பார்ப்பனரும் வகுப்புவாதமும்

 

நமது காங்கரஸ் (பார்ப்பன) பத்திரிக்கைகளுக்கு வகுப்புவாதம் கிடையாது. வகுப்பு துவேஷமும் கிடையாது என்பதற்கு உங்களுக்கு உதாரணம் கூறவேண்டுமானால் சொல்லுகிறேன் கேளுங்கள்.

இந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகள் கொச்சி திவான் சர். ஷண்முகத்தையும், மைசூர் திவான் சர். மிர்சா இஸ்மாயிலையும் தான் கண்டிக்குமே தவிர, திருவனந்தபுரம் திவான் சர்.வி.டி.கிருஷ்ணமாச்சாரியையும், காஷ்மீர் திவான் கோபாலசாமி அய்யங்காரையும் கொஞ்சங் கூட கண்டிக்காது. அவர்கள் சொந்த முறையில் கூட எவ்வளவு கெடுதலாய் நடந்து கொண்டாலும் அவர்களைப் பற்றி ஒன்றுமே பேசாது.

அன்றியும், கொச்சி, மைசூர் இரண்டிலும்தான் காங்கரஸ்காரர்கள் தொல்லை விளைவிப்பார்களே தவிர மற்ற அய்யர், ஆச்சாரி, அய்யங்கார் திவானாயுள்ள இடங்களில் சிறிதும் தலைகாட்டாது. ஏனென்றால் பார்ப்பனருக்கு வகுப்புவாதம் கிடையாதல்லவா? எந்த வகுப்புவாதம் என்றால் பார்ப்பனருக்குள் அய்யர், அய்யங்கார், ஆச்சாரி, ராவு, ராயர், சர்மா, ஜடாவல்லபர், தீக்ஷதர், ஸரெளத்திரி முதலிய எந்த வகுப்பு ஜாதியாரானாலும் அவர்களுக்குள் மாத்திரம் வகுப்புவாதம் என்பது சிறிதுகூட கிடையவே கிடையாது. ஆனால் இவர்கள் அல்லாத வேறு எந்த வகுப்பானாலும் என்ன செய்தாவது மானத்தை, கற்பை, ஒழுக்கத்தை, நாணயத்தை காசுக்கு ஒரு வண்டி வீதம் விற்றாவது வகுப்புவாதம் கிளப்பாமல் இருக்கமாட்டார்கள்.

ஆகவே காங்கரசுக்கோ, பார்ப்பனர்களுக்கோ வகுப்புவாதம் இல்லை என்கின்ற கருத்துரையை உணர்வார்களாக.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 13.03.1938

You may also like...