தேவகோட்டை  வக்கீல்  சங்கம் பார்ப்பனீயத்  தாண்டவம் ஒரு  விளக்கம் தேவகோட்டை  121235

 

தோழர் எஸ். லக்ஷ்மீரதன்  பாரதி  அவர்கள்  எழுதுவதாவது:

சென்ற  வாரத்தில்  “”குடி அரசு”  பத்திரிகையில்  “”தேவகோட்டையில்  பார்ப்பனீயத்  தாண்டவம்”  என்ற  தலைப்பின்  கீழ்  பிரசுரிக்கப்பட்ட  விவரங்களைப்  படித்தேன். அதில் கண்ட விவரங்கள்  சில சரியானதா யில்லாத  படியால்  பின்வரும்  குறிப்பை  அனுப்புகிறேன்.  அதைப்  பிரசுரிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன்.

பிராமண  வக்கீல்  அங்கத்தினர்  பலர்  பிராமண  அங்கத்தினர் களுக்கு  மட்டும்  தனியாக  இரண்டு  தண்ணீர்ப்  பானைகள்  வக்கீல்  சங்கத்தில்  வைக்கவேண்டுமென்று  சங்கத்திற்கு  எழுதினார்கள்.  அதன்  பேரில்  சங்கத்தின்  நிர்வாகக்  கமிட்டியானது,  இதைப்  பொதுக்  கூட்டத்திலோ  நிர்வாகக்  கமிட்டிக் கூட்டத்திலோ  ஆலோசனை  செய்யாமல்  சுற்றறிக்கை  மூலமாகப்  பின்  வரும்  தீர்மானத்தை  நிறை வேற்றியது.  “”சிற்றுண்டி  சாப்பிடும்  இடமும்  அதில்  வைத்திருக்கும்  தண்ணீர்  பானைகளும்  பிராமண  அங்கத்தினர்களுக்குமட்டும்  தனியான  உபயோகத்திற்கு  அமைத்திருக்கிறது.”

இத்தீர்மானத்தை  சங்கத்தின்  விளம்பரப்  பலகையிலும்  பிரசுரித்தார்கள். அத்தீர்மானத்தின் கீழ் காரியதரிசி, இதர அங்கத்தினருடைய  உபயோகத்திற்காக  டிபன்  ஷெட்டிற்கு  வெளியே தண்ணீர்ப்பானை  வைத்திருப்பதாக  எழுதியிருந்தார்.  இந்த  முறையைக்  கமிட்டியின்  அங்கத்தினரில் ஒருவரான  அட்வகேட்  தோழர்  எ. ரெங்கசாமி  ஐயங்காரவர்கள்  ஆட்சேபணை  செய்தார்.

இந்த  விளம்பரம்  பிரசுரம்  செய்யப்பட்டதைப்  பார்த்த  மூன்று  பிராமணரல்லாத  வக்கீல்களும்  இத்தீர்மானம்  நியாயமற்றதென்றும்,  அறிவுக்குப்  பொருத்தமற்றதென்றும்,  சட்டத்திற்கும்  அதிகார வரம்பிற்கும்  மீறியதென்றும்  அதனால் தாங்கள்  அதை  மதிக்கப்  போவதில்லையென்றும்  காரியதரிசிக்கு  அறிக்கை  யிட்டார்கள்.

அதன்பின்னால்  அட்வகேட்  தோழர்  எ. ரங்கசாமி  ஐயங்காரவர்கள்  தன்னுடைய  கமிட்டி  மெம்பர்  ஸ்தானத்தை  ராஜிநாமாச்  செய்து விட்டார்கள்.

இந்த  நிலைமையில்  இருக்கிறது  இந்தப்  பிரச்சினை.  இன்னும்  வக்கீல் சங்கக்  கூட்டத்திலும்  ஒரு  முடிவு  செய்யப்படவில்லை.  ஆனால்  83  அங்கத்தினர்களில்  80  பேர்  பிராமணர்களாக  இருப்பதி னாலும்  இவர்களிற்  பலர்  ஏற்கனவே  தங்கள்  உபயோகத்திற்காக  தனிப்  பானைகள்  வைக்க  வேண்டுமென்று  எழுத்து  மூலமாகக்  கேட்டிருப்பதி னாலும்  இந்த  விஷயம்  சங்கத்தின்  பொதுக்  கூட்டத்தில்  வந்தாலும்  நிச்சயமாக  இதே  விதமாகத்தான்  தீர்மானிக்கப்படுமென்றே  எதிர்பார்க்கப்படுகிறது.  இருந்தாலும்  எல்லோரும்  படித்தவர்களான தாலும்  அறிவாளிகள்  ஆனபடியாலும்  பொதுச்சங்கத்தில்  இவ்வித  அறிவற்றதும்  வகுப்புத்  துவேஷத்  தன்மையுடையதுமான  தீர்மானத்தை  நிறைவேற்றாமல்  இருப்பதற்கு  சந்தர்ப்பம்  ஏற்படலாம்.

இச்சங்கத்தின்  அங்கத்தினர்  பெரிதும்  காங்கிரஸ்காரர்  எனக்  கண்டிருப்பது  சரியல்ல.  காங்கிரஸ்காரர்  வெகு  சிலரே  ஆவர்.  சிலர்  பெரும்  சனாதன  கட்சியினர்.  பெரும்பாலோர்  ஒரு  கட்சியினையும்  சேராதவர்கள்.  சென்ற  இந்தியச்  சட்டசபைத்  தேர்தலுக்கு  முன்  தோழர்  ராஜகோபாலாச்சாரியார்  இச்சங்கத்துக்கு  வந்து  அங்கத்தினர்களைக்  கண்டு  பேச  முயன்றபோது  எதிர்ப்பேர்ப்  பட்டதினால்  அவருக்கு  வர  முடியாமல்  போய்விட்டதென்றால்  அதிலிருந்து  இவர்கள்  எவ்வளவு  தூரம்  காங்கிரஸ்காரர்கள்  என்பதை  ஒருவாறு  அறிந்து  கொள்ளலாம்.

பாரதியார்  காங்கிரஸ்  தீண்டாமை  விலக்குக்  கமிட்டியின்  தலைவர்  என்ற  கண்டிருப்பதும்  சரியில்லை.  ஹரிஜன  சேவா  சங்கம்  காங்கிரஸ்காரர்களுக்கு  எவ்விதத்திலும்  சொந்தமானதல்ல.  பாரதியார்  அதற்கு  காரியதரிசியாக  இருந்தாரேயொழிய  தலைவராக  இருந்தது  கிடையாது.  மற்ற  விவரங்கள்  எழுதியவருடைய  அபிப்பிராயங்களாகும்.

குடி  அரசுப்  பத்திரிகையில்  எப்பொழுதும்  சரியான  விவரங்களே  வரவேண்டுமென்பது  என்னுடைய  அவா.  அதனால்  இதனை  அவசியம்  பிரசுரிக்குமாறு  வேண்டிக்கொள்ளுகிறேன்.

பத்திராதிபர்  குறிப்பு:

தோழர்  பாரதியாரின்  விளக்கக்  கடிதத்துக்கு  வந்தனம்.  “”ஹரிஜன”  சேவா  சங்க  காரியதரிசியான  பாரதியாரைத்  தலைவர்  எனக்  குறிப்பிட்ட  தவறை  ஒப்புக்கொள்கிறோம்.

இந்தத்  தவறினால்  நமதபிப்பிராயத்துக்கு  எள்ளளவேனும்  பாதகமேற்படவில்லை  யென்பதை  தோழர்  உணரவேண்டும்.

உத்தியோகத் தோரணையில் “”ஹரிஜன” சேவா சங்கத்துக்கும்  காங்கிரசுக்கும்  எத்தகைய  சம்பந்தமும்  இல்லாதிருக்கலாம்.

ஆனால்  கிரியாம்சையில்  “”ஹரிஜன” சேவா  சங்கம்  காங்கிரஸ்காரரின்  குடும்பச்  சொத்து  என்று  தானே  மதிக்கப்பட்டு  வருகிறது.

வக்கீல்  சங்க  பார்ப்பன  அங்கத்தினரில்  பெரும்பாலார்  காங்கிரஸ்  அங்கத்தினர்  அல்லாதவராயிருப்பதினால்  நமது  அபிப்பிராயத்துக்கு  எத்தகைய  குந்தகமும்  ஏற்பட்டுவிடாது.

பார்ப்பனர்களாய்  பிறந்தவர்கள்  எல்லாம்  ஜாதித்  திமிர்  கொண்டவர்கள்  என்பதே  நமது  திடமான  அபிப்பிராயம்.  பிரஸ்தாப  தகறார்  மூலம்  தேவகோட்டை  வக்கீல்  சங்க  நிர்வாக  கமிட்டி  மெம்பர்  பதவியை  ராஜினாமாச்  செய்த  தோழர் எ. ரெங்கசாமி  அய்யங்கார்  போன்றவர்களைப்  புறநடை  என்று தான்  தள்ளவேண்டும்.  எனினும்  இவ்விஷயத்தில்  கண்ணியமாக  நடந்துகொண்ட  தோழர்  ரங்கசாமி  அய்யங்காரைப்  பாராட்டுகிறோம்.  வக்கீல்  சங்கப்  பொதுக்  கூட்டத்தில்  பிரஸ்தாப  விஷயம்  ஆலோசனைக்கு  வந்து  நிர்வாகக்  கமிட்டித்  தீர்மானம்  சரியென  ஒப்புக்கொள்ளப்பட்டால்  தோழர்  எ. ரங்கசாமி  அய்யங்கார்  வக்கீல்  சங்கத்திலிருந்தும்  விலகிவிடுவார்  என்றும் நம்புகிறோம்.

வக்கீல்  சங்க  நிர்வாக  கமிட்டியின்  தீர்மானம்  “”நியாயமற்றதென்றும்  அறிவிற்குப்  பொருத்தமற்றதென்றும்  சட்டதிற்கும்  அதிகார வரம்பிற்கும்  மீறியதென்றும்  அதனால்  அதைத்  தாங்கள்  மதிக்கப்போகிறதில்லை  யென்றும்  காரியதரிசிக்கு  அறிக்கையிட்ட  மூன்று  பிராமணரல்லாத  வக்கீல்களும்  அத்  தீர்மானத்தை  இதுவரை  மீறவில்லையானால்  இனியேனும்  மீறித்  தம்  சுயமரியாதையைக்  காப்பாற்றிக்கொள்ள  முன்  வருவார்களாக!

தேவகோட்டை வக்கீல் சங்க அங்கத்தினர் 83 பேரில் 80 பேர் பிராமணர்கள்  என்றும்  அவர்களில்  பலர்  தங்கள்  உபயோகத்திற்காக  தனிப்  பானைகள் வைக்க வேண்டுமென்று எழுத்து மூலம்  ஏற்கனவே  கேட்டிருப்பதாயும்  இந்த  விஷயம் சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் வந்தாலும் நிச்சயமாக இதே  விதமாகத்தான்  தீர்மானிக்கப்படும்  என்று  எதிர்பார்க்கும்  தோழர்  பாரதியார்  அதே மூச்சில் எல்லோரும் படித்தவர்களானதினாலும் அறிவாளிகள் ஆனபடியாலும்  பொதுச்சங்கத்தில்  இவ்வித  அறிவற்றதும்  வகுப்புத்  துவேஷத்  தன்மை யுடையதுமான  தீர்மானத்தை  நிறைவேற்றாமல்  இருப்பதற்கு  சந்தர்ப்பம்  ஏற்படலாம்  என்று  கூறுவது தான்  நமக்கும்  பெரிய  வியப்பாக  விருக்கிறது.

தோழர் பாரதியார்  எதிர்பார்க்கும்   சந்தர்ப்பம்  ஏற்படவேண்டா மென்பது  நமது  நோக்கமல்ல.  பொதுக்கூட்டத்தில்  பிரஸ்தாபத்  தீர்மானம்  கொண்டு வரப்பட்டு  உறுதி  செய்யப்பட்ட  பிறகாவது  தோழர்  பாரதியாரின்  மயக்கம்  தெளியுமானால்  அதுவே  நமக்குப்  போதுமானது.

குடி அரசு  பத்திராதிபர் குறிப்பு  22.12.1935

You may also like...