எனது அறிக்கையின் விளக்கம்

 

உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன் பினல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும்.

அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீ. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள்.

இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே ஜவாப்தாரி என்பதையும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

இந்த மன்னிப்பு கொடுக்கப்பட்டதும், அதை சர்க்கார் ஏற்றுக் கொண்டதும் ஆகிய இரண்டு காரியமும் மிகுதியும் இந்தக் கேசையே பொறுத்தது மாத்திரமல்ல என்பது இதில் முக்கிய விஷயமாகும். விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி சர்க்காரார் மனதில் எப்படியோ தப்பு அபிப்பிராயம் ஏற்பட்டு எப்படியாவது சுயமரியாதை இயக்கத்தை அடக்கி அழித்துவிட வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்கள் என்பதாக நான் கொஞ்ச நாளைக்கு முன்பே தெரிந்து கொண்டேன்.

அன்றியும் நான் ரஷியாவில் கொஞ்ச காலம் தாமதித்து அங்கு இருந்து திரும்பி வந்த பிறகு, என் விஷயத்தில் சர்க்கார் எனக்கு ரஷ்யாவில் இருந்து பணம் வருவதாகவும், நான் ரஷ்ய ஒற்றனென்றும் சந்தேகப்பட்டு அதிக கவலை எடுத்து எனக்காக தனியாக ஒரு சுருக்கெழுத்து சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டர் மாதம் 200 ரூபாய் செலவிலும், எனது தபால்களை எல்லாம், வருவதையும், போவதையும், இரகசியமாய் உடைத்துப் பார்ப்பதற்கென்று ஒரு சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டரும் என் வீட்டு வாசலிலும், ஆபீசு வாசலிலும், போலீஸ் சேவகர்களும், நான் செல்லுமிடங்களிலெல்லாம் என் பின் தொடர்ந்து எனது போக்குவரத்தை கவனிக்க சில போலீஸ் கான்ஸ்டேபிள்கள் பின் தொடரவும் நியமிக்கப்பட்டு, அவர்கள் மூலம் சில அறிக்கை இடும் காரியங்கள் நடந்து கொண்டே இருந்தன  இன்னமும் இருந்து வருகின்றன.

இவை தவிர பல தடவை ஆபீசும், வீடுகளும் சோதனை இடப் பட்டதுடன் என்னுடன் நெருங்கிப் பழகுகின்றவர்களுக்கும் இம்மாதிரி கவனிப்பும் அவர்களது தபால்களை உடைத்துப் பார்த்தல் ஆகிய காரியங்களும் நடந்து வந்தன.

உதாரணமாக தோழர் சர்.ஆர்.கே. ஷண்முகம் அவர்களுடைய தபால்களைக்கூட சி.ஐ.டி. போலீசார் உடைத்துப் பார்த்து வந்திருக்கிறார்கள் என்றால் மற்றவர்கள் விஷயத்தைப் பற்றி எழுத வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். மற்றும் நான் மேல்நாட்டுச் சுற்றுப் பிரயாணத்தில் இருந்து வந்த பிறகு, தமிழ் ஜில்லாக்களில் சுமார் 175 சுயமரியாதைக் கிளைச் சங்கங்கள் பல பெயர்களின் பேரால் ஏற்பட்டு ஏதோ சிறிது வேலை செய்து வந்ததை, சர்க்கார் இ.ஐ.ஈ. இன்ஸ்பெக்டர்கள் ஆங்காங்கு சென்று அங்கத்தினர்கள் பயப்படும்படியான மாதிரியில் பல விசாரணைகள் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் நடத்தி தடபுடல் செய்ததின் மூலம் பல சங்கங்கள் பயந்து மூடப்பட்டும் யாதொரு வேலையும் செய்யாமலும் இருக்கவும் நேர்ந்துவிட்டது.

இயக்க சம்மந்தமுள்ள பல பெரிய ஆட்கள் என்பவர்களும், சர்க்கார் உத்தியோகம் முதலியவைகளில் சம்பந்தமுள்ள சிலர்களும், இதை அறிந்து இயக்கத்திலிருந்தும், சங்கத்திலிருந்தும் விலகிக் கொள்ளவும் பாராமுகமாய் இருக்கவும் ஆரம்பித்ததோடு “”சுயமரியாதை இயக்கம் ஆபத்தான இயக்க”மென்று சொல்லவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இவை ஒருபுறமிருக்க, இயக்கத்தில் கலந்து வேலை செய்து கொண்டு இருந்த தொண்டர்களில் பலர் தங்கள் உற்சாகத்தைக் காட்டிக் கொள்ளும் முறையில் தலைகால் தெரியாமல் வேகமாகப் பேசுவதும், பாடுவதும் அதைப் பார்த்த போலீசார் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறித்து சர்க்காருக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்துக் கொள்ளத் தூண்டுவதுமான காரியங்களும் எனது தகவலுக்கு அவ்வப்போது சில வந்து கொண்டே இருந்தது. அன்றியும் என் பேரிலும் என் தங்கை பேரிலும் இயக்கத்தை அடக்க வேண்டுமென்ற கருத்தோடே செய்ததாக எண்ணும்படி பல வழக்குகள் தொடுத்து காவல் தண்டனை, அபராதங்கள் முதலிய தண்டனைகளும் விதிக்கப்பட்டோம்.

இதனால் எல்லாம் நம்முடய விரோதிகள் பலரும் இயக்கத்தில் பொறுப்பில்லாமல் கலந்து விளம்பரம் பெற்று வாழ்ந்து வந்த சிலர் மாத்திரம் “”பேஷ் பேஷ்” என்று நம்மை உற்சாகப்படுத்துகிற மாதிரியில் பேச முடிந்ததே ஒழிய மற்றபடி இயக்கம் வளர்ச்சியடைய முடியாமல் போகவும் சர்க்காரின் கடுமையான அடக்குமுறைக்கு ஆளாகுமே என்கின்ற பயத்திற்கும் இடம் தந்ததால் இயக்கப் பிரமுகர்களில் இரண்டொருவர் யோசனைக்கு இணங்கி இதைப்பற்றி சர்க்காரிலேயே சில பொருப்புள்ள அதிகாரிகளைக் கண்டு பேச வேண்டிய அவசியத்திற்கு உள்ளானேன்.

அப்படிப் பேசியதில் எனக்கும் இரஷியாவுக்கும் பணப்போக்குவரத்தோ, பிரசார சம்பந்தமோ ஏதும் இல்லை என்று விளக்க வேண்டி இருந்ததோடு சுயமரியாதை இயக்கம் சட்டமறுப்பு இயக்கமல்லவென்றும், சர்க்காரோடு ஒத்து உழையா இயக்கமல்லவென்றும், சட்டத்தையும் சமாதானத்தையும் மதியாத இயக்கமல்லவென்றும் எடுத்துச் சொன்னதோடு அதன் ஆரம்பகால முதல் நாளது வரை பல சமயங்களில் வெளியிடப்பட்டும், பல மகாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டும் இருக்கும் வேலைத் திட்டம், தீர்மானங்கள் முதலியவைகள் எல்லாம் சட்ட வரம்பிற்கு உட்பட்டு நடத்தும் காரியங்களாகவேதான் இருந்து வருகிறதென்றும் விளக்கிக் காட்டினேன்.

மற்றும் சட்ட விரோதமாக அல்லது ராஜத்துவேஷமுண்டு பண்ணுவதற்கு ஆக பதிப்பிக்கப்பட்டதென்றோ, பேசப்பட்டதென்றோ ஏதாவது காட்டப்படுமானால் அதற்குப் பதில் சொல்ல கடமைப்பட்டிருப்பதாகவும் ஒப்புக் கொண்டேன்.

இந்த நிலைமையில் பிரஸ்தாப வழக்கு சம்மந்தப்பட்ட விஷயங்கள் எனக்குக் காட்டப்பட்டன. அதைக் கண்ட பிறகு அது ராஜத் துவேஷமான விஷயம் என்று சர்க்கார் முடிவு செய்து விட்டார்கள் என்பதையும், அது எப்படியும் ராஜத் துவேஷமான விஷயம் என்று தீர்ப்புப் பெறும் என்பதையும் விவகாரம் பேசுவதில் பயன் ஏற்படாது என்பதையும் உணர்ந்தேன். உணர்ந்ததும் உடனே அதை மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதிகாரிகளும் அந்தப்படியே ஒப்புக் கொண்டார்கள்.

ஆகவே இந்த சம்பவமானது இயக்க சம்பந்தமாய் சர்க்காருக்குள்ள தப்பபிப்பிராயத்தை நீக்க வேண்டும் என்பதற்காகவே ஏற்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்ளவே இதை எழுதுகிறேன்.

நம் இயக்கம் (சுயமரியாதை இயக்கம்) சமூகத் துறையில் உள்ள குறைகளை நிவர்த்திப்பதற்கென்றே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்ததும், சர்க்கார் அதிகாரிகள் முதல் அனேக செல்வவான்களும் இயக்கத்தில் கலந்து வேலை செய்து வந்ததும் எவரும் அறியாததல்ல. ஆனால், சிறிது காலம் சென்றபின் மக்களுக்குள்ள சமுதாயக் கொடுமை தீர வேண்டியது எவ்வளவு அவசியமோ அது போலவே மக்களுக்குள்ள பொருளாதாரக் கொடுமையும் தீர வேண்டியதும் மிகவும் அவசியமென்று கருதியதால், பொருளாதார சம்பந்தமாக நாம் சிறிது பிரசாரம் செய்ய ஆரம்பித்தோம் என்றாலும் அதன் பிறகே அரசாங்கத்தார் தப்பபிப்பிராயங் கொண்டு இயக்கத்தை அடக்க அடக்குமுறை பிரயோகம் ஆரம்பித்து விட்டார்கள் என்று உணருகிறேன்.

இதையேதான் அதிகாரிகள் முன்பும் தெரிவித்துக் கொண்டேன்.

ஆனால் ஒரு அளவுக்கு சர்க்காருடன் ராஜி ஏற்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற ஆசையின் மீதே பொருளாதார விஷயத்தில் சமதர்மக் கொள்கையை பிரசாரம் செய்வதில் சர்க்காருக்கு ஆட்சேபணை இல்லை என்றும், ஜாதி மத சம்பந்தமான விஷயங்களில் வேறு ஜாதி மதக்காரர்கள் மனம் புண்படும்படியோ அவமானம் ஏற்படும்படியோ என்று இல்லாமல் ஜாதி மத கண்டனங்கள் செய்து கொள்ளலாம் என்றும் முடிவுக்கு வந்தோம். சர்க்காரோடு இந்த மாதிரியான ஒரு சமாதான முடிவுக்கு வராத பக்ஷம் சர்க்காருக்கும் நமக்கும் வீண் தொந்தரவும் மனக்கசப்பும் ஏற்பட்டுத் தீரும் என்கின்ற நிலையில் மற்ற ஆதாரங்களும்  முயற்சிகளும் நிலைமைகளும் இருந்ததால் நான் இந்த சமாதானத்துக்கு வரவேண்டியதாயிற்று. ஆகவே இதன் பலன் என்னவானாலும் அதற்கு நானே பொறுப்பாளி என்றுதான் சொல்ல வேண்டும்.

சில இளைஞர்களுக்கு இது கேவலமாகத் தோன்றலாம்; என்றாலும் நாம் இயக்க சம்பந்தமாக நமது கொள்கைகளிலோ திட்டங்களிலோ எதையும் விட்டுக் கொடுத்து சமாதானம் செய்து கொண்டதாக எனக்குப் படவில்லை; ஆதலால் யார் எப்படி நினைத்தாலும் நமக்கு ஒன்றும் முழுகிப் போய்விடாது என்று தைரியமாகச் சொல்லுகிறேன்.

சுயமரியாதை இயக்கம் சட்ட வரம்புக்கு உட்பட்ட இயக்கம் என்பதையும், நாம் சட்ட வரம்புக்கு உட்பட்டு பிரசாரம் செய்கிறவர்கள் என்பதையும் ஈரோடு சுயமரியாதை இயக்கம் சமதர்மக் கட்சி வேலைத் திட்டத்திலேயே கடசி பாராவில் தெளிவாய்க் காட்டி இருக்கிறோம்.

செங்கல்பட்டு மகாநாட்டின்போதும் இயக்க நோக்கம் வகுத்த போதும் நம் இயக்கம் சட்ட வரம்பிற்குட்பட்ட ஸ்தாபனம் என்றே குறிப்பு காட்டி இருக்கிறோம். மத்தியிலும் பல தடவையிலும் எனது வழக்கு ஸ்டேட்மெண்டிலும் குறிப்பு காட்டி இருக்கிறேன். மற்றும் ஆரம்ப முதல் காங்கிரஸை எதிர்த்து வந்திருப்பதோடு தென்னாட்டில் காங்கிரசின் ஆதிக்கத்தை சிறிதாவது குறையும்படி செய்த பெருமைக்காக நம்மை நாமே பல தடவை பாராட்டிக் கொண்டே வந்திருக்கிறோம்.

இனியும் நாம் காங்கிரசை பார்ப்பனர் கோட்டையென்றும், அதன் செல்வாக்கு அழிக்கப்பட வேண்டும் என்பதையும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாய் கருதிக் கொண்டும் இருக்கிறோம்.

இன்றும் அன்றாடம் நித்திய நடவடிக்கைகளில் காங்கிரசின் பேரால் நடக்கும் சூழ்ச்சிகளைக் கண்டு ஆத்திரம் காட்டி  அவ்வப்போது கண்டித்துக் கொண்டு தான் வந்திருக்கிறோம்.

சுயராஜ்ஜியம் என்பது அர்த்தமற்றதும் பாமரர்களை ஏமாற்றுவதுமான வார்த்தை என்றும், தேசாபிமானம் என்பதும் தேசீயமென்பதும் சிலருக்கு வயிற்றுப் பிழைப்பு நாடகம் என்றும், யோக்கியப் பொறுப்பற்ற காரியம் என்றும் ஆரம்ப முதலே சொல்லிக் கொண்டு வந்திருக்கிறோம்.

“”இந்தியா பூராவுமே” பகிஷ்கரித்த சைமன் கமிஷனைக்கூட வரவேற்கச் செய்து அக் கமிஷனுக்கு உண்மை தெரியச் செய்தோம்.

இந்தக் காரியங்களால் ஒரு கூட்டத்தாரால் நாம் “தேசத் துரோகி’, “சர்க்கார் தாசர்’ என்ற பெயரைக்கூட வாங்கினோம்.

இதனால் எல்லாம் கெட்டுப் போகாத அழிந்து போகாத சுயமரியாதை இயக்கமும் அதன் பிரமுகர்களும் அதில் கலந்திருந்த தொண்டர்களும் இந்த அறிக்கையினாலோ சர்க்காருடன் சமாதானம் செய்து கொண்டதாலோ அழிந்து போகும் என்று யாராவது நினைப்பார்களானால் அவர்களுக்கு சமாதானம் சொல்லி கொண்டு நேரத்தைக் கெடுத்துக் கொள்வதை விட சற்று பொறுமையாய் இருந்து பாருங்கள் என்று சொல்லிவிடுவது புத்திசாலித் தனமான காரியமாகுமென்றே நினைக்கிறேன்.

சுதந்திர எண்ணம் தோன்றிய வாலிபர்கள் என்பவர்கள் என்னுடைய இந்த அபிப்பிராயத்துக்காக வெட்கப்படுவதாகக்கூடச் சொல்லலாம். இயக்கத்தில் இருப்பதே தங்கள் சுயமரியாதைக்கு அழகல்லவென்றும் சொல்லலாம். இதைப் பற்றி ஊரார் சிரிக்கிறார்கள் என்றும் பலர் சொல்லலாம். பலர் இயக்கத்தை விட்டுப் போய் விடுவதாகவும் சொல்லலாம்.

இவை எல்லாம் எந்த  எப்படிப்பட்ட இயக்கத்துக்கும் ஒவ்வொரு சமயங்களில் இயற்கையேயாகும். பழைய வாலிபர்கள், ஆட்கள் கழிதலும் புதிய வாலிபர்கள் ஆட்கள் புகுதலும் குற்றமல்ல, கால இயற்கையேயாகும்.

அது மாத்திரமல்லாமல் இயக்கத்தில் முக்கியஸ்தர்களாக கருதப் பட்டு வந்தவர்களே இயக்கத்தையும் இயக்கத்தில் முக்கியமாய் வேலை செய்து கொண்டு இருப்பவர்களையும் குற்றம் சொல்லுவதும் இயற்கையேயாகும்.

எந்த இயக்கத்தை எடுத்துக் கொண்டு பார்த்தாலும் இது விளங்கும்.  ஜஸ்டிஸ் கட்சியில் தாசானு தாசர்களாய் இருந்தவர்கள் இன்று அந்தக் கட்சியை வைது கொண்டு அழிக்க முற்பட்டுக் கொண்டு திரிவது நமக்குத் தெரியவில்லையா? காங்கிரசில் தாசானுதாசர்களாய்  காந்தியாருக்குத் தாசானுதாசர்களாய்  இருந்தவர்கள் காங்கிரசை வைதுகொண்டும், காந்தியாரை வைதுகொண்டும் இவை ஒழிந்தாலொழிய நாட்டுக்கு ÷க்ஷமமில்லை என்று சொல்லுகின்றவர்களையும் நாம் பார்க்கவில்லையா? பெசண்டு அம்மையாரை குருவாகவும், “”தெய்வமாகவும்”, அந்த ஸ்தாபனத்தைத் “”தெய்வீக” ஸ்தாபனமாகவும் கொண்டாடியவர்கள் இன்று அந்த அம்மையாரையும், அந்த ஸ்தாபனத்தையும் பயனற்றது என்றும் ஹம்பக் என்றும் சொல்லுகின்றதை நாம் பார்க்கவில்லையா?

மற்றும் சைவன் சைவ மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், வைணவன் வைணவ மதத்தையே வைவதும் விட்டுப் போவதும், கத்தோலிக்கன் கத்தோலிக்க மதத்தையே வைவதும் விட்டுப் போவதும்,  முஸ்லீம் முஸ்லீம் மதத்தையே வைவதும் விட்டுப் போவதும் இவற்றிற் கெல்லாம் புது ஆட்கள் வந்து சேர்ந்து கொண்டு இருப்பதும் ஆன காரியங்களை “”தெய்வத் தன்மை பொருந்திய” மத விஷயங்களில்கூட நாம் தாராளமாய் தினமும் பார்த்துவர வில்லையா? ஆகவே இவற்றாலெல்லாம் ஸ்தாபனங்கள் ஆடிப்போகும் என்று கருதுவது அனுபவ ஆராய்ச்சி இன்மையே ஆகும். எவ்வித மாறுதலும், இறக்கமும், ஏற்றமும் பிற்போக்கும் முற்போக்குமான விஷயமாய் இருந்தாலும் திடமான மனதுடன் உண்மையான முடிவுடன் ஏற்பட்டதானால் ஒற்றை ஆளாயிருந்தாலும்கூட ஒரு நாளும் ஆடிப் போகாது என்பது உறுதி.

ஆனால் ஊரார் என்ன சொல்லுவார்கள் எதிரிகள் என்ன சொல்லு வார்கள் என்பதையே முக்கிய குறிப்பாய் வைத்து, அதற்கு அடிமையாகி மாற்றங்கள் செய்வதனால் மாத்திரம் அவற்றிற்கு அதிக ஆயுள் இருக்குமென்று கருத முடியாதே தவிர, மற்றபடி உண்மையும் துணிவும் உள்ள காரியத்தில் எவருக்கும் யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றே கருதுகிறேன்.

ஆகவே இயக்க சம்மந்தமாகவும் திட்டங்கள் சம்மந்தமாகவும், வழக்கு சம்மந்தமாகவும் சர்க்கார் நிலைமை சம்மந்தமாகவும் ஏற்பட்டுள்ள நிலைமயையும் அவசியத்தையும் விளக்கவே இதை எழுதுகிறேன்.

ஈ.வெ. ராமசாமி

குடி அரசு  தலையங்கம்  31.03.1935

You may also like...