ஈரோடு  முனிசிபாலிட்டியும்

 

மின்சார  விளக்கும்

ஈரோடு  முனிசிபாலிட்டியானது  எவ்வளவோ  மோசமான  நிலைமையில்  இருந்து,  அதாவது  எல்லாவிதமான  அக்கிரமங்களுக்கும்,  அயோக்கியத் தனங்களுக்கும்,  திருட்டு  புரட்டு  போர்ஜரி  முதலிய  கிரிமினல்  காரியங்களுக்கு  தாயகமாய்  இருந்து,  பொது  ஜனங்களும்  கவுன்சிலர்களும்  எவ்வளவோ  கூப்பாடு  போட்டும்  அரசாங்கத்தில்  சரியான  கேள்வி  கேப்பாடு  இல்லாமல்  இருந்து  கடைசியாக  மெஜார்ட்டி  கவுன்சிலர்கள்  13  பேர்கள்  ராஜினாமா  கொடுத்தும்  அரசாங்கத்தார்  லக்ஷியம்  பண்ணாமல்  இருந்து,  முனிசிபல்  பணங்களுக்கும்  மற்றும்  கல்வி  இலாக்காப்  பணம்  சுமார்  50  ஆயிரம்  ரூபாய்  வரையிலும்  வேறு ஏதேதோ  காரியங்களுக்கு  என்று  கொள்ளை  போயும்,  சுமார்  வருஷம்  3 லக்ஷ  ரூபாய்  வரும்படியுள்ள  முனிசிபாலிட்டியானது  ஆபீசு  சம்பளத்துக்குகூட  பணம்  இல்லாமல்  பாப்பராகியும்  கடைசியாக  தோழர்  கான்சாயபு,  ÷க்ஷக்தாவுத்  சாயபு  முதலிய  சிலரது  பெரு  முயற்சியால்  மறுபடியும்  கொஞ்சம்  கொஞ்சமாய்  தலையெடுத்து  சிறிது  சிறிதாக  யோக்கியமான  நிலைமைக்கு  வந்து,  இப்போது  பொது  ஜனங்களுடையவும்,  அரசாங்கத்தாருடையவும்  பாராட்டுதலுக்கு  பாத்தியமானதாக  ஆகி  இருக்கிறது  என்பது  யாரும்  அறிந்ததாகும்.  இன்னும்  அநேக  சீர்திருத்தங்கள்  செய்ய  வேண்டியிருக்கிறது  என்றாலும்  பொது  நிலமை  வரவர  உயர்ந்து கொண்டே  வருகிறது  என்பதை  யாரும்  மறுக்க  முடியாது.

கடைசி  வருஷத்து  நிர்வாகத்தைப்பற்றி  கலைக்டர்  துரையவர்கள்  கூறி  இருப்பதில்  சிலவற்றை  இங்கே  தருகிறோம்.

“”நான்  ஈரோட்டில்  சில  தினங்கள்   இருந்திருக்கிறேன்.  அது  சமயம்  ஈரோடு முனிசிபல் நிர்வாக விஷயங்களைப்பற்றி நன்றாய்க்  கவனித்தேன்.  சேர்மனும், கமிஷனரும், கௌன்சில் மெம்பர்களும் சேர்ந்து  அம்முனிசிபாலிட்டியில்  செய்துள்ள  காரியங்களும்,  முயற்சிகளும்  என்  மனதைக்  கவர்ந்தன.  ரோட்டுகள்  எல்லாம்  மிக்க  மேலான  நல்ல  நிலைமையில்  இருக்கின்றன.  இன்னும்  சில  ரோட்டுகள்  ரிப்பேர்  செய்வதற்கான  பொருட்கள்  தயாரிக்கப்பட்டு  இருக்கின்றன.

இந்த  முனிசிபல்  நிர்வாகத்தைப்பார்த்தால்  கடந்த  ஒரு  வருஷமாக  நடைபெற்ற  முற்போக்கான  பல  வேலைகளையும்,  இன்னும்  மேலான  நிலைக்கு  வரக்கூடும்  என்ற  அறிகுறியையும்  தெளிவு  படுத்துகிறது”  என்பதாக  மிகவும்  புகழ்ந்து  பாராட்டி  இருக்கிறார்.

ஆனால்  ஒரு  விஷயத்தில்  அதாவது  மின்சார  விளக்கு  விஷயத்தில்  சிறிது  அதிருப்தி  அடைந்திருக்கிறதாகத்  தெரியவருவதை  நாம்  மறைக்க  ஆசைப்படாமல்  அதற்கு  சமாதானம்  சொல்லக்  கடமைப்பட்டிருக்கிறோம்.

மின்சார  விளக்கு  சரித்திரம்

ஈரோடு  மின்சாரத்  திட்டமானது ஒரு  சரித்திரத்துக்கு  ஒப்பானதாகும்  என்பதோடு  ஸ்தல  சுயாக்ஷி  விஷயத்தில்  அரசாங்கத்தின்  தன்மையை  எடுத்துக்காட்ட  ஒரு  கண்ணாடி  போன்றதுமாகும்.

ஈரோடு மின்சார  விளக்குத்  திட்டம் 1926  முதல்  ஆலோசனையால்  இருந்து  1928ல்  மின்சார  விளக்குப்  போடுவது  என்ற  முடிவுக்கு  வந்து  அரசாங்கத்தாரோடு  கடித  போக்குவரத்து  செய்து  வந்ததாகும்.

1928ல்  மைசூர்  அரசாங்கத்தினிடமிருந்து  மேட்டூர்  அணைக்கு வந்து  கொண்டிருந்த  மின்சாரத்தை ஈரோட்டுக்கும்  அந்த  வழியில்  வரவழைத்துக்  கொள்ளலாம்  என்று  முதலில்  கவுன்சில்  முடிவு  செய்து  கவர்மெண்டைக்  கேட்க  கவர்மெண்டும்  அங்கீகரித்து  விட்டது.

அதன்படி  மைசூர்  கவர்மெண்டினிடமிருந்து  பெற்றுக்  கொள்ளச்  செய்திருந்த  ஏற்பாடானது  என்ன  காரணத்திலோ  சென்னை  அரசாங்கத்தின்  பிரவேசத்தினால் மைசூர்  கவர்மெண்ட்  மின்சாரம்  கொடுக்க  மறுத்து  விட்டது.

பிறகு  முனிசிபாலிட்டியார்  தாங்களே  யந்திரம்  வைத்து  மின்சாரம்  உண்டாக்கி  தங்கள்  ஊருக்கு  வினியோகித்துக்  கொள்வதாய்  முடிவு  செய்து  சர்வை  செய்து  பிளான்  போட்டு  எஸ்ட்டிமேட்டும்  தயார்  செய்து  2லீ லக்ஷம்  ரூபாய்  கடன்  வேண்டுமென்று  கவர்மெண்டை  கடன்  கேட்டார்கள்.  கவர்மெண்டார்  இடைகால  வழியில்  கொடுக்க  முடியாதென்று  சொல்லி  வேறு  எங்காவது  வாங்கிக்கொள்ள  அனுமதி  கொடுத்தார்கள்.  (12435  நெ 13594 எல்.எம்.)

அந்த  உத்திரவுபடி  கோயமுத்தூர்  ஜில்லா  போர்டில்  2லீ லக்ஷம்  ரூபாய்  தயார்  செய்து கொண்டு  பிளான்  எஸ்ட்டிமேட்  ஆகியவைகளை  சர்க்காருக்கு  அனுப்பி  வேலை  துவக்க  லைசென்சு  கொடுக்கும்படி  கேட்கப்பட்டது.

இதன்  பேரில்  கவர்மெண்டிடம்  வேறு  ஒரு  திட்டம்  யோசனையில்  இருப்பதால்  இதை  நிறுத்தி  வைக்க  வேண்டும்  என்று  9929ல்  ஒரு ஜீ.ஒ.  உத்திரவு  கிடைத்தது.  இந்த  நிலையில்  கல்கத்தா  ஆக்டேவியஸ் ஸ்டீல்  கம்பனியாரிடமிருந்து  ஈரோட்டுக்கும்  சேலத்துக்கும்  மின்சாரம்  வினியோகிக்க  தங்களுக்கு  அனுமதி  கொடுக்கும்படி  சர்க்கார்  லைசென்சு  கேட்டு  இருப்பதாகவும்  ஈரோடு  முனிசிபாலிட்டி  அதை  ஆதரிக்க  வேண்டும்  என்றும்  ஒரு  கடிதம்  வந்தது.

இதன்மீது  ஈரோடு  முனிசிபல்  கவுன்சிலானது  வேறு  கம்பனிக்கு  லைசென்சு  கொடுக்கக்  கூடாதென்றும்  தாங்கள்  இவ்விஷயத்துக்காக  அதிக  பணம்  செலவு  செய்து  திட்டம்  போட்டு  பிளான்  எஸ்ட்டிமேட்டும்  பணமும்  தயார்  செய்துகொண்டாய்  விட்டது  என்றும்  தங்களுக்கே  லைசென்சு  கொடுக்க  வேண்டும்  என்றும்  கேட்டுக்  கொண்டார்கள்.

பிறகு  41029ல்  கவர்மெண்டார்  தாங்களாகவே  3098  3சி  எல்.எம். நெ. மெமோராண்டத்தின்  மூலம்  “”கடன்  விண்ணப்பம்  கெஜட்டில் பிரசுரிக்கப்படும்,  லைசென்சுக்கு  முறைப்படி  விண்ணப்பம்  போடுங்கள்”  என்று  தெரிவித்தார்கள்.

அதன்பேரில்  கவுன்சில்  டிராப்ட்  விண்ணப்பம்  அச்சடிக்கப்பட்டது.  காரியமும்  ஒரு  அளவுக்கு  துவக்கப்பட்டது.

இந்த  சமயத்தில்  திடீரென்று ஒரு கவர்மெண்டு  உத்திரவு  வந்தது.  அதில்  ஈரோட்டுக்கு  கவர்மெண்டார்  தாங்களே  மின்சாரம்  சப்பிளை  செய்யத்  தயாராய்  இருக்கிறார்கள்.  ஆதலால்  முனிசிபாலிட்டி  மின்சாரம்  உற்பத்தி  செய்ய  வேண்டியதில்லை  என்று  கண்டிருந்தது.

அதற்கும்  கவுன்சிலர்கள்  சம்மதித்து  “”அப்படியானால்  மின்சாரச்  சக்தியை  எங்களுக்கு  மொத்தமாய்  கொடுத்து  விட்டால்  நாங்கள்  ஊருக்குள்  வினியோகித்துக்  கொள்ளுகிறோம்”  என்று  ஈரோடு  முனிசிபாலிட்டி  சர்க்காரைக்  கேட்டுக்  கொண்டது.

இந்த  மத்தியில்  மறுபடியும்  கல்கத்தா  கம்பினியாரிடமிருந்து  சர்க்காரிடம்  மின்சார  சக்தி  மொத்தமாய்  வாங்கி  தாங்கள்  சில்லரையில்  ஈரோட்டுக்கு  வினியோகிப்பதாகவும்  அதை  ஏற்றுக்  கொள்ளும்படியும்  ஒரு  கடிதம்  வந்தது.

ஈரோடு  கவுன்சிலானது  அதை  ஒப்புக்கொள்ளமுடியாது  என்றும்  தங்கள்  முனிசிபாலிட்டியே  அந்த  வினியோக  லாப  நஷ்டத்தை  அடைய வேண்டுமே  ஒழிய  சர்க்காருக்கும்  முனிசிபாலிட்டிக்கும்,  மத்தியில்  வேறு  ஒரு  தனிப்பட்ட  நபர்  அடையக்கூடாது  என்று  சர்க்காருக்கும்  கல்கத்தா  ஆக்டேவியஸ்  கம்பெனிக்கும்  கவுன்சிலர்கள்  தெரிவித்து  விட்டு  சர்க்கார்,  முன்  தெரிவித்தபடி  தங்களுக்கு  மொத்தமாய்  மின்சார  சக்தி  கொடுக்கும் படியாகவும்  ஊருக்குள்  வினியோகிக்க  லைசென்சு  வேண்டுமென்றும்  கேட்டார்கள்.  அதோடு  கூடவே தாமதம்  ஆனால்  ஏற்பாடு  செய்த  கடன்  தொகைக்கு  வீணாக  அதிக  வட்டி  கொடுக்க  வேண்டி  வரும்  என்றும்  தெரிவித்தார்கள். இதற்குக்  கவர்மெண்ட்டார்  “”இவ்விஷயமாக   ஆலோசனையில்  இருக்கிறது”  என்று  151230ந்  தேதியில்  தெரிவித்தார்கள்.

அதன்  மீது  சிறிது  நாள்  பொறுத்துக்   கவுன்சிலர்கள்  “”தயவு  செய்து  உடனே  தங்களுக்கு  அனுமதி  கொடுக்க  வேண்டும்  என்றும்  தாமதம்  ஆனதால்  கஷ்டமும்  அசௌகரியமும்  ஏற்படுவதாகவும்”  தெரிவித்துக்  கொண்டார்கள்.

இவ்வளவும்  கவனிக்கப்படாமல்  கடைசியாக  கல்கத்தா  ஆக்டேவியஸ்  ஸ்டீல்  கம்பனியாருக்கு  லைசென்சு  கொடுத்து  விட்டதாகக்  கவர்மென்டிட மிருந்து  111230ந்  தேதி  11034 ஈ.  உத்திரவு  வந்தது.

இதுதான்  சர்க்காருக்கும்,  ஈரோடு  முனிசிபாலிட்டிக்கும் மின்சார  சக்தி  விஷயமாய்  நடந்த  கதைச்  சுருக்கம்.

லைசென்ஸ்  கண்டிஷன்

இனி  அக்கம்பெனியாருக்கு  லைசென்ஸ்  கொடுத்ததில்  சர்க்õர்  அனுமதித்திருக்கும்  கண்டிஷனை  சற்று  கவனிப்போம்.  அது  ஒரே  அடியாய்  20  வருஷத்துக்குக்  கொடுக்கப்பட்டிருக்கிறது.  அதுவும்  ஈரோட்டுக்கும்  சேலத்துக்கும்  ஒன்றாய்  லைசென்ஸ்  கொடுக்கப்பட்டிருக்கிறது.  எந்தக்  காரணத்தைக்  கொண்டும்  தனியாக  பிரித்துக் கொள்ள  முடியாது.  20  வருஷம்  பொறுத்தும்  கம்பினிக்காக  செலவு  செய்ததாகச்  சொல்லப்படும்  செலவுத்  தொகைகள்  பூராவும்  கொடுத்தால்தான்  அதுவும்  இரண்டு  முனிசிபாலிட்டியும்  சேர்ந்து  தான்  திரும்பிப்  பெறமுடியும்.

மற்றும்  கம்பினியார்  ஊருக்குள்  விளக்குப்  போடுவதில் 30  மயில்  தூரமுள்ள  வீதிகளில்  7  மயில்  தூரம்  இப்போது  போட்டிருப்பது  போக  பாக்கி  23  மயில்களுக்கு  விளக்குப்  போட்டால்  அவ்விளக்குப்  போடுவதற்கு  உண்டான  சார்ஜ்  கொடுப்பதைத்  தவிர  அதற்கு  ஏற்பட்ட  எரக்ஷன்  செலவு  அதாவது  கட்டடம்,  கம்பம்  கம்பி  முதலிய  செலவு  தொகைகளுக்கும்  வருஷம்  1க்கு 100க்கு  12லீ  வீதம்  வட்டியும்  கொடுத்து  வரவேண்டும்.  இந்தப்படி  இனிபோட  வேண்டிய  பாகத்துக்கும்  லக்ஷக்கணக்கான  ரூபாய்கள்  செலவாகலாம்.

விளக்குக்கு  உண்டான  மின்  சக்திக்கு  சார்ஜ்  கொடுத்து  அதன்  செலவு  தொகைக்கு  100க்கு  12லீ  வீதம்  வருஷ  வருஷம்  வட்டி  கொடுப்பதனால்  வருஷம்  எவ்வளவு  ஆயிரம்  ரூபாய்  ஈரோடு  முனிசிபாலிட்டி  கொடுக்க  வேண்டிவரும்.  முனிசிபாலிட்டிக்கு  எவ்வளவு பதினாயிரக்  கணக்கான  தொகை  வருஷ  வருஷம்  நஷ்டம்  ஏற்படக்  கூடும்  என்பதையும்  இந்தப்படி  20  வருஷ வாய்தா  வரையில்  கொடுத்துவர  20   வருஷம்  பொறுத்தபின்பு  சாமான்கள்  பழையது  ஆகி  பழுதுபட்டு  கெட்டுப்போய்  மாற்ற  வேண்டிய  சமயத்தில்  கம்பெனிக்காரர்களுடைய  கொள்முதல்,  போக்குவரத்து  செலவு,  அவர்களுடைய  கமிஷன்  “”நஷ்டம்”  எல்லாம்  சேர்ந்த  தொகையை  10 லக்ஷக்கணக்காகக் கட்டிவிட்டு முனிசிபாலிட்டியார் திருப்பி  வாங்கிக்கொள்ள  வேண்டும்.  பிறகு  மறுபடியும்  அனேகமாய்  எல்லாம்  புதுப்பிக்கப்படவேண்டி  வரும்.  அதற்கு  பல  லக்ஷக்கணக்காய்  தொகை  வேண்டும்.

இதற்கு  சம்மதிக்காவிட்டால்  மீண்டும்  கம்பனியாரே  சாஸ்வதமாய் நடத்தி  இந்தக்  கண்டிஷன்படியே  அதன்  லாபத்தை  என்றென்றும்  அடைந்து  கொண்டிருக்க  வேண்டும்.  இது அந்த  நிபந்தனையின்  கருத்து.

இந்தக்  கொடுமையானதும்  அடிமைத்தனமான  நிபந்தனைகளுக்கு  ஒரு  முனிசிபல்  கவுன்சில்  ஒப்புக்  கொள்ளுமானால்  இதை  விட  வேறு  என்ன  கெடுதி  முனிசிபாலிட்டிக்கு  இக்கவுன்சில்  செய்ய  வேண்டும்  என்பதை  யோசித்து  பார்க்க  விரும்புகிறோம்.

ஆகையால்  கவுன்சிலர்களும்,  சேர்மெனும்,  கமிஷனரும்  சேர்ந்து  எப்படியாவது  இணங்கி  வந்து  கம்பெனிக்காரருடன்  இருவருக்கும்  நஷ்டமில்லாத  மாதிரியில்  ஒருவித  சமாதானத்துக்கு  வரவேண்டும்  என்று  எவ்வளவோ  முயற்சித்தும்  பயன்  ஏற்படாததால்  கடைசியில்  தங்கள்  மீது  எவ்வித  குற்றமும்  இல்லை  என்பதை  சர்க்காருக்கு  தெரிவித்துக்  கொள்ள வேண்டி  ஒரு  வித  முடிவுக்கு  வந்து  சில  தீர்மானங்களை  சர்க்காருக்கு  அனுப்பி  இருக்கிறார்கள்.

(அது  மற்றொரு  பக்கம்  பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.)

அது ஒப்புக்கொள்ளப்படுமானால் கம்பெனியாருக்கும்  முனிசிபாலிட்டி யாருக்கும்  கலைக்டர்  துரையவர்களுக்கும்  சர்க்காருக்கும்  பொது  ஜனங் களுக்கும்  திருப்தி  அளிக்கக்கூடும்.

இல்லாதவரையில்  விஷயம்  இப்படியே  இருக்க  வேண்டியதாகதான்  ஏற்பட்டுவிடும்.

அதற்காக  முனிசிபாலிட்டி  மீது  யாரும்  குறை  கூறுவது எவ்விதத்திலும்  நியாயமாகாது  என்பதே  நமதபிப்பிராயம்.  ஏனெனில்  முனிசிபாலிட்டியார்  பொது  ஜனங்களின் பிரதிநிதிகள்  பொது  ஜன  நன்மைக்கு  உழைக்க  கட்டுப்பட்டவர்கள்.

ஆகையால்  அவர்களுக்கு  சரியென்று  பட்டதைச்  செய்யக்  கடமைப்பட்டவர்கள்.

கடைசியாக  இந்த  ஊர்  மகாஜனங்கள்  பெரும்பாகம்  பேர்கள்  இந்த  விஷயங்களை  மிகவும்  நன்றாக  உணர்ந்தவர்.  ஆனதாலேயே  யாவருடைய  தூண்டுதலும்  இல்லாமலும்  கம்பனியார்  எவ்வளவோ  தந்திரங்களை  உபயோகித்தும்  மின்சார  சக்தியை  தங்களுடைய  சொந்த  வீட்டு  விளக்கு  முதலியவைகளுக்குக்  கூட  4  வருஷ  காலமாய்  எடுத்துக்  கொள்ளாமல்  இருந்து  வருகிறார்கள்.

இதைக்  கண்டாவது  கலைக்டர்  துரையவர்களும்  அரசாங்கமும்  பொதுஜனங்களின்  உணர்ச்சி  எப்படி  இருந்து  வருகிறது  என்பதை  உணர்ந்து  கொள்ளலாம்.

பொது  ஜனங்களுக்கு  முனிசிபாலிட்டிமீது  தப்பபிப்பிராயம்  ஏற்படும்படி  சில விஷமக்காரர்கள்  தப்பான  விஷயங்களை  எடுத்துச்  சொல்லிவந்தும்  அவர்கள்  ஏமாந்து  போகாமல்  இருந்து  வருவது  மிகவும்  பாராட்டத்தக்கதாகும். ஆகையால்  முனிசிபாலிட்டியார்  பிடிவாதம்  செய்கிறார்கள்  என்று  சொல்லப்படுமானால்  அது  உண்மையல்ல.  முனிசிபாலிட்டியார்  செய்வதெல்லாம்  வரிசெலுத்தும்  ஈரோடு  வாசிகளின்  நன்மைக்கு  ஆகவே  ஒழிய  மற்றபடி  யாருடைய  சுய  நலத்துக்காவோ,  வீம்புக்காகவோ,  தங்கள்  கவுரவத்துக்காகவோ  அல்ல  என்பதை  பொது  ஜனங்களுக்கும்  கலைக்டர்   துரை  அவர்களும்  அரசாங்கமும்  உணரவேண்டுமென்று  விரும்புகிறோம்.

குடி அரசு  கட்டுரை  20.10.1935

You may also like...