கொச்சியில் அரசியல் சுதந்தரம் ” மித்திர ” னின் ஜாதி புத்தி

 

கொச்சி ராஜ்யமானது நமது தமிழ் ஜில்லாக்களில் ஒரு நான்கு ஐந்து தாலூகாகளுக்கு சமமாகும். சுமார் 12 லக்ஷம் ஜனங்களும் சுமார் 1 கோடி ரூ. வருஷ வருமானமும் உடையதாகும். இந்த ராஜ்யம் இன்று இந்தியாவிலேயே தலை சிறந்து விளங்கும் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாக விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கொச்சியில் இன்று இருக்கும் ராஜா 75 வயது கடந்த விருத்தரும் பழமை விரும்பியும் வைதீகப் பித்தருமாவார் என்றாலும் அவருக்கு கிடைத்த அருமையான திவானால் மகாராஜா இன்று குன்றின் மேலிட்ட தீபமாய் விளங்குகின்றார்.

இந்த மகாராஜா மீது பார்ப்பனர்கள் ஒரு குறை கூறுகிறார்கள். அதாவது கொச்சி மகாராஜா கோவிலை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்துவிடவில்லை என்பதாகும். (எப்படிப்பட்ட பார்ப்பனர்கள் இந்தக்குறை கூறுகிறார்கள் என்றால் பார்ப்பன ராஜ்யம் இருக்கும் பிரிட்டிஷ் ராஜ்யத்தில் கோவிலைத் திறந்து விடுவதற்கு சட்டம் செய்யக்கூடாது என்று வாதாடும் பார்ப்பனர்கள்.)

ஏனெனில் பக்கத்து தேசமாகிய திருவாங்கூர் மகாராஜா கோவிலைத் திறந்து விட்டிருக்கும்போது கொச்சி ராஜா ஏன் திறந்துவிடக்கூடாது என்று காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் திருவாங்கூர் ராஜாவுக்கு வயது சுமார் 20 இருக்கலாம். கொச்சி ராஜாவுக்கு வயது 76. ஆதலால் திருவாங்கூர் ராஜாவைக் கொண்டு செய்யப்படும் காரியம் கொச்சி ராஜாவைக் கொண்டு செய்யப்படமுடியாது என்பது தவறாகாது. ஆனாலும் பொது நலம் கருதி அது செய்யப்படத்தான் வேண்டும் என்பதில் யாருக்கும் துக்ஷேபமிருக்காது.

ஆனபோதிலும் கொச்சிக்கு ஏற்பட்ட திவான் உண்மையும் தீரமும் அரசியல் ஞானத்தன்மையும் கொண்ட காரியவாதி யாகையால் அவர் அதிகாரத்தை – உத்தியோகத்தை பெரும் பெரும் பதவியை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொச்சி ராஜாவால் திறந்து விடும்படி செய்திருக்கிறார்.

திருவாங்கூரில் அதில்லை. திருவாங்கூர் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்லுடன் முட்டிக் கொள்ள வேண்டியது தான். இந்த கல்லுக்குப் பக்கத்தில் போய் முட்டிக்கொள்ளும் சுதந்தரமும் திருவாங்கூர் ராஜ்ய மக்கள் கிறிஸ்துவர்களாகவும், முஸ்லீம்களாகவும் பகுத்தறிவு வாதிகளாகவும் ஆகிவிடாமல் பார்த்துக் கொள்வதற்காகவே அப்படி செய்யப்பட்டதென்பது திருவாங்கூர் தீண்டாமை ஒழிப்பு கிளர்ச்சிக் கதையை அறிந்தவர்களுக்கு நன்றாய் விளங்கும்.

ஆனால் கொச்சி சமஸ்தானத்தின் மேன்மையை அறிய ஆசைப்படுகிறவர்க ஒரு விஷயத்தைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

அதாவது கொச்சி சமஸ்தான சர்க்கார் பதவிகள், உத்தியோகங்கள் ஆகியவற்றில் 100 உத்தியோக பதவிகளில் ஏற்கனவே ஏகபோகமாய் அனுபவித்து வந்த பார்ப்பனர்களுக்கு 4-ம் ஈழவர் புலையர் மற்றவர்கள் என்பவர்களாகிய தீண்டப்படாதவர்கள் என்று கருதி வந்தவர்களுக்கு 38 பதவிகளும் ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்றால் இதைப்பார்க்கிலும் முன்னேற்ற முறையைக் கையாண்ட தேசம் இந்தியாவில் வேறு எங்கிருக்கிறது என்று கேட்கிறோம்.

கல்லைக்காட்டி திருவாங்கூர் தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றி விட்டதைப்பற்றி காந்தியார் புகழ்ந்து விட்டார். ஆச்சாரியார் இது விஷயத்தில் சிறிதுகூட சம்மந்தமில்லாத திருவாங்கூர் திவானுக்கு மாலை சூட்டினார். மற்ற சாஸ்திரி பார்ப்பனர்கள் “திருவாங்கூர் மகாராஜா நல்லதொரு சமயத்தில் இந்து மதத்தைக் காப்பாற்றினார்” என்று பாராட்டி விட்டார்கள் . ஆனால் இதனால் திருவாங்கூர் பொது மக்களுக்கு கிடைத்த அரசியல் சுதந்தரமென்ன, அதிகார சுதந்தரமென்ன என்று கேட்கிறோம்.

திருவாங்கூர் திவானாலோ, மகாராஜாவாலோ கொச்சி ராஜா ஆரம்பத்திலேயே கொடுத்த இவ்வளவு பெரிய வகுப்புவாரி உரிமை சுதந்தரத்தை மனதிலாவது நினைக்க முடியுமா என்று கேட்கிறோம். ஏனெனில் திருவாங்கூர் என்றால் சர்வம் பார்ப்பன மயமாய் இருந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க கொச்சி ராஜா ஒரு அரசியல் சுதந்தர பிரகடனம் செய்திருக்கிறார். இதுவும் இதுவரை எந்த சுதேச சமஸ்தானமும் செய்திருக்காத ஒரு மாபெரும் சுதந்தரப் பிரகடனமாகும். அதுவும் முதல் முதல் ஆரம்பத்தில் இவ்வளவு சுதந்தரம் நமது பிரிட்டிஷ் அரசாங்கம் கூடகொடுத்ததில்லை என்பது மாத்திரமல்லாமல் இந்திய தேசிய காங்கரசும் கேட்டதில்லை என்று சொல்லலாம்.

அதாவது சட்டசபை மெம்பர்களில் ஒருவரிடம் சில இலாகாக்களை ஒப்புவித்து அந்த மெம்பரை சட்டசபை மெம்பர்களுக்கு ஜவாப்தாரியாய் இருக்கவேண்டியது என்று செய்திருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் இந்தியாவில் இம்மாதிரியாகத்தான் முதல் முதல் ஜனப்பிரதிநிதிக்கு சில இலாகா கொடுப்பது என்று ஏற்பாடு செய்து முதல் பிரதிநிதியாக பொப்பிலி மகாராஜாவை (இன்றைய பொப்பிலி ராஜாவின் பாட்டனாரை) ஏற்படுத்தி அவர் வசம் சில இலாகாகளை கொடுத்தார்கள். ஆனால் அவர் சட்டசபைக்கு கட்டுப்பட்டவரல்ல. அந்த வழியில் வந்தவர்கள்தான் வீ.கிருஷ்ணசாமி அய்யர், சர். சிவசாமி அய்யர், சர் சி.பி.ராமசாமி அய்யர் முதலியவர்கள் ஆவார்கள். இவர்கள் காலத்தில் இந்த அதிகாரமும் பொறுப்பும் போதாதது என்று காங்கரஸ் குறை கூறவில்லை. அதற்கு பதிலாக காங்கரஸ் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டுக்கு நன்றி செலுத்திற்று என்பது நமக்கு தெரியும். காரணமென்னவென்றால் அப்பதவி 1927 வரையில் பார்ப்பனர்களுக்கே ஏகபோகமாய் இருந்து வந்ததுதான். ஆனால் இப்போது கொச்சி மகாராஜா ஆரம்பத்திலேயே சில இலாக்காக்களை சட்ட சபைக்கு பொறுப்பானவர் வசம் ஒப்படைத்திருக்கும்போது சென்னை பார்ப்பன “மித்திர”னாகிய “சுதேசமித்திரன்” இது போதாது என்று கொச்சி திவான் சர்.ஆர்.கே.ஷண்முகம் அவர்கள் மீது குறை கூறுகிறது. இதன் காரணம் என்ன என்று பார்ப்போமேயானால் இதுவரை பார்ப்பனர்கள் திவான்களாக இருந்த எந்த சமஸ்தானத்திலும் செய்திருக்காத ஒரு பெரிய அரசியல் சுதந்தரத்தை ஒரு பார்ப்பனரல்லாத திவான் உள்ள சமஸ்தானத்தில் ஒரே தடவையில் ஏற்படுத்தி இருப்பதேயாகும்.

இவ்வளவையாவது “சுதேசமித்திர” னின் தம்பி தோழர். சர்.என். கோபாலசாமி அய்யங்கார் மாதம் 5000 ரூ. வாங்கிக்கொண்டிருக்கும் காஷ்மீரில் ஏன் செய்யவில்லை? “சுதேசமித்திர”னின் ஜாதியான தோழர் சர்.வி.டி. கிருஷ்ணமாச்சாரியார் மாதம் 6000 ரூபாய் வாங்கிக்கொண்டிருக்கும் பரோடா சமஸ்தானத்தில் ஏன் செய்யவில்லை? ” சுதேசமித்திரன் ” ஜாதியான தோழர் சர்.சி.பி.மாதம் 5000 ரூபாய் போல் அனுபவித்து வரும் திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஏன் செய்யவில்லை? என்று கேட்பதோடு செய்யும்படியாகவாவது “சுதேசமித்திரன்” விரும்பிற்றா அல்லது யோசனை சொல்லிற்றா என்றும் கேட்கின்றோம்.

மேலும் தோழர் சர்.ஷண்முகம் ஆதரவளித்த கொச்சி சீர்திருத்தத்தில் ஒரு 10-ல் ஒரு பாகமாவது þ பார்ப்பன திவான்களின் சமஸ்தானம் ஏதாவதொன்றில் ஏற்பட்டிருந்தால் “மித்திரன்” எவ்வளவு புகழ்ந்திருப்பான் என்பதையும் மற்ற பார்ப்பனர்கள் எவ்வளவு புகழ்மாலை கூறி தந்தியடித்து அந்த திவானை எவ்வளவு ஆகாயத்தில் தூக்கி வைத்திருக்கும் என்பதையும் வாசகர்களையே சிந்தித்துப் பார்க்கும்படி விட்டு விடுகிறோம். தோழர் சர்.ஷண்முகம் இந்தப் போலிக் கூப்பாடுகளையும் விஷமப் பிரசாரங்களையும் சிறிதும் லட்சியம் செய்பவரல்ல என்பதோடு தன்னால் கூடிய அளவு ஒவ்வொரு துறையிலும் செய்தே தீருவார் என்பதிலும் யாருக்கும் சிறிதும் சம்சயமிருக்காது என்பது நமக்கு தெரியும். மற்றும் தோழர் சர்.ஷண்முகம் அவர்கள் தீண்டாமை ஒழிப்பு விஷயத்தில் அவரிடம் விவகாரத்துக்கு வந்த சகல பிராதுகளிலும் தீண்டாமை ஒழிவதற்கு அனுகூலமாகவே உத்தரவு போட்டிருக்கிறார் என்பது அந்த சமஸ்தான நடவடிக்கைகளை கவனித்து வருகிறவர்களுக்கு நன்றாய் விளங்கும்.

ஆகவே பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் எவ்வளவு குரோத புத்தியுடனும் வஞ்சக புத்தியுடனும் நடந்துவந்து பார்ப்பனரல்லாதார் தலைவர்களையும் மேதாவிகளையும் குறைவு படுத்தி அழுத்திவைக்க முயற்சிக்கின்றன என்பதை தெரிவிக்கவே இதை எழுதுகிறோம்.

குடி அரசு – கட்டுரை – 09.01.1938

You may also like...