைகளில்  ஈடுபட  முடியா விட்டாலும்”  என்று  குறிப்பிடப்பட்டிருப்பதும்,  பட்டாபிஷேக  கூட்டத்துக்கு  வந்தனோபசாரம்  கூறிய  தோழர்  வி.வி. சீனிவாசய்யங்கார்  வரையில்,

“”இன்று  ஜனங்கள்  விஜயராகவாச்சாரியாருக்கு அளித்த  வரவேற்பிலிருந்து  அவருக்குள்ள  சொற்ப  சந்தேகமும்  நீங்கி  அவர்  கடமையை  உணர்ந்து  பொது  வாழ்வில் அவர்  மீண்டும்  வேலை  செய்வாரென்று  நம்புகிறேன்”  என்று  கூறியிருக்கிறார்.

ஆகவே  அவருக்கு  இன்றைய  காங்கிரசின்  கொள்கைகளில்  நம்பிக்கை  இல்லை  என்பதும்,  அவர்  இப்போது  விலகி  இருக்கிறார்  என்பதும்  தெற்றென  விளங்குகிறது.  இவரைப்போல்  ஏன்  இவரை  விட  அதிகம்  காங்கிரசுக்கு  தொண்டு  செய்து  பல கஷ்ட  நஷ்டங்களை  அனுபவித்து  கொள்கை  பிடிக்காமல்  வெளியில்  இருந்துகொண்டு  காங்கிரசை  ஆதரித்துக்கொண்டு  காங்கிரஸ்  அபிமானிகளாக  தோழர்  டாக்டர்  பி. வரதராஜுலு  நாயுடுவைப்  போன்றவர்கள்  எத்தனையோ  பேர்கள்  இருக்கிறார்கள்  என்றாலும்,  அவர்கள்  பார்ப்பனரல்லாதாராயும், சீர்திருத்தக்காரராயும்  இருப்பதும்,  தோழர்  விஜயராகவாச்சாரியார்  பார்ப்பனராயும்  அதிலும்  அய்யங்காராயும்  அதிலும்  வருணாச்சிரமக்காரராயும்  இருப்பது  தவிர  மற்றபடி  இப்பட்டாபிஷேக  வைபவத்துக்கு  யாதொரு  தனிக்  காரணமும்  காணப்படவில்லை.

தோழர்  விஜயராகவாச்சாரியாரின்  தேசபக்திக்கும்,  தேசீய  வாதத்துக்கும்,  சுயராஜ்ஜியத்துக்கும்  மற்றொரு  உதாரணமும்  கூறுவோம்.

விஜயராகவாச்சாரியார்  இப்பட்டாபிஷேகத்துக்கு  பதிலளிக்கும்  மறுமொழியில்  என்ன  கூறுகிறார்  என்றால்,

“”பிரிட்டிஷார்  சம்மந்தத்தின்  கீழ்  சுயராஜ்ஜியம்  பெறவேண்டும்  என்பதுதான்  எனது  கொள்கை”  என்று  சொல்லியதோடு,

“”லார்ட்  இர்வினிடம்  காந்தியார்  பேசும்போதும்  பிரிட்டிஷ்  சம்மந்தத்தின்  கீழ்  சுயராஜ்ஜியம்  அடைவதுதான்  தனது  கொள்கை  என்பதை  ஒப்புக் கொண்டிருக்கிறார்”  என்றும்,

“”சுயேச்சையின்  சாராம்சம்  கிடைத்தால்  போதும்”  என்று  காந்தியார்  சொன்னார்  என்றும்  பேசியிருக்கிறார்.

இந்நிலையில்  இந்த  கூட்டத்தில்  இருந்த  மற்ற  ஐயங்கார்களின்  யோக்கியதைக்கும்  உதாரணம்  வேண்டுமானால்  கூறுவோம்.

எஸ். சீனிவாசய்யங்கார் “”பூரண சுயேச்சை” என்கின்ற  அஹம்பிரம்மவாதி.

வி.வி. சீனிவாசய்யங்கார்  பச்சை  வருணாச்சிரம  தர்மவாதி.

சி. ராஜகோபாலாச்சாரியார்  மக்களையும்,  சர்க்காரையும்  ஏமாற்றி  பார்ப்பன  ஆதிக்கம்  பெறவேண்டிய  உண்மைத்  தியாகிவாதி.

சி.ஆர். சீனிவாசய்யங்கார்  பணவாதி,  பார்ப்பன  மித்திரவாதி.

இவைகள்  சங்கராச்சாரி  கொள்கை  போல்  ஒன்றுக்கொன்று  முரணா யிருந்தாலும்  பொதுவாக  பார்ப்பனரல்லாத  மக்களின்  சுயமரியாதையை  அழித்து  பார்ப்பன  ஆதிக்கத்தை  நிலைநிறுத்த  தங்கள்  அபிப்பிராய  பேதங்களை  மறந்து  ஒன்று  கூடி  ஒரு  திருவிழாக்  கொண்டாடி  இருக்கிறார்கள்.  நம்மவர்களோ  சிலர்  அக்  கூட்டத்திற்கு  சென்று  தீவட்டித்  தடிப்பிடித்திருக்கிறார்கள்.

இது  அய்யங்கார்  ஆதிக்கக்  கூட்டம்  என்பதற்கு  உதாரணம்  வேண்டு மானால்  காங்கிரஸ்  தலைவர்  தோழர்  சத்தியமூர்த்தியாரைக்  காணவே  காணோம்.  அவரது  சகா  லட்சிமிபதி  அம்மாள்  போன்றவர்களையும்  அக்  கூட்டத்தில்  காணோம்.

காங்கிரசு  பொன்விழாவில்  காங்கிரசுக்கு  உழைத்தவருக்கு  பட்டம்  கட்டுகிற  காலத்தில்  காங்கிரஸ்  தலைவர்    குழாம்  அக்  கூட்டத்தில்  இல்லை என்றால்,  அது  எப்படிப்பட்ட  கூட்டமாய்  இருக்கவேண்டும்  என்பதை  நாம்  எடுத்துக்காட்ட  வேண்டுமா?

முடிவாக  வெள்ளைக்காரர்கள்  ஆட்சி  சம்மந்தத்துடன்  சுயராஜ்யம்  கோருபவரும்,  சத்தியாக்கிரகம்  சட்ட  மீறுதல்  முதலிய காரியங்களால்  அராஜகம்  ஏற்பட்டுவிட்டது  என்பவரும்  ஒருகாலத்தில்  காந்தியாருக்கும்  மொராலிட்டி  (ஒழுக்கம்)  இல்லை  என்று  சொன்னவருமான  ஒரு  பெரியாருக்கு  இவ்வளவு  ஆடம்பரங்கள்  நடத்தப்பட்டிருக்கிறது  என்றால்,  பார்ப்பனக்  கொள்கைக்கும்  அவர்களது  சூழ்ச்சிக்கும்  வேறு  என்ன  உதாரணம்  காட்ட  வேண்டுமென்பதோடு,  இதிலிருந்தாவது  பார்ப்பனரல்லாத  மக்கள்  ஏதாவது  படிப்பினை  கற்றுக்கொள்ளமாட்டார்களா  என்கின்ற  ஆசையோடு  இதை  முடிக்கிறோம்.

குடி அரசு  கட்டுரை  29.12.1935

 

You may also like...