பார்லிமெண்டில் ராஜிநாமா விஷயம்

 

பீஹார், ஐக்கிய மாகாண மந்திரிகள் ராஜிநாமா விஷயமாக காமன்ஸ் சபையில் ஆக்டிங் உதவி இந்தியா மந்திரி லார்டு விண்டர்ட்டன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதன் சாரம் மூன்றாவது பக்கத்தில் வெளிவருகிறது. அரசியல் கைதிகள் விடுதலை காங்கரஸ் வேலைத் திட்டத்தில் ஒரு முக்கியமான அம்சம் என்பதை லார்டு விண்டர்ட்டன் மறுக்கவில்லை. “மாகாணத்தின் அமைதிக்கும் சமாதானத்துக்கும் பங்கம் ஏற்படாத முறையில் ஏற்பாடு செய்து திருப்தி செய்து கொண்டு, ஒவ்வொரு கைதியின் நிலைமையையும் தனித்தனியாக யோசித்து அத்தகைய கைதிகளை விடுதலை செய்வதென்ற மந்திரிகளின் யோசனையை, கவர்னர் ஜெனரலுடன் கலந்து ஆலோசித்தபின் கவர்னர்கள் ஒப்புக்கொண்டனர் என்றும் அதன்படி ஐக்கிய மாகாணத்தில் 14 ராஜீயக்கைதிகளும் பீஹாரில் 15 ராஜீயக் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டனர் என்றும் இன்னும் ஐக்கிய மாகாணத்தில் 15 பேர்களும் பீஹாரில் 26 பேர்களும் விடுதலையாகாமல் இருக்கிறார்கள் என்றும் அவர்களில் சிலர் கொடூரமான பலாத்காரக் குற்றங்கள் செய்தவராகையினால் அவர்கள் விஷயத்தை தனித்தனியாகப் பரிசீலனை செய்து முடிவு கூற கவர்னர்கள் தயாராக இருந்தனர் என்றும் காங்கரஸ் மந்திரிகள் அந்த யோசனைக்கு இணங்காமல் எல்லாக் கைதிகளையும் அவர்களது குற்றங்களின் தரா தரங்களை கவனியாமல் ஒரே அடியாக விடுதலை செய்ய வேண்டுமென பிடிவாதம் செய்ததினாலேயே வைஸ்ராய் குறுக்கிடவேண்டிய நிலைமை ஏற்பட்டதென்றும் லார்டு விண்டர்ட்டன் கூறுகிறார்.

மாகாண விஷயங்களில் வைஸ்ராய் குறுக்கிட்ட காரணங்களை விளக்கிக் கூறுகையில் “பீஹார், ஐக்கிய மாகாணங்களில் மந்திரிமார் கூறிய யோசனைகளை கவர்னர்கள் ஒப்புக்கொண்டிருந்தால் இந்தியாவின் சமாதானத்துக்கும் அமைதிக்கும் பேராபத்து ஏற்படுமென கவர்னர் ஜெனரல் பூரணமாக நம்பியதினாலேயே மாகாண விஷயங்களில் அவர் குறுக்கிட்டார் எனவும் லார்டு விண்டர்ட்டன் குறிப்பிடுகிறார். ராஜீய நோக்கத்துடன் பலாத்கார குற்றம் செய்கிறவர்கள் பேரில் தேச சட்டப்படியும் நீதி நிர்வாக முறைப்படியும் நடவடிக்கை எடுக்கக் கூடாதென்று ஏற்பட்டால் இந்தியாவில் சட்டத்துக்கும், அமைதிக்கும் குழி தோண்டியதாக ஏற்பட்டு விடுமென்றும் லார்டு விண்டர்ட்டன் அபிப்பிராயப்படுகிறார். மற்றும் இந்தியா மந்திரியின் அநுமதி பெற்றே கவர்னர் ஜெனரல் மாகாண விஷயங்களில் தலையிட்டார் எனவும் லார்டு விண்டர்ட்டன் தெரிவிக்கிறார். எனவே கவர்னர் ஜெனரலோ காங்கரஸ் மந்திரிகளோ திடும்பிரவேசமாய் எதுவும் செய்துவிடவில்லை என்றே தோன்றுகிறது. அரசியல் கைதிகள் விடுதலை விஷயமாக பீஹாரில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் கவர்னர் தமது ஏகோபித்த சிபார்சுகளை ஒப்புக்கொள்ளாததினால் ராஜிநாமா செய்வதைத் தவிர வேறு வழியில்லை யென்றும் காங்கரஸ் காரியக் கமிட்டியார் அனுமதியளித்தால் ராஜிநாமாச் செய்ய தயார் என்றும் பீஹார் மந்திரிகள் காங்கரஸ் தலைவர் ஜவஹர்லாலுக்கு தெரிவித்திருப்பதாகச் சென்ற வார ஆரம்பத்தில் ஒரு செய்தி வெளிவந்தது நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். ஆனால் அச்செய்திக்கு ஆதாரமில்லையென நம்பத்தகுந்த இடத்திலிருந்து தகவல் கிடைப்பதாகவும் அ.பி.செய்தி ஒன்று அப்பால் வெளி வந்தது. அந்தச் செய்தி வெளிவந்த போதே நாம் சந்தேகப்பட்டதுண்டு. அம்மாதிரி முக்கியமான செய்திகள் தக்க ஆதாரமின்றி வெளிவந்திருக்க இடமில்லை என்றும் தமது யோசனைகளை கவர்னர் ஒப்புக்கொள்ளக்கூடும் என்ற நம்பிக்கையினால் பீஹார் மந்திரிகள் முதலில் வெளிவந்த செய்தியை மறுக்குமாறு அ.பிரக நிர்வாகிகளைக் கேட்டிருக்க வேண்டும். பீஹார் ஐ.மா.அரசியல் கைதிகள் விஷயத்தில் மந்திரிமார் யோசனைகளை கவர்னர்கள் முற்றும் நிராகரிக்கவில்லை யென லார்டுவிண்டர்ட்டன் அறிக்கையினால் தெரியவருகிறது. மந்திரிமார் யோசனைப்படி ஐக்கியமாகாணத்தில் 14 கைதிகளும் பீஹாரில் 15 பேர்களும் விடுதலை செய்யப்பட்டதாகவும் உதவி இந்தியா மந்திரி கூறுகிறார். விடுதலையானவர்கள் போக ஐக்கிய மாகாண சிறைகளிலிருக்கும் 15 பேர்களும், பீஹார் சிறைகளிலிருக்கும் 26 பேர்களும் பலாத்காரக் குற்றங்கள் செய்து தேச சட்டப்படியும் நீதி நிர்வாக முறைப்படியும் தண்டிக்கப்பட்டவர்களாகையினால் அவர்கள் ஒவ்வொருவர் விஷயத்தையும் தனித்தனியாக பரிசீலனை செய்து முடிவு கூற பீஹார் ஐ.மா.கவர்னர்கள் தயாராயிருந்ததாகவும் லார்டு விண்டர்ட்டன் தெரிவிக்கிறார். இதை காங்கரஸ் மந்திரிகளும் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ராஜீய கைதிகள் குற்றங்களின் தன்மையை லôயம் செய்யாமல் அவர்களை யெல்லாம் ஒரே மூச்சில் விடுதலை செய்ய வேண்டுமென்று மந்திரிகள் பிடிவாதம் செய்ததே நெருக்கடி ஏற்படக்காரணம் என சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிய வருகிறது. சிறையிலிருக்கும் கைதிகள் பெரும்பாலாரின் தண்டனைக்காலம் வெகு சீக்கிரம் முடிந்து விடும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் காங்கரஸ் மந்திரிமார் பிடிவாதம் செய்தது சரியா என்பதே முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். பெரிய பெரிய ஆக்கத்திட்டங்களை வகுத்துவேலை செய்து கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் ஒரு அற்ப விஷயத்தில் பிடிவாதம் காட்ட வேண்டுமானால் அதற்கு அந்தரங்க காரணங்கள் அலாதியாக இருக்க வேண்டுமென்றே நமக்குத் தோன்றுகிறது. லார்டு விண்டர்ட்டன் அறிக்கையில் சந்தேகம் கொண்ட காந்தியார் “வைஸ்ராயின் செய்கை எனக்குப் புரியவில்லையே. காங்கரஸ் மந்திரிகள் ஆட்சியில் பிரிட்டிஷ் சர்க்காருக்கு ஏற்கனவே அலுப்புத்தட்டி விட்டதா? இந்த அரசியல் கைதிகள் விடுதலைப் பிரச்சனையை பிரிட்டிஷார் ஒரு சாக்காக வைத்துக் கொண்டார்களா? வைஸ்ராய் தலையிட்டதற்கு நல்ல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்கள் பொது ஜனங்களுக்குச் சொல்லப்படவில்லையே” என காந்தியார் கூறுகிறார். அவரைப்போலவே பீஹார், ஐ.மா. காங்கரஸ் மந்திரிகள் ராஜிநாமா விஷயத்தில் சந்தேகம் கொண்ட நாமும் “காங்கரஸ் மந்திரிகள் செய்கை நமக்குப் புரியவில்லையே, மந்திரி பதவிகளில் அவர்களுக்கு ஏற்கனவே அலுப்புத் தட்டி விட்டதா? இந்த அரசியல் கைதிகள் பிரச்சினையை பீஹார், ஐ.மா. காங்கரஸ் மந்திரிகள் ராஜிநாமா விஷயத்தில் சந்தேகம் கொண்ட நாமும் “காங்கரஸ் மந்திரிகள் செய்கை நமக்குப் புரியவில்லையே. மந்திரி பதவிகளில் அவர்களுக்கு ஏற்கனவே அலுப்புத் தட்டிவிட்டதா? இந்த அரசியல் கைதிகள் பிரச்சினையை பீஹார், ஜ.மா. காங்கரஸ் மந்திரிகள் ஒரு சாக்காக வைத்துக்கொண்டார்களா? அவர்கள் ராஜிநாமாவுக்கு வேறு நல்ல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்தக்காரணங்கள் பொது ஜனங்களுக்குச் சொல்லப்படவில்லை” எனவே கூற வேண்டியிருக்கிறது. 6 கோடி மக்களுக்கு நலம் செய்யக்கூடிய திட்டங்களைப்போட்டிருக்கும் ஐ.மா.மந்திரிகள் 15 பேருக்காக ராஜிநாமாச் செய்யலாமா? 15 பேர் விடுதலை பெரிதா? 6 கோடிப்பேரின் நலம் பெரிதா? என பயனீர் பத்திரிகை கேட்கும் கேள்வி அர்த்த புஷ்டியுடைய கேள்வியாகும். ஏற்கனவே நாம் தெரிவித்துள்ளபடி பீஹார், ஐ.மா. ராஜிநாமாக்களுக்கு அரசியல் கைதிகள் பிரச்சினை உண்மையான காரணமல்ல. மந்திரி பதவியின் பொறுப்புக்களையும் கஷ்டங்களையும் ராஜிநாமாச் செய்த மந்திரிகள் பதவியேற்ற பிறகு உணர்ந்திருக்கவேண்டும். தாங்க முடியாத பாரத்தை தெரியாத் தனமாய் தாமாகவே மேற்போட்டுக் கொண்டதையும் அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். மேற்கொண்டு அப்பொறுப்பைத் தாங்குவது சாத்தியமல்லவென உணர்ந்தவுடனே, அரசியல் கைதிகள் விடுதலைப் பிரச்சினையை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு வெகு நாசூக்காகவும் தளுக்காகவும் பதவிகளை ராஜிநாமாச் செய்துவிட்டு பீஹார், ஐ.மா.மந்திரிகள் வீரப்பட்டம், தியாகிப்பட்டம் சூட்டிக் கொள்ள மாரீசம் பண்ணிவிட்டார்கள். இதுவே உண்மையாக இருக்கவேண்டும்.

– விடுதலை

குடி அரசு – கட்டுரை – 20.02.1938

You may also like...