ஆச்சாரியாருக்கு ஆப்பு

 

சம்மட்டி

பொப்பிலி ராஜா மீதும் ஜஸ்டிஸ் கட்சியார் மீதும் குற்றம் சாட்டி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கும் ஒரு நீண்ட அறிக்கையைப் பல முறை படித்துப் பார்த்தேன். அந்த அறிக்கை முழுதும் வக்கீல் நியாயங்களும், குதற்க வாதங்களும், குறும்பு குறிப்புகளும் நிறைந்து இருக்கின்றனவே ஒழிய உண்மை பசை எள்ளளவேனும் காணவில்லை.

தமிழ்நாட்டுச் சக்ரவர்த்தியான தாம் கூறும் புளுகுகளையெல்லாம் தமிழ்நாட்டார் நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அவர் அவ்வாறு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் என்று தோற்றுகிறது.

அவ்வறிக்கையில் முதன் முதலாக அவர் கூறுவதாவது.

ஜஸ்டிஸ் கட்சியார், ஹரிஜனங்களுக்குச் சேவை செய்வதற்கென்று ஒரு ஸ்தாபனம் வைத்திருந்து பன்னிரண்டு மாத காலத்தில் தாமாகவே வசூலித்த பணத்திலிருந்து பள்ளிக்கூடங்களுக்காக எழுபத்தாறாயிர ரூபாயும், ஹரிஜன ஆஸ்டல்களுக்காக இருபத்தொன்பதினாயிர ரூபாயும் செலவழித்து, குழந்தைகளுக்கு ஐம்பதினாயிர ரூபாய்க்குப் புத்தகங்களும், துணி மணிகளும் வாங்கிக் கொடுத்து இவ்வாறு ஒரு வருடத்தில் “”தீண்டாமை” வகுப்பினருக்கு நான்கு லக்ஷ ரூபாய் வரை செலவிட்டிருந்தால், இத்தனை செலவும் தனிப்பட்டவர்களிடமிருந்து வசூலித்துச் செலவு செய்திருந்தால் ஜஸ்டிஸ் அதைப் பற்றி பெருமை பாராட்டிக் கொண்டிருக்காதா என்று ஆச்சாரியார் கேட்கிறார்.

அதாவது மேலே கூறிய காரியங்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியார் சாதித்து இருக்கிறார்கள் என்றும், எனவே காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருமை பாராட்ட உரிமை உண்டென்றும் ஆச்சாரியார் அபிப்பிராயப் படுகிறார். இச்சந்தர்ப்பத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை ஆச்சாரியாருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

பகட்டான ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி பொது ஜனங்களிட மிருந்து பண வசூல் செய்து ஒரு பகுதியை பொது ஜன சேவைக்கு செலவு செய்துவிட்டு மீதத்தை வாயில்போட்டுக் கொள்வது ஜஸ்டிஸ் கட்சியார் வாடிக்கையல்ல; ஏனெனில் காங்கிரஸ் பேராலோ, சுயராஜ்யத்தின் பேராலோ வயிறு வளர்ப்பவர்களல்ல ஜஸ்டிஸ் கட்சியார். அப்பால் ஹரிஜனங்களுக்காக காங்கிரஸ்காரர் சாதித்துள்ளதை பரிசீலனை செய்து பார்ப்போம். பன்னிரண்டு மாத காலத்தில் பள்ளிக்கூடங்களுக்காக எழுபத்திரெண்டாயிர ரூபாயும் ஆஸ்டல்களுக்காக இருபத்தி ஒன்பதினாயிரம் ரூபாயும் குழந்தைகளின் புத்தகங்களுக்காக ஐம்பதினாயிரம் ரூபாயும் காங்கிரஸ் செலவு செய்து இருப்பதாக ஆச்சாரியார் பெருமைப் பாராட்டிக் கொள்கிறார். அவர் கூறுவதெல்லாம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் இதனால் ஹரிசனங்களுக்கு என்ன சாஸ்வத நன்மை உண்டாயிற்றென்று கேட்கிறேன்.

ஆறு கோடி ஒடுக்கப்பட்டவர்களைக் கரையேற்ற ஆச்சாரியார் செலவு செய்த நான்கு லக்ஷ ரூபாய் போதுமா? ஹரிசன பள்ளிக்கூடங் களுக்காக எழுபத்திரெண்டாயிர ரூபாய் செலவு செய்ததினால் ஹரிஜனங்கள் எல்லாம் கலா வல்லவர்களாகிவிட்டார்களா.

புத்தகங்களுக்காக பத்தொம்பதினாயிரம் ரூபாய் செலவு செய்ததினால் ஹரிஜனங்களின் கல்வி பூர்த்தியாகிவிட்டதா? இப்பொழுது எத்தனை ஹரிஜன பள்ளிக்கூடங்களும், ஆஸ்டல்களும் நடைபெறுகின்றன? எத்தனை மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள்? காங்கிரஸ்காரர் வாங்கிக் கொடுத்த ஐம்பதினாயிர ரூபாய் புத்தகத்தில் எத்தனை புத்தகங்கள் இப்பொழுதும் தீராமல் உபயோகத்திலிருக்கின்றன?

அப்புத்தகங்கள் சீரழிந்திருந்தால் மேற்கொண்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்க ஆச்சாரியார் என்ன ஏற்பாடு செய்யப் போகிறார்? இந்த கேள்விகளுக்கு விடையளிக்க ஆச்சாரியார் முன் வருவாரா?

வாஸ்தவத்தில் நடந்திருப்பதென்ன? ஹரிஜனங்கள் பேரால்  பள்ளிக்கூடங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கென்றும், ஆஸ்டல்களுக்கென்றும், புத்தகங்களுக்கென்றும் செலவான பணத்தில் பெரும் பகுதி காங்கிரஸ்காரரான பிராமணர்கள் செலவுகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. காலம் சென்ற தென்பாதி கனகசபை தஞ்சை, திருச்சி ஜில்லாக்களில் ஹரிஜன நிதி பாழாக்கப்படும் அநியாயத்தை விளக்கி “”தமிழ்நாடு” பத்திரிகையில் ஒரு நீண்ட கடிதம் எழுதியிருந்தார். அதை படித்தவர்கள் ஹரிஜன நிதியை காங்கிரஸ் பார்ப்பனர்கள் எவ்வாறு செலவு செய்து வருகின்றார்கள் என்ற ரகசியம் தெரிந்திருக்கும்.

அப்பால் ஆலய மசோதாவை ஒழித்தது ஜஸ்டிஸ் கட்சியாரே என்று ஆச்சாரியார் குற்றம் சாட்டுகிறார். அதற்காக அவர் பல வக்கீல் நியாயங்கள் கூறுகின்றாராயினும் முடிவு அவரது கூற்றுக்கு விரோதமாகவே இருக்கின்றது.

“”டாக்டர் சுப்பராயனின் ஆலயப் பிரவேசப் பிரரேபணை சென்னை சட்டசபையில் மிகவும் பெரும்பான்மை ஓட்டுகளால் நிறைவேறியது”  என்று கூறும் ஆச்சாரியார் ஆலய மசோதாவை ஒழித்தது ஜஸ்டிஸ் கட்சியார் என்று கூறுவது குறும்புத்தனமல்லவா. ஆலயப் பிரவேசப் பிரரேபணையை டாக்டர் சுப்பராயன் சென்னை சட்டசபையில் கொண்டு வந்தபோதிலும், இன்றும் சென்னை சட்டசபையில் மெஜார்டி கட்சியாராய் இருப்பது ஜஸ்டிஸ் கட்சி என்பது உலகமறிந்த உண்மை.

ஜஸ்டிஸ் கட்சியார் ஆதரவில்லாமல் எந்த பிரரேபணையும் நிறைவேறவே செய்யாது. டாக்டர் சுப்பராயனின் ஆலயப் பிரவேச பிரரேபணை பெரும்பான்மை ஓட்டுகளால் நிறைவேறியதற்கு ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். டாக்டர் சுப்பராயனுக்கு சொந்த கட்சி பலமும் இல்லை.  உண்மை இப்படி இருக்க ஆலயப் பிரவேச மசோதா ஒழிந்ததற்கு ஜஸ்டிஸ் கட்சியாரே காரணமென்றால் பொருந்துமா? மற்றுமொருவிடத்தில் “”ஆலயப் பிரவேச மசோதா சென்னை சட்டசபையில் வந்திருந்தால் கட்டாயம் நிறைவேறியிருக்கும்” என்று மீண்டும் ஆச்சாரியார் கூறியிருக் கிறார். அது வாஸ்தவமானால் ஜஸ்டிஸ் கட்சியார் உதவியின்றி அது நிறைவேறி இருக்க முடியாதல்லவா? ஆகவே ஜஸ்டிஸ் கட்சியாரை குறை கூறுவது விஷமத்தனந்தானே?

மேலும், “”இந்திய சட்டசபையில் சிலரது அறிவின்மையும் கால தாமதமும் சீர்திருத்தத்தை  எதிர்ப்போர்க்கு உபயோகமாக இருந்தது” என்று ஆச்சாரியார் கூறுகிறார்.

அந்த சிலர் யார்? அவர்கள் காட்டிய அறிவின்மை என்ன? காலதாமதம் எவ்வாறு நேர்ந்தது. இந்த கேள்விக்கு ஆச்சாரியார் விடையளிக்க முன் வந்தால் காங்கிரஸ்காரரே ஆலயப் பிரவேச மசோதா ஒழிந்ததற்குக் காரணம் என்பது வெட்டவெளிச்சமாகிவிடும்.

போனதெல்லாம் போகட்டும் தோழர் எம்.சி.ராஜா இப்பொழுது ஒரு மசோதா கொண்டுவர அனுமதி கோரியிருக்கிறாராம். சர்க்கார் அனுமதி யளித்தால் அந்த மசோதாவை காங்கிரஸ் மெம்பர்கள் ஆதரிப்பார்களா? அந்த மசோதாவை ஆதரிக்கும்படி காங்கிரஸ் மெம்பர்களுக்கு சக்கரவர்த்தி ராஜகோபால் ஆச்சாரியார் சிபார்சு செய்வாரா? தோழர் ராஜாவின் மசோதாவுக்கு சர்க்கார் அனுமதியளிக்கும் பட்சத்தில் ஆலயப் பிரவேச மசோதாவுக்குத் தடையாயிருப்பது காங்கிரஸ்காரரா? ஜஸ்டிஸ் கட்சியாரா? என்பது பகிரங்கமாய்விடும். கொஞ்சம் காத்திருந்து பார்ப்போம்.

குடி அரசு  கட்டுரை  14.04.1935

You may also like...