தேசீய காங்கரஸ் கலப்புமணப் பிறவி

தலைவரவர்களே! தோழர்களே! இந்த ஊருக்கு நாங்கள் ஈ.வெ.ரா. நாகம்மாள் ஞாபகார்த்த வாசக சாலையின் ஆண்டு விழாவுக்கு வந்திருந்த சமயத்தில் எங்களை மிக ஆடம்பரத்துடன் வரவேற்று உபசரித்து பல வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளித்ததுடன் இன்று இரவு சமீபத்தில் நாங்கள் கண்டிராத இவ்வளவு பெரிய கூட்டம் கூட்டி எங்கள் அபிப்பிராயங்களை எடுத்துச் சொல்ல அவகாசமளித்ததற்காக எனது மனமார்ந்த நன்றியறிதலையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நான் இன்று இரவு இங்கு காங்கரசு, ஹிந்து முஸ்லிம் சமூக ஒற்றுமை, அரசியலும் காங்கரசும் என்பவை பற்றி பேசுவேன் என்பதாக துண்டு விளம்பரத்தில் விளம்பரப்படுத்தி இருக்கிறீர்கள்.

எனக்கு உடல் நலம் சரியாய் இல்லை. இந்த வாரத்தில் மோட்டார் காரில் மாத்திரம் சுமார் 2000 மைல் கிராமம் கிராமமாய் சுற்றி அலைந்திருப்பதுடன் மதராசில் இருந்து தூத்துக்குடிக்கு காரிலேயே வந்திருக்கிறேன். அது மாத்திரமல்லாமல் இன்று இரவு இப்பொழுதே புறப்பட்டு காரிலேயே ஈரோடு போய் சேர வேண்டியவனாய் இருக்கிறேன். ஏனெனில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகும்படி எனக்கு ஒரு கோர்ட்டில் இருந்து சம்மன் சார்வாய் இருக்கிறது. வாய்தா கொடுக்கும்படி 2, 3 தடவை வக்கீல் வைத்து அபிடெவிட் கொடுத்து கெஞ்சியும் வாய்தா கிடைக்கவில்லை. ஆதலால் இன்னும் அரைமணி நேரத்தில் நான் சொல்ல வேண்டியவைகளை சுருக்கமாக சொல்லிவிட்டு இங்கிருந்தபடியே ஈரோட்டுக்கு புறப்பட்டுச் செல்லப் போகிறேன். ஆதலால் அதிக நேரம் பேச முடியாததற்காக மன்னிக்க கோருகிறேன்.

தாங்கள் அளித்த வரவேற்புப் பத்திரங்களில் வெறும் புகழ் வார்த்தைகளே நிரம்பி இருக்கின்றன. அப்புகழ்ச்சிகளுக்கு நான் உண்மையிலேயே தகுதி உடையவன் அல்லவாயினும் தகுதி உடையவனாக ஆவதற்கு முயற்சிக்கிறேன். அதோடு கூடவே அவ்வரவேற்பின் மூலம் எனது அரசியல், சமுதாய இயல், மத இயல் சம்மந்தமான கொள்கைகளையும் கருத்துக்களையும் நீங்கள் ஆமோதித்து பாராட்டி இருப்பதற்கு நான் மிகுதியும் மகிழ்ச்சியும் ஊக்கமும் கொள்கிறேன்.

~subhead

காங்கரஸ் தோன்றியதேன்?

~shend

தோழர்களே! இந்து முஸ்லீம் விஷயமாய் நான் உங்களுக்குத் தெரியாத எதைப் பேசக் கூடும்? இது விஷயத்தில் எனது அபிப்பிராயம் என்னவென்றால் இந்து முஸ்லிம் இரு சமூகத்திற்குள்ளும் என்றும் தீராப் பகைமைக்கு வினையாய் இருந்து இரு சமூகத்துக்குள்ளும் ஒற்றுமை இல்லாமலும் துவேஷமும் பழிவாங்கும் தன்மையும் வளரும்படியாகவும் இருக்கச் செய்து வருவதற்கே இன்று இந்நாட்டில் காங்கரஸ் ஸ்தாபனம் என்பதாக ஒன்று இருந்து வருகின்றது என்பதாகும். அது மாத்திரமல்லாமல் முஸ்லிம்களிடம் இந்துக்களுக்கு இருந்து வந்த துவேஷம், பொறாமை, அசூயை காரணமாகவும் கீழ்ஜாதியார் என்பவர்களிடம் மேல் ஜாதியாருக்கு இருந்து வந்த பொறாமை, துவேஷம், அசூயை காரணமாகவும் தான் காங்கரஸ் ஏற்படுத்தப்பட்டது என்பதும் எனது திடமான அபிப்பிராயமாகும். நான் இதை சும்மா பொறுப்பற்ற தன்மையிலோ இன்று மாத்திரமோ சொல்லவில்லை. தக்க ஆராய்ச்சி, பிரத்தியக்ஷ அனுபவம் முதலியவைகளின் மீதே 10 வருஷ காலமாகவே பேசி வருகிறேன். மற்றும் இந்தக் காங்கரசு ஏற்படுவதற்கு சர்க்காராரும் அதாவது வெள்ளைக்கார துரைத்தனத்தாரும் முக்கிய காரணஸ்தர்கள் என்பதையும் நான் நன்றாய் அறிவேன். இதற்குக் காரணம் என்னவென்றால் இந்நாட்டில் வெள்ளைக்காரர்கள் ஆட்சி ஏற்பட்டவுடன் வெள்ளையர்களே பார்த்து வரவேண்டியது என்று கருதப்பட்ட பெரிய ஜில்லா உத்தியோகங்கள் தவிர மற்ற கறுப்பு மனிதர் பார்த்து வர வேண்டிய சாதாரண தாலூக்கா உத்தியோகங்கள் பூராவுக்கும் முனிஷி சிரஸ்தார் உத்தியோகங்கள் பூராவுக்கும் சற்று ஏறக்குறைய முஸ்லிம்களையும் மற்றும் வெள்ளையர்களுக்கு முன் இந்நாட்டில் ஆட்சி புரிந்து வந்த அரச வம்சத்தினர்களையுமே நியமித்து ஆட்சி நடத்தி வந்தார்கள். இதன் உண்மை உணர வேண்டுமானால் 50 வருஷத்துக்கு முன்னிட்ட 100 வருஷங்களின் உத்தியோக லிஸ்டை (பட்டியலை) பாருங்கள். அதாவது முஸ்லிம்கள், ரஜபுத்திரர்கள், நாயக்கர்மார்களும் இவர்களிடம் மந்திரிகளாய் இருந்த முதலியார், பிள்ளைமார் ஆகியவர்களுமே தாலூகா, கிராம சில்லறை அதிகாரிகளாய் இருந்து வந்திருக்கிறார்கள். ராணுவத்திலும் இந்த இனத்தவர்களே வெள்ளையருக்கு அடுத்த பதவியில் இருந்து வந்தார்கள். இந்தக் கூட்டத்தார் அதிகார பதவியில் இருந்தாலும் இவர்களுக்கு பள்ளிப் படிப்பு கொஞ்சமாகவே இருந்தது என்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அக்காலத்தில் சில சாயபு தாசில்தாருக்கும் சில நாயக்கர் தாசில்தாருக்கும் கையெழுத்துக்கூட சரியாய் போடத் தெரியாது என்று சொல்லுவார்கள்.

~subhead

காங்கரசின் பெற்றோர்

~shend

ஆனால் அதிகாரம் நேர்மையாகவும் துடிதுடிப்பாகவும் இருக்கும். அதோடு கூடவே அவர்கள் மிக சுயேச்சை வாதிகளாக இருந்தார்கள். வெள்ளைக்கார மேல் அதிகாரிகளைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டி வைப்பார்கள். மனச்சாட்சிக்கு விரோதமாய் கீழப்படிந்து நடக்கும் காரியம் அவர்களிடம் மிக மிக அரிதாயிருந்தது. இதனால் இந்த கீழ் அதிகாரிகளின் அடங்காமைத் தொல்லை மேல் அதிகாரிகளுக்கு இருந்து வந்தது ஒரு புறம் இருக்க, முஸ்லீம்கள் அதிகாரியாய் இருப்பது இந்துக்களுக்கு அதிருப்தியாகவும் பொறாமையாகவும் இருந்ததோடு “4ம் வருணத்தவர்” என்பவர்கள் அதிகாரிகளாய் இருப்பது முதல் வருணத்தார் (பார்ப்பனர்) என்பவர்களுக்கு பொறாமையாகவும் ஆத்திரமாகவும் இருந்து வந்தது. இந்தக் காரணங்களால் இந்து பிரமுகர்களும் மேல் ஜாதிக்காரர்களும் வெள்ளையர்களுடன் கலந்து சதியாலோசனை செய்ய வேண்டியவர்களானார்கள். அந்த சதியாலோசனை பெற்ற பிள்ளைதான் இந்த இந்திய தேசீயக் காங்கரஸ் ஸ்தாபனமாகும். இதற்குத் தாய் இந்து பிரமுகர்களும் பார்ப்பனர்களுமாவார்கள். இதற்குத் தந்தை பிரிட்டிஷ் சிவிலியன்களேயாவார்கள்.

இந்தமாதிரியான காங்கரசின் முதல் கொள்கை என்னவென்றால் “இந்தியர்களுக்கு ராஜவிசுவாசம் கற்றுக் கொடுத்து உலகமுள்ள அளவும் பிரிட்டிஷ்காரர்களே இந்தியாவை ஆளும்படியாக அவர்களது ஆட்சியை பயன்படுத்தி நிரந்தரமாக்குவது” என்பது ஆகும்.

நீங்கள் காங்கரசின் ஆதி சரித்திரத்தையும் அதன் பிறப்பு வளர்ப்பு சரித்திரத்தையும் வாங்கிப் பார்த்தீர்களானால் உங்களுக்கு இந்த விஷயங்கள் நல்ல கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்ப்பது போல் தெரியும்.

~subhead

ஆதிகால காங்கரஸ் போக்கு

~shend

1885-ம் வருஷம் முதல் 1920 வருஷம் வரை காங்கரசின் முதல் தீர்மானம் ராஜவிசுவாசம், ராஜபக்தி தீர்மானமேயாகும். காங்கரசின் கடசி மங்களம் “இந்தியாவின் மீது பிரிட்டிஷ் ஆட்சி உலகமுள்ளளவும் இருக்கும்படி கடவுளைப் பிரார்த்திப்பதாகும்”. எந்த காங்கரஸ்வாதியாவது இதை இல்லை என்று ரூபித்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

~subhead

முஸ்லீம் லீக் தோற்றம்

~shend

காங்கரஸ் உற்பவித்த இந்த சதியாலோசனை இந்துக்களில் கீழான ஜாதியார் என்பவர்களுக்குத் தெரியாமல் போனாலும் முஸ்லிம்கள், காங்கரஸ் ஏற்பட்ட ஒரு நான்கைந்து வருஷங்களுக்குள் நன்றாய் தெரிந்து கொண்டு 1890ம் வருஷத்திலேயே காங்கரசை எதிர்க்கவும் சர்க்காரிடம் காங்கரசால் தங்கள் சமூகத்துக்கு நேரிட்டு வரும் குறைகளையும் கொடுமைகளையும் பற்றி முறையிடவும் 1906-லேயே தனி ஸ்தாபனம் ஏற்படுத்தவும் ஆரம்பித்து விட்டார்கள். சர்க்கார் 1890 – ம் வருஷம் முதலே முஸ்லிம்களுக்கு அரசியலில் சரியான உரிமையும் பிரதிநிதித்துவமும் அளிப்பதாய் வாக்குறுதி கொடுத்து உத்திரவுகளும் சர்க்குலர்களும் வெளிப்படுத்திய வண்ணமாய் இருந்து வந்தார்கள்.

~subhead

ஆனந்த மடமும் ஒரு மனுதர்ம சாஸ்திரமே

~shend

மேலும் இந்த காரணத்தால் அதாவது முஸ்லிம் லீக் ஏற்படுத்தி பங்கு கேட்டதால் முஸ்லிம்களிடம் அக்காலத்தில் இந்துக்கள் எவ்வளவு துவேஷம் கொண்டிருந்தார்கள் என்பதையும் முஸ்லிம்களை அழுத்தவும் ஒழிக்கவும் இந்துக்கள் எவ்வளவு தூரம் துணிந்திருந்தார்கள் என்பதையும் நடு நிலையில் இருந்து உணர வேண்டுமானால் அக்காலத்தில் பக்கீம் சந்திர சட்டர்ஜி என்னும் ஒரு ஹிந்து பென்ஷன் அதிகாரியால் உண்டாக்கப்பட்ட ஆநந்த மடம் என்னும் ஒரு கற்பனைக் கதையை வாங்கி பார்த்தீர்களானால் உங்களுக்கு நடு கண்ட தீர்ப்பு கிடைக்கும். ஆநந்த மடம் கதை மற்றொரு மனு தர்ம சாஸ்திரமேயாகும். பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரை அடக்கி ஒடுக்கி தலையெடுக்கவிடாமல் இருக்கச் செய்வதற்கு ஏற்பட்டது அக்கால மனுதர்ம சாஸ்திரம் என்றால் முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கி அழுத்தி வைக்க ஏற்பட்டது ஆநந்த மடம் என்னும் இக்கால மனுதர்ம சாஸ்திரம் என்று தான் சொல்ல வேண்டும். அப்புத்தகத்தை பார்த்தால் முஸ்லிம்களை ஒழிக்க பிரிட்டிஷாருக்கு இந்தியர்கள் அடிமைப்பட்ட விஷயம் விளக்கும். அதன் பிறகுதான் முஸ்லிம்கள் தங்கள் நிலைகண்டு உஷார் ஆய்விட்டார்கள். அதற்காக வங்காளிகள் மக்களுக்கு ஆநந்த மடம் கதையை பரப்பி வந்தேமாதரப் பாட்டு முதலியவைகளை பிரசாரம் செய்து மக்களுக்குள் முஸ்லீம் துவேஷம் கற்பித்து வந்தாலும் முஸ்லீம்கள் அக்காலத்தில் ஒரே பிடிவாதமாக ஒற்றுமையாக இருந்து 1910லேயே விகிதாசார வகுப்புவாரி பிரதிநிதித்துவமும் தனித்தொகுதி தேர்தலும் பெற்று ஒரு அளவுக்கு ஹிந்துக்கள் தொல்லையில் இருந்தும் சூழ்ச்சியில் இருந்தும் தப்பித்துக் கொண்டார்கள்.

~subhead

காங்கரசின் தற்கால சூழ்ச்சி

~shend

அதை ஒழிப்பதற்காகவே இன்று காங்கரஸ் தலைகீழாகப் பாடுபடுகிறது. அதாவது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்த தனித் தொகுதி உரிமையை எப்படிப் பட்டினி வேஷம் போட்டு ஏமாற்றி பிடுங்கிக் கொண்டு இன்று அவர்களை மொட்டை அடித்து சாணி அபிஷேகம் செய்து மரியாதை செய்கிறார்களோ அது போல் முஸ்லிம்களின் வகுப்பு வாரி உரிமையையும் தனித் தொகுதி தேர்தல் முறை உரிமையையும் ஒழிப்பதற்கு காங்கரஸ் அதாவது தோழர் காந்தியார் முதல் சகல ஹிந்து தலைவர்கள் என்பவர்களும் செய்யக்கூடாத தந்திரங்கள் சூழ்ச்சிகள் எல்லாம் செய்கிறார்கள். இதற்கு நம் நாட்டு முஸ்லிம்கள் ஏமாறுவார்கள் என்று கருத இடமில்லை. காங்கரசின் சூழ்ச்சி மக்களுக்கு நாளுக்கு நாள் காங்கரசிடம் பற்றுதலும் நம்பிக்கையும் இல்லாமல் போகும்படி தான் செய்து வருகிறதே தவிர காங்கரசுக்கு எவ்வித மரியாதையையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பது உறுதி.

ஆதலால் இந்திய தேசீய காங்கரஸ் உள்ள வரை இந்து – முஸ்லிம் ஒற்றுமை ஏற்படப் போவதில்லை.

~subhead

வர்ணாச்சிரமம் ஒழியாதவரை  இந்து – முஸ்லிம் ஒற்றுமை இல்லை

~shend

அல்லது “காங்கரசுக்குள் ஆதீனகர்த்தாக்களாகவும் சர்வாதிகாரிகளாகவும் இருந்து வரும் வருணாச்சிரம – ராமராஜ்ய வாதிகள் மறைந்து ஒழிந்து போகும் வரையிலும் இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படப் போவதில்லை. இதுதான் இந்து முஸ்லிம் விஷயமாகவும் இந்து முஸ்லிம் ஒற்றுமை விஷயமாகவும் எனது அபிப்பிராயமாகும்.” என்று சொல்லி இதற்கு ஆதாரமாக தோழர்கள் காந்தியார், ஜவஹர்லால் நேரு, ஆச்சாரியார், மூஞ்சே, மாளவியா முதலியவர்களின் வாக்குகளை எடுத்துக் கூறினார்.

~subhead

அரசியலும் காங்கரசும்

~shend

தோழர்களே! இனி அரசியலும் காங்கரசும் என்பது பற்றிப் பேசுகிறேன்.

இதுவும் பழைய சங்கதியேதான். அதாவது நம் நாட்டு அரசியலும் காங்கரசும் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் பார்ப்பனரல்லாதார் அழிவுக்கும் இழிவுக்குமாகவே பிறந்து வளர்ந்து நாளொரு மேனியாயும் பொழுதொரு வண்ணமாகவும் பெருகி வருகின்றது.

வடநாட்டில் காங்கரசின் சூழ்ச்சியும் கொடுமையும் கண்டு சகியாமல் எப்படி முஸ்லிம்கள் விழித்தெழுந்து முஸ்லிம் லீக் ஏற்படுத்தி தப்பிப் பிழைத்தார்களோ! அதுபோல்தான் தென்னாட்டில் காங்கரசும் பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதாருக்குச் செய்து வந்த கொடுமையையும் சூழ்ச்சியையும் கண்டு சகியாமல் ஒருவருக்கொருவர் நேர் வைரிகளாகவும் பார்ப்பனர்கள் கையாயுதங்களாகவும் இருந்து வந்த தோழர்கள் நாயரும் தியாகராயரும் சேர்ந்து விழித்தெழுந்து காங்கரசையும் பார்ப்பனர்களையும் விட்டு வெளிவந்து ஏற்படுத்தியது தான் பார்ப்பனரல்லாதார் இயக்கமாகும். அது தான் ஜஸ்டிஸ் இயக்கம் என்பது.

அவர்கள் அவ்வியக்கத்தை தோற்றுவித்ததும் அதற்கு ஆக போராடினதும் சரியா, தப்பா என்பதை நான் சொல்லப் போகும் சில விஷயங்களைக் கண்டு சில புள்ளிகளைக் கண்டு சற்று ஆராய்ச்சி செய்து பாருங்கள். அதாவது:-

இந்தநாட்டு பெருங்குடி மக்கள் பார்ப்பனரல்லாதார். பாடுபட்டு உழைப்பவர்களும் செல்வவான்களும் அரசாங்கத்துக்கு 100க்கு 99 பாகம் வரி செலுத்துபவர்களும் பார்ப்பனரல்லாதாராவார்கள். காங்கரசில் சேர்ந்து பார்ப்பனர்கள் சொல்லுகின்றபடியெல்லாம் குரங்காட்டம் ஆடி காங்கரஸ் விண்ணப்பங்களுக்கெல்லாம் கைதூக்கி வெற்றி தேடிக் கொடுத்தவர்கள் பார்ப்பனரல்லாதார்களாவார்கள். அப்படிப்பட்டவர்களின் பொது வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை, கெளரவ வாழ்க்கை ஆகியவற்றின் கதி என்ன ஆயிற்று என்று பாருங்கள். இப்படிப்பட்ட தமிழ்நாட்டில்

~subhead

புள்ளி விவரங்கள்

~shend

கெட்டிக்கார பிரக்யாதி பெற்ற ஹைகோர்ட் ஜட்ஜிகள் முத்துசாமி அய்யர் மணி அய்யர்.

கெட்டிக்கார வக்கீல்கள் பாஷ்யம் அய்யங்கார், சிவசாமி அய்யர், கெ.ஸ்ரீநிவாசய்யங்கார், எஸ். ஸ்ரீநிவாசய்யங்கார், சி.பி. ராமசாமி அய்யர், வெங்கிடராம சாஸ்திரி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்,

கெட்டிக்கார இங்கிலீஷ் பேச்சாளி ஸ்ரீநிவாச சாஸ்திரி,

~subhead

பெண் பேச்சாளி சரோஜினி அம்மாள்,

~shend

உலகமறிந்த இந்தியன் மனிதன் ஸ்ரீநிவாச சாஸ்திரி, மகா உயர்ந்த பட்டம் ரைட் ஆனரபில் (மகாகனம்) பெற்றவர் ஸ்ரீநிவாச சாஸ்திரி.

காங்கரஸால் கிடைக்கப் பெற்ற கெளன்சில் மெம்பர்கள் வி.கிருஷ்ணசாமி அய்யர், பி.எஸ்.சிவசாமி அய்யர், பி.ராஜகோபாலாச்சாரி, கே.ஸ்ரீநிவாச அய்யங்கார்,

உயர்ந்த பி.சி.எஸ். பரீøை பாஸ் பண்ணி கலெக்டர் போர்ட் மெம்பர் முதலிய பதவி பெற்றவர்கள்:-

ராமச்சந்திரராவ், ராஜகோபாலாச்சாரி, வி.டி.கிருஷ்ணமாச்சாரி, என். கோபாலசாமி அய்யங்கார்.

“நல்ல கெட்டிக்கார” தமிழ்ப் பண்டிதர்கள்:-

மகாமகோ பாத்தியாய சாமிநாதய்யர், ரா. ராகவய்யங்கார், மு. ராகவய்யங்கார்,

நல்லகவி சுப்ரமணிய அய்யர் (பாரதி),

நல்ல பாகவதர்கள் முத்தய்யா பாகவதர், பஞ்சாபகேச பாகவதர்,

நல்ல பெண் பாகவதர் சரஸ்வதிபாய்,

நல்ல பரத நாட்டிய பெண் ருக்மணி அருண்டேல்,

நல்ல நாடகக்கார ஆக்டர்கள் கிட்டப்பா அய்யர், சுப்பையா பாகவதர்,

நல்ல நாடகக்கார பெண் ஆக்டர் டி.பி. ராஜலஷ்மி,

தென்னாட்டு பெரிய மனிதர் யாருக்காவது சிலை வைக்கப்பட்டது என்றால் அது வி.கிருஷ்ணசாமி அய்யர்,

கெட்டிக்கார பேச்சாளி தேசபக்தர் சத்தியமூர்த்தி சாஸ்திரி, இந்திய காங்கரஸ் அரசியல் சட்ட நிபுணர் சி.விஜயராகவாச்சாரி,

சென்னை காங்கரஸ் சர்வாதிகாரி தோழர் ராஜகோபாலாச்சாரியார்,

முதல் மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார்,

சட்டசபைகளின் தலைவர்கள் கனம்கள் சாம்பமூர்த்தி அய்யர், ராமராவ்,

நல்ல பத்திரிகை இந்து, சுதேசமித்திரன்,

நல்ல பத்திராதிபர்கள் கஸ்தூரி ரங்கய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார்,

நல்ல அரசியல் ஞானம் படைத்தவர் நல்ல பொருளாதார ஞானம் படைத்தவர் எ.ரங்கசாமி அய்யங்கார்,

ஒரு நாட்டில் இந்த தமிழ் நாட்டில் இம்மாதிரியான முக்கிய ஸ்தானங்களும் பிரபல ஸ்தானங்களும் அதிகார பதவிகளும் அரசியல் பிரதானங்களும் கவுரவமும் சமூக வாழ்வில் 100க்கு 3 பேர்களாய் இருக்கும் ஜாதியாராகிய பார்ப்பனர்களுக்கே போவதும் பார்ப்பனரல்லாதார்களின் சாதாரண நிலை உயிர் வாழ்வுக்கு கூட பார்ப்பனர்களுக்கு அடிமையாயிருந்தாலொழிய முடியாத மாதிரியிலும் இருந்தால் அந்த மக்கள் ஒரு நாளாவது விழித்தெழ மாட்டார்களா? விழித்தெழ வேண்டாமா? என்று யோசித்துப் பாருங்கள்.

~subhead

மதிப்பிழந்த நம்மவர்கள்

~shend

கேசவ பிள்ளை என்ன கதியாக்கப்பட்டார்? ஷண்முகம் செட்டியார் வெளிநாட்டுக்குப் போய் பிழைக்க வேண்டியதாயிற்று.

ராமசாமி முதலியார் இந்தியாவையே விட்டு ஓட வேண்டியதாயிற்று, சாதாரண தேர்தலில் 3ந் தர, 4ந் தர ஆட்களால் போட்டி போடப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்கள்.

வரதராஜúலு, ராமசாமி போன்றவர்கள் எல்லாம் தேசத் துரோகி லிஸ்டில் சேர்க்கப்பட்டார்கள்.

காங்கரஸ் துரோகியென்று மாகாண காங்கரஸ் கமிட்டி, வேலைக்கமிட்டி, அகில இந்திய காங்கரஸ் கமிட்டியால் தீர்மானிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட பார்ப்பனர் நாமினேஷன் கொடுக்கப்பட்டு மந்திரி ஆக்கப்பட்டார். மற்றும் இது போன்ற விஷயங்களையெல்லாம் நேரில் பார்க்கின்ற நீங்கள் காங்கரசை அரசியல் சபை என்கின்றீர்களா? அல்லது வருணாச்சிரம சபை என்கின்றீர்களா? என்று உங்களைப் பணிவுடன் கேட்கின்றேன்.

~subhead

பட்டம் துறந்த பதிவிரதைகள்

~shend

தோழர்களே! பட்டம் விட்டவர்கள் 5 பேர். அதாவது தோழர்கள் டி.ஏ. ராமலிங்கம் செட்டி, எம்.கெ. ரெட்டி, சீதாராம ரெட்டி, ராமநாதன் செட்டியார், ஒரு ராவ். இதில் பெரிய பட்டங்கள் விட்டவர்கள் பார்ப்பனரல்லாதார்கள். இவர்கள் பல கவுரவ உத்தியோகம் நிர்வாகம் பார்த்து அனுபவமுடையவர்கள். ஸ்தல ஸ்தாபன சுயராஜ்யத்தில் தலைவர்களாக இருந்தவர்கள். இவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு, கம்பவுண்டருக்கு அண்ணன் உத்தியோகத்தில் இருந்த ஒரு திக்குவாய் அய்யருக்கு மேல்சபைத் தலைவர் பதவி கொடுத்தது எதற்காக? தேசபக்திக்காகவா? வருணாச்சிரம தர்ம சக்திக்கு ஆகவா? என்று உங்களைப் பணிவோடு கேட்கின்றேன்.

காங்கரசுக்கு அரசியல் ஞானம் உண்டா? நாணயம் உண்டா? நாளது வரை அதன் கொள்கைகள் ஏதாவது வெற்றி பெற்றதுண்டா? அதன் தலைவர்கள் யாராவது நாணயமாய் நடந்து கொண்டதுண்டா? விரல் விட்டு சொல்லுங்கள் பார்க்கலாம்.

ஆத்திரப்படுகிறவர்கள் என் முன் வரட்டும். காலித்தனத்தில் என்ன காரியம் சாதிக்க முடியும்? கர்னாடகப் பெண்கள் மாதிரி மானம், வெட்கம் இல்லாமல் மண்ணைவாரி தூற்றுகிறீர்களே நீங்கள் மக்களுக்கு பிறந்தவர்கள்தானா என்று கேட்கின்றேன். 50-வருஷ காங்கரசும் மகாத்மா என்ற பெயரில் விளம்பரப்படுத்த பட்டவரின் அஹிம்சை உபதேசப் பித்தலாட்டம் மண்ணை அள்ளிப் போடவும் நாய், கழுதை மாதிரி ஊளையிட்டு கூப்பாடு போட்டு கூட்டத்தைக் கலைக்கப் பார்ப்பதும்தானா உங்களுக்கு கற்றுகொடுத்தது? நாட்டை மனிதன் ஆண்டாலும் சரி அல்லது ராமராஜ்யம் என்பது போல் ஒரு ஜதை செருப்பு ஆண்டாலும் சரி மனிதனுக்கு ரோஷமும் மரியாதையும் வேண்டாமா? என்று கேட்கின்றேன் என்றும் மற்றும் பழைய மந்திரிகள் செய்த வேலை, இடைக்கால மந்திரிகள் வேலை, புது மந்திரி செய்த “சிக்கனம்”. தேர்தல், வாக்குறுதி, ஹிந்தி, வந்தே மாதரம், கல்வித்திட்டம், கள்ளு நிறுத்தினது ஆகியவற்றின் புரட்டு, காண்டிராக்டு லஞ்சம் ஒழிப்பு, கட்டுப்பாடு ராஜ்ஜியம் முதலியவைகளைப் பற்றி புள்ளி விவரங்களுடன் பேசினார்.

குறிப்பு: 13.02.1938 இல் தூத்துக்குடியில் நடைபெற்ற ஈ.வெ.ரா. நாகம்மாள் ஞாபகார்த்த வாசக சாலை ஆண்டு விழாவில் ஆற்றிய உரை.

குடி அரசு – சொற்பொழிவு – 20.02.1938

You may also like...