அறிவின் பயன்
இப்படி மதிக்கப்படுவது சரியா தப்பா என்பது விவகாரத்திற்கு உரியதானாலும், இப்பகுத்தறிவை மனிதன் உடையவனாயிருப்பதின் காரணமாய் மனித ஜீவனுக்கு ஏதாவது உண்மையான சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட்டிருக்கின்றதா என்று பார்ப்போமேயானால், இல்லை என்றுதான் சொல்லவேண்டியதிருக்கிறது. அதுவும் பகுத்தறிவு ஏற்பட்ட தாலேயே மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட இடமில்லாமல் போய்விட்டது என்று கூட சொல்லவேண்டியது இருக்கிறது. ஆனால் இதைச் சரியென்று யாராவது ஒப்புக்கொள்ளமுடியுமா என்று பார்த்தால் பகுத்தறிவின் காரணமாக மனிதனுக்கு சுகமும், திருப்தியும் இல்லையென்று சொல்லுவது நியாயமாகாது என்றாலும் பிரத்தியக்ஷத்தில் அப்படித்தான் காணப்படுகின்றது.
ஆகவே இதற்கு ஏதாவது காரணம் இருந்தாகவேண்டும் அல்லவா? அந்தக் காரணம் என்னவென்றால் மனிதன் தன் பகுத்தறிவைச் சரியானபடி பயன்படுத்தாமலும், பகுத்தறிவுக்கு விரோதமான விஷயங்களை மனிதன் ஏற்றுக்கொள்வதாலும் மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் இல்லாமல் போய்விட்டது.
மனிதன் உலக சுபாவத்தையே தப்பாய் நிர்ணயித்துக்கொண்டு, மனித ஜன்மமே சுகமனுபவிக்க ஏற்பட்டதென்றும், வாழ்க்கையே துக்கமென்றும், சம்சாரமானது “”சாகரம்” “”துக்கம்” என்று கருதுவதன் மூலம் தனது துக்கத்திற்கும், அதிருப்திக்கும் பரிகாரம் தேடாமல் அனுபவித்து வருகிறான்.
இந்த மேற்கண்ட நம்பிக்கைகளும், எண்ணங்களுமே மனித சமூக துக்கத்துக்கும், அதிருப்திக்கும் இடம் கொடுத்து வருகிறது என்பதை உணருவதில்லை. இப்படி உணர முடியாமல் போனதற்கும் பகுத்தறிவைச் சுதந்தரத்தோடும் துணிவோடும் பயன்படுத்தாத காரணமேயாகும்.
இந்தப்படி சுதந்தரத்தோடும், துணிவோடும் பகுத்தறிவு என்பதை பயன்படுத்தக்கூடாது என்கின்ற நிபந்தனைகள் வாழ்க்கையிலும் சமூதாயத்திலும் இருந்துவர, மனிதன் ஆதியில் அனுமதித்துக்கொண்டதே இந்நிலைக்குக் காரணமாகும் என்றாலும் அதிலிருந்து விடுதலை பெறமுடியாது என்று தீர்மானித்துவிடுதல் கூடாது.
இப்பொழுதுகூட மனிதன் தன்னைக் கட்டுப்படுத்தியும், தன்னைச் சூழ்ந்தும் தனக்குள் புகுத்தப்பட்டும் இருக்கின்ற விஷயங்களாகிய சமூகக் கட்டுப்பாடு, அரசியல் கட்டுப்பாடு, மதக் கட்டுப்பாடு, பழக்க வழக்கக் கட்டுப்பாடு முதலியவைகளை விலக்கிவிட்டுத் தனியாக, சுதந்தர மனிதனாக, பரிசுத்த உணர்ச்சியுடன் ஒவ்வொன்றையும் நிர்வாணமாகப் பார்க்கும் பரிசுத்தக் கண்ணுடன் இருந்து, பகுத்தறிவைத் துணிவோடு உபயோகப்படுத்துவானேயாகில் பகுத்தறிவால் அறியக்கூடிய உண்மையையும், பயனையும் அறியாமலும், அடையாமலும் இருக்க முடியாது.
இன்று மனிதனுடைய பகுத்தறிவை அடக்கிக் கொண்டிருப்பவைகளில் முக்கியமானவை இயற்கையின் உண்மையை அறிய முடியாமல் செய்து வருவதற்கு ஏதுவான தலைவிதி, முன்ஜன்ம பலன், கடவுள் செயல் என்பன போன்ற உபதேசங்களே யாகும். இவ்வுபதேசங்களுக்குக் கட்டுப்பட்ட எவனும் பகுத்தறிவின் பயனான இயற்கையை உணர்ந்து அதைத் தனக்கு அடிமையாக்கிக்கொண்டு சந்தோஷமும், திருப்தியும் அடையும் பேற்றை எவனும் அடையவே முடியாது. ஆதலால் ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிவை அவனது சந்தோஷமும் திருப்தியுமான வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அந்தப்படி பயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஒவ்வொரு மனிதனும் அவனவனுடைய கண்ணையும், மனத்தையும், நிர்வாணமாகவும், பரிசுத்தமாகவும் வைத்துக்கொண்டு பார்க்கவேண்டும்.
இந்த நிலைமையையும், தன்மையையும் ஒவ்வொரு மனிதனும் அடையவே “”பகுத்தறிவு” உலகில் உலவிவந்து மக்களுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.
பகுத்தறிவு (மா.இ.) கட்டுரை மே 1935