வைசு. ஷண்முகம் உண்ணாவிரதம்

 

கானாடுகாத்தான் தோழர் வைசு. ஷண்முகம் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருவதன் நோக்கம், தனது கடன்காரர்கள் எல்லோருக்கும் நஷ்டமில்லாமல் ரூபாய் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இன்சால்வெண்டாவதால் தனக்குக் கஷ்டமும் நஷ்டமும் உண்டாகிறது; கடன்காரர்களுக்கும் கஷ்டமும் நஷ்டமும் உண்டாகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும்தான் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறோம்.

அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்து சுமார் 16 தினங்களாகியும் அவருடைய ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்துச் செய்ய வேண்டிய கடன்காரர்கள் வீணாகத் தவணை கூறிக் காலதாமதம் செய்து கொண்டே வருகிறார்கள். தோழர் ஷண்முகத்தின் நண்பர்களும், உறவினர்களும், கடன்காரர்களின் கையெழுத்து வாங்குவதற்கு எவ்வளவோ முயற்சித்தும் இன்னும் முழுதும் முடிந்தபாடில்லை.

தோழர் ஷண்முகம் எந்த நோக்கத்தோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்ற உண்மையைக் கடன்காரர்கள் இன்னும் உணரவில்லை. அவர்கள் இதை உணராமல் இருக்கும்படி செய்வதற்காகவே சிலரால் சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. கடன்காரர்கள் உண்மையை உணர்வார்களானால் ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்திடப் பின் தாங்க மாட்டார்கள். வீணாகத் தவணை சொல்லிக் கொண்டு காலங் கடத்தவும் மாட்டார்கள்.

இந்நிலையில், தோழர் ஷண்முகம் அவர்களும், மிகவும் மனோ உறுதியுடன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்றாலும் நாலைந்து தினங்களாக மயக்கமும், வயிற்றுப் புரட்டலும், தளர்ச்சியும், நா வறட்சியும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன.

அவருடைய நண்பர்களும், உறவினர்களும் இன்னும் பிடிவாதமாக உண்ணாவிரதமிருப்பதனால் வீணாக குடும்பத்திற்கும், உயிருக்கும் நஷ்டம் உண்டாகுமேயன்றி வேறு பயன் உண்டாகாது என்று கூறி, உண்ணா விரதத்தை விட்டு விடும்படியும், கடனைத் தீர்ப்பதற்கு வேறு வழிகளில் முயற்சி செய்யும்படியும் வற்புறுத்தி வருகிறார்கள்.

வார்தாவிலிருந்து மகாத்மா காந்தியவர்களும் உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்கும்படி கேட்டுக் கொண்டு கடிதம் எழுதியிருக்கிறார்.

தோழர் ஈ.வெ. ராமசாமியவர்களும் விரதத்தை நிறுத்தி வைக்கும்படி மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார். இன்னும் வெளியூரில் உள்ள பல நண்பர்களும் உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்கும்படி வற்புறுத்தி அளவற்ற கடிதங்களை எழுதி வருகிறார்கள்.

இந்நிலையில் தோழர் ஷண்முகம் அவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியவர்களை திருப்தி செய்விக்க வேண்டியாவது தமது உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்க வேண்டியதே அவசியமாகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். என்னதான் கஷ்டப்பட்டாலும், உயிர் போவதானாலும் லேவாதேவிக்காரர்களின் மனம் இளகுவது முயற்கொம்பாகும் என்பதை தோழர் ஷண்முகம் அவர்களுக்குத் தெரியாததல்ல. ஆகையால் இச்சமயம் விரதத்தை நிறுத்தி வைத்து கடன் விஷயமாகவும் டிக்கிரியாகியிருக்கும் 9 லட்ச ரூபாயை வசூல் செய்யும் விஷயமாகவும் வேறு தக்க முயற்சியெடுத்துக்  கொள்ள வேண்டுமென்று மீண்டும் வற்புறுத்திக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

குடி அரசு  வேண்டுகோள்  10.03.1935

You may also like...