ஈரோடு வெங்கிட நாயக்கர் வைத்தியசாலைத் திறப்பு விழா
எங்களது தகப்பனார் பேரால் இந்த வைத்தியசாலை ஒன்று ஏற்படுத்த வேண்டுமென்று இப்பொழுதுதான் நாங்கள் வெளிப்படையாய் காரியங்கள் செய்தபோதிலும், வெகு காலமாகவே எங்கள் வீட்டில் ஒரு அளவுக்கு பொதுஜனங்களுக்கு வைத்திய வசதி செய்து வரப்பட்டிருக்கிறது.
எனது தமையனார் அவர்களுக்கும் வைத்தியத்தில் 20, 30 வருஷ மாகவே அனுபவமுண்டு. அனேக நல்ல மருந்துகள் செய்யும் முறைகளும் பிரயோசிக்கும் முறைகளும் தெரியும். அனேக மருந்துகள் செய்யப்பட்டு இப்போதும் தயாராக இருக்கிறது.
இருந்தபோதிலும் இந்த வைத்தியசாலையானது எங்களுடைய முயற்சி யிலேயே நன்றாக நடைபெறுமென்று நாங்கள் கருதி இதைத் தொடங்கவில்லை.
இதற்குப் பொதுஜனங்கள் ஆதரவு பெரிதும் வேண்டும். அதற்காகவே தான் உங்களையெல்லாம் நாங்கள் வரவேண்டுமென்று கோரினதும், நிலம்பூர் ராஜா அவர்களை இந்த வைத்தியசாலையைத் திறந்து வைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டதே ஒழிய விளம்பரத்திற்காக அல்ல என்று வணக்கத்தோடு கேட்டுக்கொள்கிறேன்.
பெரியோர்கள் ஆசீர்வாதம் என்பதில் எனக்கு எப்பொழுதும் நம்பிக்கை கிடையாது. அவர்கள் ஆதரவு பெற வேண்டுமென்பதற்கு அவர்களுடைய ஆசி கூறப்பெறுவது என்பது ஒரு மார்க்கம் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.
ஏனென்றால் பெரியோர்களால் வாழ்த்துப்பெற்றுவிட்டால் பிறகு அது நன்றாக நடைபெறவேண்டுமென்றும், அதற்கு ஏதாவது கஷ்டம் வந்த காலத்தில் உதவ வேண்டுமென்றும் கவலை கொண்டு முன் வருவது உண்மையான பெரியோர்களுடைய இயல்பாகும்.
ஏனெனில் தங்கள் வாக்கு வீணாகக்கூடாதென்பதும்; தாங்கள் வாழ்த்து பொய்த்துப் போகக்கூடாதென்றும் கவலைப்படுவார்கள்.
ஆகையினாலேயே உங்களுடைய வாழ்த்துப் பெற்ற இந்த தர்ம வைத்தியசாலையின் பிற்கால வாழ்வில் நம்பிக்கை இருக்கிறது.
ஸ்தாபனங்கள் ஏற்படுவதும், மறைந்து போவதும் இயற்கை. ஆகையால் நாம் நம்முடைய ஆசையை ஆதாரமாக வைத்தும் உண்மையான முயற்சியைக்கொண்டும் அவனவனுக்கு நல்லதென்றும், அவசியமென்றும் தோன்றியதைச் செய்து விடவேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே இதை ஆரம்பித்திருக்கிறோம்.
நாட்டு வைத்தியத்திற்கு நமது நாட்டில் செல்வாக்கில்லை.
நாட்டு வைத்தியத்திற்கு அறிவாளிகளென்ற மக்களிடம் நம்பிக்கையு மில்லை. ஆனால், இதுவரையில் இங்கு நடந்த உபன்யாசங்களில் நாட்டு வைத்தியத்தைப்பற்றி வெகு பிரமாதமாகப் பேசப்பட்டிருக்கிறது.
அப்பெருமைகள் சாஸ்திரங்களிலோ, புஸ்தகங்களிலோ இருக்கலாம். உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அனுபவத்தையும், பலனையும் கொண்டு மதிக்கும்போது அப்படிச் சொல்லமுடியவில்லை.
நாட்டு வைத்தியத்திற்கு செல்வாக்கில்லாமல் போனது மேல்நாட்டு வைத்தியத்திற்கு அதிக செல்வாக்கு இருப்பதும் அரசாங்கத்தின் பயனாக இருக்கலாம். ஆனபோதிலும் அரசாங்கத்தார் சமீப காலமாக நாட்டு வைத்தியங் களுக்கு செல்வாக்கு ஏற்படவும் அதனால் மக்கள் பயனடையவும் முயற்சித்து வருகிறார்கள் என்றே சொல்லவேண்டும்.
என்னைப் பொறுத்த வரையில் எந்த வைத்தியமானாலும் ஜனங் களுடைய கஷ்டத்தையும், நோயையும் தீர்க்க வேண்டுமென்பதுதான் எனது ஆசை என்றாலும் எனக்கு மேல் நாட்டு வைத்தியத்தில்தான் அதிக நம்பிக்கை. ஆனால் அது பொது ஜனங்களுக்கு சரியானபடி பயன்படுவதில்லை.
பொது ஜனங்களுடைய வரிப்பணத்தினாலேயே மேல்நாட்டு வைத்தியம் இந்நாட்டில் நடந்து வருகிறதென்றாலும் சராசரி நூற்றுக்கு 10 நோயாளிக்குக்கூட மேல்நாட்டு வைத்தியம் கிடைப்பதில்லை என்பதோடு, அதிலும் செல்வவான்களுக்குத்தான் அது கிடைக்கக்கூடியதாக இருக்கிறதே ஒழிய பாமர மக்களுக்கு கஷ்ட சாத்தியமாக இருக்கிறது.
வைத்தியம் என்பது வைத்தியர்களாலேயேதான் செய்துகொள்ளப்பட வேண்டியது என்பதில்லாமலும் பணச் செலவில் தான் பரிகாரம்செய்து கொள்ளலாம் என்பதில்லாமலும் வைத்தியமே அவசியம் தேவை என்பது கூட இல்லாமலும் இருக்கும்படியான காரியங்களைச் செய்யவேண்டியதும், அதற்குத்தக்கபடி மக்களைப் படிப்பிக்க வேண்டியதும் அரசாங்கத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.
ஆனால் பல காரணங்களால் அரசாங்கம் இதை முக்கியமாய் கொள்வதற்கு இல்லாமல் போய்விட்டதால், பொது ஜனங்களில் பொது ஜனங்கள் நன்மைக்கு உழைப்பவர்களாவது இதை ஒவ்வொருவரும் மேற்போட்டுக்கொண்டால் மிக நன்மை பயக்கும்.
அதனாலேயே நமக்குச் சக்தியிருக்கிறதோ இல்லையோ என்பதைக் கவனிக்காமலும் நம்மால் கடைசி வரை கொண்டு செலுத்தமுடியுமோ, முடியாதோ என்று முடிவு கட்டாமலும் இவ்வளவு பெரிய காரியத்தை துவக்கி விட்டோம்.
நமது ஊர் முனிசிபல் சேர்மன், கமிஷனர் ஆகியவர்கள் அனேகமாக வைத்தியசாலைக்கே வேலையில்லாமல் செய்யக் கூடிய அளவுக்குப் பொது சுகாதாரத்தையும், அது சம்மந்தமாக ஜனங்களுடைய தேவைகளையும் கவனித்து வருகிறார்கள். ஆதலால் இது விஷயத்தில் வைத்தியசாலைக்கு அதிக பாரமேற்படுமே என்று நாங்கள் கவலைப்படவில்லை. ஆகவே நாங்கள் நிலம்பூர் மகாராஜா அவர்களை இந்த வைத்திய சாலையை துவக்கு விழா செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு: 14.09.1935 ஆம் நாள் நடைபெற்ற ஈரோடு வெங்கிட நாயக்கர் தர்ம வைத்தியசாலைத் திறப்பு விழாவில் (42, ஈரோடு கச்சேரி வீதி) நிலம்பூர் அரசர் (சீனியர்) அவர்களை வைத்தியச் சாலையை திறந்து வைக்க அழைத்த போது ஆற்றிய உரை.
குடி அரசு சொற்பொழிவு 22.09.1935