சென்னையில் மாபெருங் கூட்டம்
தலைவரவர்களே! தோழர்களே! வடசென்னைத் தமிழர் முன்னேற்றக் கழகக் காரியதரிசி தோழர் செ.சி.ந. காசிராஜன் அவர்கள் முயற்சியினால் கூட்டப்பட்ட இம்மாபெருங் கூட்டத்தில், நானும் பேசக் கட்டளை இடப்பட்டது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இந்தி எதிர்ப்பிற்கு நாட்டில் அதிக ஆதரவு கிடைத்துவரும் இக்காலத்தில், இந்தி எதிர்ப்பைப் பற்றி நான் அதிகம் பேசத் தேவையில்லை. இந்தி எதிர்ப்பு செத்துவிட்டதென்று பார்ப்பன பத்திரிகைகளும், சில கூலிப் பத்திரிகைகளும், செய்துவரும் பொய்ப்பிரசாரத்தைக் கண்டு வெளி ஜில்லாவாசிகள் சிறிது ஏமாந்தாலும், சென்னையிலுள்ள நீங்கள் ஏமாற மாட்டீர்களென நினைக்கிறேன். (கைதட்டல்) ஏனெனில் தினம் ஐந்துபேர் நான்குபேர் இரண்டுபேர் இந்தி எதிர்ப்புக்காகச் சிறை செல்வதை நீங்கள் நேரில் பார்த்து வருகிறீர்கள்.
ஆனால், இந்தி எதிர்ப்புச் செய்திகளை வெளிப்படுத்திவரும் ்விடுதலை”யை ஒழித்தாலொழிய நாம் முன்னேற முடியாதென நினைத்து அதன் ஆசிரியரையும் வெளியிடுவோரையும் கைது செய்தனர் இன்றைய பார்ப்பன மந்திரிகள். (வெட்கம் என்ற கூச்சல்) இன்னும் நாம் பணிவதா. அன்றி யாரைக் கைது செய்யலாம், நாடு கடத்தலாம் எனப் பலவாறு நினைத்துத் திண்டாடி ஒரு முடிவுக்கு வராது இந்தி எதிர்ப்புச் செத்துவிட்டது என்று மட்டும் கூறுகிறார்கள்.
நாங்கள், இந்தி எதிர்ப்புச் சாகவில்லை; மாறாக நாள்தோறும் வளருகிறது என்று கூறுகிறோம். மேலும் இந்தியினால் உண்டாகும் கெடுதிகளைப் பற்றி நான் இனி இந்தியா பூராவுக்கும் ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. ஏன்? “இந்தியினால் கலவரமேற்படுகின்றது. வகுப்புணர்ச்சி உண்டாகின்றது. இந்தியைப் பொதுமக்கள் ஆதரிக்கவில்லை” என அகில இந்திய காங்கரஸ் கமிட்டியே முடிவு செய்துவிட்டது. (கைதட்டல்) இந்தியுடன் இந்துஸ்தானியையும் சேர்த்துக்கொண்டு வரப்பட்ட தீர்மானம் அ.இ.கா.க.யில் தோற்கடிக்கப்பட்டது. ஆனால் இதனால் இந்தி-உருது சச்சரவு உண்டாகின்றதென அங்கு பேசப்பட்டிருக்கின்றது. இங்கு வந்திருந்தால் தமிழ் விவகாரத்தையும் அத்துடன் சேர்த்திருப்பார்கள். ஆனால் இந்தியில் காரியக் கமிட்டி நடவடிக்கைகள் நடைபெற வேண்டுமென்றும், அதற்கு ஒரு கமிட்டியை நியமித்தும் ஒரு தீர்மானம் கொண்டு வந்தனர். தோழர் அபுல்கலாம் ஆசாத் அதை ஒப்புக்கொண்டு, முன்பே ஒரு கமிட்டி இருப்பதால் கமிட்டி என்ற பாகத்தை மட்டும் நீக்கிவிட்டு அசல் தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கின்றனர். இதற்கு அர்த்தமென்னவென்றால், காங்கரஸ் கமிட்டி நடவடிக்கைகள் பல பாஷைகளில் நடைபெற நேரிடுமாதலால் அதை விளக்க அதனை இந்தியில் நடத்த வேண்டுமெனத் தீர்மானித்திருக்கின்றனர். இதனை உணராது காரியக் கமிட்டி ஏமாந்ததெனக் கூறுகின்றனர் நமது ஆச்சாரி வர்க்கத்தார். என்னே அவர்களின் வியாக்யானம்.
இந்த தீர்மானத்தைப் பற்றி நாளைவரை ஒரு காங்கரஸ் பத்திரிகையும் எழுதவில்லை. வேண்டுமென்றே மறைத்துவிட்டனர். எனவே காங்கரஸ் காரியக் கமிட்டியே இந்தி வேண்டாமென்று தீர்மானித்திருக்கையில், இந்தி எதிர்ப்பு தேசத்துரோகமா? இதைக் கூறும் நாங்கள் தேசத் துரோகிகளா? இதை மறைத்து வரும் அவர்கள் தேசீயவாதிகளா? நீங்களே கூறுங்கள்.
நிற்க எனது மதிப்பிற்குரிய நண்பர் இராஜகோபாலாச்சாரியார் (சபையில் சிரிப்பு)
நாட்டைக் கெடுத்தவன் யார்?
்இந்தி எதிர்ப்பு எனது நண்பன் ராமசாமியின் வேலை” என்று சட்டசபையிலேயே கூறியிருக்கிறார். ஆனால் இந்தியை காங்கரஸ் கொண்டு வந்ததா? ஆச்சாரியார் கொண்டு வந்தாரா? தமிழர் நலங்கருதி இதை நான் எதிர்க்கவேண்டாமா? எதிர்க்க உரிமையில்லையா? நாங்கள் என்ன ஆடுமாடு மேய்த்துக் கொண்டு இங்கு வந்தவர்களா? ஊராரை ஏமாற்றினவர்களா? சோம்பேறி வாழ்க்கையுடையவர்களா? எங்களுக்கு மட்டும் தேசாபிமானம் கிடையாதா? தேசாபிமானம் என்பது ஆச்சாரியாருக்கும் அவரது கூட்டத்தாருக்கும் காபிரைட் உரிமையா? (கைதட்டல்) அவர்கள் கூறுவதுபோல் நாங்கள் ஏன் தேசத்தை விற்று வயிறு வளர்க்க வேண்டும்? இதற்காக நான் மற்றவர்களை வையவில்லை. வையுமாறு உங்களையும் ஏவவில்லை. ஆனால் எங்களை தேசத்துரோகி, நாட்டைக் கெடுத்தவன் என்று கூறினால் நாங்கள் பொறுப்போமோ? இந்நிலையில் அவர்கட்கும் நமக்கும் உள்ள சம்பந்தத்தை எடுத்துக் கூறுவது எனது கடமையல்லவா? நான் கேட்கிறேன் அவர்களுக்கு இங்கு என்ன வேலை? (வெட்கம் என்ற கூச்சல்) வயலை உழுதார்களா? நெல்லை அறுத்தார்களா? அல்லது வீடுகளைக் கட்டினார்களா? நாட்டை சீர்படுத்தினார்களா? என்ன காரியத்தைச் செய்தார்கள் அந்த சோம்பேறிகள்! (வெட்கம்! வெட்கம்! என்ற பலத்த கூச்சல்)
இனி ஏமாற்ற முடியாது
ஆதி முதல் தமிழர்களை ஏமாற்றி வயிறு வளர்த்த இவர்கள், தேசத்திற்காக உடல் பொருள்களைத் தத்தம் செய்த எங்களை தேசத் துரோகிகள் என்று கூறத் துணிவு கொண்டு விட்டார்களே! இவர்கட்கு கஞ்சி வார்த்தது – வார்ப்பது யார்? இந்நிலையில் அம் என்றால் சிறைவாசம்; உம் என்றால் வனவாசம்! யார் அப்பன் வீட்டுச் சொத்து? இதில் உனக்கு என்ன சம்பந்தம்? உனக்கு என்ன யோக்கியதை உண்டு? அன்று மோட்சத்தின் பேரால் எங்களை ஏமாற்றியது போல இன்று தேசீயத்தின் பேரால் எங்களைத் தூக்கிலிடு என்று கூறுகிறாய்! நீ துரோகியா? நாங்கள் துரோகிகளா? இன்று கூறுகின்றேன் தேசவிடுதலைக்காக உண்மையில் உயிரைக் கொடுக்க தயாராயிருக்கிறேன். (ஈ.வெ.ரா. வாழ்க என்ற கூச்சல்)
வெள்ளையன் சுரண்டுகிறான், அதை எனக்குக் கொடு என்பவன் தேசீயவாதியா? வட நாட்டுக்காரன் எங்களை கொள்ளை அடிக்கிறானே; மார்வாடிகள் கொடுமை செய்கிறார்களே; அவர்களை என்ன செய்தாய்? அவர்களிடம் பங்கல்லவோ கேட்கின்றாய்! பிர்லா, பஜாஜ் இவர்களிடம் ரகசியமாக லஞ்சம் பெற்றுக் கொண்டு எங்களை மோசம் செய்து வஞ்சிக்கின்றாயே. இந்நிலையில் நீங்களல்லவோ எட்டு பங்கு குலாம்கள். (கைதட்டல்) காங்கரசின் பேரால் ஆட்சி செய்ய உங்கட்கு வெட்கமில்லையா?
தேர்தல் வாக்குறுதி எங்கே?
இப்பதவி உங்களுக்கு எப்படி வந்தது? தேர்தல் காலத்துக்குரிய வாக்குறுதிகள், பேசிய வீரங்கள் என்ன? ஆப்பக்காரியிடம் சென்று நீ ஏன் இந்த அனலில் உட்கார்ந்து கொண்டு கஷ்டப்படுகிறாய் மஞ்சள் பெட்டியில் ஓட்டைப்போடு, கடையிலிருந்து அரிசி பருப்பு முதலியவைகளை சும்மா அள்ளி வரலாம் என்றாய். அவசரமாக ரயிலுக்கு போவோனிடம் சென்று நீ ஏன் இவ்வாறு ஓடுகிறாய், காங்கரசை ஆதரி. நினைத்த இடத்தில் கையைக் காட்டினால் வண்டி நின்றுவிடும் என்று கூறினாய்; வயலில் உழுபவனிடம் சென்று நீ ஏன் இவ்வாறு மழையிலும், வெய்யிலிலும் துன்புறுகின்றாய் மஞ்சள் பெட்டியை நிரப்பு நெல் வீடு தேடிவரும் என்று அறைந்தாய்; மழை வேண்டுபவனிடம் சென்று மஞ்சள் பெட்டியை மனதில் நினைத்தால் மழை வரும் என்று மார்தட்டிக் கூறினாய்; அறிவாளியிடம் சென்று எங்களை தேர்ந்தெடுங்கள் வெள்ளையரை விரட்டலாம், போலீசிடத்துச் சலாம் வாங்கலாம் என்று சாற்றினாய்.
ஆனால் இன்று அவைகளையெல்லாம் மறந்து கவர்னரை “வழிகாட்டி” நண்பன், ஞானாசிரியன்” என்று கூறினால் எங்கள் வயிறு எரியாதா? செய்வதைச் செய்துவிட்டு எங்களை வீணே ஏன் வையவேண்டும்? எல்லாரையும் ஏமாற்றி என்றென்றைக்கும் தலைதூக்காமற் செய்யும் கழுத்தறுக்கும் வேலையை இன்று செய்கின்றாய். இதைக் கூறினால் – கண்டித்தால்-சிறைவாசமா? நாடு கடத்தலா?
ஏகாதிபத்திய ஒழிப்பு எங்கே?
அன்று ஜவஹர்லால் மொண்டியானாலும் முடமானாலும் ஆளைக் கவனிக்காது காங்கரசை ஆதரி என்றும் காங்கரஸ் மந்திரி பதவியை ஏற்காதென்றும் கூறினார். மஞ்சள் பெட்டி நிரம்பியவுடன் மாகாண சுயாட்சியை உடைத்தார்களா? அன்று கூறியது போல் எப்படி உள்ளே புகவேண்டுமென்று தானே நினைத்தார்கள். அன்று வீரம் பேசிவிட்டு பூணூலைப் பிடித்துக் கொண்டு இராஜ விசுவாசப் பிரமாணம் செய்ய வெட்கமில்லையா? (கைதட்டல்) உங்கள் ஏகாதிபத்திய ஒழிப்பு எங்கே?
கட்டுப்பாடு, ஒழுங்கு நடவடிக்கை என்பதன் மூலம் பல மந்திரிகளையும் முனிசிபல் கெளன்சிலர்களையும் ஜில்லாபோர்டு மெம்பர்களையும் ஒழித்து வருகின்றனர். ஆனால் அதிலும் நியாயம் உண்டா? இன்று சுகாதார மந்திரியாகவிருக்கும் டாக்டர் ராஜன் எந்தவிதத்தில் காங்கரஸ்காரர்? எந்தத் தொகுதியில் அபேட்சகராக நின்றார்? அவர் திருச்சி நகர சபையில் காங்கரஸ் அபேட்சகராக நின்ற ஒரு தமிழரை எதிர்த்து ஒழித்தார். அதனால் எல்லா இந்திய கா. கமிட்டியில் தண்டிக்கப்பட்டார். இதைக் கண்டு கனம் ஆச்சாரியாரும் அன்று துறவு பூண்டாரே! ஆனால் பதவி கிடைத்தவுடன் வலியச் சென்று அவரை அழைத்து வந்து நியமனம் மூலம் சுகாதார மந்திரி ஆக்கினார் தோழர் ஆச்சாரியார் இது என்ன வருணாச்சிரம தர்மமா? காங்கரஸ் நியாயமா? சற்று சிந்தியுங்கள் ஆச்சாரியார். நியாய புத்தியுடையவரானால், டாக்டர் ராஜனை ஏதேனும் ஒரு தொகுதி மூலம் சட்டசபை உறுப்பினராக்கி யிருக்கலாம். அல்லது அவரிடம் மன்னிப்பு வாங்கியிருக்கலாம். அன்றி அ.இ.கா.விடம் கூறி அவரை மன்னித்துவிட்டதாக அறிவித்திருக்கச் செய்யலாம். இவை ஒன்றினையும் செய்யாத இவர் செய்கை ஒழுங்கானதா? நாணயமானதா? பார்ப்பனர்க்கு ஒரு நீதி; அல்லாதாருக்கொரு நீதியா? இந்த நிலையில் அவர்கள் நம்மை மிரட்டுவதற்குக் காரணம் நமது இளிச்சவாய்த்தனமே ஒழிய வேறில்லை.
நிற்க இக்கூட்டம் எலக்ஷனுக்காகக் கூட்டப்பட்டதென யாரோ சொன்னாராம். நான் அப்படி வரவில்லை. இன்ன பெட்டியில்தான் போடுங்கள் என்று கூறவில்லை.
எனது கூற்று
ஆனால் யோக்யர்கட்குப் போடுங்கள் என்றுதான் கூறுகின்றேன் (பலத்த கை தட்டல்) நாணையமுள்ள ஏழைகளிடத்து அன்புள்ள தன்னல மற்றவர்கட்குப் போடுங்கள். இதைக் கூறும் என்னைத் தேர்தல் பிரசாரகன் என்று கூறினாலும் நான் கவலை கொள்ளப்போவதில்லை. ஏனெனில் நான் மொண்டியானாலும் முடமானாலும் போடு என்று கூறவில்லை. கழுதைகளை நிறுத்தினாலும் கவலைகொள்ளாது போடுங்கள் என்று கூறவில்லை. ஏனெனில் சர்க்கார், எலக்ஷனில் நிற்க மனிதனுக்குத்தான் உரிமை உண்டு என்று சட்டஞ் செய்துள்ளனர். எனவே, காங்கரஸ்காரர் கூற்று சட்டப்படி தப்பாகும். ஆதலின் தகுதியுள்ளவர்களுக்குப் போடுங்கள் என்று கூறுகின்றேன். காங்கரஸ்காரன் கழுவினால் தான் கக்கூஸ் நாற்றம் போகுமா? வீதி சுத்தமாகுமா?
இல்லையே. அப்படிச் சொன்னால் அவன் கன்னத்தில் அன்றோ அறைய வேண்டும். (கைதட்டல்) ஒரு கட்சிதான் முனிசிபாலிட்டியை நடத்த வேண்டுமென்பது சட்டமல்ல. அது முன்புள்ள சர்க்கார் சட்டப்படி தான் நடக்க வேண்டும். ஆதலின் ஒரு கட்சியார்தான் வரவேண்டுமென்று கூறுவது பித்தலாட்டமாகும்.
எங்கு வாழ்கிறது
ஆனால் நீங்கள் ஒன்றை மட்டும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அபேட்சகராக நிற்பவன், சோற்றுக்கு வகையுடையவனா என்று பாருங்கள். (பலத்த கைதட்டல், சிரிப்பு) ஏன் சிரிக்கின்றீர்கள்? அவன் என்ன சாணியைத் தின்பானா? சோற்றைத் தானே தின்பான்! சோற்றுக்கில்லாதவனை நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பினால், அவன் திருடவும் பார்ப்பான்; லஞ்சம் வாங்கவும் பார்ப்பான்; எதற்கும் பார்ப்பான். (பலத்த சிரிப்பு).
காங்கரஸ் கை வைத்த இடமெல்லாம் நாசமாகிவிட்டது. திருநெல்வேலி முதல் சென்னை வரை பாருங்களேன். ஊழல் எங்கில்லை? லஞ்சப் பேச்சில்லாத இடம் எது? கங்கையுடன் சேர்ந்த சாக்கடையும் புனிதமடைவதுபோல 4 அணா கொடுத்துக் காங்கரசில் சேர்ந்தால் அவன் புனிதமான தேசீயவாதி ஆகிவிடுவான்! என்று அன்று ஆச்சாரியார் கூறினார். ஆனால் இன்று பலர் துரோகம் செய்தாரென்றும், கட்டுப்பாட்டை மீறினாரென்றும் தள்ளப்பட்டு விட்டார்களே. எங்கே அவர்கள் புனிதத் தன்மை? தள்ளப்பட்டவர்கள் யார்? பெரும்பாலும் தமிழர்கள்தானே! காரியம் கை கூடிய பின்னர் யார் எக்கேடு கெட்டாலென்ன என்றால், எதற்காக ஒரு கட்சியைப் பற்றிப் பேசவேண்டும்? லஞ்ச ஒழிவதற்காகக் காங்கரசிற்கு ஓட்டளியுங்கள் என்று கூறினார்களே எங்கே லஞ்சம் ஒழிந்தது? வடநாடு பூராவும் லஞ்சத் தாண்டவம். சேலத்தில் லஞ்சம். சென்னையில் எம்.எஸ்.சுப்பிரமணிய அய்யர் லஞ்சப்படலம் சிரிப்பாய்ச் சிரிக்கின்றது. சரோஜனி அம்மையார், படேல் முதலியவர்கள் மீது லஞ்சக் குற்றத்தை மாஜி மந்திரி டாக்டர் காரே சுமத்துகிறாரே, இது காரியக் கமிட்டிக்கும் வந்ததே. ஆனால் இதனை விசாரித்த நீதிபதி, இது ஆதாரமில்லாமல் வரவில்லை ஆனால் சரியாக ருஜü ஆகவில்லை என்று கூறியிருக்கிறாரே. (கைதட்டல்)
பதவி வகிக்கப் பார்ப்பனர்கட்கு யோக்கியதை இல்லை என்று நான் என்றும் கூறியது கிடையாது. ஆனால் ஆச்சாரியாரவர்கள் மற்றவர்களைவிட எங்கட்குத்தான் யோக்கியதை அதிகம் என கூறுகின்றாரே. இதுபோல மற்றவர்கள் கூறுவது தப்பா? தமிழர்கள் அதில் நிழலுக்கு கூட ஒண்டக் கூடாதா?
பெரிய அதிகாரங்களெல்லாம் பார்ப்பனர்கட்குக் கொடுக்கப்படுகின்றன. பார்ப்பனர்கட்காகப் புதிதாக உண்டாக்கப்படுகின்றன. ஆனால் பார்ப்பனரல்லாதார் அநாவசியமாகத் தள்ளப்படுகின்றனர். இவைகள் மனப்பூர்வமாக – பச்சையாக இன்று நடைபெறுகின்றனவே. மாகாண அதிகாரிகள் சஸ்பெண்டு டிஸ்மிஸ் செய்யப்படுகின்றனர். ஆனால் ஜஸ்டிஸ் ஆட்சி நடக்கும் காலத்தில் இவைகள் நடக்கவில்லையே.
வார்தா திட்டம்
இனி தமிழர்கள் சூத்திரத் தன்மையை விட்டுத் தலையெடுக்க முடியாதபடிச் செய்யும் சூழ்ச்சிகளில் காந்தியாரின் வார்தாத் திட்டமும் ஒன்று. தகப்பன் செய்த தொழிலை மகன் செய்யவேண்டுமாம். இது நடக்கக் கூடியதா! ஆனால் நம் தாய்மார் மஞ்சள் சீலையைக் கட்டிக் கொண்டு மூட பக்தியால் மஞ்சள் பெட்டியை நிரப்பினர். காந்தியோ முழங்கால் வரை வேட்டி உடுத்தி, பழம், ஆட்டுப்பால் உண்டு மக்களிடத்து ஒரு மூடநம்பிக்கையுண்டு பண்ணி மக்களை ஏமாற்றி ஓட்டுப் பெறுகின்றார்.
இதை நோக்க, காங்கரஸ்காரர்களில் காந்தி தலைமைக் கொள்ளைக்காரர் என்று கூறுவேன் (வெட்கம் என்ற கூச்சல்).
இந்த நாடு விடுதலை பெற்றால் என்னைவிட ஆனந்தமடைகிறவர்கள் வேறு யாவருமில்லை. ஆனால் வெள்ளைக்காரனால் ஒரு பங்கு கஷ்டம். உங்களாலோ 999 பங்கு தமிழர்கட்குத் துன்பம் உண்டாகிறது. இந்நாட்டிற்கு வெள்ளையரைக் கொண்டு வந்தது யார்? நீ உள்ளவரை அவர்கள் நாட்டை விட்டு போகமாட்டார்களோ!
எதிரியை விரட்டக் கோட்டை வாயிலில் துளசியைத் தெளித்த நாயக்க அரசனைப்போல தோழர்கள் முத்துரெங்கம், சத்தியமூர்த்தி, ஆச்சாரியார் ஆகியோர் ராட்டினத்தையும் தக்கிழியையும் எடுத்துச் சுற்றினால், நம்மீது எதிரிகள் போடும் குண்டு போய்விடுமென்று இன்னமும் கூறுகிறார்களே! (கைதட்டல்) 20 வருஷமாகச் சுற்றினோமே ஒரு வெள்ளையன் போனானா? ஒரு வெள்ளைக்காரனுக்கு தலைவலிகூட வரவில்லையே! புராணகாலத்து விஷ்ணு சக்கரம் போலல்லவா இன்று ராடடினத்தைக் காட்டி ஏமாற்றுகின்றனர்.
இனி கதருக்காக 2 லக்ஷம் ஒதுக்கியுள்ளார் கனம் ஆச்சாரியார். உண்மையில் இது கதருக்கா? அன்றி காங்கரஸ் பிரசாரம் செய்வதற்கா? மேலும் 30 ரூபாய் சம்பளம் பெறும் உபாத்தியாயர், உபாத்தியாயனிகளும் 15 ரூபாய் பங்கா இழுப்பவரும் கதர் உடுத்த வேண்டும். இல்லையேல் வேலை போய்விடும் என்கின்றனர். பெரிய உத்தியோகஸ்தர்கள் கதர் உடுத்த வேண்டுமென்று உத்தரவிட பயமா?
அன்று ஜஸ்டிஸ்காரர்கள் மூன்று மந்திரியை நான்கு பேராக்க வேண்டுமென்று கூறிய காலத்து கூச்சல் போட்டார்கள். இன்று கைதூக்கும் 240 பேர்கட்கு 75 ரூபாய் தலைக்கு மந்திரிகள் 10 அதற்கு விரல்கள் 10. சம்பளம் 500 ரூபாய், வீட்டு வாடகை கார் அலவன்ஸ் 300 ரூபாய். ஆனால் எல்லா மந்திரிகளும் சர்க்கார் காரில் பிரயாணம் செய்கின்றனர். ஆனால் ஆச்சாரியார் வசிப்பது 45 ரூபாய் வாடகையுள்ள வீடுதானே. அவர் நாணையமுள்ளவரானால் மீதி 105-ரூபாயைத் திருப்பிக்கொடுத்துவிட வேண்டாமா?
இன்று சிறையில் நடப்பதென்ன?
நிற்க இந்தி வீழ்க! தமிழ் வாழ்க!! என்று சாத்வீக முறையில் கூறுபவர்கட்குச் சிறை, மொட்டை, களி போடுதல், நெல் குத்தச்சொல்லல் இவைகளா தண்டனை? முன்பு வெடிகுண்டு போட்டவர்கட்கும் பலாத்காரம் செய்தவர்கட்கும் பி. கிளாஸ் வேண்டுமென்று கூச்சல் போட்டனர். விடுதலை செய்ய வேண்ட மென்றனர். இன்றும் காந்தியார் பலாத்காரக் கைதிகளை வங்காளத்தில் விடுதலை செய்ய வேண்டுமென்று கூறுகிறார்.
ஆனால், நேற்று சென்னையில் ஒரு மாஜிஸ்திரேட், தொண்டர்களைக் கைது செய்து வந்த போலீசாரைப் பார்த்து இவர்கள் (தொண்டர்கள்) இந்தி வீழ்க! தமிழ் வாழ்க! என்று தான் கூறினார்களா? வேறேதேனும் கூறினார்களா என்று கேட்டபோது வேறு ஒன்றும் கூறவில்லை என்று கூறியுள்ளனர் போலீசார். இதற்கு 4 மாதம் விதிக்கின்றார் உடனே மாஜிஸ்திரேட். இதுதானா காங்கரஸ் நீதி? நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தை எதிர்க்கவில்லை. ராஜத்துரோகியுமல்ல. நாங்கள் ராஜாவைப் பார்த்தது கூட இல்லை. ஆனால் மந்திரிகள் தவறு செய்தால் அதைக் கண்டிக்கிறோம். இது தவறானதா?
இனி கனம் ஆச்சாரியார் பெண் பிள்ளைகளை இழுத்துக் கேவலமாகப் பேசுகின்றனர் தொண்டர்கள் என்று கூறுகின்றார். அப்படி அவர்கள் பேசினார்கள் என்பதற்கு என்ன சான்று?
அப்படி அவர்கள் கூறியிருந்தாலும் அவர்களை ஒடுக்க கிரிமினல் சட்டத்தைத் தானா உபயோகிக்க வேண்டும்? இந்தி எதிர்ப்பாளர்களை சோற்று ஆட்கள் என்று கூறுகின்றனர். யார் சோற்றாட்கள்? அன்று காங்கரஸ் பெரியார்கட்கு – சோற்றுக்கு இந்தக் கைதானே ிசெக்ீ எழுதிக் கொடுத்தது நான் காங்கரசின் தலைவர் காரியதரிசியாயிருந்த காலத்தில். ஆனால் அது என் பணம் அல்ல. காங்கரஸ் பணந்தான்.
பார்ப்பனப் பத்திரிகையாக ஒரு கேலிப் பத்திரிகை இந்தி எதிர்ப்புத் தொண்டர்களைப் பிச்சைக்காரர்களாகவும் தலைவர்களை ிவாங்கித்தா” என்று கேட்பவர்கள் போலும் படம் போட்டுக் காட்டுகிறது. நமது கஷ்டத்தை – ஆதரவற்ற தன்மையை – அவன் கேலி செய்கிறான். நமக்கு ஆண்மை யிருந்தால் நாம் ஒற்றுமையுடையவர்களாயிருந்தால் அவனுக்கு இங்ஙனம் படம் போட்டுப் பரிகசிக்கத் தைரியம் வருமா? நமக்குப் புத்தி இல்லை என்பது அவனுக்குத் தெரியும், நம்மில் சிலருக்கு சில எலும்புகளைப் போட்டு நம்மைப் பிரித்து ஏமாற்றுகிறார்கள். இவைகளை அலசிப் பார்த்து நியாயத்தைக் கடைப்பிடியுங்கள். மேலும் கூட்டங்களில் நாம் நியாயமாகச் சொல்லும் சொற்களை எழுதிக் கொள்வதில்லை. நாம் எங்கு தவறுகிறோம் என்பதை மட்டும் எழுதிக் கொண்டு மேலதிகாரிகளிடம் தெரிவித்து நம்மைக் கைது செய்யத் தூண்டுகின்றனரெனத் தெரிகிறது. இது ஆண்மையா, பேடித்தனமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். (பேடித்தனம் என்ற கூச்சல்)
இறுதியாகக் கூறுகின்றேன். தோழர்களே! இவைகள் ஒழிய வேண்டுமானால் பார்ப்பனப் பூண்டு இந்நாட்டைவிட்டு அடியோடு ஒழிய வேண்டுமென்று கூறுவதுடன் எனது பேச்சை முடித்துக்கொள்ளுகிறேன்.
(“பார்ப்பன ஆட்சி ஒழிக” ஈ.வெ.ரா. வாழ்க என்ற போரொலி யாண்டும்.)
குறிப்பு: 13.10.1938 ஆம் நாள் சென்னை ராயபுரம் ராபின்சன் தோட்டத்திற்கடுத்த மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
குடி அரசு – சொற்பொழிவு – 16.10.1938