சென்னைத் தேர்தலும் பார்ப்பனர் உத்தியோகமும்

 

சென்னையில் இம்மாதம் 9ந் தேதி நடந்த சென்னை சட்டசபை உபதேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் நிறுத்தப்பட்ட தோழர் ரங்கராமானுஜம் அவர்கள் பெருவாரியான ஓட்டுகளால் தோற்கடிக்கப் பட்டுப் போனார்.

இந்தத் தோல்வி இந்திய சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி போலவே குறிப்பிடத் தகுந்ததொரு தோல்வியாகும்.

இந்திய சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப் போனதற்கு என்னென்ன காரணங்களிருந்தனவோ, அவை பெரும்பாலும் சென்னை சட்டசபைத் தேர்தலுக்கும் இருந்து இருக்கிறது. இந்தக் குறைபாடுகள் இப்படியே இருக்குமானால் இனியும் ஏற்படப் போகும் எல்லாத் தேர்தலுக்கும் இதே மாதிரி பலன் தான் எதிர்பார்க்க முடியும்.

எதிரிகளின் விஷமப் பிரசாரமே தோல்விக்குக் காரணமாய் இருந்தாலும் எதிரிகளை “”தயவு செய்து  இனிமேல் விஷமப் பிரசாரம் செய்யாதீர்கள்” என்று நாம் அவர்களைக் கேட்டுக் கொள்ள முடியுமா? அல்லது எதிரிகளின் விஷமப் பிரசாரம் இன்று நேற்றுத்தான் ஆரம்பிக்கப் பட்டதா? நூற்றுக்கணக்கான வருஷங்களாகவே ஏன் பல நூற்றுக்கணக்கான வருஷங்களாகவே நமது எதிரிகள் (பார்ப்பனர்கள்) செய்து வந்த சூழ்ச்சிகளாலும் விஷமப் பிரசாரத்தாலும் ஏற்பட்ட கெடுதிகளை நிவர்த்தித்துக் கொள்வதற்கு என்றுதானே ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதாகும். ஆதலால் அது பார்ப்பன சூழ்ச்சிக்கும் அதன் விஷமப் பிரசாரத்துக்கும் தலை கொடுக்கவும் பதில் செய்யவும் சக்தியும், முயற்சியும் இருந்தால் மாத்திரம்தான் விடுதலை பெற முடியுமே ஒழிய எதிரிகளை “”தயவுசெய்து விஷமப் பிரசாரம் செய்யாதீர்கள்” என்று கேட்டுக் கொள்ளுவதால் ஒரு பயனும் அடைய முடியாது.

இந்திய சட்டசபைத் தேர்தலில் தோல்வி அடைந்து கிட்டத்தட்ட 4 மாதகாலம் ஆகின்றது. வேறு எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் எதிரிகளின் விஷமப் பிரசாரத்தாலேயே தோல்வி ஏற்பட்டது என்கின்ற முடிவுக்கு வந்தோம். அப்படி இருக்க அவ்விஷமப் பிரசாரத்தை சமாளிக்க நாம் என்ன காரியம் செய்தோம் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

உண்மையைப் பேச வேண்டுமானால் ஜஸ்டிஸ் கட்சியானது சென்னை சட்டசபை உபதேர்தலுக்கு ஸ்லிப்பு போடும் கடைசி தினம் பகல் 11 மணி வரையில் யாரை நிறுத்துவது என்கின்ற ஒரு முடிவோ சரியான கவலையோ இல்லாமல் இருந்து இருந்திருக்கிறது.

அது மாத்திரமல்லாமல் அந்த 11வது மணியிலும்கூட கட்சிப் பிரமுகர்கள் ஆளுக்கு ஒரு நபரை தலைவருக்கு சிபார்சு செய்தார்கள். அந்தச் சமயத்தில் யாரைப் போட்டால் அனேகமாய் வெற்றி பெறலாம் என்பதுகூட அபேக்ஷகர்களை பொறுக்குவதில் பிரச்சினையாக இல்லாமல் யார் சிபார்சை ஏற்றுக் கொள்ளுவது என்பது தான் முக்கிய பிரச்சினையாக ஆகிவிட்டது. ஒருவர் சிபார்சை ஏற்றுக் கொண்டவுடன் மற்றப் பிரமுகர்கள் சிபார்சு ஏற்றுக் கொள்ளப்படாததால் மற்றப் பிரமுகர்கள் ஒப்புக்கு இருக்க வேண்டியவர்களாக ஆகிவிட்டார்கள். இது இயற்கைதான் என்றாலும் தோல்வியைக் கொடுப்பதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணமாகிவிட்டது. நம் தோல்விகளுக்குக் காரணங்கள் இல்லாமல் போகவில்லை என்கின்ற சமாதானமே எப்போதும் நமக்குப் போதுமானால் தேர்தலில் கலந்து பிரயாசைப்பட்டு பணத்தையும் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து விட்டு “”இத்தனை தோல்வி ஏற்பட்டது” என்று கணக்குக் கூட்டுவது ஒரு நாளும் புத்தசாலித்தனமாகி விடாது என்பதோடு அது கேட்டையும் விளைவிக்கும் என்று கூசாமல் சொல்லுவோம்.

தோல்வி ஏற்பட்டதனால் நமது கொள்கைகள், திட்டங்கள், இதுவரை நாம் செய்து வந்த வேலைகள் தப்பு என்பதாக நமக்கு சிறிதும் தோன்ற வில்லை. அவ்விஷயத்தில் கடுகளவு சந்தேகமும் நமக்கு இல்லை. எந்தக் கொள்கையுடன், எந்தத் திட்டத்துடன் இதுவரை இந்த வேலையைச் செய்து வந்தோமோ அந்தக் கொள்கையுடனும் திட்டத்துடனும் அதே வேலையைச் செய்யத்தான் நாம் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமென்று ஆசைபடு கின்றோமே ஒழிய அவற்றிலிருந்து கடுகளவும் பின்னால் போகக் கருதியதல்ல. ஆகையால் நமது திட்ட விஷயத்தில் பின்னடையாமல் இருக்கிறோ மென்றாலும் அதற்கான முயற்சியில் நாம் பின்னடைந்திருக்கிறோம் என்பது மாத்திரமல்லாமல் தேர்தல் விஷயத்தில் தப்பான வழியில் சென்று கொண்டிருக்கிறோம். தகுந்தபடியான பிரசாரம் இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது என்பது இனியாவது முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டும்.

“”அனேக போலிங் ஆபீசில் ஏஜண்டுகளே இல்லை” என்று சொல்லப்பட்டது. இது உண்மையானால் நமது முயற்சியில் எவ்வளவு தீவிரமும் உண்மையும் இருக்கிறது என்பது இதனாலேயே விளங்கி விடவில்லையா?

தேர்தலை ஒரு சடங்கு மாதிரியோ அல்லது ஒரு கடன் மாதிரியோ நினைத்தால் வெற்றி ஏற்படுமா? எதிரிகள் தேர்தலை தங்கள் உயிர் போவது வருவது போல் கருதுகிறார்கள். உயிர் போகும் தருவாயில் இருப்பவன் எப்படி எது செய்தாவது எதைப் பிடித்தாவது உயிரைக் காப்பாற்ற நினைப்பானோ அதுபோல் பார்ப்பனர்கள் தேர்தல் விஷயத்தில் எது செய்தும் யாரை வசப்படுத்தியும் வெற்றிபெறப் பார்ப்பார்கள். நாம் அதைக் குற்றம் சொல்லிக் கொண்டும், பரிகாசம் செய்து கொண்டும் இருந்தால் மாத்திரம் போதாது.

பொய்க்குப் பொய்யும் கோளுக்குக் கோளும் பதிலுக்குப் பதிலும் செய்வதை பாபமென்றோ ஒழுக்கக் குறைவென்றோ வேதாந்தம் பேசுவது தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு அறிகுறியே ஒழிய வேறல்ல.

ஏனெனில் நமது சமுதாய வாழ்வுத் திட்டம் அப்படி இருக்கிறது. தோற்றுப் போனதற்காக நம்மிடம் தப்பான கொள்கை இருக்கின்றதோ என்னவோ என்று நாம் சிறிதும் மயங்க வேண்டியதில்லை. தப்பான காரியங்கள் செய்யாததினால் தான் தோற்றுப் போய் விட்டோம் என்று தான் இன்று கருத வேண்டியிருக்கிறது.

உயிருடன் இருக்கின்றவர்கள் எல்லோரும் இருக்கத் தகுந்த யோக்கியர்கள் என்றோ இறந்து போனவர்கள் எல்லாம் சாகத் தகுந்த அயோக்கியர்கள் என்றோ உலகுக்கு வேண்டாதவர்கள் என்றோ முடிவு கட்டிவிட முடியாது. அப்படிப் போல வெற்றி பெறாததினாலும் தோல்வி அடைந்ததினாலும் ஒரு கட்சியின் யோக்கியா அயோக்கியங்களை நிர்ணயித்துவிட முடியாது என்றாலும், தோல்வி மேல் தோல்வி என்றால் அதன் காரணத்தை அறிந்து அதற்குத் தக்கது செய்து பார்த்துவிட வேண்டியது புத்திசாலித்தனமாகும்.

வகுப்பு வாதம்

ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி எதிரிகள் செய்த விஷமப் பிரசாரம், பொய்ப் பிரசாரம் பல இருந்தாலும் அவர்கள் இரண்டு உண்மைகளையும் எடுத்துக் கூறி இருக்கிறார்கள். அதாவது ஜஸ்டிஸ் கட்சி வகுப்புவாதக் கட்சி என்பது ஒன்று.

மற்றொன்று ஜஸ்டிஸ் கட்சி உத்தியோக “”வேட்டை”க் கட்சி என்பது இரண்டு.

இந்த இரண்டையும் நாம் ஒப்புக் கொள்ளுகிறோம்.

இந்த இரண்டையும் பிரதானமாய் கருதியே ஜஸ்டிஸ் கட்சி இருந்து வருகிறது, வேலை செய்தும் வருகிறது என்பதை ஓரளவுக்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஆனால் அந்தக் கொள்கைக்கு பாமர மக்களிடம் செல்வாக்கு இல்லாமல் நம் எதிரிகள் செய்து இருக்கிறார்கள். அதை மறுத்து பாமர மக்களிடம் செல்வாக்குண்டாகும்படியாக ஜஸ்டிஸ் கட்சி செய்யவும் இல்லை. கவலை எடுத்துக் கொள்ளவும் இல்லை. அந்தக் காரியத்தை முக்கியமாக செய்ய வேண்டியது ஜஸ்டிஸ் கட்சியின் கடமையாகும். அது செய்யாமல் வெற்றியை எதிர்பார்த்தால் ஏமாற்றமே உண்டாகும்.

காங்கிரஸ்

காங்கிரசானது ஜஸ்டிஸ் கட்சி ஏற்படும் வரை சர்க்காருடன் உத்தியோகத்துக்கு போராடவும் உத்தியோகங்களை கற்பனை செய்யவும் அவைகள் எல்லாவற்றையும் (உத்தியோகங்கள் இந்திய மயமாக்க வேண்டும் என்னும் பேரால்) தென்னாட்டில் பார்ப்பனர்களே அடையவுமான காரியத்திற்காகத் தான் பாடுபட்டு வந்தது என்பதை இன்று யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

அது மாத்திரமல்லாமல் காங்கிரஸ் தலைவர்கள் எல்லோரும் தென்னாட்டிலும் மற்ற பல இடங்களிலும் காங்கிரஸ் கூடிக் கலைந்து ஒரு வருஷமாவதற்குள் ஹைக்கோர்ட்டு ஜட்ஜி நிர்வாக சபை மெம்பர் முதலிய வேலைகளை வேட்டையாடிப் பெறுவதும், மாகாண காங்கிரஸ் தலைவர் களானவர்கள் அடுத்த வருஷம் வருவதற்குள் ஜில்லா ஜட்ஜி சப் ஜட்ஜி உத்தியோகம் பெறுவதும் இவர்களின் பிள்ளை குட்டிகள் சுற்றத்தார்கள் உத்தியோகம் பெறுவதுமான காரியங்கள் நடந்து வந்திருப்பதானது இந்த 40 வருஷத்து காங்கிரஸ் தலைவர்களின் (பார்ப்பனர்களின்) கொடிவழிப் பட்டியைப் பார்த்தால் கண்ணாடியில் தெரிவது போல் விளங்கும்.

உத்தியோகமே பிரதானம்

உத்தியோகத்தால் தான் ஒவ்வொரு சமூகமும் முற்போக்கடைந்து வந்திருக்கிறதே ஒழிய மற்றபடி தேசீயத்தாலோ தேசாபிமானத்தாலோ சீர்திருத்தத்தாலோ ஏதாவது ஒரு சமூகம் முற்போக்கடைந்தது என்று சொல்ல முடியவே முடியாது.

சாதாரணமாக சங்கரநாயர் அவர்கள் ஹைகோர்ட் ஜட்ஜி ஆன பிறகு அன்று முதல் இன்று வரை மலையாளிகளின் நிலைமை எவ்வளவு முற்போக்கும் நாகரீகமும் அடைந்து வந்திருக்கின்றது என்பதை கவனித்துப் பார்த்தால் தெரியவரும். தென்னாட்டில் பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியில் மலையாளிகளே எல்லாத் துறையிலும் மேம்பட்டு இருக்கிறார்கள், அதுபோலவே பார்ப்பனர்கள் நிலையானது இன்றைக்கு 50, 60 வருஷங்களுக்கு முன் எப்படி இருந்து வந்தது என்பதையும் முத்துசாமி அய்யர், மணி அய்யர், சதாசிவ அய்யர், கிருஷ்ணசாமி அய்யர், சிவசாமி அய்யர், ராமசாமி அய்யர் முதலிய “”காங்கிரஸ் தலைவர்கள்” “”தேசாபிமானிகள்” உத்தியோக வேட்டையாடி ஹைக்கோர்ட் ஜட்ஜிகளாகவும் நிர்வாக சபை மெம்பர்களாவும் ஆன பின்பு பார்ப்பன சமூகம் எப்படி எல்லாத் துறையிலும் முற்போக்கும் மேன்மையும் செல்வாக்கும் அடைந்து பார்ப்பனரல்லாத சமூகமாகிய பழம் பெருங்குடி மக்கள் கேவலமடைந்து வந்திருக்கிறார்கள் என்பதும் கவனித்துப் பார்த்தால் நன்றாய் விளங்கும்.

சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் எண்ணிக்கை மிகச் சுருக்கமான எண்ணிக்கை என்றும் அதைப் பிரதானமாய்க் கருதுவது  தேசத் துரோக மென்றும் சில பார்ப்பனப் பத்திரிக்கைகள் இதோபதேசம் செய்து வருகின்றன. இதை நாம் வடிகட்டின வஞ்சகச் செய்கை என்று சொல்லுவதைவிட வேறு ஒன்றும் சொல்ல முடியாது.

விபூதி பார்ப்பனர்கள்  நாமப் பார்ப்பனர்கள்

இந்த மாகாணத்தில் 20 வருஷங்களுக்கு முன் பெரும் உத்தியோகங்கள் விபூதி பூசும் பார்ப்பனர்கள் கையிலேயே இருந்து வந்ததால் சில்லரை உத்தியோகங்கள் வக்கீல்கள் ஆகியவை எல்லாவற்றிலும் அவர்களே நிறையப்பட்டிருந்தார்கள். பரீøக்ஷயில் பாஸ் செய்வதும் அவர்களாகவே இருந்து வந்தார்கள். அதற்குக் காரணம் அரசியல் விபூதிப் பார்ப்பனர்கள் கையில் இருந்ததே யாகும்.

அதனாலேயே பெசண்டம்மையும் விபூதிப் பார்ப்பனர்கள் கையாளாகி பெருமை பெற்று அதன் பலனை விபூதிப் பார்ப்பன சமூகத்துக்கே உதவி வந்தார். ஏறக்குறைய 1918ம் வருஷம் வரையில் சென்னை மாகாணம் பெரிதும் இந்திய அரசாங்கம் ஒரு அளவும் விபூதிப் பார்ப்பனர் ஆட்சி யாலேயே இருந்தது. இதன் காரணமாகவே தோழர் சி. விஜயராகவாச்சாரியார் கூட ஒரு மூலையில் ஒதுக்கித் தள்ளப்பட்டார்.

சி. ராஜகோபாலாச்சாரியார் இதன் சூழ்ச்சியை தெரிந்து இதை அடியோடு கவிழ்க்க வேண்டுமென்று கருதி கங்கணம் கட்டி அரசியலில் நுழைந்து தோழர் வரதராஜுலு,  ராமசாமி, ஆதிநாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோசப் முதலிய பார்ப்பனரல்லாதாரை நன்றாய் உபயோகப்படுத்திக் கொண்டு இவர்களுடன் கூடின முதல் இரகசியக் கூட்டத்திலேயே பெசண்டம்மாளை அரசியலில் விட்டு விரட்டி அடிப்பது என்கின்ற தீர்மானத்தையே முதல் தீர்மானமாக திருச்சி சீரங்கத்தில் விஜயராகவாச்சாரியார் தலைமையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதற்கு அதிதீவிரக் கொள்கைகளை வைத்து கூப்பாடு போட்டார்கள், அதற்கு டாக்டர் ராஜன், கே.வி. ரங்கசாமி ஐயங்கார் முதலாகிய பிரபல பல ஐயங்கார்களும் ஊக்கமளித்தார்கள். இந்து, சுதேசமித்திரன் பத்திரிகைகளும் ஐயங்கார் பார்ப்பனர்கள் கையில் இருந்தன. அதனால் காந்தியை மகாத்மாவாக் கினார்கள். அவரைக் கையாளாகக் கொண்டு பிறகு ஒரே அடியாய் விபூதிப் பார்ப்பனர்கள் கையில் இருந்த அரசியல் ஆதிக்கம் பிடுங்கப்பட்டு விட்டது. தோழர் சத்தியமூர்த்தி ஐயர் விபூதி பார்ப்பனராய் இருந்தாலும் அவரைத் தோழர்கள் கஸ்தூரி ரங்கய்யங்காரும், அ. ரங்கசாமி அய்யங்காரும், கு. சீனிவாசய்யங்காரும், விலைக்கு வாங்கி தோழர்கள் பெசண்ட், இ.க. ராமசாமி அய்யர், ங.கு. சீனிவாச சாஸ்திரியார் முதலிய ஆளுகளை வைது அரசியலில் இருந்தே அவர்களை விரட்ட ஆயுதமாக்கிக் கொண்டார்கள்.

இதன் பயனாய் இந்திய அரசியலே நாமக்காரப் பார்ப்பனர்களாகிய அய்யங்கார் பார்ப்பனர்கள் கைக்கு வந்துவிட்டது. அதன் பிறகுதான் சி.விஜயராகவாச்சாரியார் அவர்கள் காங்கிரஸ் தலைவராக முடிந்தது. அன்று முதல் இன்று வரை அரசாங்க உத்தியோகத்திலும் ஹைகோர்ட் ஜட்ஜி முதல் வக்கீல் கூட்டம் குமாஸ்தா கூட்டம் வரை கிட்டத்தட்ட 100க்கு 50 விகிதம் நாமக்கார பார்ப்பனர்கள் கைக்கு வந்து விட்டது.

ஜஸ்டிஸ் கட்சியின் பயனாகத்தான் நாமக்கார பார்ப்பனர்களும், விபூதிப் பார்ப்பனர்களும் சண்டை போட்டுக் கொள்ள முடியாமல் இருவரும் ஒற்றுமையாய் இருப்பதுபோல் காட்டிக் கொண்டு வருகிறார்களே ஒழிய அவர்களுக்குள் பொறாமை விரோதம் இல்லாமல் இல்லை.

ஆகவே உத்தியோகம் ஒரு சமூக முன்னேற்றத்துக்கு பயன்படாது என்று சொல்லப்படுமானால் அதை முட்டாள்தனமென்றோ  அல்லது அயோக்கியத்தனமென்றோ தான் சொல்ல வேண்டும்.

அரசியல் தேசாபிமானம் என்பதே உத்தியோகங்களையும் அதிகாரங் களையும் கைபற்றுவது என்பதல்லாமல்  வேறு என்ன என்று கேட்கின்றோம்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் அல்லது ஜஸ்டிஸ் கட்சி என்பது உத்தியோகத்தைக் கைப்பற்றுவது என்கின்ற ஒரு கொள்கையைக் கொண்டு இருக்காவிட்டால் இந்த 15 வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாத சமூகம் சமுதாயத் துறையில் இன்றைய  நிலைமையை அடைந்திருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

காங்கிரசு ஏற்படுவதற்கு முன் 100க்கு 50 வக்கீல்கள் முனிசீப்புகள் பார்ப்பனரல்லாதாராய் இருந்தவர்கள் காங்கிரஸ் ஏற்பட்டு அரசியல் ஆதிக்கம் அவர்கள் கைக்கு போன பின்பு 100க்கு 3, 4 முனிசீப்புகளும் 3, 4 வக்கீல்களாக ஆகிவிட்டது நமக்கு நன்றாய் தெரியும். முனிசீப்பும் வக்கீலும் பார்ப்பனர்களாக ஆகிவிட்டதால் பார்ப்பனரல்லாத சமூகம் ஜமீனாய் இருந்தாலும்  பாளையக்காரர்கள்  பெரிய முதலாளி  பெரிய மிராசுதாரனாய் இருந்தாலும் எஜமானே, எஜமானே, சுவாமிகளே, சாமிகளே என்று நாய் மாதிரி கோர்ட்டு குமாஸ்தா பார்ப்பனர்களுடையவும், பார்ப்பன வக்கீல் குமாஸ்தாக்களுடையவும் வீட்டுவாசலில் காத்துக் கொண்டிருந்ததும் அவர்களை நீ  நான்  அடே என்று மரியாதை வைத்து பார்ப்பனர்கள் அழைத்ததும் யாராவது தெரியாது என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம். இது உத்தியோகம் கைப்பற்றியதின் பயனாய் இந்த மனித சமூகத்துக்கு ஏற்பட்ட சுதந்திரமும் சுயமரியாதையும் அல்லவா என்று கேட்கின்றோம்.

உண்மையான சுயமரியாதைக்காரனாய் ஒருவன் இருப்பானே யானால் தன் சமூகத்துக்கு சுயமரியாதை ஏற்பட இந்தக் காரியத்தை அதாவது உத்தியோகம் கைப்பற்றுவதைச் செய்ய வில்லையானால் அவன் சுயமரியாதையின் தத்துவம் அறியாதவன் என்றோ அல்லது பார்ப்பனர்களின் கூலிகள் என்றோதான் சொல்ல வேண்டும்.

உத்தியோக செல்வாக்கால் பார்ப்பனர்கள் செய்யும் அக்கிரமம் பார்ப்பனரல்லாதாருக்குத் தெரியவில்லை என்றால் அது சுத்த முட்டாள் தனமான காரியமேயாகும்.

ஈரோடு

சாதாரணமாக ஈரோட்டை எடுத்துக் கொண்டால் ஈரோட்டில் எல்லா உத்தியோகமும் பார்ப்பனர்கள் கையிலேயே இருக்கிறது.

டிப்டி கலைக்டர் பார்ப்பனர்  தாசில்தார் பார்ப்பனர்  மாஜிஸ்திரேட் பார்ப்பனர்  போலீஸ் இன்ஸ்பெக்ட்டர் பார்ப்பனர்  சப் இன்ஸ்பெக்டர் பார்ப்பனர்  முனிசீப்பு பார்ப்பனர், பாங்கி ஏஜெண்டு பார்ப்பனர், இஞ்சினீர் பார்ப்பனர், ஓவர்சியர் பார்ப்பனர், ரிஜிஸ்ட்ரார் பார்ப்பனர், போஸ்ட் மாஸ்டர் பார்ப்பனர், கலெக்டர் ஆபிசில் 100க்கு  90 குமாஸ்தா, தாலூக்காபீசில்  100க்கு 95 குமாஸ்தா பார்ப்பனர்கள், போஸ்டாபீசில் 100க்கு 99 பார்ப்பனர்கள், முன்சீப்பு கோர்ட்டில் 100க்கு 100 பார்ப்பன குமாஸ்தாக்கள், 100க்கு 90 பார்ப்பன வக்கீல்கள். மீதி 100க்கு 10 பார்ப்பனரல்லாத வக்கீல்களும், பார்ப்பன  முனிசீப் பூட்சுக்குப் பாலீஷ் போட்டுக் கொடுப்பவர்களாகவே அனேகமாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். ஆகவே இந்தக் கூட்டத்தார் தான் நம்மை உத்தியோக வேட்டைக் கூட்டம் என்கிறார்கள்.

இம்மாதிரி ஈரோடு மாத்திரமல்லாமல் ஜில்லா பூராவும், ஏன் மாகாணம் பூராவும் பார்ப்பன மயமாக இருந்தால் ஒரு மாகாணத்தில் ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபையாய் இருந்தாலும் ஜஸ்டிஸ் கட்சி கவர்னராயிருந்தாலும் ஒரு சிகரட் பீடிக் கடைக்காரனுடைய ஓட்டாவது பார்ப்பனரல்லாதாருக்கு விழ முடியுமா என்று கேட்கின்றோம். சென்னைத் தேர்தல்கள் பெரிதும் பார்ப்பன உத்தியோகஸ்தர்கள் ஓட்டுகளாலும் அவர்கள் முயற்சியாலுமே பாதிக்கப்படுகின்றன.

ஏதாவது ஒரு பார்ப்பனரல்லாத அதிகாரி ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்து எங்காவது பேசத் தொடங்கிவிட்டானேயானால் எல்லாப் பார்ப்பன அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து சதியாலோசனை செய்து பொய் சாட்சிகளை விலைக்கு வாங்கி பார்ப்பனரல்லாத அதிகாரிகளின் மேல் குற்றங்கள் ஜோடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இந்நிலையில் பொது ஜனங்கள் எப்படித் தங்கள் ஓட்டுகளை நடுநிலைமையில் உபயோகிக்க முடியும் என்று கேட்கின்றோம்.

வெள்ளைக்கார உத்தியோகஸ்தர்களை எப்படி கைக்குள் போடுவது என்பது பார்ப்பனர்களுக்குத் தெரிந்த அளவில் 100க்கு 10 வீதம்கூட பார்ப்பனரல்லாதாருக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் அந்தப்படி செய்ய அவர்கள் சம்மதிப்பதில்லை. இதன் காரணமாகவே வெள்ளைக்காரர்கள் நியாயம்கூட சில சமயங்களில் அசல் அநியாயம் என்றால் அப்பீலில் அதுவே காயம் என்று ஆகிவிடுகின்றது.

போஸ்டாபீஸ், பாங்கு, போலீசு, முனிசீப் கோர்ட்டு, மேஜிஸ்திரேட் ஆகிய துறைகள் பார்ப்பன மயமாய் இருந்தால் அந்த விஸ்தீரணத்தில் வாழும் பார்ப்பனரல்லாத மக்கள் நிலை முழுதும் சுயமரியாதையற்ற தன்மை ஆகிவிடுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதை ஒன்றுக்கு மேம்பட்ட தடவை மேலதிகாரிகளுக்குத் தெரிவித்திருந்தும் இதுவரை யாதொரு பிரயோஜனமும் இல்லாமல் இருப்பதானது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

இந்நிலையில் உத்தியோகம் பிரதானமா? தேசீயம் பிரதானமா? என்று கேட்கப்படுமானால் இதை மறுபடியும் முட்டாள்தனமான கேள்வி அல்லது வடிகட்டின அயோக்கியத்தனமான கேள்வி என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்த தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பெற வேண்டுமானால் உத்தியோகங்கள் பார்ப்பன அக்கிராரமாய் இருப்பதைக் கலைத்து விடாத பக்ஷம் தோல்வி அடைவது நிச்சயம் நிச்சயம் என்றே சொல்லுவோம்.

இந்த உண்மைகளை அரசாங்கமும், மந்திரிகளும் இனியாவது உணர்ந்து தக்கது செய்வார்களா?

குடி அரசு  தலையங்கம்  14.04.1935

You may also like...