வெற்றிமேல் வெற்றியின் யோக்கியதை மாகாணத் தலைவர்கள் அபிப்பிராயம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தீர்மானம்
தென்னாட்டு பார்ப்பனரல்லாதார் மக்களை ஏமாற்றுவதற்காக தோழர் ராஜகோபாலாச்சாரியார் ஜப்பல்பூரில் 24ந் தேதி கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளப் பார்த்தார். அத் தீர்மானமாவது@
“”இந்திய சட்டசபையில் காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் பல கஷ்டங் களைச் சமாளித்து வெற்றிகரமாக செய்த வேலைகளைக் கண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திருப்தி அடைகிறது” என்பதாகும். இத் தீர்மானத்தைப் பற்றி பல மெம்பர்கள் பேசுகையில் தெரிவித்த அபிப்பிராயங்களாவன.
சர்தார் சார்துல் சிங்
“”சுயராஜ்ஜியம் பெருவதற்காக காங்கிரஸ் அசெம்பிளிக்குச் செல்லவில்லை” என்று பேசி இருக்கிறார்.
ஆனால் தேர்தலின்போது ஓட்டர்களுக்கு என்ன சொல்லி ஓட்டு வாங்கப்பட்டது என்பதை யோசித்தால் காங்கிரஸ் சட்டசபைக்குப் போனது வீண் என்பது புலப்பட்டுவிடும்.
“”சுயராஜ்ஜியம் வேண்டுமானால் சத்தியமூர்த்தி அய்யருக்கும், சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கும் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டார்கள்.
இப்போது சுயராஜ்ஜியத்துக்கும் அசெம்பிளிக்கும் சம்பந்தமில்லை என்று ஆகிவிட்டது. காங்கிரசின் நாணயம் தங்க எழுத்தில் “”எழுதத் தக்கதே”.
நிற்க தோழர் மேகர் அலி அவர்கள் காங்கிரஸ் கட்சி ஓட்டர்களுக்குக் கொடுத்த உறுதிமொழிகளின்படி நடக்கவில்லை என்றும் பாராட்டுகிறது என்ற வார்த்தைக்குப் பதிலாக கண்டிக்கிறது என்று போட வேண்டும் என்றும் சொன்னார்.
மகாராஷ்டிரா மாகாணத்தைச் சேர்ந்த தோழர் சங்கரரால்தியோ என்பவர் தீர்மானத்தில் “”வெற்றிகரமாக” என்கின்ற வார்த்தையை எடுத்துவிட வேண்டும் என்று ஒரு திருத்தம் கொண்டு வந்து பேசுகையில் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெற்றார்களே தவிர காரியத்தில் ஒரு வெற்றியும் பெறவில்லை. தேர்தல் காலத்தில் ஓட்டர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதி விஷயத்திலும் அவர்கள் நிறைவேற்றவோ வெற்றி பெறவோ அனுஷ்டிக்கவோ இல்லை.
ஆதலால் வெற்றிகரமாக என்று சொல்லிக் கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு யோக்கியதை இல்லை என்று சொல்லிவிட்டார்.
மேகர் அலி அவர்கள் தீர்மானத்தை எதிர்த்து பேசுகையில் காரியக் கமிட்டி தீர்மானங்களையும் பார்லிமெண்டரி கட்டளைகளையும் மீறி நடந்து கொண்ட காங்கிரஸ் சட்டசபை அங்கத்தினர்களைப் பாராட்டுவது பரிகசிக்கத் தகுந்ததாகும்.
ராஜகோபாலாச்சாரி போன்றவர்கள் இந்தப்படி காரியம் செய்ய முன்வரலாம். காங்கிரஸ் தீர்மானத்தில் நிராகரிக்கிறோம் என்கின்ற பதமே வரவில்லை. பம்பாய் காங்கிரஸ் கட்டளையை காற்று வாக்கில் விட்டுவிட்டார்கள்.
புதிய சீர்திருத்தத்தை நடத்துவிக்க காங்கிரஸ்காரர்கள் திருட்டுத் தனமாக ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் சட்டசபைத் தலைவர்கள் பேச்சை சர்க்காரார் மெச்சிப் பாராட்டி இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் தேசத்தார் மெச்சிப் பாராட்டும்படி நடந்து கொண்டிருக்க வேண்டும். (சபாஷ்) (ஜனங்களை ஏமாற்றி விட்டார்கள்.)
சாதாரண சம்பரதாய விஷயமாகக்கூட காங்கிரஸ் மெம்பர்கள் வெற்றி பெற்றதாகச் சொல்ல முடியாது. ஏனெனில் வைசிராய் சட்டசபையில் பேசும்போது காங்கிரஸ் மெம்பர்கள் எழுந்து நின்று இருக்கிறார்கள்.
காங்கிரஸ்காரர்கள் தங்கள் கடமையைச் செய்ய தவறி இருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டுவது என்பது சரியல்ல, கண்டிக்க வேண்டியதேயாகும்.
வங்காள மெம்பர் தோழர் ராமச்சந்திர சிங் பேசியதாவது: “”காங்கிரஸ் கட்சியார் பாராட்டும்படியாக நடந்து கொள்ளவில்லை. ஆதலால் பாராட்ட முடியாது.”
பீகார் மெம்பர் தோழர் மகாமாய பிரசாத் பேசியதாவது:
காங்கிரஸ்காரர் சட்டசபையில் ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை. ஒன்றுக்கொன்று முரணாக நடந்து கொண்டார்கள். காங்கிரசின் கொள்கையே பிரதிபலிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி வரவர ஊழலாகி வருவதற்கு இது ஒரு அறிகுறியாகும் என்று பேசினார்.
காங்கிரஸ் சமதர்மக் கட்சிக் காரியதரிசி தோழர் ஜெயப்பிரகாசர் பேசியதாவது: “”காங்கிரஸ் அசெம்பிளி வேலைத் திட்டம் மிகவும் அதிருப்திகரமானது” என்று பேசினார்.
அஜ்மீர் தோழர் கௌரி சங்கர் பார்க்கவர் பேசியதாவது:
அசம்பிளி மூலம் சுயராஜ்யம் வராது. இந்த நிலைமையில் தோழர் ராஜகோபாலாச்சாரியார் எல்லாவற்றிற்கும் தந்திர முறையில் சமாதானம் சொன்னார். என்ன சொல்லியும் வெற்றிகரமாக என்ற வார்த்தை தீர்மானத்தி லிருந்து நீக்கப்பட்டே போயிற்று. தோழர் ராஜகோபாலாச்சாரியாரே வெற்றி என்கின்ற வார்த்தையை எடுத்துவிட சம்மதித்து விட்டார்.
தீர்மானம் மொட்டையாகத் தான் நிறைவேற்றப்பட்டது.
ஆகவே காங்கிரசின் வெற்றிமேல் வெற்றி என்பதின் புரட்டுகள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலேயே காங்கிரஸ்காரர்களுக் குள்ளாகவே விளங்கிவிட்டதென்றால் வெற்றி என்கின்ற வார்த்தையே எடுபட்டுவிட்டது என்றால் மற்றபடி வெளி ஜனங்களுக்கு அதில் எவ்வளவு பித்தலாட்டங்கள் இருந்து இருக்கிறது என்பதை விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.
ஆந்திர மாகாணம் விஸ்வநாதன் பேசும்போது தோழர் ராஜ கோபாலாச்சாரியார் சென்னை சட்டசபையைக் கலைத்துவிடவேண்டு மென்று ஆகாயத்துக்கும் பூமிக்கும் கரணம் போடுவதெல்லாம் “”சட்டசபை கலைக்கப்பட்டுவிட்டால் தாங்கள் பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம் என்றுதான் பாடுபடுகிறார்கள்” என்று குறிப்புக்காட்டி இருப்பதுடன், “”பதவி ஏற்கும் நோக்கத்துடன் தான் காங்கிரஸ் புதிய தேர்தலில் ஈடுபடும்” என்று தோழர் ராஜகோபாலாச்சாரியாரே அறிக்கை விட்டிருப்பதாகவும் இதிலிருந்து புதிய நிலைமை ஏற்பட்டிருக்கிறதென்றும் கூறுகிறோம்.
காங்கிரஸ்காரர்கள் பதவி ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கின்ற தீர்மானத்தை தோற்கடித்து விட்டார்கள். எனவே பதவி ஏற்றுக் கொள்ளலாம் என்பதற்கு அனுகூலம் செய்து வைத்துக் கொண்டார்கள்.
இந்தப்படி செய்து கொள்வதற்கு முக்கிய காரணஸ்தர்களாய் இருந்தவர்கள் தென்னாட்டுப் பார்ப்பனர்களேயாவார்கள்.
அதாவது தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், டி. பிரகாசம், எஸ். சத்தியமூர்த்தி மூவரும் தங்களுக்கும், தங்கள் ஜாதியாருக்கும் அனுகூலமாகக் காங்கிரசைச் செய்து கொண்டார்கள் என்பது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்ட நடவடிக்கையில் நன்றாய் விளங்குகிறது.
மேலும் மற்றொரு தீர்மானத்திலும் அதாவது யுத்தம் ஏற்பட்டால் இந்தியர்கள் அதில் கலந்து கொள்ளவோ பணம் கொடுக்கவோ உதவி செய்யவோ கூடாது என்பதாகும்.
அதை நிறைவேற்றி வைக்க காங்கிரஸ்காரர்கள் பயந்து கொண்டு அதைப் பற்றி விவாதிக்கவே கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.
ஆகவே காங்கிரசின் வீரம் நாணயம் சமதர்மிகளிடத்தில் இருக்கும் விசுவாசம், உத்தியோகமேற்றுக் கொள்ளாத தியாகபுத்தி ஆகிய குணங்கள் எவ்வளவு என்பதை இந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நடவடிக்கை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இப்படிப்பட்ட யோக்கியர்கள் ஜஸ்டிஸ் கக்ஷியார் உத்தியோக வேட்டைக்காரர்கள் என்றும் சுயமரியாதைக் கக்ஷியார் பணக்காரர்களுக்கு ஆதரவுக் கொடுக்கும் கக்ஷியார் என்றும் தோழர் ஈ.வெ. ராமசாமி பயந்து போய் விட்டார், பிற்போக்காளராகிவிட்டார் என்றும் சொல்லப் புறப்பட்டு விட்டார்கள் என்றால் இந்தக் கூட்டத்தாருக்கு மானம், வெட்கம், நாணயம் இருக்கின்றதா என்று கேட்கின்றோம். யாரோ நான்கு பார்ப்பனர்கள் மந்திரிகளாவதற்கு ஆக இவ்வளவு அயோக்கியத்தனங்களும் இழி முறைகளும் கையாளுவதென்றால் இந்தக் கூட்டத்தை மனித சமூக நலனை உத்தேசித்து என்ன பாடுபட்டாவது பூண்டற்றுப் போகும்படி உழைக்க வேண்டியது ஒவ்வொரு சுயமரியாதைக்காரனுடையவும் கடமையா அல்லவா என்று கேட்கின்றோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 05.05.1935