சேலம் ஜில்லா பள்ளர் சமூக மகாநாடு

 

தோழர்களே!

ஜாதி வகுப்பு சம்பந்தமான இம்மாதிரி மகாநாடுகள் கூட்டப்படுவது தேசாபிமானத்திற்கு விரோதமானதென்று சில தேசீயவாதிகளும், தேசபக்தர்களும் குறை கூறுகிறார்கள். நான் அவர்களை ஒன்று ஞானமில்லாதவர்களாக இருக்க வேண்டும், அல்லது தேசீயத்தின் பேரால் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் பழமை விரும்பி, சோம்பேறிக் கூட்டத்தினராக இருக்க வேண்டும் என்றே கூறுவேன். இன்று இந்நாட்டில் நூற்றுக்கணக்கான ஜாதிகள் இருப்பதும், அவர்களுக்குள் ஒன்றுக்கொன்று மலையும் மடுவும் போன்ற வித்தியாசங்களும் ஒருவரை ஒருவர் கொடுமைப்படுத்துவதும், ஒருவர் உழைப்பில் ஒருவர் வாழ்வதுமான அக்கிரமங்கள் இன்று இருந்து வருகின்றது என்பதையும் மறைக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். இக் கொடுமைகள் எவ்வளவு காலமாக இருந்து வருகிறது. இதையொழிக்க இது வரையில் யார் முன்வந்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். தாங்கள் வேறு ஜாதி நீங்கள் வேறு ஜாதி; தங்களுக்கு வேறு உரிமை, வேஷம் என்று எண்ணாத தேசபக்தர்களோ, மகாத்மாக்களோ யாராவது இருக்கின்றார்களா என்பதை யோசித்துப் பாருங்கள்.

இந்நிலையில் அவரவர்களது கஷ்டங்களுக்கு அவரவர்கள் பரிகாரம் தேடிக் கொள்ளாமல் வேறு என்ன செய்ய முடியும். இக்கொடுமைகள் ஒழிக்கப்பட கஷ்டப்படும் மக்கள் சுகப்படும் ஆள்களையும், கீழ்ஜாதிக் காரரென்னும் மக்கள் மேல் ஜாதிக்காரரென்னும் ஆளுகளையும் நம்பி எதிர்பார்த்து, வணங்கி, பக்தி செலுத்தி, அவர்கள் சொற்படிக் கேட்டு நடந்து, பல விதத்திலும் பார்த்தாய்விட்டது. அப்படியிருக்க ஜாதிமத வகுப்புகள் மகாநாடு கூடுவது தேச நலத்திற்கு விரோதம் என்றால்  “”பழையபடி  இருங்கள்”  என்றுதானே  அர்த்தம்.  ஆகவே  நீங்கள்  தேசாபிமானம் என்று சொல்லிக் கொண்டு பழையபடியே இருப்பதா? அல்லது தேசத் துரோகம்  என்று சொன்னாலும் அதை லட்சியம் செய்யாமல் உங்கள் ஜாதி வகுப்பு மகாநாடுகள் கூடி உங்களுடைய கஷ்டங்களிலும், இழிவுகளிலும் இருந்து விடுதலை பெறுவதா என்பதுதான் உங்களுடைய முக்கிய பிரச்சினையாக இருக்க வேண்டும். ஜாதி மதம் வகுப்பு ஆகிய பிரிவுகள் எல்லாம் ஒழிந்து மக்கள் யாவரும் சமம் என்கிற நிலைமை சட்டபூர்வமாய் ஏற்படும் வரை கஷ்டப்படும், இழிவுபடும் ஜாதி மத வகுப்புக்காரர்கள் தங்கள் தங்கள் சமூக மகாநாடுகள் கூட்டி கஷ்டங்களினின்றும் இழிவுகளினின்றும் விடுபட வேண்டியது இன்றியமையாததாகும். உயர்ந்த ஜாதியார்கள் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் தங்களுடைய உயர்வும், ஆதிக்கமும் குறையாதிருப்பதற்கு சதா மகாநாடுகள் கூட்டி மற்றவர்களை தாங்கள் இழிவுபடுத்துவதையும், மற்றவர்கள் போல் தாங்கள் ஆதிக்கம் செலுத்துவதையும் நிலைநிறுத்த முயற்சித்து வருகிறார்கள்.

ஆதலால் அதிலிருந்து தப்புவதற்கு இம்மாதிரியான மகாநாடுகள் கூட்டப்பட வேண்டுமென்பதே எனது அபிப்பிராயமாகும். நானோ ஜாதி மதம், அவற்றிற்காதாரமான  கடவுள்கள் என்பவைகள் எல்லாம் ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறவன். அப்படிப்பட்டவன் இந்த ஜாதி மகாநாட்டிற்கு எப்படி வரக்கூடும் என்று சிலர் கேட்கலாம். ஜாதி மதக் கொடுமைகளையும், அவற்றிற்காதாரமான கடவுள்களையும், புரட்டுகளையும் உங்களுக்கு விளக்கி அவ்வித கட்டுப்பாடுகளிலும், மூட நம்பிக்கைகளிலும், குருட்டு பழக்க வழக்கங்களிலிருந்தும் விடுபடச் செய்ய வேண்டும் என்கின்ற ஆசையின் பேரிலேயே வந்திருக்கிறேனே ஒழிய வேறில்லை.

“”தேசபிமானிகள் என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்”காரர் என்பவர்கள் உங்களை காங்கிரஸில் சேரும்படி அழைக் கிறார்கள். உங்களில் பல தலைவர்களுக்கு காங்கிரஸ் தேசாபிமானம் இல்லை என்று கூறுகிறார்கள். நீங்கள் தைரியமாக தேசாபிமானிகள் அல்ல என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். காங்கிரசுக்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதை பட்டவர்த்தனமாய் வெளிப்படுத்திவிட வேண்டும். இத் தேசத்தில் உங்கட்கு அடிமை உரிமை தவிர, இழிவு நிலைமை தவிர, உழைத்து மற்றவர்களுக்குப் போட வேண்டுமென்கிற மத உரிமை தவிர, வேறொன்றும் கிடையாது.

அப்படிப்பட்ட தேசத்தினிடம் நீங்கள் அபிமானம் காட்டுவதோ, பக்தி காட்டுவதோ நீங்கள் மனிதத் தன்மை அற்றவர்கள் என்பதையும் சுயமரியாதையற்ற மக்கள் என்பதையும் காட்டுவது தவிர வேறில்லை. உங்கள் தேசாபிமானம் உங்களை மிருகக் கூட்டங்களில் தான் சேர்க்கும். உங்களுக்கு இன்று ராஜாபிமானந்தான், ராஜ பக்திதான், ராஜ விஸ்வாசம்தான் ராஜாங்கத்திற்கு நன்றி செலுத்தும் அறிவு தான் முக்கியமாய் வேண்டியதாகும். பிரிட்டிஷ் அரசாங்கம் உங்களுக்கு பல நன்மைகளைச் செய்து மேல் ஜாதிக்காரர்களுடையவும், மதங்களினுடையவும், கடவுள் கட்டளைகளினுடையவும் கொடுமையிலிருந்து உங்களை விலக்கி மனித சமூகத்தில் சேர்த்து வருகிறவர்கள், மேல் ஜாதிக்காரர்களால் வெறுக்கப்படும், ஒழிக்க முயற்சிக்கப்படும் அன்னிய அரசாங்கம் என்பதேயாகும். ஆகவே அப்படிப்பட்டவர்களை இனியும் நம்பியிருக்க வேண்டியது உங்களுடைய கடமையாகும். நான் ராஜத் துரோகியாக இருக்கலாம். எனக்கு இந்த கவர்ன்மெண்ட் முறைகள் பிடித்தமில்லாமல் இருக்கலாம். மற்றும் அரசாங்கத்தைப் பற்றிய என்னுடைய அபிப்பிராயங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைப்பற்றி உங்கட்கு கவலை வேண்டாம். அரசாங்கமும்  நானும் எனது சொந்த முறையில் எப்படியோ நடந்து கொள்ளுகிறோம்.

உங்களைப் பொருத்த வரையில் உங்கட்கு ஒரு மதம் தேவையானால் இராஜ விஸ்வாசத்தையே மதமாய்க் கொள்ளுங்கள். உங்கட்கு ஒரு கடவுள் பக்தி வேண்டுமானால் வெள்ளைக்காரர்களையே கடவுளாகக் கொண்டு பக்தி செலுத்துங்கள். கொஞ்ச காலத்திற்கு முன் இம்மாதிரியான இராஜ விஸ்வாசமும், இராஜ பக்தியும் காட்டின பார்ப்பனர்களும், படித்தவர்களும், முதலாளி ஜமீன் கூட்டங்களும்தான் இன்று மேல் ஜாதிக்காரராகி, பெரிய உத்யோகஸ்தர்களாகி கொழுத்து, பருத்து தேச பக்தர்கள் என்றும், அன்னியாட்சியை ஒழிக்கும் ராஜ துவேஷிகள் என்றும் மக்களை ஏமாற்றி  இருக்கிறார்கள். அக் கூட்டத்திற்கு இன்று யாதொரு குறைவும் இல்லை யாதலால் இராஜ விஸ்வாசம் காட்ட வேண்டிய யாதொரு அவசியமும் இல்லாமல் போய்விட்டது. தங்களுடைய ஆதிக்கத்திற்கு ஆபத்து வராமல் இருப்பதற்கு மாத்திரம் கொஞ்சம் கொஞ்சம் காட்டி அரசாங்கத்தை மிரட்டி வருகிறார்கள் என்றாலும் இன்றைய தேசாபிமானிகள் எல்லோரும் ராஜத் துவேஷ குற்றத்திற்கு சிறை சென்றவர்கள் முதல் மகாத்மாக்கள் வரை ராஜ விசுவாசம் மாத்திரம்  அல்லாமல், ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்து கொண்டும், செய்ய அநுமதித்துக் கொண்டும்தான் இருக்கிறார்கள்.

உலகம்  போற்றும்  உத்தமர்  என்பவரான  காந்தி  மற்ற  உலகம்  போற்றும் “”தேச பக்தர்” என்கின்ற சத்தியமூர்த்தியவர்கட்கு ராஜ விஸ்வாசப் பிரமாணம் செய்ய அநுமதி கொடுத்து தேசப் பக்திக்கே உருவானவரும், தேசாபிமானமே மதமாய்க் கொண்டவரும், பிரிட்டிஷ் ராஜாங்கத்தை ஒழித்து மனுதர்ம ராஜியத்தை நிலைநாட்ட கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவருமானவர் என்று சொல்லப்பட்ட தோழர் சத்தியமூர்த்தி யவர்கள், கல்லுப் போன்ற ராஜா விசுவாசப் பிரமாணம் செய்திருக்கிறார் என்றால் உங்களைப் போன்றவர்கள் அழுகிப் புழுத்த மலத்தினும் கேடாக மதிக்கப்படுபவர்கள் ராஜா விசுவாசிகளாக இருப்பதிலோ ராஜ பக்தி காட்டுவதிலோ, நன்றி விசுவாசம் காட்டுவதிலோ ஏதும் கெடுதி இருப்பதாக நானும் நினைக்கவில்லை. ஒரு சமயம் காந்தியாரும், சத்தியமூர்த்தியும் முறையே பொய்ப் பிரமாணம்தான் செய்வேன் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அப்படிப்பட்ட கேவல நிலை உங்களுக்கு வேண்டாம் நான் உங்களை  மெய்ப் பிரமாணமே  செய்து மெய்யர்களாகவே  இருக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்.

அதனால் ஏற்படும் பாவத்திற்கு நான் அஞ்சவில்லை; நீங்களும் அஞ்ச வேண்டியதில்லை; நீங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் காங்கிரசுடனோ, தேசாபிமானக் கூட்டத்துடனோ, தேச பக்தர் தொண்டர் களுடனோ கண்டிப்பாய் சேரக் கூடாது.

உங்கள் நலன் பாதிக்கப்பட வேண்டுமானால் உங்களுடைய இழிவு நிலை நிறுத்தப்பட வேண்டுமானால் நீங்கள் காங்கிரஸுடன் சேருங்கள். உதாரணமாக “”பூனா ஒப்பந்தத்தில் உங்கள் தலைவர்கள் காங்கிரஸ்காரர் களுடன் சேர்ந்ததின் கதி என்னவாயிற்று? அரசாங்கத்தாரால் கொடுக்கப்பட்ட உங்களுடைய உயிர் போன்ற நன்மை பறிக்கப்பட்டுவிட்டது.

காங்கிரஸ்காரர்களால், மகாத்மாக்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதியும், ஒப்பந்தமும் தவறப்பட்டுவிட்டது. காங்கிரஸ்காரரும் காந்தியாரும் “”கையை வளையுங்கள் பார்ப்போம்” என்று வீரம் பேசுகிறார்கள். உங்கள் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் இப்போதுதான் புத்தி வந்து தாங்கள் செய்த தவறுதலான காரியத்துக்கு வருந்துகிறார்கள். பூனா ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட தலைவர்கள் இன்று என்னைக் கண்டால் வெட்கப்படுகிறார்கள்.

நான் ஐரோப்பாவிலிருந்து தோழர் அம்பேத்காருக்கு “”6, 7 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிரானது காந்தியாரின் உயிரைவிடக் கேவலமானதல்ல; காட்டுமிராண்டித்தனமான பூச்சாண்டிகட்குப் பயந்து சமூகத்தைக் கொலை செய்து விடாதீர்கள்” என்று தந்தி கொடுத்திருந்தேன். அதை வாங்கிப் பார்த்துக் கொண்டே மகாத்மாவின் “”பொக்கவாய்ச் சிரிப்பில்” மயங்கியும் மாளவியாஜி,  ராஜகோபாலாச்சாரியார்ஜி போன்ற பிரகஸ்பதிகளின் ஆசீர்வாதத்திற்கு ஏமாந்தும், கையெழுத்துப் போட்டதும், உங்கள் விடுதலையை பாழாக்கி விட்டது. கைக்கெட்டியது வாய்க்கெட்ட வில்லை” “”சாமி கொடுத்ததை பூசாரி மோசம் செய்து விட்டார்”.  இப்பொழுது புத்திவந்து என்ன பயன் என்பது எனக்கு விளங்கவில்லை.

எல்லாப் பள்ளிக் கூடங்களிலும், உங்கள் பிள்ளைகளைச் சேர்த்து கல்வி கற்பிக்க வேண்டுமென்று சர்க்கார் உத்திரவு போட்டும் பார்ப்பன ஆதிக்கத்திலும், பார்ப்பன உபாத்தியாயர்களும் இருந்து வரும் பள்ளிக் கூடங்களில் பெரும்பாலும் ஆதி திராவிட பிள்ளைகளைச் சேர்க்கப்படாமலே இருந்து வருகிறது. சர்க்காரால் ஆதி திராவிடப் பிள்ளைகளை சேர்க்காத பள்ளிக் கூடங்களுக்கு கிராண்டு (எணூச்ணt) இல்லை என உத்திரவு போடப்பட்டு வருகிறது. அப்படி யிருந்தும் சரிவர பிள்ளைகள் சேர்க்கப்படவில்லை. ஆதி திராவிட உபாத்தியாயர்கள் இல்லாத பள்ளிக்கூடங்களுக்கு கிராண்ட் (எணூச்ணt) கொடுக்கக் கூடாதென்று அவ்வுத்தரவைத் திருத்த வேண்டுமாய் அரசாங்கத்தாரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நீங்களும் அதை ஆதரிப்பீர்களென்று கருதுகிறேன். சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வந்தபோது இந்தியா பூராவும் அதை எதிர்த்தும் உங்களுடைய நலனை உத்தேசித்தும் தான் சைமன் கமிஷனை வரவேற்று பாமர மக்களாலும், பார்ப்பனர்களாலும்  தேசத் துரோகப் பட்டம் பெற்றேன். அப்படியிருந்தும் அதனால் ஏற்பட்ட பலனை நீங்களே கெடுத்துக் கொண்டு உங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டீர்கள்.

இனிமேலாவது நீங்கள் பூனா ஒப்பந்தத்தை ரத்து செய்ய முயற்சி செய்து அது முடியாவிட்டால் உங்கட்கு இருக்கும் 30 ஸ்தானங்களையும் பகுதியாகவாவது தனித் தொகுதி தேர்தலுக்கு விடும்படி கேட்டுப் பாருங்கள்.

அதுவும் முடியவில்லையானால் பொதுத் தொகுதியைவிட சர்க்கார் நியமனத்தின் மூலம் பெறும்படியாகவாவது செய்து கொள்ளுங்கள். இப்போது இதுவே உங்கள் முன்னாலிருக்கும் அவசர வேலையாகும். உங்களைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பை பொது ஜனங்களிடை கொடுக்கப்பட்டிருக்கிறதென்பது எலிகளைத் தெரிந்தெடுக்கும் பொறுப்பை பூனைகளிடம் கொடுத்தது போலவே இருக்கும். ஆலயப் பிரவேசம் உங்கட்கு இல்லாமல் இருப்பது மிகவும் நன்மை என்பதே எனது அபிப்பிராயம். பூனா ஒப்பந்தத்தின் யோக்கியதையை உங்கட்கு வெளிப் படுத்தவும், காங்கிரஸ்காரர்கள் காந்தியார் அவர்களது யோக்கியதையை வெளிப்படுத்தவும் நான் அதைப் பற்றி பேசுகிறேனே ஒழிய மற்றபடி ஆலயத்திலும், அங்குள்ள சாமி என்பதிலும், அதனால் ஏற்படும் நன்மை என்பதிலும் நம்பிக்கைக் கொண்டல்ல. ஆதலால் சாமி, கோயில், குளம்,  உற்சவம் என்கின்ற பைத்தியத்தை விட்டு விடுங்கள். உங்கள் சமூகத்தார் இந்த ஊரில் சுமார் 10 வருட காலமாய் மதுபானம் செய்வதில்லை என்று கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைவதோடு அதற்குக் காரணமாய் இருந்த உங்கள் பிரமுகர்களையும், சமூகத்தாரையும் போற்றுகிறேன். உங்கள் மாகாணத் தலைவராக தோழர்கள் வீரையன், சிவராஜ் போன்றவர்களையும், இந்தியத் தலைவராக அம்பேத்கார் போன்றவர்களையும் நம்புங்கள். எனக்கும், அவர்கட்கும் உங்கள் முன்னேற்ற விஷயத்தில் சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் இன்றைய நிலையில் அவர்களே மேலானவர்கள்.

சென்னை சட்டசபையில் தோழர் சிவராஜ் அவர்கள் பேசியதை தோழர் சகஜானந்தம் அவர்கள் கண்டித்திருப்பதை நான் பேப்பர்களில் பார்த்தேன். அது உங்கள் சமூகத்தை காட்டிக் கொடுத்ததாகத்தான் இருக்கிறது. இதுபோல் பல தடவை தோழர் சகஜானந்தம் நடந்து கொண்டு வந்திருக்கிறார். ஆகையால் நீங்கள் தோழர் சிவராஜ் அவர்களின் பேச்சையும் தீர்மானத்தையும் ஆதரிப்பதாகவும், தோழர் சகஜானந்தம் அவர்களிடம் நம்பிக்கை இல்லை என்றும் தைரியமாய் சொல்லிவிட வேண்டும். அப்பொழுது தான் அவர் இனிமேலாவது பார்ப்பனர் தயவுக்கு ஏமாராமலும் உங்கள் நலனைக் கொஞ்சமும் விட்டுக் கொடுக்காமலும் இருக்க முடியும் என்பதை உறுதியாக நம்புகிறேன். தோழர் சகஜானந்தம் அவர்கள் அபிப்பிராயத்தை “”சுதேசமித்திரன்” முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் உபயோகப்படுத்திக் கொண்டு உங்களுடைய நலன் பாதிக்கப்பட விஷமப்  பிரசாரம் செய்திருக்கிறது. இது எவ்வளவு நஷ்டம் என்பதை யோசியுங்கள்.

உங்களுக்காக இவ்வளவு பரிந்து பேசும் காங்கிரஸ்காரர்களும், காந்தியார்களும், இது வரையிலும் என்ன செய்தார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இப்பொழுது சென்ற வாரத்தில் காலஞ்சென்ற மல்லையா அவர்கள் ஸ்தானத்தில் ஒரு ஆதித் திராவிடரை நிறுத்துவார்களா என்று கேட்கிறேன். இந்தியா சட்டசபைக்கு ஆதித் திராவிடர்களை நிறுத்தாததின் காரணம் அங்கு நடக்கும் போராட்டத்திற்கும், ஆதித் திராவிட தன்மைக்கும் ஒன்றும் சம்பந்தமில்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால் சென்னை சட்டசபைக்கோ அம்மாதிரி சொல்ல முடியாது என்றாலும் முன்பே 4, 5 பேர்கள் இருக்கிறார்கள்; போதாதா என்று சொல்லி விடுவார்களென்றே நினைக்கிறேன்.

தேசத்திற்கும், ஆதித் திராவிடர்களுக்கும், காங்கிரஸ்காரர்களும், காந்தி கூட்டத்தார்களும் பிரதிநிதிகளா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகப் பேசினேனே தவிர வேறில்லை. முடிவாக ஒரு வார்த்தை; அரசாங்கத்தாராலும் சுயமரியாதைக் கிளர்ச்சியாலும்  இது வரையில் உங்களுக்கு ஏற்பட்ட சிறிது நன்மைகளையாவது பாழாக்கி கொள்ள வேண்டு மானால் நீங்கள் காங்கிரஸ்காரர்களுடனோ, காந்திக் கூட்டத்தாருடனோ தேசபக்த கோஷ்டியுடனோ சேருங்கள்;  இல்லையானால் ஜாக்கிரதையாக உங்கள் முன்னேற்றத்தைக் கருதுங்கள்.

ஜஸ்டிஸ் முதலான மற்ற கட்சிக்காரர்கள் கூட உங்கட்கு செய்ய வேண்டிய அளவு செய்து விட்டதாகச் சொல்லிவிட முடியாது. உத்தியோக விஷயங்களில் பல விஷயங்கள் அவர்கள் கையிலிருந்தும் சர்க்காரை நிர்ப்பந்தப்படுத்தக் கூடிய பல சந்தர்ப்பங்கள் இருந்தும் உங்கட்கு போதிய அளவு உத்தியோகங்கள் கொடுக்கப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. சமீபத்தில் சென்னை சட்டசபையில் வெளியிட்ட கணக்கில் கீழ்த்தர உத்தியோகமாகிய இன்ஸ்பெக்டர் உத்தியோகம்கூட கொடுக்கப்பட வில்லை. இதுவரையில் ஒரே ஒரு சப் இன்ஸ்பெக்டர் வேலைதான் உங்கட்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். ஆகையால் உத்தியோகங்களில் உங்கட்கு வீதாச்சாரம் கிடைக்க வேண்டும் என்பது உங்களது முதல் கவலையாக இருக்க வேண்டும். அது என்று சரிப்பட்டு வருகிறதோ அன்றுதான் இந்நாடு “”சமதர்ம  சுதந்திர நாடென்று சொல்லிக் கொள்ள முடியும்”.

குறிப்பு:            02.02.1935  அன்று  மோகனூரில்  நடைபெற்ற சேலம்  மாவட்டம்  நாமக்கல் வட்ட பள்ளர் சமூக மாநாடு  தேவேந்திரகுல  மாநாட்டில்  “”தாழ்த்தப்பட்டவர்கள்  முன்னேற்றம்”  என்ற  தலைப்பில்  ஆற்றிய  உரை.

குடி அரசு  சொற்பொழிவு  10.02.1935

You may also like...