எதிர்ப்பை அடக்க புதிய சூழ்ச்சி

 

காங்கரஸ்காரர்கள் எப்படிப்பட்ட காலித்தனம் செய்தாலும் அதை பொது ஜனங்களின் கோபம் என்றும், ஆத்திரமென்றும் “தினமணி”யும் “சுதேசமித்திர”னும் “ஆனந்த விகட”னும் எழுதி வருகின்றன.

காங்கரஸ் காலித்தனங்களுக்குப் பொது ஜனங்களால் புத்தி கற்பிக்கப்பட்டால் அது சு.ம.காரர்கள் காலித்தனம் என்றும், சில நாளாக இந்தி எதிர்ப்பவர்கள் காலித்தனமென்றும் அப்பத்திரிகைகள் எழுதி வருகின்றன.

இந்தி எதிர்ப்பை அடக்க காந்தியாரும், ஆச்சாரியாரும் எடுத்துக்கொண்ட முயற்சிகள் எல்லாம் வீணாய் விட்டன. கனம் ஆச்சாரியார் புளுகுகளுக்கு இன்று பொது ஜனங்களிடம் அரைக்காசு மதிப்புக்கூட இல்லாமல் போய்விட்டதானது யாவருக்கும் தெரிந்துவிட்டது.

மாஜிஸ்ட்ரேட் நற்சாட்சிப் பத்திரம்

கனம் ஆச்சாரியார் இந்தி தொண்டர்கள் மீது அபாண்டப் பழி சுமத்தினார். பிரமுகர்கள் வீடுவீடாய் ஏன்? வெள்ளைக்காரர்கள் வீடு வீடாய் சென்று “இந்தி எதிர்ப்பாளர்கள் என்னையும் என் பெண்டுபிள்ளைகளையும் கண்டபடி பேசுகிறார்கள்” என்று நினைக்க முடியாத வார்த்தைகளை கட்டுக் கட்டி கூறினார். அவரது கூலிப்பத்திரிகைகளும் அவற்றை அப்படியே எடுத்துப் பெருக்கி விஷமப் பிரசாரம் செய்தன. அவ்வளவும் தோழர் ஈ.வெ.ரா.வின் ஒரு அறிக்கை மூலம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதுடன் அது முதல் ஆச்சாரியாரின் முக்காடும் இரட்டைத்துணி கொண்டுவிட்டது. இந்தி எதிர்ப்புத் தொண்டர்கள் ஒழுங்கு தவறாகவோ, அமைதிக்கு விரோதமாகவோ நடந்ததாக இதுவரை ஒரு ஆதாரமும் ஒரு புகாரும் கூட இல்லாமல் இருந்து வந்திருக்கிறது. ஏதோ கோர்ட்டில் ஒரு போலீசு அதிகாரி இந்தி எதிர்ப்பு பெண்கள், பார்ப்பன ஆட்சி ஒழிக என்று சொன்னார்கள் என்று சொன்னதையும் நீதிபதி நம்பவில்லை என்றும் இந்தி எதிர்ப்பாளர் குற்றமான வார்த்தைகள் சொல்லவில்லை என்றும் தீர்ப்புக்கூறி விட்டார்.

இந்தி எதிர்ப்பை அடக்க புதிய முறைகள்

இவ்வளவு கண்ணியமாகவும், ஒழுக்கமாகவும் நடந்துவரும் ஒரு கிளர்ச்சியை அடக்க இப்போது காங்கரஸ்காரர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும், காங்கரஸ் கூலிகளும் அவர்கள் தம் பத்திரிகைகளும் புதிய முறைகளைக் கையாள ஆரம்பித்துவிட்டன. 21-ந் தேதி “தினமணி” பத்திரிகையும், “இந்து” பத்திரிகையும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்காரர்கள் மீது பலாத்கார குற்றமும் காலித்தனக் குற்றமும் சுமத்தும்படியான சேதிகளைப் பிரசுரித்துவிட்டு 22-ந் தேதி பத்திரிகையில் இந்தி எதிர்ப்பு இயக்கத்தையே இன்னமும் கடினமான முறையில் அடக்க தலையங்கங்கள் எழுதுவதுடன் சில காங்கரஸ் கூலிகளின் கையெழுத்தின் பேரால் பல சேதிகளையும் பிரசுரித்துவர முயலுகின்றன.

21-ம் தேதி “தினமணி” பத்திரிகை முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும்போதே “இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வர வர கேவலமாய்க் கொண்டு வருகின்றன” என்று எழுதி இருக்கிறது.

நமது மகிழ்ச்சி

இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி செத்துப்போய்விட்டது என்று எழுதி எழவுக்குப் போய் துக்கம் விசாரித்து விட்டு வந்த “தினமணி” கண்ணுக்கோ காதுக்கோ இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இனியும் உயிரோடு இருப்பதும் அது வரவர மிக “மோசமாக”ப் போய்க் கொண்டிருப்பதன் மூலம் இன்னமும் வளர்ந்து விடுமோ என்று பயப்படுவதாகவும் தெரிவிக்கவேண்டிய நிலையில் இருக்கின்றது என்பதை அறிய மகிழ்ச்சி அடைகிறோம். சரியாகவோ சூழ்ச்சியாகவோ இந்தி எதிர்ப்பை அடக்க புதுமுறை வேண்டும் என்று அது ஆசைப்படுவதைப் பார்த்து இன்னமும் அதிக மகிழ்ச்சி அடைகிறோம். அதோடு கூடவே இந்தி கட்டாய நுழைவுக்குக் கர்த்தாவான கனம் ஆச்சாரியாரின் காலடியில் கிடக்கும் இலாகாவாகிய போலீசை அறைகூவி அழைத்து அது “தூங்குகிறதா” என்று கேட்கும்படியான தன்மையில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி இருப்பதாக ஒப்புக்கொண்டதற்கு மேலும் மகிழ்ச்சி அடைகின்றோம்.

“தினமணி”க்கு நன்றி

இந்தி எதிர்ப்பை அடியோடு ஒழிப்பதற்கு ஆக என்று இந்த “தினமணி” எவ்வளவு பெரிய அபாண்டப் புளுகு புளுகி மிக்க வன்னெஞ்சத்தோடு சாடி சொல்லி இருந்தாலும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி சாகவில்லை என்பதையாவது ஒப்புக்கொண்ட அதன் கண்ணிய தன்மைக்கு நாம் நன்றி செலுத்தாமல் இருக்கமுடியவில்லை. இன்று “தமிழ் மணி”க்கும் “சுதேசமித்திர”னுக்கும் இருக்கும் ஆசையும் நாளை “ஆனந்த விகடனி”லிருந்து நாம் அறியக் கிடக்கும் ஆசையும் என்னவென்றால் தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தெரிவித்ததுபோல் இந்தி எதிர்ப்பாளர்களை தூக்கில் போட வேண்டுமென்பது தான் என்பதாக நினைக்கவேண்டி இருக்கிறது. அதைப்பற்றி பின்னால் எழுதுவோம். முதலில் “தினமணி”யின் துவேஷ புத்தியையும் புளுகையும் கவனிப்போம்.

“தினமணி” 21-ந் தேதி பத்திரிகை இந்தி எதிர்ப்பாளர் ஊர்வலத்தில் 100 பேர்களே தான் இருந்து இந்தி ஒழிக, தமிழ் வாழ்க என்று கூச்சல்போட்டுக்கொண்டு வந்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது.

புள்ளி விவரப் புரட்டு

ஆனால் அதே தேதி “இந்து” பத்திரிகையில் ஊர்வலத்தில் 700 பேர்கள் இருந்தார்கள் என்றும் போகப்போக பெருகி விட்டது என்றும் இருக்கிறது. “தினமணி” ஆபீஸ் கட்டிடத்தில் நடைபெறும் “இந்தியன் எக்ஸ்பிரஸ்” பத்திரிகை 1000 பேர்கள் ஊர்வலத்தில் சென்றார்கள் என்று எழுதி இருக்கிறது. “மெயில்” பத்திரிகை ஊர்வலத்தில் 3000 பேர்கள் தொடர்ந்து சென்றார்கள் என்று எழுதி இருக்கிறது. அந்த “தினமணி” ஆசிரியர் இந்து பத்திரிகைக்கு கொடுத்த ஸ்டேட்மெண்டில் ஊர்வலத்தில் 200 முதல் 300 பேர்கள் என்று சொல்லி இருக்கிறார். ஏறக்குறைய இத்தனை பெரும் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சிக்கு எதிரிகளேயாகும் என்றாலும் “தினமணி”யின் துவேஷ புத்தி தலைசிறந்து விளங்குவதற்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை 100 பேர் என்று எழுதியதே போதுமானதாகும்.

கந்தபுராணப் புளுகு

மற்றும் ஊர்வலமாகச் சென்றவர்கள் மறுபடியும் “தினமணி” ஆபீசு பக்கம் வந்து ஆபீசுக்கு முன்னால் நின்று ஆபாசமாக கத்தினார்கள் என்று எழுதிவிட்டு இந்த “நூறு”பேருக்குப் பக்கத்திலிருந்த ஒரு வெள்ளக்கார இன்ஸ்பெக்டர், மூன்று சப் இன்ஸ்பெக்டர், ஐந்தாறு போலீஸ் ஜவான்கள் தான் இருந்தார்கள் என்றும் எழுதி இருக்கிறது. ஆகவே 100 பேருள்ள கூட்டத்திற்கு மேல் அதிகாரிகள் உள்பட 10பேர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது “தினமணி” சேதியிலேயே பச்சையாய் விளங்குகிறது. இந்த 10 பேர் பக்கத்தில் இருக்க 100 பேர் உள்ள கூட்டம் “திடீரென்று கீழே இருந்து கற்களை எடுத்து எறிய ஆரம்பித்தனர். 5 நிமிஷங்கள்வரை கற்கள் சரமாரியாக இருந்தது போலீசார் மெளனமாக இருந்தார்கள்” என்று எழுதி இருக்கிறது. வாசகர்களே இதை நம்புகிறீர்களா என்று கேட்பதைத் தவிர நம்மால் வேறு என்ன சமாதானம் எழுத முடியும்.

“ஜனவாணி” பாசுதேவ் கருத்துகள்

“ஜனவாணி” என்கின்ற தெலுங்கு தினசரிப் பத்திரிகை இச்சம்பவத்தைக் குறிப்பிடும் போது “ஊர்வலத்தின்மீது முதல் முதல் “தினமணி” பத்திரிகை காரியாலயத்தில் உள்ளவர்கள் தான் தண்ணீரை இறைத்தார்கள்” என்று எழுதி இருக்கிறது. தொழிலாளர் தலைவரும் ஒரு கார்ப்பொரேஷன் அங்கத்தினருமான தோழர் சி. பாசுதேவ் அவர்கள் நமக்கு அனுப்பி இருக்கும் ஒரு அறிக்கையில் தான் கொஞ்ச தூரத்தில் இருந்து வரும் போது “தினமணி” காரியாலயத்திலிருந்து கூட்டத்தின் மீது ஏதோ எறியப்பட்டதைப் பார்த்ததாகவும் அது ஈயத் துண்டுகள் என்று பின்னால் தெரிந்ததாகவும் எழுதியிருக்கிறது. “தினமணி” பத்திரிகை இச்சம்பவங்களுக்கு போலீசாரை கண்டபடி குறைகூறியிருந்தாலும் “மெயி”லும் “இந்து”வும் போலீசார் கூட்டத்தை உடனே கலைத்து விட்டார்கள் என்று எழுதி இருக்கின்றன.

போலீசார் மீது பழி

“தினமணி” ஆசிரியர் “இந்து” நிருபருக்குக் கொடுத்த பேட்டியின்போது “போலீசார்கள் வந்த உடன் கூட்டம் கலைந்துவிட்டது” என்று சொல்லி இருக்கிறார். ஆகவே போலீசார் கவலை எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கும் “போலீசார் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா?” என்பதற்கும் “போலீசார் தங்கள் கடமையைச் செய்யாததால் பாராட்டவேண்டியதில்லை” என்பதற்கும் என்ன ஆதாரம் என்ன உள் எண்ணம் என்பதையும் சிந்தித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டுகிறோம்.

ஒரு சப்இன்ஸ்பெக்டர் கதை

போலீசார்கள் மீது “தினமணி” குறை கூறுவதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. நம் விஷயத்திலும் போலீசாரின் அஜாக்கிரதையையும் அவர்கள் வேண்டுமென்றே நமக்கு தொந்திரவு கொடுத்து வருவதையும் நாம் பலமுறை அறிந்திருக்கிறோம். உதாரணமாக கோவை ஜில்லா இந்தி எதிர்ப்புப் படை சென்னிமலைக்கு வந்திருந்த சமயம் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் சில காலிகள் கூட்டத்தின்மீது, தோழர் ஈ.வெ.ரா. முதலியவர்கள் கூட்டத்தில் பிரசன்னமாயிருக்கும் போதே, கல், மண் வாரி இறைத்து பல இழிவான காரியங்கள் செய்ததை ஒரு சப்இன்ஸ்பெக்டர் லாந்தர் கம்பம்போல் இடுப்பில் கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தார். அவ்வளவு மாத்திரமல்லாமல் அந்த சப் இன்ஸ்பெக்டர் தைரியமாய் தானும் ஒரு காங்கரஸ்காரன் என்று சொல்லிக்கொண்டார். இதை டிப்டி சூப்ரண்ட்டிடம் சொன்னார்கள். அவர் கூட்டத்தை நடத்திக்கொடுக்க சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்கு உத்திரவு போட, சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அய்யங்கார் “என்னிடம் சொல்லாமல் சூப்பிரண்டிடம் சொல்லிவிட்டாயா? என்று கோபித்துக் கொண்டபோதிலும் சில போலீசாரை அனுப்பிக்கொடுத்தார். அவர்களும் வந்து லாந்தர் கம்பம் போல் நின்று காலிகள் அட்டகாசத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் காலித்தனம் 5 – மணி நேரம் தொடர்ச்சியாய் நடந்தது. பிறகும் டிப்டி சூப்ரண்டிடம் சொல்லப்பட்டது. அடுத்த நாள் நடத்திக் கொடுப்பதாய் சொன்னார். போலீஸ் இன்ஸ்பெக்டரும் வருவதாய் சொன்னார். அந்தப்படி வரவில்லை. மறுநாள் கூட்டத்திலும் பழையபடியே தொடர்ச்சியாய் காலித்தனம் நடந்தது. இன்ஸ்பெக்டர் வரவே இல்லை. கடைசியாக இன்ஸ்பெக்டர் கூட்டத்தில் நாங்கள் நின்றுகொண்டுதான் இருக்கமுடியுமே ஒழிய இதெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள்ளமுடியாது என்று சொல்லிவிட்டார். இதுவும் மேலதிகாரிகளுக்கு எழுதப்பட்டது. “விடுதலை”ப்பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டது. கடைசியாக என்ன ஆயிற்று? இந்தப்புகார்கள் குப்பைத் தொட்டிக்கு அணியாயிற்று என்றுதான் தெரிந்தது.

மனிதனுக்கு கூட்டம் போட்டு பேசும் உரிமை இல்லை என்று அக் கூட்டம் நடவாமல் செய்யும் காலித்தனங்களை அடக்க சட்டம் இல்லை என்றும் ஈரோடு போலீசு முடிவு கூறி விட்டது. இதை எந்த அதிகாரியும் ஏன் என்று கேட்டதாக தெரியவில்லை. ஜில்லா கலெக்டரும் கவனிக்கவில்லை.

எனவே இந்த காங்கரஸ் ஆட்சியில் போலீஸின் ஒழுங்கற்ற தன்மைக்கு கேள்வி கேட்பார் இல்லை என்பதற்கு நமக்கும் இதுபோன்ற பல உதாரணங்கள் உண்டு என்றாலும் சில சமயங்களில் ஏன் அதிக சமயங்களில் போலீசார் உதவியும் கிடைத்து வருகின்றது. ஆனால் அதற்கு போலீஸ் அதிகாரிகள் போலீஸ்காரர்கள் சுத்தமான பார்ப்பனரல்லாதாராய் இருந்தால்தான் முடிகிறது.

காங்கரஸ் பத்திரிகைகள் இழிசெயல்

அது எப்படியோ போகட்டும். இந்த சென்னை சம்பவங்களை பெருக்கி கூட்டிக் காட்டி அந்த சரக்கை வைத்துக்கொண்டு இந்தி எதிர்ப்பை ஒழிக்க புதிய முறை கையாளும்படி செய்வதற்காக காங்கரஸ் பத்திரிகைகள் செய்யும் இழிசெயலைக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.

22-ந் தேதி “சுதேசமித்திரன்” பத்திரிகை தனது உபதலையங்கத்தில் “இந்தியை எதிர்ப்பதாக சொல்லிக்கொண்டு வேண்டுமென்றே வகுப்பு துவேஷத்தை வளர்த்து வருகிறார்கள்” என்று எழுதிவிட்டு போலீசார் “இதற்கு என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டார்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்?” என்று கேள்க்கிறது.

நோக்கமென்ன?

ஆகவே இது இந்தி எதிர்ப்பு இயக்கத்தை வகுப்புத் துவேஷ இயக்கமென்று பேர் வைத்து ஒழிக்கச் செய்ய வழிகாட்டுவதா இல்லையா என்பது சிந்திக்கத்தக்கதாகும்.

“தினமணி” ஆபீசு மீது ஒருவன் அல்லது ஒரு கூட்டம் கல் போட்டதாகவே வைத்துக்கொண்டாலும் அது எப்படி வகுப்பு துவேஷமாகும் என்பது நமக்கு விளங்கவில்லை. “இந்த இயக்கத்துக்கு இனி பொது ஜனங்கள் ஆதரவு கொடுக்கக்கூடாது” என்று மக்களுக்கு இதோபதேசம் செய்கிறது “சுதேசமித்திரன்.”

“சுதேசமித்திரனி”ன் உபதேசம் கேட்டு இதுவரை ஒருவரும் இந்தி எதிர்ப்புக்கு உதவவும் இல்லை. இனியும் இதன் உபதேசம் கேட்டு உதவாமல் போகிறவர்களும் யாரும் இல்லை என்பது குருடனுக்கும் ஊமைக்கும்கூட தெரிந்த விஷயமாகும். ஆதலால் நாம் அதைப்பற்றி கவலைப்படவில்லை. இன்று “சுதேசமித்திரன்” ஜாதியாய் பார்ப்பனரைத் தவிர வேறு எந்த வகுப்பும் மானத்தோடு வாழக்கூடாது என்பது தான் தேசீயமாகவும் மற்றவர்களும் வாழ வேண்டாமா என்ற கருதுவது வகுப்பு துவேஷமாகவும் “சுதேசமித்திர”னுக்கு ஆகிவிட்டதைப் பற்றி நமக்கு கிஞ்சித்தும் கவலை இல்லை. அதற்காகவோ அதனால் ஏற்படப்போகும் பயனுக்கு ஆகவோ நாம் கிஞ்சித்தும் கவலை கொள்ளவுமில்லை. “வாழ்ந்தால் மானத்தோடு வாழ வேண்டும் இல்லாவிட்டால் தூக்கு மரத்திலோ அல்லது தூக்கிக்கொண்டோ சாக வேண்டுமென்று இருக்கிற “கோழை” களை இந்த “மித்திர”ன் ஜாதி என்ன செய்யமுடியும் என்றுதான் கோபுரத்தின் மீது நின்று கொண்டு அறை கூவுகிறோம். மக்களை இழிவுபடுத்துவதுடன் இல்லாமல் மானத்துடன் வாழவேண்டுமென்று முயற்சிக்கின்ற மக்களைச் சித்திரவதை செய்வதோடு அவர்களது அழுகையைத் திரித்துக் கூறி விஷமப்பிரசாரம் செய்து விட்டு தப்பித்தவறி ஏதாவது சிறிது தலையெடுத்தால் அடியோடு நசுக்கும் கொலை பாதகச் செயலுக்கு ஒப்பாக இவ்வளவு பெரிய அபாண்டப் பழியைப் போட்டு அடக்கச் செய்வது யோக்கியமா என்பதையும் அவ்வடக்குமுறை வெற்றி பெறப்போகின்றதா என்பதையும் ஒருகை பார்த்து விடவே நாம் இருந்து வருகிறோம்.

ஒரு வேண்டுகோள்

பொதுமக்கள் இதிலிருந்து உணர்ந்துகொள்ள வேண்டியது என்ன என்பதை சற்று சிந்திக்க வேண்டும்.

சமீபத்தில் சற்று கடினமான அடக்குமுறை ஏற்படப்போவது உறுதி. அதற்கு ஆக செய்யப்பட்ட சதியாலோசனை பெற்ற பிள்ளைகள்தான் இன்று “தினமணி” “மித்திரன்” “இந்து” எழுதுவதும் நாளைக்கு “விகடன்” எழுதப்போவதும், பல கூலிகளின் பெயர்களால் பல சேதிகள் வெளியிடப்போவவைகளுமாகும். இந்தி எதிர்ப்பாளர் இவைகளுக் கெல்லாம் எந்தக் காரணத்தைக் கொண்டும் பயப்படவோ பின் வாங்கவோ நிதானந் தவறவோ கண்டிப்பாகக்கூடாது என்பதை மனதில் இருத்தவேண்டும். பலாத்காரச் செய்கைக்கும் காலித்தனங்களுக்கும் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது; மனதிலும் நினைக்கக்கூடாது. ஆனால் நமது நியாயமான செய்கைகளுக்கு நம் எதிரிகள் கொலை பாதகத்தொழில் என்று பெயர் கொடுத்தாலும் அல்லது சத்தியமூர்த்தியார் சொன்னது போல் தூக்கில் போடத் தகுதியான மகா கொடுமையான செயல் என்று பெயர் கொடுத்தாலும் சிறிதும் மனம் கலங்கவோ பின்வாங்கவோ கூடாது என்பதற்கு ஆகவே இவ்வளவு எழுதுகிறோம்.

(23.10.1938 “விடுதலை”)

குடி அரசு – கட்டுரை – 27.11.1938

You may also like...