செட்டிநாட்டில் சீர்திருத்தப் புரட்சி

 

நாட்டுக்கோட்டை  நகரத்தார்  லேவாதேவியின்  மூலம்  நன்றாய்  பணம்  சம்பாதிக்கக்கூடிய  சமூகத்தார்கள்  என்பது  யாவரும்  அறிந்ததாகும்.

ஆனால்  அப்பணத்தை  ஒழுங்கான  முறையில்  செலவு  செய்யவோ  அல்லது  தங்கள்  சமூகத்தில்  அல்லது  பின்  தங்கள்  சந்ததிகள்  அறிவுபெற்று  விளங்கும்படி  பயன்படுத்தவோ  அச்சமூகத்தில் அனேகருக்குத்  தெரியாது  என்றே  சொல்லவேண்டும்.

அவர்களுடைய  பணம்  எல்லாம்  கோயில்  கட்டுதல்,  வேத  பாடசாலை  வைத்தல்,  உற்சவங்களுக்கு  வாகனம்  செய்தல்,  சாமிக்கு  பாலபிஷேகத்துக்கு  பசுமடம் வைத்தல்,  யாத்திரை  செல்லுதல்  ஆகிய  கடவுள்  செலவுக்கும்  மற்றும்  கல்யாணம்  செய்தல்,  புதுமை  செய்தல், 10ம்,  60ம்  கல்யாணம்  செய்தல்,  கருமாதி  திதி  செய்தல்,  உபதேசம்  பெருதல்,  திருவாதிரை  செய்தல்  முதலாகிய  வைதீக  சடங்குகளுக்கும்  பெரிதும்  செலவு  செய்து  வீண்  பெருமை  பெறப்  பயன்படுத்தப்படுகின்றனவே  ஒழிய  செல்வத்தினால்  ஏற்படவேண்டிய  பயனைக்கருதி  செலவழிப்பது  என்பது  மிகவும்  அருமையாகவே  காணப்படும்.

இவை  தவிர  அவசியமில்லாமல்  1  லக்ஷம்,  2  லக்ஷம்,  5  லக்ஷம்  போட்டு  வீடு  கட்டிக்  கொள்வது  ஆகிய  காரியமும்  செய்யப்படுகிறது.  மற்றும்  இன்னாட்டில்  பல  லக்ஷக்கணக்கான  பிச்சைக்காரர்களும்,  பல  கோடிக்கணக்கான  தற்குறிகளும்,  10  லக்ஷக்கணக்காக  வேலையற்றுத்  திண்டாடும்  மக்களும்  இருப்பதை  இக்கூட்டத்தார்கள்  அறியமாட்டார்கள்  என்றும்  சொல்ல  முடியாது.

இந்நிலையில்  நமது  நாட்டு  மக்கள்  இருக்க,  இப்போது  சிறிது  காலமாய்  ஒரு  புதிய  கூட்ட  வாலிபர்கள்  தாசி  வைப்பது,  மதுபானம்  அருந்துவது,  சீட்டுகள்  பந்தயங்கள்  ஆடுவது,  கார்  வைப்பது  முதலிய  தர்பார்  செலவில்  இறங்கி  இருக்கிறார்கள்  என்றும்  சொல்லலாம்.  இவற்றால்  எல்லாம்  அந்த  சமூகத்துக்கோ,  நாட்டு  நலனுக்கோ  ஏதாவது  கடுகளவாவது  பயன்  இருக்கிறது  என்று  யாராவது  சொல்ல  முடியுமா?

அச்சமூகத்தில்  கொஞ்ச  காலமாய்  சில  வாலிபர்களுக்கு  சீர்திருத்த  ஆர்வம்  ஏற்பட்டு  ஏதோ  இரண்டொரு  சீர்திருத்தம்  செய்ய  ஏற்பட்டது  என்றாலும்  அவை  சீர்திருத்தக்காரர்களாலேயே  தாக்குப்  பிடிக்க  முடியாமல்  அதிக  பயன்  கொடுப்பதற்கில்லாமல்  போய்விட்டது.

இவ்வளவு  காலம்  பொருத்தேனும்  அச்சமூகப்  பிரமுகர்  ஒருவரால்  பெருந்தொகை  ஒதுக்கி  வைத்து  ஒரு யூனிவர்சிட்டி  ஏற்படுத்தப்பட்டது  என்றாலும்  அதுவும்  பெரிதும்  ஒரு  வகுப்பாருடைய  நன்மைக்கே  பயன்படும் படியான மாதிரியில் அமைந்து விட்டது என்றுதான் சொல்ல  வேண்டி  இருக்கிறது.

இருந்தாலும்  கோவில்  கட்டுவதை  விட்டு  இதாவது  செய்தார்களே  என்று  போற்ற  வேண்டியது  அவசியமாகும்.

மற்றும்  பல  செல்வவான்களுக்கு  இப்போது  இந்த  எண்ணம்  உதித்து  இருப்பதாகவும்  தெரிகிறது.

எனவே  கடவுள்  விஷயம்  கொஞ்சம்  கொஞ்சமாக  மாறி  அச்செல்வம்  கல்வி  விஷயத்துக்கு  பயன்படும்படியாக  மாறுவது  போலவே  வைதீகச்  சடங்கு  விஷயமும்  மாறி  அவைகள்  பொது  மக்கள்  கல்விக்கு  பயன்படா  விட்டாலும்  அந்தந்த  குடும்ப  மக்களின்  கல்வி,  நாகரீகம்,  நல்வாழ்க்கைப்  பழக்கம்  ஆகியவைகளுக்காகவது  பயன்படும்படியான  மார்க்கம்  ஏற்பட்டால்  அதிலிருந்து  பிறகு  அனேக  முற்போக்குகள்  ஏற்படலாம்  என்று  எதிர்பார்க்கலாம்.

ஆகவே  வைதீகச்  சடங்குகள்  விஷயத்தில்  இவ்வளவு  காலம்  பொருத்தாவது  அச்சமூகத்தில்  ஒரு  பெரும்  சீர்திருத்தம்  ஏற்பட்டதையும்  இனியும்  பல  ஏற்படப்  போவதாகக்  காணப்படுவதையும்  பார்த்து  நாம்  மிகுதியும்  பாராட்டுகிறோம்.

என்னவெனில்  சுயமரியாதை  சங்கத்தில்  ஆரம்ப  முதல்  நிர்வாக  சபை  அங்கத்தினராய்  இருந்துவரும்  தோழர்  வைசு.  ஷண்முகம்  அவர்கள்  தனது  மகள்  தோழர்  பார்வதிக்கு  நடத்தின  திருமணத்தை  ஒரு  பெரும்  சீர்திருத்த  திருமணமாகவே  நடத்திக்காட்டி  விட்டார்.

அதாவது  புரோகிதம்  இல்லை  என்பதும்,  ஒரே  நாளில்  முடித்தது  என்பதும்  மற்றும்  எவ்வித  வைதீகச்  சடங்கும்  இல்லாமல்  செய்தது  என்பதும்  மிக  குறைந்த  செலவில்  நடத்தப்பட்டது  என்பதும்  பாராட்டக்கூடியதேயாகும்.

அதுபோலவே  அதே  திருமணத்தை  ஒட்டி  மற்றும்  சில  தோழர்கள்  தம்பதி  சகிதம்  ஒன்று  கூடி  தங்கள்  குழந்தைகளுக்கு  புதுமை  என்னும்  சடங்கு  செய்வதில்லை  என்று  முடிவு  செய்து  கொண்டு  விட்டார்கள்.  புதுமை  என்பது  ஒரு  தம்பதிக்கு  முதல்  முதல்  பிறக்கும்  குழந்தைக்கு  செய்யும்  ஒரு  சடங்காகும்.

இச்சடங்குக்கு  எவ்வளவு  ஏழையாய்  இருந்தாலும்  குறைந்தது  2500  ரூ.  முதல் 10000 ரூபாய்  வரை  செலவு  ஏற்படும்.  இதை  நிறுத்துவது  என்பது  அச்சமூகத்தில்  முடியாத  காரியமாகும்.

யாராவது  நிருத்தினால்  அவர்கள்  அச்சமூகத்தில்  மிகவும்  இழிவாகவும்,  கேவலமாகவும்  கருதப்பட வேண்டியவர்களாவார்கள்.

ஆகவே  இப்படிப்பட்ட  சடங்கையும்  மற்றும்  இது  போன்ற  சடங்கு களையும்  செய்வதில்லை  என்று  ஒரு  கூட்டத்தார்  முடிவு  செய்து  விட்டார்கள்.

அதாவது  8735ந்  தேதி  மாலை  5  மணிக்கு  கானாடுகாத்தான்  தோழர்  வைசு  ஷண்முகம்  அவர்களது  இன்பமாளிகையில்  தோழர்  ஈ.வெ. ராமசாமி  அவர்கள்  தலைமையில்  ஒரு  சிறு  கூட்டத்  தம்பதிகள்  கூட்டம்  கூட்டப்பட்டு  இம்மாதிரி  வைதீகச்சடங்கால்  ஏற்படும்  பணச்  செலவையும்  பயனற்ற  தன்மையையும்  எடுத்துச்சொல்லி  மேல்  கண்ட  முடிவுக்கு  வந்து  பல  தம்பதி களிடம்  உறுதிமொழியும்  கையொப்பமும்  வாங்கப்பட்டுவிட்டது.

மற்றும்  பல  தம்பதிகள்  தங்கள்  பெயர்களையும்  அதில்  சேர்த்துக்  கொள்ளும்படி சொன்னார்கள். ஆயினும் அவைகளை பின்னால்  தெரிவிக்கப்படும்.

இந்தக்  கூட்டம்  கூட்டவும்  இந்த  முடிவுக்கு  வரவும்  முக்கியஸ்தராய்  இருந்தவர்  தோழர்  மு.  நடராஜனாவார்.  ஆனால்  முதல்  முதல்  கையொப்பமிட  முனைந்தவர்கள்  தோழர்கள்  வைசு. ஷ. சோலை  தம்பதிகளாவார்கள்.  மற்ற  தம்பதிகளும்  வெகு  அன்புடனும்  ஆசையுடனும்  ஒப்பிக்  கையொப்பமிட்ட  பிறகு  தம்பதிகள்  குதூகலத்துடன்  கைகொடுத்து  ஆனந்தித்த  காட்சி  மிக  மிக  அருமையாய்  இருந்தது.

இக்கூட்ட  நிகழ்ச்சியையும்  கையொப்பங்களையும்  படமாக்கி  இதில்  பிரசுரித்திருக்கிறோம்.*  மற்றும்  இந்த  முடிவை  ஒப்புக்  கொள்ளு கிறவர்கள்  தம்பதி  சகிதமாய்  ஒப்புக்கொண்டு  கையொப்பங்களை  அனுப்பினால்  நன்றி  அறிதலுடன்  ஏற்று  பிரசுரிக்கப்படும்.

குடி அரசு  கட்டுரை  28.07.1935

You may also like...