தேர்தல் தொல்லை

 

காங்கிரஸ்காரர்கள் தேர்தலில் பிரவேசிக்க ஆரம்பித்த பின்பு சட்டம் சமாதானம் எல்லாம் பறந்து போகும்படி செய்து விட்டார்கள். அஹிம்சை என்றும் யோக்கியம் என்றும் பேச்சுக்களை வாயில் சொல்லிக் கொண்டு காரியத்தில் செய்யும் காலித்தனங்களுக்கும் கலகத்துக்கும் குழப்பங்களுக்கும் அளவே இல்லாமல் இருந்து வருகிறது.

திருநெல்வேலி ஜில்லா போர்டு மெம்பர் தேர்தலில் தோழர் ஐ.ஈஸ்வரம்பிள்ளை வெற்றி பெற்றுவிட்டார் என்றாலும் இவருக்கு விரோதமாய் செய்த காலித்தனங்களுக்கு ஆதாரம் ஈஸ்வரம்பிள்ளை அவர்களுடைய மோட்டார் காரானது எரிக்கப்பட்டு சாம்பலாக்கப்பட்டு விட்டது என்பதைப் பார்த்தால் காங்கிரசின் பேரால் ஏற்பட்ட மற்ற தொல்லைகளுக்கும், விஷமங்களுக்கும் அளவு சொல்ல வேண்டுமா?

ஆகவே பார்ப்பனர்கள் செய்யும் இம்மாதிரியான கிருத்திரமங்களால் பார்ப்பனரல்லாதார் முன்னிலும் அதிகமான விழிப்படையவும் ஒற்றுமை அடையவும் பார்ப்பனரை அடியோடு வெறுக்கவும் தான் ஏற்படுமே ஒழிய, மற்றப்படி பார்ப்பனர்களுக்கு இவற்றால் எல்லாம் ஒன்றும் லாபம் ஏற்பட்டுவிடப் போவதில்லை என்பது உறுதியான விஷயமாகும்.

இந்த 10, 20 வருஷ காலமாகவே பார்ப்பனர்கள் தங்கள் சமூக நலனுக்காகச் செய்யப்பட்ட சூழ்ச்சிகளிலிருந்தெல்லாம் வரிசையாய் தோல்வி அடைந்தே வந்திருக்கிறார்களே அல்லாமல் எதிலும் வெற்றி முகம் கண்டார்கள் என்று சொல்ல முடியாது.

இவர்களுடைய “”சத்தியாக்கிரகம்” “”தடி அடிபடுதல்” “”சிறை செல்லுதல்” முதலாகிய சண்டித்தனங்களால்கூட எதிலும் வெற்றி பெற்றார்கள் என்று சொல்லிவிட முடியாது.

இவை மாத்திரமல்லாமல் பெரிய பெரிய தியாகிகளைப் போலும் எதையும் விரும்பாத இந்திரிய நிக்கிரஹக்காரர்களைப் போலும் வேஷம் போட்டு செய்து வந்த சூழ்ச்சிகளான பகிஷ்காரமெல்லாம் அதாவது அதிகாரம், பதவி, உத்தியோகம் எதுவும் வேண்டியதில்லை என்று வீம்பு பேசியதெல்லாம் இன்று எச்சிலையில் ஒட்டிக் கொண்டிருப்பதை நக்கும்படியான மானங்கெட்டத் தன்மைக்குக் கொண்டு வந்துவிட்டதே ஒழிய, ஒன்றிலாவது வெற்றி பெற்றோம் என்றோ வீம்பைக் காப்பாற்றினோம் என்றோ சொல்லிக் கொள்ளுவதற்கே இல்லாமல் போய்விட்டது.

மற்றும் ஜன சமூக நன்மைக்குப் பாடுபடுகிறோமென்று சொல்லிக் கொண்டு அரசாங்கத்தை அலட்சியம் செய்து விட்டதாகப் பாசாங்கு செய்து ஏற்படுத்திய நிர்மாணத் திட்டங்கள் தான் என்ன ஆயிற்று? என்று பார்த்தால்,

மது விலக்கு என்பது இன்று அக்கிராரத்திலும் மது வாய்க்கால் ஓடும்படிச் செய்து விட்டது.

இந்து முஸ்லீம் ஒற்றுமையானது கட்சிக்கு 100 பேர் 200 பேர் கொல்லப்படும்படியான சேதியும், ஒருவரை ஒருவர் பஹிஷ்காரம் செய்யும் சேதியும் இந்து முஸ்லீம் வகுப்புக் கலவரம் என்னும் தலைப்பில் சதா காதுகளில் “”ரீங்காரம்” செய்து கொண்டே இருக்கிறது.

தீண்டாமை விலக்கு வேலையோ தீண்டாதவர் வேறு எந்த மதம் புகுவது என்கின்ற யோசனையில் கொண்டுவந்து விட்டுவிட்டது. அதைத் தடுக்கவே சூழ்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது.

சட்டசபைகளையும் ஸ்தல ஸ்தாபனங்களையும் பஹிஷ்காரம் செய்து காலி செய்யப்படும் வேலையோ அவைகளைக் கைப்பற்ற இன்று பார்ப்பனர்கள் செய்யும் சூழ்ச்சியும், கலவரங்களும், அதனால் ஏற்படும் கொலைகளும், புதுச்சேரி எலக்ஷனைத் தோற்கடிக்கும் போல் செய்து வருகிறது.

மற்றபடி ஸ்தல ஸ்தாபனங்களில் புகுந்து அவற்றைப் பரிசுத்தப் படுத்தும் யோக்கியதையும் கன்றாக்ட் ராஜ்யத்தை அழிக்கும் வேலையும் சென்னைக் கார்ப்பரேஷனில் சாமி வெங்கடாசலம் செட்டியாராலும் கோவை ஸ்தல ஸ்தாபனங்களில் காங்கிரஸ் அங்கத்தினர்களாலும் செய்து காட்டியதானது இனி இவர்கள் மக்கள் முன் சிறிதும் தலைகாட்ட முடியாத நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டுவிட்டது.

மக்களிடம் வசூலித்த பணங்கள் பாழாக்கப்பட்ட விதமோ இன்னவிதத்தில்தான் என்று சொல்ல முடியவில்லை. ஜனங்களுக்குப் பார்ப்பனர்களிடத்திலும் இவர்கள் மகாத்மா, தியாகி என்றெல்லாம் வேஷம் போட்டு அழைத்து வரும் தலைவர்களிடத்திலும் இருக்கும் ஒற்றுமையும் பக்தியும் நம்பிக்கையும் காந்தியார் வந்தபோது கறுப்புக் கொடிகள் பறந்ததும், ராஜேந்திர பிரசாத் அவர்கள் முக்கிய ஊர்களுக்கு இரவில் வந்து இரவில் ஓட்டம் பிடிக்கும்படியான நிகழ்ச்சிக் குறிப்புகளும் ஊர் ஊருக்கு 11லு ரூ., 41லு ரூ., 53லி ரூ. என்கின்ற முறையில் பணப்பை பிரசெண்ட்டு செய்யும்படியான  நிலையிலும் வந்துவிட்டது.

சென்னை, மதுரை முதலிய பல முக்கிய பட்டணங்களில் ஜனப் பிரதிநிதி சபைகளின் வரவேற்பு இல்லை என்று ஒழுங்குமுறைப்படி தீர்மானிக்கப்பட்டாய் விட்டது.

காத்தானையும், தீர்த்தானையும் பிடித்து ஒரு இரவில் புதுச் சங்கம் கற்பனை செய்து மானங்கெட்ட உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுக்க வேண்டியதாய்விட்டது.

இனி என்ன “”பெருமை” நம்நாட்டில் இப்பார்ப்பனர்களுக்கு இருக்கிறது என்றோ அல்லது இந்த 10, 15 வருஷ சூட்சியினால் என்ன பெருமை ஏற்பட்டது என்றோ சொல்லுவார்களோ தெரியவில்லை.

ஆனால் ஒரு விஷயத்தில் பார்ப்பனர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று சொல்லலாம். அதென்னவென்றால் முன்காலப் பார்ப்பனர்கள் எப்படி பார்ப்பனரல்லாதார்களுக்குள் பல ஜாதி பல உள் வகுப்புகள் பிரித்து தாங்கள் மாத்திரம் சோம்பேறிகளாய் இருந்து ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கத் தந்திரம் செய்து வந்தார்களோ அது போல் இப்போது அரசியல் தேசாபிமானம் என்னும் பேரால் பல கட்சிகள் உண்டாக்கிப் பார்ப்பன ரல்லாதாருக்குள் பிரிவை ஏற்படுத்தி பார்ப்பனரல்லாதார் கூட்டத்தில் வாலறுந்தவர்களையும், மூக்கறுந்தவர்களையும், கஞ்சிக்கும் பதவிக்கும் மார்க்கம் அறுந்தவர்களையும் தங்கள் வசம் சேர்த்துக் கொண்டு கலகம் செய்து, சூழ்ச்சி செய்து தொல்லை விளைவிப்பதில் வெற்றி பெற்று வருகிறார்கள் என்றாலும் அதிலும் சிறிது காலத்துக்கே தான் இந்தப்படி வெற்றி பெற முடியுமே ஒழிய வேறில்லை. ஆனாலும் அந்த மாதிரி ஆட்களுக்கும்கூட இப்போது வரவர யோக்கியதை குறைந்து கொண்டுதான் வருகிறதே தவிர  அப்படிப்பட்டவர்களுக்கு பார்ப்பனர்கள்தான் ஏதாவது அழுக வேண்டுமே தவிர, அவர்களால் பார்ப்பனர்களுக்கு ஒரு காரியமும் இனி ஆகப் போவதில்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம்.

உதாரணமாக இன்று பார்ப்பனர்களுடன் இருக்கும் சில பழய நபர்களை  முழு டிக்கட் என்பவர்களையே எடுத்துக் கொள்ளலாம். தோழர்கள் இ.கீ. ரெட்டி, ங. சக்கரை செட்டியார், ங.O. சிதம்பரம் பிள்ளை போன்றவர் களையே எடுத்துக் கொண்டோமேயானால் இவர்கள் இதுவரை எத்தனை கரணம் போட்டவர்கள், எத்தனை தடவை காங்கிரஸ்காரர் களானார்கள் எத்தனை தடவை ஜஸ்டிஸ்காரர்களானார்கள், இவர்களுக்கு இன்று பொதுமக்களிடம் இருக்கும் செல்வாக்கு எவ்வளவு? இவர்கள் பேசுவதால் மனம் மாறி பார்ப்பனர்களை ஆதரிக்க எத்தனை நபர்கள் வந்துவிடக் கூடும்? அல்லது இவர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு இந்தப் பார்ப்பனர்களை ஆதரிக்கக்கூடும்? அல்லது இவர்களை இந்தப் பார்ப்பனர்கள் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் விளம்பரம் செய்து பயனனுபவிக்க முடியும்? எனவே முழு டிக்கட்டுகளுடைய நிலைமையே இப்படியிருந்தால் இனி காங்கிரஸ் காலித்தனத்துக்குப் பயந்து எலக்ஷன் செலவுக்குப் பயந்து வந்து சேரும் அரை டிக்கட்டுகளைப்பற்றி எடுத்துச் சொல்ல நாம் அதிக நேரம் செலவழிக்க ஆசைப்படவில்லை.

எனவே பார்ப்பனர்கள் காங்கிரஸ் வேஷம் போட்டு இன்று பார்ப்பனரல்லாதார்களுக்கு விளைவிக்கும் இம்மாதிரி தொல்லை எல்லாம் சில்லரை விஷமம் என்று கருதக் கூடியதாய் தான் இருக்க முடியுமே தவிர மற்றபடி இதனால் எல்லாம் ஒரு காரியத்தையும் சாதித்துவிட முடியாது என்றும், தாங்கள் இதுவரை செய்ததெல்லாம் தப்பான காரியமென்றும் கூடிய சீக்கிரத்தில் நமது பார்ப்பனர்கள் உணரப் போகிறார்கள் என்பதும் நிச்சயமான காரியமாகும்.

வரப்போகும் சட்டசபை தேர்தல்களிலாகட்டும் பார்ப்பனர்கள் எந்த விதத்தில் வெற்றி அடைந்து விட முடியும்?

முதலாவது பார்ப்பனர்களுக்கு தேர்தலில் சொல்லிக் கொள்ள ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்வதைத் தவிர, இன்று வேறு என்ன கொள்கை இருக்கிறது? அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் செய்யக்கூடிய காரியம் ஒன்றே ஒன்று தான். அதாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை அளிக்கலாம்.

மற்றென்னவாவது செய்யக் கூடும் என்றால் சமூக சீர்திருத்த சம்மந்தமாக எதாவது சட்டம் வந்தால் அதை எதிர்க்கலாம். இந்த இரண்டு காரியத்தைத் தவிர இவர்கள் சட்டசபையில் என்ன செய்யக்கூடும்?

இந்தக் காரியங்களும் செய்யத்தக்க அளவுக்கு பார்ப்பனர்கள் சட்டசபைக்குள் நுழைந்து விடுவது என்பது லேசான காரியமல்ல.

ஆகவே அடுத்த சட்டசபை தேர்தலில் பார்ப்பனர்கள் கூச்சல் போட்டதுதான் லாபமாய் இருக்கலாம். அல்லது கலகம், அடிதடி, சில கொலைகள் ஆகியவை நடக்கச் செய்தது தான் லாபமாய் இருக்கலாம். மற்றபடி பார்ப்பன ஆதிக்கம் வந்துவிடும் என்று கருதுவது கனவாகக்கூட இருக்க முடியாது என்று இப்போதே ஒவ்வொருவரும் எழுதி வைத்துக் கொள்ளலாம். ஆதலால் பார்ப்பனர்களின் வெறும் கூப்பாட்டையும், விஷமப் பிரசாரத்தையும், காலித்தனத்தையும் கண்டு யாரும் ஏமாந்து போயோ எலெக்ஷன் செலவுக்கு பயந்தோ அவர்களிடம் போய் சரணாகதி அடைந்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறோம்.

குடி அரசு  தலையங்கம்  03.11.1935

You may also like...