யார் வெட்கங்கெட்ட மடையர்கள்?

 

ராமசாமி முதலியாரா?

“”காங்கிரஸ் தலைவர்களா?”

தோழர் எ. ராமசாமி முதலியார் அவர்கள் கோவையில் 16.6.35 தேதி மாலை டவுன்ஹால் கட்டடத்தில் ஒரு உபன்யாசம் செய்தார். அதில் முக்கியமாக காங்கிரசால் இந்திய முற்போக்குக்கும், விடுதலைக்கும் ஏற்பட்ட முட்டுக்கட்டையைப் பற்றியும், அதனால் தேசம் அடைந்த சீர்கேட்டைப் பற்றியும் ஜஸ்டிஸ் கட்சி செய்துள்ள நன்மைகளைப் பற்றியும் விரிவாக விளக்கினார். அது தமிழ்நாடு, விடுதலை முதலிய பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. இவ்வார குடி அரசிலும் அதன் முக்கிய பாகங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றிற்குச் சமாதானம் சொல்லி மறுக்க வேண்டும் என்கின்ற ஆசை மீது, கோவைக் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்கள், ஒரு வாரம் பொறுத்து அதே யிடத்தில் ஒரு கூட்டம் போட்டுப் பேசி யிருப்பதாகப் பத்திரிகைகளில் காணப்படுகின்றன.

அதை ஆதாரமாய் வைத்து “”கோவையில் சவுக்கடி” என்ற தலைப்பு கொடுத்து ஒரு பார்ப்பனப் பத்திரிகை ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில் அப் பத்திரிகை பல இழி மொழிகளை பிரயோகித்துத் தனது இயற்கைக் குணத்தைக் காட்டி இருக்கிறது.

அதாவது, தோழர் ராமசாமி முதலியார், கோவையில் “”தேசாபிமானமும் சுயமரியாதையும் இல்லாமல் பேசினார்” என்றும் “”வெட்கமில்லாமல் பேசினார்” என்றும் “”மடத்தனமாகும்” என்றும் மற்றும் இம்மாதிரியான முறையில் எழுதி இருக்கிறது.

அதை அனுசரித்தே கோவை காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களும் பேசியிருக்கிறார்கள்.

ஆகவே யார் “”வெட்கங்கெட்டவர்கள்” என்றும், யார் “”மடையர்கள்” என்றும், யார் “”சுயமரியாதை அற்றவர்கள்” என்றும், யார் “”தேசத்துக்குத் துரோகம் செய்தவர்கள்” என்றும் பொது ஜனங்கள் அறியும்படி செய்ய வேண்டியது  இப்போது நமது கடமையாகப் போய்விட்டது. ஏனெனில் நமது நாட்டில் தேசாபிமானம், தேச பக்தி என்பவைகளின் பேரால் வயிறு வளர்க்கும் ஒரு சோம்பேறிக் கூட்டம், எதிரிகளை ஈனத்தனமாய்ப் பேசுவதிலும், அற்பத்தனமாய் வைவதிலும், உண்மைக்கு விரோதமாய்ப் பொய்யும், விஷமத்தனமும் கொண்ட சேதிகளால் பிரசாரம் செய்வதிலுமே தங்கள் வாழ்நாள் கழிவும், வெற்றியும் இருப்பதாகக் கருதிக் கொண்டு அந்த வழிகளிலே பாமர மக்களை ஏய்த்து வருகிறார்கள்.

இந்தக் கேவலமான நிலைமை என்று இந்நாட்டை விட்டு ஒழிகின்றதோ அன்று தான் நாட்டு மக்களுக்கு மனிதத் தன்மை ஏற்படக்கூடும். அதுவரையில் இக் கூட்டத்தார்களுடைய தொல்லையில்தான் மக்கள் சிக்கி அவதிப்பட வேண்டியிருக்கும். ஆகவே விஷயத்தைக் கவனிப்போம்.

தோழர் அ. ராமசாமி முதலியார் கோவையில் நன்றாய்ப் பட்டவர்த் தனமாக “”காங்கிரஸ் நடந்து கொண்ட மாதிரியின் பயனாக, இந்திய அரசியல் திட்டம் மிகப் பிற்போக்கானதாகவும், குறுகிய மனப்பான்மை கொண்டதாகவும் ஏற்பட்டுவிட்டது”

என்று அனேக மேற்கோள்களுடன், யாருக்கும் விளங்கும்படி எடுத்துரைத்து இருக்கிறார்.

இதைக்  கோவைக்  காங்கிரஸ்  தலைவர்  என்பவர்  தோழர் கூ.கு. அவனாசிலிங்கம் செட்டியார், ஆ.அ., ஆ.ஃ., பட்டம் பெற்றவர், தனது மறுப்பு உபன்யாசத்தில் நன்றாய், வெள்ளைத் தமிழில் நிபந்தனை அற்ற முறையில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அதாவது, “”பாதுகாப்புகள் காங்கிரஸ்காரர்களால் தான் ஏற்பட்டன என்று ராமசாமி முதலியார் கூறியதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன்” என்று கூறி இருக்கிறார்.

அதற்கடுத்தாப்போல், “”சீர்திருத்தத்தில் பாதுகாப்புகள் வேண்டு மென்று வெள்ளையர் கூறுவார்களேயானால், அது நாட்டில் காங்கிரஸ் கொள்கை பரவி வருகிறது என்பதையே காட்டுகிறது” என்று சொல்லி முன் கூறியதை மிகவும் வலிமையுடன் பின் தாங்கி நிற்கிறார்.

மற்ற விவகாரங்கள் எப்படி இருந்த போதிலும், பாதுகாப்பு ஏற்பட்டதற்கு காங்கிரஸ்காரர்களும், காங்கிரஸ் கொள்கையும் தான் காரணம் என்பதை காங்கிரஸ்காரர்களே, ஏன் காங்கிரஸ் தலைவர்கள் என்பவர்களே ஒப்புக் கொண்டார்கள் என்பதில் இனி யாருக்கும் சந்தேக மிருக்க நியாயமில்லை. அப்படிக்கு இருக்க, இதில் ராமசாமி முதலியாரின் மடத்தனமோ, வெட்கம் கெட்டத்தனமோ, சுயமரியாதை அற்ற தனமோ, தேசத் துரோகத்தனமோ என்ன இருக்கின்றது என்று கேட்கின்றோம்.

நிற்க, “”அரசாங்கத்தார் பாதுகாப்பு ஏற்படுத்தினதற்குக் காரணம் காங்கிரஸ்காரர்களும், அதன் கொள்கையும் என்பது வாஸ்தவமானாலும், இதிலிருந்து காங்கிரசுக்குச் சர்க்கார் பயந்து கொண்டார்கள் என்பது விளங்கவில்லையா?” என்பது ஆக தோழர் அவனாசிலிங்கம், ஆ.அ., ஆ.ஃ., கேட்கின்றார். இது காங்கிரசுக்கு ஒரு ஆண்மையா? என்று கேட்கின்றோம்.

இதில் இருக்கும் புத்திசாலித்தனம் நமக்கு விளங்கவில்லை. தெருவில் போகும் கவர்னர் வண்டி மீது, ஒரு சோம்பேறிப் பையன் ஒரு சிறு கல்லை எறிந்தானேயானால், அடுத்த நாள் கவர்னர் அவ்வீதி வழிப் போகும் போது, அந்த வீதியில் யாரையும் நடக்க விடாமல் பந்தோபஸ்து செய்து விட்டு அதில் போவார். இதனால் “”அந்த சோம்பேறிப் பையனைப் பார்த்து கவர்னர் பயந்து கொண்டு பாதுகாப்பு ஏற்படுத்தினார்” என்று அந்தப் பையனைப் பாராட்டி, அவனுடைய ஆண்மையை மெச்சுவதா? அல்லது “”அந்தப் பையனுடைய முட்டாள்த்தனமான செய்கையில் அந்த வீதியில் நடக்கும் மற்றவர்களுக்கும் இடையூறும் துன்பமும் நேரிட்டதே” என்று வருந்தி அந்தப் பையனுக்குப் புத்தி கற்பிப்பதா? என்று கோவைக் காங்கிரஸ் தலைவரான ஆ.அ., ஆ.ஃ., பட்டதாரியையும் தேசியப் பத்திரிகைக் காரர்களையும் கேட்கிறோம்.

தோழர் காந்தியாரின் நடவடிக்கை முட்டாள்த்தனமானது என்றும், அதனால் தேசத்துக்கும், தேச மக்களுக்கும் கேடு சூழ்ந்து வருகிறது என்றும், சுமார் 10 வருஷ காலமாகவே நாம் கூப்பாடு போட்டுக் கொண்டு வருவதும், நாளுக்கு நாள் மக்கள் அதை உணர்ந்து வருவதும், இதைத் தோழர் காந்தியாரே உணர்ந்து ஓய்வு எடுத்துக் கொண்டதும், நடுநிலைமை அறிவோடு கூடிய, தன்னம்பிக்கை கொண்ட மக்கள் யாவரும் அறிந்ததேயாகும்.

தோழர் காந்தியார், வட்டமேஜை மகாநாட்டுக்குச் செல்லாமல் இருந்திருப்பாரானால், சீர்திருத்தத் திட்டத்தின் யோக்கியதை, பாதுகாப்பு களின் தன்மை ஆகியவை வேறுவிதமாக இருந்திருக்கும். ஆனால் தோழர் காந்தியாருக்குத் தனது தோல்வியை ஒப்புக் கொள்ள தைரியமில்லாததால், உப்பு சத்தியாக்கிரகத்தினால் சிறை சென்றவர்களை விடுவிப்பதற்காக, அதற்கு விலையாக வட்டமேஜை மகாநாட்டுக்குத் தான் போவதாய்ச் சர்க்காரிடம் ஒப்புக் கொண்டே விடுவிக்க வேண்டியதாகிவிட்டது.

ஆகவே இதில் அடங்கியுள்ள ஆண்மையும், வீரமும் பற்றி தோழர் அவனாசிலிங்கம் செட்டியார்தான் கண்டு அனுபவிக்க முடியுமே ஒழிய, மற்றவர்களுக்கு அவ்வளவு “”சூக்ஷம புத்தி” இல்லை என்றுதான் சொல்லுவார்.

வட்டமேஜை மகாநாட்டில் காந்தியார் நடந்து கொண்ட மாதிரியானது, புத்திசாலித்தனமானது என்று கோவைக் காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களாவது ஒப்புக் கொள்ளுகிறார்களா? என்று இப்போது கேட்கின்றோம்.

காங்கிரசின் யோக்கியதையை சித்தரிக்கும் ஒரு நல்ல சித்திரக்காரர் போல் காந்தியார் வட்டமேஜையில் நடந்து கொண்டார். அதன் மூலம் காங்கிரசை ஒரு காலித்தனமான ஸ்தாபனம் என்று அரசாங்கத்தார் கருதி நேர்மையான ராஜ்ஜியபாரம் நடக்க என்னென்ன பாதுகாப்புகள் வேண்டும் என்றெல்லாம் அவர்கள் நினைத்தார்களோ, அந்தப்படி யெல்லாம் பாதுகாப்புகளை அரசியல் திட்டத்தில் செய்து கொண்டார்கள்.

மறுத்துச் சொன்ன இந்தியாப் பிரமுகர்களுக்கு சர்க்காரார் காங்கிரசுக் காரர்களின் நடத்தைகளையும், பேச்சுகளையும், யோக்கியதைகளையும் எடுத்துக்காட்டிச் சமாதானம் செய்துவிட்டார்கள். எனவே, இந்திய மக்கள் இப்படிப்பட்ட காங்கிரசை, இந்த நாட்டில் வளர விட்டதற்கு வெட்கப் படுவதா  அல்லது அதற்காக சர்க்கார் ஏற்படுத்தின பாதுகாப்புகளுக்குத் துக்கப்படுவதா? என்று காங்கிரஸ் தலைவர்களை கேட்கின்றோம்.

காங்கிரசில் காந்தியார் ஆதிக்கம் ஏற்பட்டதின் காலம் முதற்கொண்டு, அரசாங்கம் ஒவ்வொரு துறையிலும் பாதுகாப்புகளை பெருக்கிக் கொண்டுதான் வருகிறதே ஒழிய ஒரு விதத்திலும் தளர்த்தவில்லை என்று புள்ளி விவரங்களோடு சொல்லுவோம்.

மற்றும் நமது அரசாங்கமானது, புதிதாக ஏற்படுத்தின பாதுகாப்பு மாத்திரமல்லாமல், பழைமையாக இருந்து வந்த சுதந்திரங்களையும் காங்கிரஸ்காரர்களின் நடத்தையால் பிடுங்கிக் கொண்டு, அவற்றிலும் பாதுகாப்பு ஏற்படுத்திவிட்டார்கள். இதற்கும் அனேக உதாரணங்களை எடுத்துக் காட்டலாம். ஸ்தல ஸ்தாபனங்களின் பாதுகாப்பு யோக்கியதை இன்று என்னமாக இருந்து வருகிறது? என்பதைப் பார்த்தாலே போதுமானதாகும்.

காங்கிரசுக்காரர்கள் அதில் கால் வைக்க ஆரம்பித்த காலம் முதல், ஸ்தல ஸ்தாபன அதிகாரங்கள் ஒவ்வொன்றாகப் பிடுங்கப்பட்டுப் போய் விட்டதுடன், ஸ்தல ஸ்தாபனங்களின் யோக்கியதையும் சரியென்று சொல்லக்கூடிய நிலைக்கு கொண்டுவந்து விட்டார்கள்.

இதைக்கூட கோவை காங்கிரஸ் தலைவர் “”ஸ்தல ஸ்தாபன அங்கத்தினர்களின் ஆண்மையும் வீரமும் கண்டு சர்க்கார் பயந்து கொண்டு பாதுகாப்புகள் ஏற்படுத்தினார்கள்” என்று தான் சொல்லுவார்களே தவிர, ஸ்தல ஸ்தாபன மெம்பர்கள் நடந்து கொண்ட விதம் எப்படிப்பட்டது என்று கவனிக்கவும் மாட்டார்கள். அதற்காக வெட்கப்படவும் மாட்டார்கள் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது.

இன்னும், அரசாங்கத்தார் உத்தியோகங்களுக்குக்கூட, பல பாதுகாப்புகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். மற்றும் பல விஷயங்களுக்கும் பாதுகாப்புகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாமும்கூட சில விஷயங்களில் பாதுகாப்புகள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் யாரை உத்தேசித்துப் பாதுகாப்பு ஏற்படுத்தப்படுகிறதோ, அவர்களுடைய ஆண்மையும் வீரமுமா? அல்லது அவர்களுடைய யோக்கியமற்ற நடவடிக்கையா? என்று சிந்தித்துப் பார்க்கும்படி கோவைத் தலைவர்களுக்கு ஞாகப்படுத்துகிறோம்.

இந்தப் பாதுகாப்புகள் எல்லாம் கோவைத் தலைவருக்கும், காங்கிரஸ் பத்திரிகைக்கும் தங்களது ஆண்மையையும் வீரத்தையும் காட்டும் அறிகுறியாய் இருந்து வரலாம். ஆனால் கடுகளவு சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதை உணர்ச்சியும் உள்ள மற்ற மக்களுக்கு மானக்கேடாய் இருக்கிறது என்பதும், யாரோ செய்த “”ஆண்மையும் விஷமத்தனமுமான காரியம்” என்பதற்காக யார்? எந்த தேசம்? துன்பமும், இழிவும் அடைவது என்பதைக் கோவைத் தலைவர்கள் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கின்றோம்.

மற்றும் கோவையில் தோழர் ராமசாமி முதலியார் கூறியவற்றில், எந்தப் பாகத்தை  எந்த வாக்கியத்தை  எந்த வரியை கோவைக் காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சேபிக்கிறார்கள் என்று பந்தயங் கட்டிக் கேட்கின்றோம்.

“”தேர்தலில் தோற்றுவிட்டவர் சொல்லும் சங்கதியைப் பற்றி யாரும் கவனிக்கக் கூடாது” என்று சொல்லுகின்ற சமாதானமே, தோழர் ராமசாமி முதலியாரின் பாணங்களுக்குக் காப்பாய் விடாது.

எத்தனையோ யோக்கியர்களும், கெட்டிக்காரர்களும், பெருந்தன்மை வாய்ந்தவர்களும் தேர்தலில் தோற்றுப் போவதையும், எத்தனையோ அயோக்கியர்களும், மடையர்களும், ஈனர்களும் தேர்தலில் வெற்றி பெறுவதையும் வண்டி வண்டியாக எடுத்தக் காட்டக் கூடும்.

தேர்தலின் வெற்றி தோல்விக்கும், அவரவர்கள் பேசும் வார்த்தைக்கும் சம்மந்தப்படுத்துவது அறிவுடைமை ஆகாது என்பதுடன், அது தக்க சமாதானம் சொல்ல முடியாத குற்றவாளிகளும், கோழைகளும் உபயோகித்துக் கொள்ளும் ஆயுதம் என்றும்தான் சொல்லுவோம்.

யோக்கியர்களும், கெட்டிக்காரர்களும், உறுதியாய்த் தேர்தலில் வெற்றி பெறும் காலம் வந்து விட்டதானால், நமது நாட்டில் அரசியல் குறை இல்லாமல் போவதோடு, இப்படிப்பட்ட வயிற்றுப் பிழைப்புக் காங்கிரசுக்கும் நாட்டில் சிறிதுகூட இடம் இல்லாமல் போகும் என்றும் முடிவு கட்டி விடலாம்.

அன்றியும் இன்று தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றவர்களை யெல்லாம், கோவை காங்கிரஸ் தலைவர்கள் யோக்கியர்கள் என்றும், கெட்டிக்காரர்கள் என்றும் ஒப்புக் கொள்வார்களா? என்பதோடு அவர்கள் வார்த்தைக்கு சிரம் வணங்கவும் தயாராய் இருக்கிறார்களா? என்றும் கேட்கின்றோம்.

பழங்காலத்து பெண் மக்கள் குணம் ஏதோ, அதை இக்காலத்து ஆண் மக்கள் தங்களுக்கு வேறு சமாதானம் சொல்ல வகையில்லாத காலத்து கையாளுவது ஆச்சரியமா? அல்லது அவர்களது நிலை அப்படி ஆகிவிட்டதா? என்று அறிய வேண்டியிருக்கிறது.

அன்றியும் அப்பத்திரிகையானது, தனது முடிவு வாக்கியத்தில் “”உரிமைகளைத் தடுப்பதற்காகப் பாதுகாப்பு ஏற்படுத்தினால், உண்மை இந்தியன் தன் திக்கற்ற நிலைமையைக் கண்டு தலைகுனிவான். ராமசாமி முதலியாரிடம் அந்த உணர்ச்சி காணவில்லை”

என்று எழுதி தனது தலையங்கத்தை முடிக்கின்றது. தோழர் ராமசாமி முதலியாரிடம் அந்தக் குணம் இருக்கிறதா? இல்லையா என்பதைப் பிறகு யோசிப்போம்.

கோவைக் காங்கிரஸ் தலைவர்களும், பத்திராதிபரும் தாங்கள் செய்த காரியத்தால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொண்டும்கூட, தலைகுனியாமல் வீரியமும், ஆண்மையும் பேசுவதோடு, அதன் காரணத்துக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத தோழர் ராமசாமி முதலியாரை, சுயமரியாதை அற்றவர், மடையர், வெட்கங் கெட்டவர் என்று சொல்வதென்றால் இவர்கள் உண்மை இந்தியர்களா? என்று கேட்பதோடு, இந்த வார்த்தைகளுக்கு எவ்வளவு வீதம் வட்டி சேர்த்துக் கோவை காங்கிரஸ் தலைவர்களுக்கும் பத்திராதிபருக்கும் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்கின்றோம்.

சில ஜனங்கள் பேசுவது, எழுதுவது என்பதைக் கிள்ளுக்கீரை மாதிரி மதிக்கிறார்கள். ஆனால் மானமும் பொருப்புமிருந்தால், அல்லது திரும்பிச் சொல்லுவார்களே என்பதற்காக வருத்தப்படும்படியான நல்ல ரத்த ஓட்டமாவது இருந்தால், இப்படிப்பட்ட அசட்டு வார்த்தைகளும், ஞானமற்ற எழுத்துக்களும் ஏற்படவே ஏற்படாது என்பதைக் கூறி இதை முடிக்கின்றோம்.

குடி அரசு  தலையங்கம்  30.06.1935

You may also like...