ஜஸ்டிஸ் கட்சி செய்த “”பாவம்
”
ஜஸ்டிஸ் கட்சியை பார்ப்பனர்கள் ஆசை தீர வைது விட்டார்கள். இனி வைவதற்கு வார்த்தைகளும், விஷயங்களும் கிடைக்காமல் திண்டாடிக் கொண்டு திரியும் இந்த நெருக்கடியான சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்களும் விறட்டி அடிக்கப்பட்டவர்களுமான ஆசாமிகள் இன்று ஜஸ்டிஸ் கட்சியை வைவதற்கு மூன்று புதிய காரணங்கள் கண்டுபிடித்து பார்ப்பனர்களுக்கு காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார்கள்.
அதாவது:
- கமிஷனர்களைநியமித்தது.
- தாலூக்காபோர்டுகளை எடுத்தது.
- ஜில்லாபோர்டுகளை இரண்டாகப் பிரிப்பது.
இந்தக் காரியங்கள் ஜஸ்டிஸ் கட்சி சட்டசபை அங்கத்தினர்கள் ஏகமனதாய் அபிப்பிராயம் கொடுத்தும், பார்ப்பனர்களும், பார்ப்பன தாசர்களும் தாராளமாய் ஸ்தானம் பெற்ற சட்டசபையின் மெஜாரிட்டியாரால் தீர்மானங்கள் செய்யப்பட்டும், பிறகுதான் அமுலில் செய்யப்பட்டு வருகின்றனவே ஒழிய கட்சித் தலைவரின் சர்வாதிகார முறையில் செய்யப்பட்ட காரியங்கள் அல்ல. இவை எப்படி இருந்தாலும்,
முனிசிபாலிட்டி விஷயத்தில் அனேக சேர்மென்கள் யோக்கியதை களும், நிர்வாகங்களும், நாணையமாகவும், நியாயமாகவும் இல்லை என்றும் சொல்லி அவர்களது அயோக்கியத்தனங்களையும், நாணையக் குறைவுகளையும் ஏதேச்சாதிகாரங்களையும், புள்ளி விவரங்களோடு காட்டி வந்ததுடன் கண்ட்ராக்ட் விஷயங்களிலும், சிப்பந்திகள் நியமன விஷயங்களிலும் அவர்கள் நடந்து வரும் ஒழுக்கங் கெட்ட காரியங் களையும், கவுன்சிலில் சதா இருந்து வந்த கட்சி எதிர்க்கட்சிகளையும் அதனால் அடிக்கடி ஏற்பட்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானங்களையும் பற்றி புள்ளி விபரங்களோடும் குடி அரசு பத்திரிகை 1926ம் வருஷ முதலே எடுத்துக்காட்டி எழுதி வந்திருந்ததோடு இந்த நாணையக் குறைவுகளும், அயோக்கியத் தனங்களும், கட்சிப் பிரதிக் கட்சிகளும் ஆகிய காரியங்கள் குறைக்கப்பட்டு முனிசிபல் நிர்வாகம் செவ்வனே நடைபெறுவதற்கு சென்னை கார்ப்பரேஷனுக்கு இருந்து வருவது போல் எல்லா முனிசிபாலிட்டி களுக்கும் கமிஷனர் நியமனம் ஏற்பட வேண்டுமென்று நாமும் கூப்பாடு போட்டு வந்திருப்பதும், பல மகாநாடுகளில் தீர்மானிக்கப்பட்டு வந்திருப்பதும் யாரும் அறியாததல்ல.
அதுபோலவே தாலூக்கா போர்டுகளைப் பற்றியும், அவற்றின் பயனற்ற தன்மையைப் பற்றியும், அவற்றில் நடந்து வந்த அட்டூழியங் களையும், ஒரு சில கிராமவாசிகளே பிரசிடெண்ட், மெம்பர்கள், இவர் களுக்கு சொந்தக்காரர்கள் என்கின்ற பெயர்களால் கொள்ளை கொண்டு வந்ததும், அவற்றால் ஏற்பட்ட கலகங்களையும் பற்றி எவ்வளவோ ஸ்தல ஸ்தாபனம் என்னும் தலைப்பின் கீழ் எழுதி வந்தும் பயன்படாததால் அவை அனாவசியமென்றும் எடுத்துவிட வேண்டும் என்றும் எழுதி வந்ததும் மந்திரிகளிடம் நேரில் சென்று கேட்டுக் கொண்டதும் இக்கூட்டத்தார்கள் தெரியாது என்று சொல்லிவிட முடியாது.
தாலூக்கா போர்டுகளை எடுத்துவிட்டதால் ஜில்லா போர்டுகளுக்கு அதிக வேலை என்கின்ற காரணத்துக்காக அவைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டுமென்று மந்திரி அந்தக் காலத்திலேயே தெரிவித்திருந்ததும் அதற்காக பெரிய சம்பளத்தில் ஒரு ஐரோப்பியரை நியமித்து ரிபோர்ட்டு செய்யும்படி அரசாங்கம் ஏற்பாடு செய்திருப்பதும் யாரும் அறியாததல்ல.
இதுவரை இந்த விஷயத்தைப் பற்றி எந்த ஜஸ்டிஸ் கட்சிக்காரரோ, சுயமரியாதைக்காரரோ ஒருவராவது வாய்திறந்து ஒரு ஆட்சேபணையான வார்த்தைகூட சொன்னதை நாம் கேட்டறியோம்.
ஆனால் பார்ப்பனரல்லாத மந்திரிகள் எது செய்தாலும் வேண்டு மென்றே துவேஷப் பிரசாரமும், விஷமப் பிரசாரமும் செய்து வந்த பார்ப்பனர்களும், அவர்கள் கூலிகளும் மாத்திரம் சில சமயங்களில் கூப்பாடு போட்டுவிட்டு கடைசியாக பார்ப்பனர்களுக்கும் இரண்டொரு கமிஷனர் வேலை கிடைத்தவுடன் அவர்களும் ஒரு அளவுக்கு வாயை மூடிக் கொண்ட பிறகு இப்போது பார்ப்பனரல்லாதார் என்றும், ஜஸ்டிஸ் கட்சியார் என்றும், சுயமரியாதைக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்ளும் ஆட்கள் அந்தக் காரியங்களை குறைகூற முன் வருவதை யோசித்தால் அவர்களது நிலமை எவ்வளவு தூரம் பரிதபிக்க வேண்டியதாய் இருக்கிறது என்பது புலப்படும்.
இன்னமும் டிஸ்டிரிக் போர்டுகளைப் பிரித்தாலும் சரி, பிரிக்கா விட்டாலும் சரி அவைகளையும் கலைத்தாலும் சரி, கலைக்காவிட்டாலும் சரி டிஸ்டிரிக் போர்டுகளுக்கும் நிர்வாக அதிகாரி (எக்ஸ்கியூட்டிவ் ஆபிசர்)களை நியமிக்க வேண்டியது அவசியமான காரியம் என்பதை மாத்திரம் வலியுறுத்தாமல் இருக்க முடியவில்லை.
பத்து லட்சக்கணக்கான ரூபாய்கள் கொண்ட கண்ட்ராக்ட் வேலைகளை 100க்கு 15 ரூ வீதம் குறைத்து வேலை தெரிந்த பரம்பரை கண்ராக்டர்களும், வேலைக்காரர்களும் டெண்டரில் கேட்டிருக்க 100க்கு 10 ரூ, 15 ரூ எஸ்டிமேட் தொகைக்கு மேல் அதிகம் வைத்து வேலை தெரியாதவர்களும் எப்பொழுதுமே கண்ராக்டர்களாக இல்லாதவர்களும், பிரசிடெண்டு குடும்பத்து மெம்பர் களுக்கும், மெம்பர்கள் குடும்பத்து மெம்பர்களுக்கும் வேறு காலி ஆசாமிகள் பேருக்கும் வேலைகள், கண்ராக்ட் கொடுக்கப்பட்டு அப்பணங்கள் குடும்பச் சொத்துபோல் பிரித்துக் கொள்ளப்படுகின்றதென்றால் ஜில்லா போர்டு நிர்வாகங் களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமித்து பிரசிடெண்டுகள் அட்டூழியங் களிலிருந்து நிர்வாகத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்று கேள்க்கின்றோம்.
மற்றும் சிப்பந்திகளை பிரசிடெண்டுகளும், அவர்கள் குடும்பத்தார் களும் சில இடங்களில் மெம்பர்களும் நடத்துகிற மாதிரியைப் பற்றி பல இழிவான புகார்களெல்லாம் வந்து கொண்டு இருப்பதும் யாரும் அறியாததல்ல. இப்படிப்பட்ட காரியங்களுக்காகவும், பிரசிடெண்டுகளின் கொடுமைகளில் இருந்து சிப்பந்திகளை மீட்கவும் நிர்வாக அதிகாரிகளை நியமிக்க வேண்டாமா என்று மறுபடியும் கேழ்க்கின்றோம்.
சில பிரசிடெண்டுகள் சட்டசபை மெம்பர்களாய் இருப்பதால் அவர்களது அக்கிரமங்கள் எல்லாம் பூசி மெழுகப்பட்டு வருகின்றது என்பது நமக்குத் தெரியும். ஆதலால் எவ்வளவு கெட்ட பேர் வந்தாலும் அவைகளைப் பற்றி பயப்படாமல் டிஸ்டிரிக் போர்டுகளுக்கும் உடனே நிர்வாக அதிகாரிகளை ஏற்படுத்த ஸ்தல ஸ்தாபன மந்திரியார் முன்வரவேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகிறோம்.
இந்தக் காரியங்களைத்தான் ஒரு பெரிய “”பாபகர”மான குற்றமாகச் சொல்லிக் கொண்டு ஜஸ்டிஸ் கட்சியின் மீது அக்கட்சியார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களே குறை கூறுவது மகா கேவலமானதும், யோக்கியப் பொருப்பற்றதுமான காரியம் என்று சொல்லவேண்டிய நிலைமையில் இருக்கின்றோம்.
குடி அரசு துணைத் தலையங்கம் 13.01.1935