தமிழ்  எழுத்து  சீர்திருத்தம்

 

தமிழ்  பாஷை  எழுத்துக்கள்  விஷயமாய்  பல  சீர்திருத்தங்கள்  செய்யப்பட  வேண்டும்  என்பது  அனேகருக்குள்  வெகுகாலத்திற்கு  முன்பு  இருந்தே  ஏற்பட்டிருந்த  அபிப்பிராயங்களாகும்.

தோழர்  குருசாமி  அவர்கள்  எழுதியது  போல்  பெருத்த  பண்டிதர்களில்  கூட பலர் எழுத்துச் சீர்திருத்த விஷயமாய், வெகு காலமாகவே பேசி  வந்திருக்கிறார்கள்.

தமிழ்  எழுத்துக்களைப்  பற்றி  அழுக்கு  மூட்டைப்  பண்டிதர்கள்  எவ்வளவு  தத்துவார்த்தம்  சொன்னாலும்  அது  எவ்வளவோ  விஷயத்தில்  சீர்திருத்தமடைய  வேண்டும்  என்பதில்  நமக்குச்  சிறிதும்  சந்தேகமில்லை.

ஒரு  பாஷையோ,  ஒரு  வடிவமோ  அல்லது  வேறு  பல விஷயமோ  எவ்வளவு  பழையது,  தெய்வீகத்  தன்மை  கொண்டது  என்று  சொல்லிக்  கொள்ளுகின்றோமோ,  அவ்வளவுக்கு  அவ்வளவு  அவற்றில்  சீர்திருத்த  வேண்டிய  அவசியமிருக்கின்றது  என்பது  அதன்  உண்மைத்  தத்துவமாகும்.

உதாரணமாக  நெருப்புக்கு  சுமார்  நூறு  ஆயிரம்,  பதினாயிரம்  வருஷங் களுக்கு முந்தி  சக்கி  முக்கி  கல்லுகள்  தான்  ஏற்படுத்தப்பட்டிருந்தன.

இது  ஒரு  “”கடவுளால்”  ஆதியில்  பொதிய  மலையில்  இருந்தோ,  கைலாச மலையில்  இருந்தோ  கண்டுபிடிக்கப்பட்டதாகவோ,  உபதேசிக்கப் பட்டதாகவோ  இருக்கலாம்.  ஆனால்  இன்று  நெருப்புக்கு  ஒரு  பொத்தானை  அழுத்துவதோ, ஒரு முளையை திருப்புவதோ ஆகிய காரியத்தில்  வந்து  விட்டது.

இது  போலவே  பஞ்ச  பூதங்களிலும்  அவைகள்  உற்பத்தி,  சேர்க்கை,  அனுபவம்  ஆகியவைகளிலும்  நாளுக்கு  நாள்  எவ்வளவு  சீர்திருத்தங்கள்  செய்யப்பட்டு  வருகின்றன  என்பதும்  இன்னும்  எவ்வளவு  செய்ய  வேண்டியிருக்கின்றன  என்று  மக்கள்  கருதுகிறார்கள்  என்பதும் தெரிந்தால்  கேவலம்  ஒரு  புராதன  பாஷை  எழுத்துக்கள்  என்பதில்  எவ்வளவு  சீர்திருத்தம்  அவசியமிருக்கும்,  அல்லது  செய்யக்  கூடும்  என்பது  தானாய்  விளங்கும்.

சாதாரணமாய்  500  வருஷத்திற்கு  முந்தி  இருந்த  மக்களின்  அறிவுக்கும்,  அவர்களின்  வாழ்க்கை  சௌகரியத்துக்கும்  இன்று  இருக்கும்  மக்களின்  அறிவுக்கும்,  வாழ்க்கை  அவசியத்துக்கும்  எவ்வளவோ  மாறுதலும்,  முற்போக்கும்  இருந்து  வருகின்றன என்பதை  யாரும்  மறுக்க  முடியாது.

இதனால்  பூர்வீக  மக்களை  மடையர்கள்  என்றே  சொல்லி  ஆக  வேண்டும்  என்பதாக  நாம்  சொல்ல  வரவில்லை.  ஆனால்  பூர்வீக  மக்கள்  என்பவர்கள்  விஷயங்களையும்,  ஞானங்களையும்  அல்லது  திருத்தங்களையும்  எவ்வளவு  தூரத்தில்  கொண்டுவந்து  விட்டுப்  போனார்களோ  அதிலிருந்தே  அதற்குப்  பிற்காலத்து  மக்கள்  அவ்  விஷயங்களை  ஆரம்பித்து  வைக்க  ஹேது  இருந்ததால்  அதைவிட  சற்று  அதிக  முற்போக்கான  நிலமைக்கு  அவ்விஷயங்களைக்  கொண்டு  வந்து  விட்டுப்  போக  முடிந்தது.

அதுபோலவே  இப்போதும்  அதிலிருந்தே  ஆரம்பிக்கின்றபடியால்  அது  இன்னும்  விசேஷமான  மாறுதல்களாக  முடிகின்றது.  அது  போலவே  இன்னும்  ஒரு  100  ஆண்டு  அல்லது  500  ஆண்டுகள்  சென்றால்  இன்றைய  நிலையில்  இருந்து  இன்னமும்  எவ்வளவோ  தூரம்  மாற்றமடைந்த  முன்னேற்றங்கள்  என்பவை  ஏற்படலாம்.  அதனால்  இந்த  நூற்றாண்டு  மக்களை  காட்டுமிராண்டிப்  பிராயமுள்ள  மக்கள்  என்றுகூட  சொல்லும்படி  ஏற்பட்டாலும்  ஏற்படலாம்.  அதற்காக  வேண்டி  இன்னமும்  ஐநூறு  வருஷத் திற்குப்  பின்  எப்படி  இருக்க  வேண்டிவரும்  என்று  கருதி  இப்பொழுதே  கண்டுபிடித்து  செய்துவிட  முடியாது.

முன்னேற்றம்,  மாறுதல்  என்பவைகள்  காலதேச  வர்த்தமானத்தையும்,  அன்று  உள்ள  அறிவு  விருத்தியையும் பொருத்ததே  ஒழிய  மத  வெறியர்கள்  சொல்லுவது  போன்ற  தீர்க்க  தரிசனத்தைப்  பொருத்ததல்ல  என்பதே  நமது  அபிப்பிராயம்.  முக்காலத்துக்கு  ஏற்ற  தீர்க்க  தரிசனம்  என்பது  ஆராய்ச்சி  அற்ற  அறிவீனர்களின்  வசனமேயாகும்.  “”விபூதி  வைத்துக்  கொள்ளுவதற்கு  ஆக கடவுள்  மனிதனுக்கு  நெற்றியை  நீள  வசத்தில்  மூன்று  விரல்  உயரத்தில்  6  அங்குல  அகலத்தில்  ஏற்படுத்தினார்”  என்று  சொல்லுவது  எவ்வளவு  தீர்க்க  தரிசனமும்,  தத்துவார்த்தமும்  கொண்டதோ  அதுபோல்  தான்  முக்கால  தீர்க்கதரிசனமும்  ஆகும்.  ஆதலால்  உலக  விஷயங்களில்  மனித  சமூக  வாழ்க்கை  சம்பந்தப்பட்டவைகளில்  தீர்க்க  தரிசனத்தையும்,  தெய்வீகத்  தத்துவார்த்தங்களையும்  கொண்டு  வந்து  கலக்கிக்  கொண்டு  குரங்குப்பிடியாய்  பழமையையே  கட்டிக்  கொண்டு  அழுவதினாலோ,  அல்லது  மாறுதல்கள்  வரும்  போதெல்லாம்  சீறி  விழுந்து  கோபிப்பதினாலோ  யாதொரு  பிரயோஜனமும்  ஏற்பட்டு  விடாது  என்பதோடு  அது  சாத்தியப்படக்  கூடியது  என்றும்  சொல்ல  முடியாது.

பழயதை  மாற்றக்  கூடாது  என்பதும்,  பழயவைகள்  எல்லாம்  தெய்வாம்சத்தால்  ஏற்பட்டதென்பதும்,  பழய  செய்கைகளோ,  பழய  தத்துவங் களோ,  பழய  மாதிரிகளோ,  பழய  உபதேசங்களோ  முக்காலத்துக்கும்,  முடிவு  காலம்  வரைக்கும்  இருப்பதற்கும்,  பின்பற்றுவதற்கும்,  தகுதியான  தீர்க்க  தரிசனத்துடன்  தெய்வீகத்  தன்மையில்  ஏற்பட்டது  என்று  சொல்லப்படு மானால்  அவைகளை  மத  வெறியர்களுக்கும்  பழமையில்  பிழைக்கக்  காத்துக்  கொண்டிருக்கும்  சோம்பேரி  சுயநலக்  கூட்டங்களுக்கும்  விட்டுவிட  வேண்டுமே  ஒழிய  அவற்றைப்  பொதுஜன  சாதாரண  நித்திய  வாழ்க்கையில்  கொண்டு  வந்து  கலக்கி  முற்போக்குக்கும், சௌகரியத்துக்கும்  தொல்லை  விளைவிக்கக்  கூடாது.

எவ்வளவு  மதவெறியனும்,  குரங்குப்  பிடிவாதக்காரனும்  இன்றைய  வாழ்க்கையில் மாற்றமடைந்து கொண்டும் மாற்றத்தை ஏற்றுக்  கொண்டும்தான்  இங்கு  வாழ்ந்து  வருகிறானே  ஒழிய  எவனும்  தெய்வீகத்துக்கு  மாறுபட்டதென்றோ,  தத்துவங்களுக்கு  மாறுபட்டதென்றோ  கருதி  எதையும்  விட்டு  விட்டு  காட்டுக்கு  ஓடிப்  போகவில்லை.  அல்லது  தற்கொலை  செய்து  கொண்டு  “”ஆண்டவனை”  அடைந்து  விடவும்  இல்லை.

ஆகையால்  மாறுதலைக்  கண்டு  அஞ்சாமல்  அறிவுடமையோடும்,  ஆண்மையோடும்  நின்று  விஷயங்களை  நன்றாய்  ஆராய்ச்சி  செய்து  காலத்துக்கும்,  அவசியத்துக்கும்  தக்க  வண்ணம்  தள்ளுவன  தள்ளி,  கூட்டுவன  கூட்டி  திருத்தம்  செய்ய  வேண்டியது  பகுத்தறிவு  கொண்டவன்  என்னும்  மனிதனின்  இன்றியமையாத  கடமையாகும்  என்பதை  அனேகர்  உணர்ந்திருந்தாலும்,  அதன்  பயனாய்  இன்றைய  தமிழ்  எழுத்துக்களில்  செய்யப்பட  வேண்டிய  மாற்றங்கள்  பல  என்பதைப்  பற்றி  பலருக்கு  அபிப்பிராயம்  இருந்தாலும்  யெவரும்  தைரியமாய்  முன்வராமலே  இருக்கிறார்கள்.  “”இவ்வளவு  பெரிய  காரியத்திற்கு  பாஷை  ஞானம்,  இலக்கண  ஞானம்,  பொதுக்  கல்வி  இல்லாத  ஒரு  சாதாரண  மனிதன்  முயற்சிக்கலாமா”  என்பது  ஒரு  பெரிய  கேள்வியாக  இருக்கலாம்.  அது  உண்மையாகவும்  இருக்கலாம்.  ஆனால்  தகுந்த  புலமையும்,  பாஷா  ஞானமும்,  இலக்கண  அறிவும்  உள்ளவர்கள்  எவரும்  முயற்சிக்காவிட்டால்  என்  செய்வது?  தவம்  செய்வதா?  அல்லது  ஜபம்  செய்வதா?

தமிழ்  ஏற்பட்டது  இன்று  நேற்றல்ல.  எழுத்துக்கள்  ஏற்பட்டது  இன்று  நேற்றல்ல. ஆனால்  எழுத்துக்கள்  கல்லிலும்,  ஓலையிலும்  எழுதும் காலம்  போய்  காகிதத்தில்  எழுதவும்,  அச்சில்  வார்த்துக்  கோர்க்கவும்  ஏற்பட்ட  காலம்  தொட்டு  இன்று  வரை  அவற்றில்  யாதொரு  மாற்றமும்  ஏற்பட்டதாகத்  தெரிய வில்லை.  ஆதலால்  யாராவது  ஒருவர்  துணிந்து  இறங்க  வேண்டியதாயிற்று.

புதிய  மாறுதல்களால்  அதாவது  போக்குவரத்து  வசதியின்  காரணத்தால்  ஏற்பட்ட  பல  தேச  மக்கள்  கூட்டுறவாலும்,  பல  தேச  பாஷை  சொற்களும்,  பல  தேசப்  பொருள்களும்  கலரும்படி  ஏற்பட்ட  சம்பவங்களாலும்,  இன்று  அனேக  வார்த்தைகள்  உச்சரிப்புகள்  தமிழில்  சர்வ  சாதாரணமாய்  கலந்து  விட்டன.  அவைகளை  உச்சரிக்கும்போதும்,  எழுதும்  போதும்  தமிழ்  பாஷையும்,  தமிழ்  எழுத்தும்  விகாரமாய்  வெட்கப்பட  வேண்டி  இருக்கிற  தன்மையில்  இருக்கின்றன.  (அதற்கு  தத்துவார்த்தமும்,  விதியும்  இருக்கலாம்)  ஆதலால்  சில எழுத்துக்கள் வேறு பாஷைகளில் இருந்து எடுத்துக் கொள்ள  வேண்டியதுகூட  மிக  அவசியமாகும்.  அதற்கு  வெட்கமாய்  இருக்கும்  பக்ஷம்  புதியதாகவாவது  எழுத்துக்களை  உண்டாக்கிக்  கொள்ள  வேண்டும்.

இவைகள்  ஒருபுறமிருக்க  இப்போது  உயிர்  மெய்  எழுத்துக்கள்  என்று  சொல்லப்படும்  18  எழுத்துக்களிலும் ஒவ்வொன்றுக்கும்  உள்ள  இகரம்,  ஈகாரம்,  உகரம்,  ஊகாரம்  ஆகிய  நான்கு  சப்தங்கள்  கலந்த  எழுத்துக்கள்  தனித்தனி  வடிவம்  கொண்டு  அதாவது  கி, கீ, கு, கூ  என்பது  மாதிரியே  18  எழுத்துக்களும்  தனித்தனி  உருவம்  பெற்று  18 # 4 =  ஆக  மொத்தம்  72  எழுத்துக்கள்  அதிகமாக  அனாவசியமாக  இருந்து  வருகின்றன.

இந்தத்  தனித்தனி  வடிவங்கள்  எதற்காக  இருக்க  வேண்டும்?  எல்லா  உயிர்மெய்  எழுத்துக்களுக்கும்  ஆ  காரம்,  ஏ  காரம்  ஆகிய  சப்தங்களுக்கு  õ,  ÷  ஆகிய  குறிப்புகளைச்  சேர்த்து  எப்படி  கா,  கே  என்று  ஆக்கிக்  கொள்ளுகின்றோமோ  அதுபோலவே  மேல்கண்ட  கி,  கீ,  கு,  கூ  முதலிய  சப்தங்களுக்கும்  ஒரு  தனிப்பட்ட  குறிப்பு  அடையாளத்தை  ஏன்  சேர்த்துக்  கொள்ளக்  கூடாது  என்பது  மிகவும்  யோசிக்கத்தக்க  விஷயமாகும்.

உதாரணமாக  ஜ,ஷ  முதலிய  கிரந்த  அக்ஷரங்கள்  என்று  சொல்லப் படுபவைகளுக்கு  இன்றும்  உ  கரம்,  ஊ  காரம்  சப்தங்களுக்கு  கு,  கூ  என்கிற  மாதிரி  தனி  எழுத்துக்கள்  இல்லாமல்,  உ  கரத்துக்கு  ú  இந்த  மாதிரி  குறிப்புகளையும்  ஊ  காரத்திற்கு  ü  இந்த  மாதிரி  குறிப்புகளையும்  சேர்த்து  ஜு,  ஜூ,  ஷû,  ஷý,  ஸு,  ஸூ, ஹு, ஹூ  என்பதாக  ஏற்படுத்தி  இருக்கிறார்கள்.  அதுபோல்  தமிழ்  எழுத்துக்களிலும்  கி. கீ. கு. கூ  ஆகியவைகளுக்கு  ú, ü  என்பது  போன்றவைகளையோ  அல்லது  வேறு  விதமான  குறிப்புகளையோ  சேர்த்தால்  அச்சில்  72  தனி  எழுத்துக்கள்  தேவையில்லை  என்பதோடு  பிள்ளைகள்  தமிழ்  கற்பதற்கும்  72  எழுத்துக்களைத்  தனியாக இந்த  ஞாபகம்  வைத்துக்  கொள்ள  வேண்டிய  அவசியமில்லாத  சௌகரியமும்  ஏற்படும்.

மற்றும்  எழுத்துக்  குறைவால்  அச்சில்  சௌகரியம்  ஏற்படுவது  போலவே  தமிழ்  எழுத்து  டைப்ரயிட்டிங்கி  என்று  அச்சடிக்கும்  யந்திரம்  செய்வதிலும்,  மிகுந்த  சௌகரியமும்,  விலை  சகாயமாய்  செய்யக்கூடிய  நிலைமையும்  ஏற்படும்.

எழுத்துக்கள்  உருவம்  மாற்றுவது,  குறிப்புகள்  ஏற்படுத்துவது,  புதிய  எழுத்துக்களைச்  சேர்ப்பது,  என்பது  போலவே  சில  எழுத்துக்களை  அதாவது  அவசியமில்லாத  எழுத்துக்களைக்  குறைக்க  வேண்டியதும்  அவசியமாகும்.

உதாரணமாக  உயிரெழுத்துக்கள்  என்பவைகளில்  ஐ,  ஒள  என்கின்ற  இரண்டு  எழுத்துக்களும்  தமிழ்  பாஷைக்கு  அவசியமில்லை  என்பதே  நமது  வெகுநாளைய  அபிப்பிராயமாகும்.  ஐ  காரம்  வேண்டிய  எழுத்துக்களுக்கு  ø,  இந்த  அடையாளத்தைச்  சேர்ப்பதற்கு  பதிலாக  ய்  என்ற  எழுத்தை  பின்னால்  சேர்த்துக்  கொண்டால்  ஐ  கார  சப்தம்  தானாகவே  வந்து  விடுகின்றது.  உதாரணமாக  கை  என்பதற்குப்  பதிலாக  கய்  என்று  எழுதினால்  சப்தம் மாறுவதில்லை என்பது விளங்கும்.

அதுபோலவே  ஒள  காரத்துக்கும்,  கௌ  என்பதற்குப்  பதிலாக  கவ்  என்றோ,  கவு  என்றோ  எழுதினால்  சப்தம்  மாறுவதில்லை.  கௌமதி  கவ்மதி,  கவுமதி  என்கின்ற  சப்தங்கள்  ஒன்று  போலவே  உச்சரிப்பதைக்  காணலாம்.

இந்த  வகையில்  ஐ,  ஒள  இரண்டு  எழுத்து  உயிரெழுத்திலேயே  குறைத்து  விட்டால்  அதனாலும்  பெரிதும்  அனுகூலம்  உண்டு.

ஆகவே  கி,  கீ,  கு,  கூ  என்கின்ற  சப்தங்களுக்கு  தனிக்  குறிப்பு  வடிவங்கள்  ஏற்படுத்துவதன்  மூலம்  குறிப்புகள்  அதிகமானாலும்  ஒ,  ஒள  குறிப்புகள்  குறைபடுவதன்  மூலம்  கிட்டதட்ட  சரிபட்டுப்  போக  இடமேற்படும்.  கையெழுத்து  எழுதுவதற்கும்  அசௌகரியமிருக்காது.

தமிழ்  எழுத்துக்களில்  மேலே  குறிப்பிட்ட  இந்தப்படியான  சீர்திருத்தங்கள்  எல்லாம்  செய்யப்படுமானால்  அப்போது  தமிழில்  மொத்த  எழுத்துக்கள்  46ம்  7  குறிப்பு  எழுத்துக்களும்  ஆக 53  எழுத்துக் களில்  தமிழ்  பாஷை  முழுவதும்  அடங்கிவிடும்.

அதாவது உயிர் எழுத்து  10,  உயிர்  மெய்  எழுத்து  18,  ஒற்றெழுத்து  19  எழுத்துக்களின்  குறிப்புகள்  (அதாவது  õ, ú, ü, ö, ÷  இதுகள்  போல்)  7  ஆக  மொத்தம்  54  எழுத்துக்களுக்குள்  அடங்கி  விடும்.

அச்சுக்கும்  54  அரைகள்  (கேஸ்கள்)  இருந்தால்  போதுமானதாகும்.  பிள்ளைகளுக்கும்  இந்த  54  எழுத்துக்கள்  ஞாபகமிருந்தால்  போதுமானதாகும்.

ஜ, ஸ, ஷ, ஹ, க்ஷ  என்கின்ற  கிரந்த  அக்ஷரங்களான  எழுத்துக் களையும்  சேர்த்துக்  கொள்ள  வேண்டுமானால்  அதில்  குற்றெழுத்து  உள்பட  ஒரு  பத்து  எழுத்து  அதிகமாகி  64  எழுத்துக்களாகலாம்.

ஆனால்  இப்பொழுதோ  þ  64  எழுத்துக்களுக்குப்  பதிலாக  சுமார்  150க்கு  மேல்  160  எழுத்துக்கள்  வரை  இருந்து  வருகின்றன  என்பதும்  குறிப்பிடத்தக்கதாகும்.

பாஷையின்  பெருமையும்,  எழுத்துக்களின்  மேன்மையும்  அவை  சுலபத்தில்  தெரிந்து  கொள்ளக்  கூடியதாகவும்,  கற்றுக்  கொள்ளக்  கூடிய தாகவும்  இருப்பதைப்  பொருத்ததே  ஒழிய  வேறல்ல.  ஆதலால்  இந்த  மாற்றங்கள்  நாளாவட்டத்தில்  செய்யக்  கூடியது  என்று  சொல்லுவதானாலும்  t,  ùண  முதலிய  7  எழுத்துக்களைப்  பொருத்த  வரையில்  உள்ள  மாற்றத்தை  வாசகர்கள்  இப்போது  முதலே  அனுமதிப்பார்கள்  என்றே  கருதுகின்றோம்.

இதுவரை  பல  தோழர்கள்  ஆதரித்ததோடு  மற்ற  மாறுதல்களையும்  எழுதியிருப்பதும்  இப்பொழுதே  செய்ய  வேண்டுமென்று  குறிப்பிட்டிருப்பதும்  நமக்கு  தைரியத்தைக்  கொடுக்கின்றது.

அவர்களுக்கு  நமது  நன்றியும்  பாராட்டுதலும்  உரியதாகுக.

குடி அரசு  தலையங்கம்  20.01.1935

You may also like...