இந்தியாவுக்கு ஆங்கிலம் “”வரப்பிரசாதம்”

 

தேசீய  வாதிகளுக்குப்  புத்தி  முளைக்கிறது

ஹிந்தி  பக்தர்கள்  என்ன  செய்யப்  போகிறார்கள்

மிஸஸ்  சரோஜினி  தேவியின்  பேச்சு

தேசீயத் துரோகி

இந்தியாவுக்குப் பொதுப் பாஷையாக ஆங்கிலம் வழங்கி வருகிறது. ஆங்கில அரசாங்கத்தார் செய்த நன்மையில்  இதுவொன்று. அவர்கள் நமது நாட்டிற்கு வந்திராவிட்டால் இது பொதுப் பாஷையாக ஆகி இருக்க மாட்டாது. ஆங்கிலங் கற்றதினால் நமது சமுதாயத்திலே சில மாறுபாடுகள் தோன்றின. ஜாதிப் பைத்தியம்  வேற்றுமை கொஞ்சம் அகலத் தொடங்கியது. மூடநம்பிக்கைகளின் பயனாய் வயிறு வளர்க்கும் கூட்டம் தவிர மற்றவர் களிடையில் கொஞ்சம் கொஞ்சம் மூடநம்பிக்கை ஒழிய ஆரம்பித்தன. பழக்க வழக்கங்கள் சிறிது சிறிது மாற ஆரம்பித்தன. சகோதரத்துவத்தைப் பற்றி வாயளவிலாவது பேசும்படியான நிலை ஏற்பட்டது. நடை உடை பாவனைகளிலும் மாறுதல் ஏற்பட்டுக் கொண்டு வந்தது.

அன்றியும் மக்களுக்குள் சுதந்திர உணர்ச்சி தோன்றவும், தாழ்த்தப் பட்டவர்கள் விழித்தெழவும், பெண் மக்கள் கர்ஜனை செய்யவும், பல துறைகளிலும், சீர்திருத்தக்காரர்கள் தோன்றவும், இந்திய சமுதாயத்தையே மாற்றி புதியதொரு சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற உணர்ச்சி மக்களுக்குள் எழவும், அதற்காக சிலராவது உழைக்கவும், இதன் பொருட்டு ஆங்காங்கே சில சங்கங்கள் தோன்றவும், புற்றீசல் போல் பத்திரிகைகள் புறப்படவும், இங்கிலீஷ் பாஷையினால் தான் என்றால் நியாயபுத்தி உள்ளவர்கள், மறுக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட நிலையில் முளைத்ததையா! தேசீயம்; பாழும் தேசீயம்! குறுகிய மனப்பான்மை கொண்ட தேசீயம்  பிற்போக்கான தேசீயம்  சமுதாய மாறுபாட்டை விரும்பாத தேசீயம் தோன்றி, நூறு வருஷ உழைப்பைப் பத்து வருஷத்தில் பாழாக்கிற்று.  50 வருஷத்தில் அடைய வேண்டிய அபிவிருத்தியை 500 வருஷத்திற்குத் தள்ளி வைத்தது. மறைந்து போன வைதீகம் தலையெடுக்க ஆரம்பித்தது. கிராப்பு வைத்திருந்தவர்கள் தேசீயத்தின் பெயரைச் சொல்லி உச்சிக் குடுமி வைத்துக் கொண்டனர். காற்சட்டை மேற்சட்டை அணிந்தவர்கள், முழங்காலுக்கு மேல் துணி கட்டவும் 12 முழத் துணியில் பஞ்சகச்சம் கட்டி மேலாடையின்றி முண்டமாகத் திரிந்தனர். பட்டை நாமத்தையும், சாம்பற் பூச்சையும் விட்டவர்கள் திரும்பவும் அவைகளை குழைத்துத் தீட்டத் தொடங்கினர். மறந்து போன புராணக் கதைகள் திரும்பவும் படிக்கப் பட்டன. இவையெல்லாம் பாழும் தேசீயம் செய்த வேலை. இந்தத் தேசீயத்திற்கு மூல கர்த்தா யார் என்று சொல்ல வேண்டியதில்லை. அவர் தான் அந்த வைதீக காந்தியார்.

தேசீயம் என்றால், அரசியலில் மாத்திரமா தேசீயம்! படிப்பில் தேசீயம்! நடிப்பில் தேசீயம்! பாஷையில் தேசீயம்! ஆடையில் தேசீயம்! எங்கும் தேசீயம் என்பதே பேச்சாக இருந்தது. கூச்சலுக்குத் தகுந்த காரியம் நடக்க வில்லை என்பது உண்மைதான். ஆனாலும் சிலரை ரொம்பவும் பிற்போக்கான மனுஷாளாக  அதாவது, சுமார் நாலாயிரம்  ஐயாயிரம் வருஷங்களுக்கு முந்திய மனுஷர்களாக ஆக்கிவிட்டது. இதில் சந்தேகம் இல்லை.

நாம் ஆரம்பித்திலிருந்து தேசீயத்தைக் கண்டித்து வந்தோம். அது நம்மை மிருகப் பிராயத்திற்குத் திருப்பி இழுத்துக் கொண்டு போகும் என்று சொன்னோம். அதிலும் தேசீயத்தின் சின்னமாகிய கதரை மிக அழுத்தமாகக் கண்டித்தோம். அதனால் சமுதாய நன்மை  சர்வதேச சகோதரத்துவம் பாதிக்கப்படும் என்று கூறினோம். இப்பொழுது இது அனேகருக்கு வெறுப்பாக இருந்தாலும், ஆத்திரமாக இருந்தாலும் இப்பொழுது உண்மை, தேசீயவாதிகள் அனேகருக்குப் புரிந்துவிட்டது. ஆயினும் அதை விட்டுவிட தைரியமில்லாமல் கண்டிக்க ஆண்மையில்லாமல்  கும்பலோடு கோவிந்தா போடுகின்றனர்.

அடுத்த தேசீயப் பாஷையைப் பற்றியது. “”ஆங்கில பாஷை தேசீய உணர்ச்சிக்கு ஏற்றதல்ல; அந்நிய பாஷை; அடிமைப் புத்தியை உண்டாக்குவது; ஆகையால் அதை ஒழிக்க வேண்டும்; ஹிந்தியைத் தேசீய பாஷையாக்க வேண்டும்; இந்தியாவுக்கு பொது மொழியாக இருக்க வேண்டும்” என்று தேசீயவாதிகள் கூச்சல் கிளப்பினார்கள். எங்கும் ஹிந்தியைப் பிரசாரம் பண்ண ஆரம்பித்தார்கள். இப்பொழுதும் நடை பெறுகின்றது; அது தான் அராசங்க பாஷையாக வரப் போகிறதென்று கூறிப் பிரசாரம் பண்ணுகிறார்கள்.

நாம் இந்தியைப் பொது மொழியாக ஒப்புக் கொள்ள மாட்டோ மென்றோம். அது பொது பாஷையாக  ஆவதற்கு யோக்கியதை இல்லாதது என்றோம். அதனைப் பொது மொழியாக ஏற்படுத்தினால் மீண்டும் நாம் பிற்போக்கான வழியில் செல்ல வேண்டியவர்கள் ஆவோம் என்றோம். ஆங்கிலத்தில் தான் உலக வாழ்வுக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் பரவியிருக்கின்றன. இந்தியில் அவ்வாறு இல்லை. ஆங்கிலம் இப்பொழுதே பெரும்பாலும் இந்தியா முழுதும் பரவி இருக்கிறது; இந்தி அப்படி இல்லை. ஆங்கிலம் உலகில் எப்பாகத்திலும் இருந்து வருகிறது. இந்தி அப்படி இல்லை; இந்தியாவில் மாத்திரம் கொஞ்சம் பரவி இருக்கிறது. ஆங்கிலம் உலக பாஷையாக ஆனாலும் ஆகிவிடக் கூடும். இந்தி ஒரு நாளும் அப்படி ஆக முடியவே முடியாது. ஆங்கிலத்தில்  மக்களுக்கு வேண்டிய சீர்த்திருத்த இலக்கியங்கள் நிறைந்திருக்கின்றன.  இந்தியில் துளசிதாசர் இராமாயணந்தான் பெரிய இலக்கியமாக இருக்கிறது. ஆங்கிலம் சர்வதேச சகோதரத்துவத்தையும், உலக நாகரீகத்தையும் ஒன்றுபடுத்தும். இந்தி மக்களைப் பிரித்து வைக்கும், மிருக நாகரிகத்தை வலியுறுத்தும். ஆங்கிலம் மெல்லிய ஓசையுடைய பாஷை; மனிதரின் இருதயத்தைப் புண்படுத்தாது; இந்தி கடின சப்தங்களையுடைய முரட்டு மொழி; மனிதர் இருதயத்தைத் தொலைத்துப் புண்ணாக்கி விடும் என்றெல்லாம் கூறினோம். நாம் கூறிய காரணங்களை எவரும் ஆதாரத்துடன் மறுத்துக் கூறவில்லை.

என்ன செய்தார்கள் தெரியுமா? நம் மீது சீறி விழுந்தார்கள்! உறுமினார்கள்! குலைத்தார்கள்! தேசத் துரோகி என்றார்கள்! சண்டாளன் என்றார்கள்! பாவி என்றார்கள்! அவற்றையெல்லாம் நாம் சிறிதும் லட்சியம் பண்ணவில்லை; இனி பண்ணப் போவதுமில்லை. ஆனால் அப்பொழுதே நமக்குத் தெரியும். அதென்னவென்றால், இப்பொழுது இவர்களுடைய மூளை மடிப்புகளில் ஓட்டை விழுந்து விட்டன. ஆகையால் என்னென்னவோ சொல்லுகிறார்கள். பிற்காலத்திலாவது, சில வருஷங் கழித்தாவது இவர் களுடைய மூளை சரிப்பட்டு விடும்; அதன் பிறகு அறிவு முளைத்து விடும்; உண்மையை அறிந்து கொள்ளுவார்கள்.  நமது வழிக்குத் திரும்பி விடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டுதான் இருந்தோம். உண்மையாகவே நம்பியும் இருந்தோம். இப்பொழுது அந்த நிலை வந்து கொண்டிருக்கின்றது.

நமது உலக கவியாகிய சரோஜினி அவர்களைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். பெரும் தேசீயவாதியாக விளங்குகிறார்; காந்தியார் சொல்வதைச் சில சமயங்களில் மறுப்பது போலப் பேசினாலும், மறுபடி உடனே சரணாகதியடைந்துவிடக் கூடியவர். அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். பார்ப்பனர்களாலும், தேசீயவாதிகளாலும், ஹிந்திப் பிரச்சாரகர்களாலும் பெரிதும் கொண்டாடப்படுகிறவர். அவர் இப்பொழுது, ஆங்கிலத்திலேயே கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று சொல்லுகிறார். ஆங்கில பாஷையில் கல்வி போதிக்க ஆரம்பித்தது இந்திய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதத்தை ஒத்ததாகும் என்று சொல்லுகிறார். ஆங்கிலத்தினால்தான் நாம் உண்மைச் சுதந்திரத்தை அறிய முடிந்தது என்கிறார். சமூக வேற்றுமை  ஒழிய ஆங்கிலமே சிறந்தது என்று முழங்குகிறார். ஆங்கிலத்தை ஒழித்து விட்டு இந்தி பாஷையைப் படிக்க வேண்டும் என்னும் குறுகிய தேசீயத்தில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுகிறார். இவ்வளவு ஏன்? அவருடைய  அதாவது அந்தப் பழுத்த  அகில உலக  இந்திய தேசீயவாதி யாகிய கவியரசி சரோஜினி தேவியவர்கள் சென்ற 16.2.35ல் லாகூரில் நடைபெற்ற பாஞ்சால மாணவர் மகாநாட்டில் இரண்டாம் நாள் தலைமை வகித்த போது பேசியுள்ள பேச்சைப் படித்துப் பாருங்கள்! நாம் சொல்லுவது விளங்கும். அந்தப் பேச்சாவது@

ஆங்கிலப் பாஷையைப் போதிக்க ஏற்பாடு செய்ததானது இந்திய மக்களுக்குச் சிறந்த வரப்பிரசாதத்தைப் போன்றதாகும். ஆங்கிலத்தைப் போதிக்க ஏற்பாடு செய்த மெக்காலே (Mச்ஞிச்தடூச்தூ) என்பவர் நமக்கு பெரிய நன்மையைச் செய்திருக்கிறார். ஆங்கிலத்தினாலேயே சுதந்திரத்தின் உண்மை லட்சியம் என்ன என்பதை நாம் அறிந்து கொண்டோம். சமூக வித்தியாசங்கள் ஒழிவதற்கு ஆங்கிலம் பொதுப் பாஷையாக இருப்பதுதான் ஏற்றதாகும். பிஷாவாரிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் நாம் நமது அபிப்பிராயங்களை வெளியிடுவதற்கு பொதுப்பாஷையாகிய ஆங்கிலமே துணையாக இருக்கின்றது. குறுகிய தேசீயத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. குறுகிய தேசீயமானது நமது முன்னேற்ற வழிகளுக்குத் தடையாக இருக்கும். இவ் விஷயத்தில் அரசாங்கத்தார் மேல் குற்றஞ் சொல்ல முடியாது. இந்தியர்கள் ஆங்கில பாஷையையே விரும்புகின்றனர். அதனை நிராகரிக்க விரும்பவில்லை.

என்பது அந்தப் படே அம்மாளின் பேச்சு. இனி அந்த அம்மாளை இந்தி பக்தர்கள் என்ன சொல்லி அழைக்கப் போகிறார்கள்? நாம் அந்த நாள் முதல், இந்த நாள் வரையில் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயம் புரிகிறதா? இனியாவது புரியுமா?

குடி அரசு  கட்டுரை  24.02.1935

You may also like...