இந்தி எதிர்ப்பு ஒழிந்து விட்டதா?
சென்னை மாகாணத்தில் 125 பள்ளிக்கூடங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாக கனம் ஆச்சாரியார் கூறியது முதற் கொண்டு நாளிது வரை தமிழர்கள் எல்லாம் கட்டாய இந்தியை ஒருமுகமாக எதிர்த்து வருவதை சென்னை மாகாணத்தார் நன்கறிவார்கள். முதன்முதல் ்பொதுமொழி தேவையா?” என்ற சிறு நூலை மறைமலையடிகள் வெளியிட்டார். அப்பால் இந்தி கட்டாய பாடத்தைக் கண்டித்து தோழர் சோமசுந்தர பாரதியார் சென்னை முதன்மந்திரிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினார். திருநெல்வேலி தமிழ்ப்பாதுகாப்புச் சங்கத்தாரும் கட்டாய இந்தியைக் கண்டித்துப் பல துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டனர். இப்பிரசுரங்கள் எல்லாம் பதினாயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு தமிழ்நாடு முழுதும் வினியோகம் செய்யப்பட்டன. தமிழ்நாட்டார் அவைகளைப் படித்துக் கட்டாய இந்திச் சூழ்ச்சியை நன்குணர்ந்தனர். 26-12-37-ல் திருச்சியில் கூடிய சென்னை மாகாண 3-வது தமிழர் மகாநாட்டில் கட்டாய இந்தி வன்மையாகக் கண்டிக்கப்பட்டதுடன் இந்தி எதிர்ப்புக் கமிட்டியும் ஸ்தாபிக்கப்பட்டது. இம்மகாநாட்டில் காங்கரஸ்வாதிகளும் ஜஸ்டிஸ்வாதிகளும், சுயமரியாதைக் கட்சியாரும், எக்கட்சியிலும் சேராத தமிழர்களும் மனமுவந்து தாராளமாகக் கலந்து கொண்டனர். இந்தி எதிர்ப்புக்கு ஒரு உருவம் கொடுத்தது திருச்சியில் நடைபெற்ற சென்னை மாகாணத் தமிழர் மகாநாடே. அப்பால், காஞ்சீவரத்தில் ராவ்பகதூர் ஸர்.கெ.வி.ரெட்டி தலைமையில் கூடிய இந்தி எதிர்ப்பாளர் மகாநாடும் கட்டாய இந்தியைக் கண்டித்தது. அதுகாலை மகாநாட்டுத் தலைவர் ஸர்.கெ.வி.ரெட்டி நாயுடு நிகழ்த்திய தலைமைப் பிரசங்கமும் மகாநாட்டுத் திறப்பாளர் காலஞ் சென்ற ்திவான் பகதூர் ஸர்.எம்.கிருஷ்ணன் நாயர் அவர்கள் நிகழ்த்திய திறப்புவிழா பிரசங்கமும் இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி தேவை யில்லையென்றும், தேவையானால் இங்கிலீஷே பொது மொழியாக இருக்க வேண்டுமென்றும் இந்தியப் பொதுமொழியாக இருக்க இந்திக்கு எத்தகைய யோக்யதையுமில்லையென்றும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிவுறுத்தின. அதே சமயத்தில் வடஆற்காடு ஜில்லா திருவத்திபுரத்தில் தோழர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடிய தமிழர் மகாநாட்டு மூலமும் கட்டாய இந்தியின் யோக்கியதையைத் தமிழ் நாட்டார் அறிந்தனர். விருதுநகரில் ஸர்.எ.டி.பன்னீர்செல்வம் தலைமையில் கூடிய ராமநாதபுரம் ஜில்லா தமிழர் மகாநாட்டிலும் சோழவந்தானில் பேடை தளவாய் குமாரசாமி முதலியார் தலைமையில் கூடிய மதுரை ஜில்லா மகாநாட்டிலும் பள்ளியக்ரகாரம், சாக்கோட்டை, சேலம், ஓமலூர், நாமக்கல், ராசிபுரம், திருப்பத்தூர் முதலிய இடங்களில் கூடிய சுயமரியாதை மகாநாடுகளிலும் கட்டாய இந்தி வன்மையாகக் கண்டிக்கப்பட்டிருக்கின்றது. இம்மாநாடுகளில் எல்லாம் பதினாயிரக்கணக்கான தமிழர்கள் பங்கு கொண்டு மிருக்கின்றனர். இம்மகாநாடுகளைத் தவிர தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கான கண்டனக் கூட்டங்கள் கூடிக் கட்டாய இந்தி கண்டிக்கப்பட்டும் இருக்கின்றது. திருச்சியில் கூடிய சென்னை மாகாணத் தமிழர் மகாநாட்டின் போது நியமிக்கப்பட்ட இந்தி எதிர்ப்புக் காரியக் கமிட்டியார் 1-6-38 முதல் 12-6-38 வரை தமிழ்நாட்டின் முக்கிய பட்டணங்களுக்கெல்லாம் சென்று இந்தி எதிர்ப்புப் பிரசாரம் செய்து இந்தி எதிர்ப்புக் கமிட்டிகள் ஏற்படுத்தி தமிழ் மக்களைத் தட்டியெழுப்பி கட்டாய இந்தியினால் தமிழர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளை விளக்கிக் கூறியுமிருக்கின்றனர். 1938 ஜனவரி 4-ந்தேதி இந்தி எதிர்ப்பு முதல் சர்வாதிகாரி தோழர் ஸி.டி.நாயகமும், இந்தி எதிர்ப்புத் தொண்டர் தோழர் பல்லடம் பொன்னுசாமியும் முதன் முதல் கைது செய்யப்பட்டது முதற்கொண்டு இந்தி எதிர்ப்பு இயக்கம் பஞ்சாப் மெயில் வேகத்தில் முன்னேறி வருகிறது. சென்னை திருவல்லிக்கேணி கடற்கரையில் கூடிய மூன்று பிரம்மாண்டமான இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் இந்தி எதிர்ப்பின் வன்மையை எதிரிகளுக்கு நன்கு விளக்கிக் காட்டியும் உள்ளன. மறியல் செய்தவர்களை ஒடுக்க சர்க்கார் கொடிய அடக்குமுறைகளைக் கையாண்டு வந்தும் இந்தி எதிர்ப்பாளர் சலிப்படையவோ, பீதியடையவோ செய்யவில்லை. சர்க்கார் அடக்குமுறை வலுத்ததின் பயனாய் தமிழ் நாட்டு மாதர்களும் விழித்தெழுந்தனர். சென்னையிலே தமிழ்நாட்டுப் பெண்கள் மகாநாட்டைக் கூட்டி வெற்றிகரமாக நடத்தினர். இப்பொழுது மறியல் போரிலும் தமிழ்நாட்டுத் தாய்மார்கள் ஈடுபட்டுவிட்டனர். இன்றுவரை 481 பேர்கள் சிறை புகுந்துமிருக்கின்றனர். இவ்வண்ணம் இந்தி எதிர்ப்பு இயக்கம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வந்தாலும் காங்கரஸ் பத்திரிகைகள் இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்துவிட்டதென பொய் விளம்பரம் செய்யத் தயங்கவில்லை. திருச்சி முதல் சென்னை வரை கால்நடையாகச் சென்று பிரசாரம் செய்து சென்னையில் ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டமும் நடத்தி வெற்றிக் கொடி நாட்டிய தமிழர் படையைப் பற்றி காங்கரஸ் பத்திரிகைகள் கேவலமாகவே எழுதி வந்தன. கோவைத் தமிழர் படை, மதுரைத் தமிழர்படை வரலாறுகளையும் காங்கரஸ் பத்திரிகைகள் அமுக்கின. சென்னையில் நடைபெற்ற 3-பிரமாண்டக் கூட்ட நடவடிக்கைகளையும் சிதைத்துச் சுருக்கிப் பிரசுரம் செய்தன.
இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழர்களுக்கெல்லாம் பொதுவான இயக்கம் என்பதையுணராமல் கனம் ஆச்சாரியாருங்கூட இந்தி எதிர்ப்பு இயக்கம் ஒரு ஆரிய நாகரிக விரோதியுடையவும் ஒரு காங்கரஸ் எதிரியுடையவும் புரளியென அசெம்பிளியிலே வாய்கூசாது கூறினார். இதனால் தமிழர்கள் ஆத்திரங் கொண்டனர். கட்சிபேதம், ஜாதிபேதம், மதபேதம் பாராட்டாமல் தமிழர்களான இந்துக்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சேர்ந்து கட்டாய இந்தியைக் கட்டுப்பாடாக – ஒரு முகமாக எதிர்த்து வருகையில் இந்தி எதிர்ப்பு இரண்டு விஷமிகளின் புரளியென கனம் ஆச்சாரியார் கூறியது தமிழர்களையெல்லாம் தட்டியெழுப்பியது. இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழராய்ப் பிறந்தவர்களுக்கெல்லாம் பொதுவானதெனக் காட்டும் பொருட்டு மறியல் செய்து சிறைபுகவும் தமிழர்கள் துணிவு கொண்டனர். மறியல் செய்வதையும் சிறை புகுவதையும் இந்தி எதிர்ப்புக் கமிட்டியார் ஒரு வேலைத் திட்டமாக இதுவரை ஒப்புக்கொள்ளாதிருந்தும் மறியல் போர் முட்டின்றி நடைபெற்று வருவதற்கு தமிழ் மக்களின் பேராதரவு இந்தி எதிர்ப்பு இயக்கத்திற்கு இருந்து வருவதே காரணம். சென்னையில் இதுவரை நடைபெற்ற மூன்று பிரம்மாண்டமான கூட்டங்களையும் எத்தனையோ ஊர்வலங்களையும் இப்பொழுது முனிசிபல் டிவிஷன் தோறும் வாரந் தவராமல் நடைபெற்றுவரும் ஊர்வலங்களையும் நாள் தவறாமல் நடைபெற்று வரும் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களையும் சென்னை மக்களைத் தட்டி எழுப்பிய மாதர் ஊர்வலங்களையும் கண்ணாரக் கண்டும் அல்லது காதாரக் கேட்டும் இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்துவிட்டதென வீண் புரளி செய்யும் காங்கரஸ் காலிப் பத்திரிகைகளின் அற்ப புத்தியை என்னவென்று சொல்வது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களை காலிகள் கூட்டமென்றும் கூலிகள் கூட்டம் என்றும் எழுதும் காங்கரஸ்காரரை அற்பப் புத்திகள் என்று கூறுவதா? வீணர்கள் என்று கூறுவதா? பொய்யர்கள் என்று கூறுவதா? இவர்கள் வேண்டுமென்றே இந்தி எதிர்ப்பு இயக்கத்தை இழித்து பழித்துக் கூறினாலும் இந்தி எதிர்ப்புக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நேரில் காணும் பொதுஜனங்கள் உண்மையை அறியாமலா இருக்கப்போகிறார்கள். இந்தி எதிர்ப்பு இயக்கம் செத்திருந்தால் சென்னை கார்ப்பரேஷன் தேர்தலில் காங்கிரசுக்குப் படுதோல்வி ஏற்பட்டிருக்குமா? காங்கரஸ் எதிரிகள் வெற்றி பெற்றிருப்பார்களா? கட்டாய இந்தியை தமிழர்கள் எதிர்க்கவில்லையானால் காங்கரஸ் மந்திரிகள் ஆதரவில் சென்னைக் கடற்கரையில் கூடிய இந்தி ஆதரிப்புக் கூட்டங்கள் குழப்பத்தில் முடிந்திருக்குமா? காங்கரஸ் மந்திரிகள் ஆதரவில் கூடிய இந்தி ஆதரிப்புக் கூட்டங்கள் அரை மணி முக்கால்மணி நேரத்துக்குள் முடிந்திருக்கையில் இந்தி எதிர்ப்பாளர் கூட்டிய மூன்று பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்கள் நள்ளிரவு வரை அமைதியாக நடந்திருக்கக் காரணம் என்ன? பொதுஜன ஆதரவு இந்தி எதிர்ப்பாளருக்கு இருந்து வருவதினாற் றானே இந்தி எதிர்ப்புக் கூட்டங்கள் நள்ளிரவு வரை அமைதியாக நடைபெற்றன. மாகாணம் முழுவதும் சுற்றுப் பிரயாணம் செய்து வெள்ளோட்டம் பார்த்த கனம் ஆச்சாரியார் ்எவ்வளவோ பெரிய சட்டங்கள் இயற்றியிருக்கிறேனே இவ்வளவு எதிர்ப்பிலேயே இந்த அற்ப கட்டாய இந்திக்கா இவ்வளவு எதிர்ப்பு!” என மனமுடைந்து கூறினாரென்றால் இந்தி எதிர்ப்பின் வன்மைக்கு அது ஒரு சான்றாகாதா! இந்நிலையிலும் இப்பொழுதும் இந்தி எதிர்ப்பு இயக்கம் ஒழிந்துவிட்டது, செத்துவிட்டது எனக்கூறும் காங்கரஸ் காலிப் பத்திரிகைகள் இந்தி எதிர்ப்பாளர் மீது வழக்குத் தொடருகிறவர்களும் இந்தி எதிர்ப்பாளரை தண்டிப்பவர்களும் கூறுகிறவைகளையாவது நம்புமா? இந்தி எதிர்ப்பு இயக்கம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதைக் கண்ட பிராசிக்கியூட்டிங் இன்ஸ்பெக்டர் தோழர் அமிர்தலிங்கம் பிள்ளை இந்தி எதிர்ப்பாளருக்கு கடினமான தண்டனையளிக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டாராம். டிசம்பர் 1-ந் தேதி மறியல் செய்த 11 தொண்டர்களை தண்டித்த நான்காவது மாகாண மாஜிஸ்டிரேட்டு தோழர் மாதவராவ், பிராசிக்கூட்டிங் இன்ஸ்பெக்டர் சொன்னதை ஒப்புக்கொண்டு ்மறியல் கட்டுப்பாடாக வன்மையாக நடந்து வருகிறதென்பது தெளிவாகிவிட்டது. ஆகவே தொண்டர்களுக்கு கடினமான தண்டனை யளித்தால் தான் மறியல் போரை ஒடுக்கமுடியும்” எனக் கூறி தலைநாள் வரை 2 வாரம் 4 வாரம் தண்டனை யளித்து வந்த அவர் 6-மாத கடுங்காவல் தண்டனையும் 500-ரூபாய் அபராதமும் அளித்தாராம். இதற்கு காங்கரஸ் காலிப் பத்திரிகைகள் என்ன சமாதானம் சொல்லப்போகின்றன? மற்றும் பெரியார் ஈ.வெ.ராமசாமி மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கு 5-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அன்று அவர் எதிர் வழக்காடாமல் சிறை புகுவது உறுதி. அவர் சிறை புகுந்தால் அதிகப் பேர் பிரதி தினமும் மறியல் செய்து சிறைபுக நேருமாகையினால் எதிர்காலத்து மறியல் செய்ய முன் வருவோர் அச்சமடையும் பொருட்டு நீண்ட கால தண்டனைகளும் அபராதமும் விதிக்கப்படுகிறதென்றும் சொல்லப்படுகிறது. பெரியார் ஈ.வெ.ரா.வை வரப்போகும் ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப் போவதை முன்னாடியே உணர்ந்த சர்க்கார் அவர் ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டுக்குத் தலைமை வகிக்காமல் தடுக்கும் பொருட்டே இப்பொழுது அவர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கின்றனரென்றும் சொல்லப்படுகிறது. அவ்வதந்திகள் மெய்யோ, பொய்யோ எப்படி இருந்தாலும் சரி, இந்த தண்டனைகளாலும் பெரியார் தண்டிக்கப்படுவதினாலும் இந்தி எதிர்ப்பு இயக்கம் ஒடுங்காது. ஈ.வெ.ரா.வையும் அவரது தமையனாரையும் சிறைப்படுத்துவதால் கிளர்ச்சி அடங்கிவிடாது என்பது மட்டும் நிச்சயம். சாகத் துணிந்தவர்களுக்கு சமுத்திரம் முழங்கால் என்பதை யாரே அறியார்!
குடி அரசு – தலையங்கம் – 04.12.1938