காங்கரசும் சுயமரியாதையும் மறுபடியும் வாக்குறுதி நாடகம்

 

காங்கரஸ்காரர்கள் அரசியலில் மத உணர்ச்சியைப் புகுத்தி புராண முறையில் பிரசாரம் செய்து பாமர மக்களை ஏமாற்றி தேர்தல்களில் வெற்றி பெற்று மானத்தை இழந்து மனிதத்தன்மையைப் பறிகொடுத்து மந்திரி பதவி பெற்றார்கள் என்பது நம் வாசகர்கள் யாவரும் ஏற்கனவே உணர்ந்த சேதியாகும்.

காங்கரஸ்காரர்களுக்கு பகுத்தறிவாவது சுயமரியாதை உணர்ச்சியாவது இருந்திருந்தால் அவர்கள் அவ்வளவு பெரும்பான்மையான ஓட்டுகளால் வெற்றிபெற்றிருந்தும் அவ்வளவு மெஜாரிட்டியாக அங்கத்தினர்கள் வந்திருந்தும் மந்திரி பதவி பெறுவதற்கு இவ்வளவு பெரிய சரணாகதி அடைந்திருக்க வேண்டிய அவசியமே ஏற்பட்டிருந்திருக்காது. மெஜாரிட்டி பெற்றுவிட்ட ஆணவத்தால் அரசியல் சட்டத்தைப் படித்துப் பார்க்காமலும் பின் விளைவை யோசித்துப் பார்க்காமலும் கவர்னரிடம் பயனற்ற வாக்குறுதி கேட்கப் போய் தாங்கள் மானக்கேடான வாக்குறுதி கொடுக்க ஏற்பட்டதோடு வைஸ்ராய் பிரபுவின் சாட்டை அடி வாங்கிக் கொண்டு சரணாகதி அடைந்து பதவி ஏற்க வேண்டியதாயிற்று.

பதவி ஏற்றது முதல் வந்தே மாதரம் பிரார்த்தனை, ஒன்றரைக் கோடி ரூபாய் கடன், பழய கடன் ஏற்பு முதல் மதுவிலக்கு, ஹிந்தி, புதிய வரிகள் விவசாயி கடன் குறைப்பு மசோதா வரையில், நாட்டுக்கு பயனற்றதும் கேடுகள் விளைவிக்கக் கூடியதும் கட்சிகள் வகுப்புக் கலவரங்கள் ஏற்படக்கூடியதுமான நிலைமைகளை உண்டாக்கி விட்டதோடு இன்று நாட்டில் காங்கரசின் செல்வாக்கும் குறைந்து மந்திரிகள் தங்கள் தலைகளை மறைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.

முஸ்லிம் மந்திரிக்கு முஸ்லிம்களிடையே செல்வாக்கும் மதிப்பும் இல்லாமல் போய்விட்டது. தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மந்திரிக்கு ஆதிதிராவிட சமூகத்திலேயே மதிப்போ மரியாதையோ இல்லாமல் போய்விட்டது. பார்ப்பனரல்லாத மந்திரிகளுக்கு பார்ப்பனரல்லாதார் சமூகத்திலேயே மதிப்பும் மரியாதையும் லட்சியமும் சிறிதும் இல்லாமல் போய்விட்டது. இவற்றையெல்லாம் விட ஒரு அதிசயமான விஷயம் பார்ப்பன மந்திரிகளிடம் பார்ப்பனர்களுக்கே மதிப்பும் செல்வாக்கும் இல்லாமல் போய்விட்டது என்பதாகும்.

இந்த நிலையில் இவர்கள் எல்லோருக்கும் பொது மக்களிடம் எவ்வளவு நம்பிக்கை இருக்க முடியும்? எவ்வளவு செல்வாக்கு இருக்க முடியும்? என்பதை நாம் விளக்கிக் காட்ட வேண்டியதில்லை. அவர்கள் செல்லுமிடங்களில் அவர்களுக்கு நடக்கும் மரியாதைகளைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். இந்த இரண்டு மூன்று மாத காலத்தில் மந்திரிகளின் சுற்றுப்பிரயாணம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்துவிட்டது. அவர்களது மேடைப் பிரசங்கங்கள் சுவர்களும், கதவுகளும் போட்ட அறைக்குள் நடக்க வேண்டிய நிர்ப்பந்தங்களும் ஏற்பட்டுவிட்டது. ஜனக்கூட்டம் அதிகாரிகளும் அவ்வவ்விடத்து காங்கரஸ்காரர்களும் மாத்திரம் கொண்ட கூட்டமாக ஆகிவிட்டது.

அவ்வளவு பெரிய மெஜாரிட்டியும், அவ்வளவு பெரிய பொது ஜன ஆதரவும் பெற்ற காங்கரஸ் மந்திரிகளின் யோக்கியதையும், செல்வாக்கும் இவ்வளவு சீக்கிரம் அதாவது ஒரு 4,5 மாத காலத்துக்குள் இந்த கதியை அடையும் என்று ஒருவரும் எண்ணி இருக்கமாட்டார்கள். ஆனால் காலநிலை, அவர்களை காங்கரஸ்காரர்களை இந்த கதிக்கு ஆளாக்கிவிட்டது.

இதற்கு காரணம் காங்கரஸ்காரர்களுக்கு நிர்வாக ஞானம் இல்லாமையும், பொய் பேசவும், காலித்தனம் செய்யவும் சட்டம் சமாதானத்துக்கு மாறாய் நடந்து கொள்ளவும் அதிகமான துணிவு கொண்டதுமேயாகும்.

காங்கரசின் அரசியல் ஞானமெல்லாம் அரசியலைக் குலைப்பது, சட்டங்களை மீறுவது, கட்டுப்பாடுகளை மறுப்பது, நிர்வாகங்களில் புகுந்து குழப்பம், கலவரம், காலித்தனங்கள் செய்து நிர்வாகிகளுக்குத் தொல்லை விளைவிப்பது, பொறுப்பும் ஞானமும் அற்ற இளைஞர்களையும், கஞ்சிக்கு வகையற்ற ஆள்களையும், பொது ஜனங்களிடம் செல்வாக்கும் மரியாதையும் இல்லாத ஆட்களையும், பதவிக்கும், சுயநலத்துக்கும் மானத்தை விற்றுத் தங்கள் சமூகத்தையும், சமூக நலத்தையும் தியாகம் செய்யும் மிராசுதார் – பெரிய மனிதர் என்கின்ற பேர்வழிகளையும் சேர்த்துக்கொண்டு செய்து வந்த அட்டூழியங்களும் அவற்றின் அனுபவங்களும்தான் என்று சொல்ல வேண்டும்.

எப்படியோ காங்கரஸ் பதவிக்கு வந்ததும், அவர்களுக்கு இந்த அனுபவ ஞானம் தவிர வேறு அனுபவ ஞானமில்லாததால் சகலத்திலும் தோல்வியும், பொது ஜனங்களுடைய ஆதரவை இழப்பதுமான காரியத்துக்கு ஆளாக வேண்டி வந்துவிட்டார்கள்.

இன்று பீகாரிலும், மத்திய மாகாணத்திலும் மந்திரிகள் ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்பது யோசிக்க வேண்டிய விஷயமாகும். அங்கு மந்திரிகள் ராஜினாமா செய்வதற்காக சர்க்காருக்கும் மந்திரிகளுக்கும் எவ்வித நெருக்கடியும் ஏற்பட்டுவிடவில்லை. 15 கைதிகளை ஏக காலத்தில் விடுதலை செய்ய கவர்னர் சம்மதிக்காததினாலேயே மந்திரிகள் ராஜினாமா செய்வது என்பது உண்மையான காரணமாய் இருக்குமென்று எந்த மூடனும் நம்பமாட்டான். இது ஒரு சமயம் காந்தியார் தண்டிக்கப்பட்டு ஜெயிலில் இருந்தபோது காலம் கடக்கு முன் வெளிவர ஆசைப்பட்டு “அரிஜனங்களுக்கு வேலை செய்ய பூரண சுயேச்சை கொடுக்காதவரை சாகும்வரை உண்ாணவிரதம் இருப்பேன்” என்று சொல்லி பட்டினி கிடந்து விடுதலையாகி வெளிவந்த தந்திரம் போல் ஒரு தந்திரமான காரியமாய்த்தான் இருக்க முடியுமே ஒழிய இதில் வேறு எவ்வித நாணயமும் இருக்க இடமில்லை என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. ஏனெனில் சென்னையில் சென்னை மந்திரிகள் அரசியலின் பேரால் கைதிகளை ஏற்படுத்தி ஜெயிலுக்குள் தள்ளிவரும் போது ஐக்கிய மாகாணத்திலும், பீகாரிலும் ஏற்கனவே இருந்த கைதிகள் வெளிவராதது அவ்வளவு பெரிய அவமானகரமான காரியமா? அல்லது காங்கரஸ் வேலைத்திட்ட நிறைவேற்றத்துக்கு அவ்வளவு பெரிய தவறா என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.

தோழர் பாட்டிலிவாலாவும், தோழர் கிருஷ்ணபிள்ளையும் பலாத்காரத்தில் நம்பிக்கை உடையவர்கள் அல்ல. பலாத்காரம் ஏற்படுத்தியவர்களும் அல்ல. அவர்களது பேச்சால் செயலால் பலாத்காரம் ஏற்பட்டு விடவும் இல்லை. அவர்கள் தங்கள் வாக்காலேயே தாங்கள் பலாத்காரத்தை பிரசாரம் செய்யவில்லை என்றும் பிரசாரம் செய்பவர்கள் அல்லவென்றும் சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருக்க சென்னை அரசாங்கம் அவர்களைத் தண்டித்து ஜெயிலில் வைத்து பொறுத்துக் கொண்டு, அனுமதித்துக் கொண்டு சென்னை மந்திரிகள் இருக்கும்போது, இதனால் மந்திரிகளுக்கும் காங்கிரசுக்கும் ஏற்பட்டிருக்காத அவமானமும், திட்டம் நிறைவேறாத குற்றமும் பீஹாருக்கும் ஐக்கிய மாகாணத்துக்கும் மாத்திரம் எப்படி ஏற்பட்டுவிட்டது என்பது நமக்கு புலப்படவில்லை. ஆகவே மேல்கண்ட இரு மாகாண மந்திரிகள் ராஜிநாமா என்பது ஏதோ ஒரு சூழ்ச்சியையோ வேறு உள் எண்ணத்தையோ ஏதாவது ஒரு நிர்ப்பந்தத்தையோ பொறுத்ததாகத்தான் இருக்க வேண்டும் என்பது நமது அபிப்பிராயம்.

இந்த ராஜிநாமா திடீர் என்று ஏற்பட்டு விடவும் இல்லை. மந்திரிகளின் இஷ்டத்தை கவர்னர்கள் மறுத்ததானது மந்திரிகளின் இஷ்டம் கவர்னர்களுக்கு தெரிந்து, அதை அவர் வைசிராய்க்கு தெரிவித்து, வைசிராய் இந்தியா மந்திரிக்குத் தெரிவித்து, இந்தியா மந்திரி பிரிட்டிஷ் மந்திரிக்கு தெரிவித்து, அவர் தனது கேபிநட்டுக்குத் தெரிவித்து பிறகுதான் ஒரு முடிவுக்கு வந்த தீர்மானமாக இருக்க வேண்டும்.

அதுபோலவே மந்திரிகள் தங்கள் இஷ்டத்தை கவர்னர் ஏற்றுக்கொள்ளாமல் வைசிராய்க்கு அனுப்பி இருப்பதும், வைசிராய் மறுத்து இருப்பதும் காரியக்கமிட்டிக்கு தெரிவித்து, தலைவர் ஜவர்லாலுக்கு தெரிவித்து, காந்தியாருக்குத் தெரிவித்து அத்தனை பேருடைய அபிப்பிராயமும் கலந்து ஒரு முடிவுக்கு வந்து, மந்திரிகளுக்கு அனுமதி கிடைத்த பிறகே அவர்கள் ராஜிநாமா செய்தவர்களாக இருந்திருக்க வேண்டும்.

இந்த நிலையில் ஏற்பட்ட ராஜிநாமாவைப் பற்றி இனி வைசிராய்க்கும், கவர்னர்களுக்கும், மந்திரிகளுக்கும் மறுபடியும் என்ன பேச்சு வார்த்தையோ ராஜியோ இருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை.

தோழர் காந்தியார் ராஜிநாமா ஏற்பட்ட மறுதினமே தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்துவிட்டார். அதாவது “நாளை பம்பாயும், மறுநாள் சென்னையும் ராஜிநாமாக் கொடுக்க வேண்டியதுதான்” என்று சொல்லி விட்டார்.

அப்படி இருக்க இப்போது “கவர்னர்களிடம் மந்திரிகள் பேசிப் பார்க்க வேண்டியது. பேசிய முடிவைக் கொண்டு மந்திரிகள் தங்கள் தங்கள் இஷ்டப்படி நடந்து கொள்ள வேண்டியது” என்று காந்தியார் சொல்லுகிறார். காங்கரஸ் தலைவர் சுபாஷ் போஸ் அவர்கள் “காங்கரசும் ஜனங்களும் நினைப்பதை காந்தியாரே சொல்லிவிட்டார். இனி நான் என்ன சொல்லுவது” என்று சொல்லிவிட்டு “இதைப்பற்றி பண்டிதர் ஜவர்லாலுடனும், காரியக் கமிட்டியுடனும் விவாதிக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டார். ஜனங்கள் நினைப்பதையும், காங்கரஸ் கருதுவதையும் காந்தியார் சொன்ன பிறகு அதை சுபாஸ் போஸ் ஒப்புக்கொண்ட பிறகு, இனி எதற்காக பண்டித நேருவையும், காரியக்கமிட்டியையும் கேட்க வேண்டும்? இதனால் போஸ் பாபு அபிப்பிராயம் என்ன? காந்தியார் அபிப்பிராயம் என்ன என்பது வெளிப்படுத்தப்படவில்லை என்பதும் காந்தியாருக்கும் போஸ் பாபுவுக்கும் இவ்வபிப்பிராயம் பிடிக்கவில்லை என்பதும் நன்றாய் விளங்குகிறது.

“இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காரியக் கமிட்டி தீர்மானிக்கும்” என்று போஸ் பாபு கூறுகிறார். கவர்னர்களுடன் கலந்து பேசி மந்திரிகள் அவரவர்கள் இஷ்டப்படி நடந்து கொள்ள காந்தியார் உத்திரவு போட்டுவிட்ட பிறகு சுபாஷ்பாபும் மேலால் உத்திரவு போட்டுவிட்ட பிறகு காரியக் கமிட்டிக்கு இதில் இனி என்ன வேலை இருக்கிறது? என்று கேட்கிறோம்.

ஆகவே, இவைகளைப் பார்த்த பிறகு காங்கரஸ் வகை தெரியாமல் மாட்டிக் கொண்டது; அதன் ராஜிநாமா நாடக சூழ்ச்சி பலிக்கவில்லை என்றும் காரணம் சென்னை ஆச்சாரியார் ஏதோ மத்தியில் கரடிவிட்டு, வடநாட்டார், பண்டித நேரு, காந்தியார், காரியக்கமிட்டியார் ஆகியவர்களின் அபிப்பிராயத்தில் இஷ்டத்தில் – கொள்ளியை வைத்திருக்க வேண்டும். அதனால் காந்தியார் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடி இம்மாதிரி உளறி இருக்க வேண்டும் என்றும் கருத வேண்டியிருக்கிறது.

இது தவிர இந்த “நெருக்கடி”யைத் தீர்த்துக் கொள்வது பற்றி காங்கரஸ்காரர்கள் வைஸ்ராயுடன் ராஜி செய்து கொள்ள எடுத்துக் கொண்ட முயர்ச்சியிலும் காங்கரஸ் படுதோல்வி அடைந்து இருக்கிறது. காங்கரஸ்காரருடைய நிபந்தனைகள் ஒன்றையும் வைஸ்ராய் ஒப்புக் கொள்ளவில்லை.

வைஸ்ராய் மந்திரிகளின் உத்திரவை ஏற்றுக்கொள்ளாததற்குக் காரணம் கூறுகையில் மந்திரிகள் இஷ்டப்படி எல்லாக் கைதிகளையும், எக்காலத்திலும் விட முடியாதென்றும் ஒவ்வொரு கைதியையும் பற்றிய விஷயங்களையும் தனித் தனியே பரிசீலனை செய்து பார்த்துத்தான் முடிவு செய்யப்படும் என்றும் சொல்லி மறுத்திருக்கிறார்.

“கைதிகளை விடுதலை செய்ய கவர்னர்கள் மறுத்தது நியாயமேயாகும். முடிவான பொறுப்பு அவருக்கே உண்டு. கவர்னருக்கு இருந்து வரும் பொறுப்புக்கு உட்பட்டுத்தான் மந்திரிகள் நடந்துகொள்ள வேண்டியவர்களாவார்கள்.”

என்று பளீரென்று கன்னத்தில் அறைந்தது போல் வைஸ்ராய் அறிக்கை விட்டிருக்கிறார். இந்நிலையில் காங்கரஸ்காரர்களுக்கு சுயமரியாதையோ, அரசியல் மானமோ இருக்குமானால் ராஜிநாமாவை வாபஸ் வாங்க வேண்டியதா அல்லது வெளியில் வந்து அரசியல் சட்டத்தை “உடைத்து நொறுக்க” வேண்டியதா என்பதை வாசகர்களே முடிவு செய்து கொள்ள விட்டுவிடுகிறோம்.

பின் வந்த செய்தியினால் பீஹார் ஐ.மா. மந்திரிகள் கவர்னர்களிடம் சரணாகதியடைந்து கைதிகளை விடுதலை செய்ய பேரம் பேசுவதாகத் தெரிகிறது. இதில் எவ்வளவு யோக்கியப் பொறுப்பு, நாணயம், ஆண்மை உண்டென்பதையும் வாசகர்கள் முடிவு செய்து கொள்ளும்படி விட்டுவிடுகிறோம்.

காங்கரஸ் அரசியலால், காந்தியாரின் பார்ப்பன அடிமைத்தனத்தால் இந்தியாவின் மானமே சந்தி சிரிக்கும்படியாக ஆகிவிட்டது. இந்தியாவின் சுயராஜியமும், பூரண சுயேச்சையும் ஏகாதிபத்திய ஒழிப்பும் ஏதோ நாலு பார்ப்பனர்கள் தங்கள் பிள்ளை குட்டிகளுக்கும் தங்கள் இனத்துக்கும் வேலை தேடுவதை முக்கிய கொள்கையாகவும் அதற்கு ஏற்ற பலவித சூழ்ச்சி செய்து அடிக்கடி மானங்கெட்டு, மரியாதை இழந்து சந்தி சிரிப்பதே வேலைத் திட்டமாகவும் ஆகிவிட்டது.

குடி அரசு – தலையங்கம் – 27.02.1938

 

You may also like...