ஜஸ்டிஸ் கட்சியும் பார்ப்பனப் பத்திரிகைகளும்

 

விருதுநகரில்  தலைவர்கள்  மகாநாடு

ஜஸ்டிஸ்  கட்சி  இந்திய  சட்ட சபைத்  தேர்தலில்  தோல்விஅடைந்து  விட்டது.

அதற்குக் காரணம்  இருவகைப்படும். ஒன்று  ஜஸ்டிஸ்  கட்சிக்கு  எல்லா இந்திய அரசியல்  கிளர்ச்சியில்  விசேஷ  கவனம் செலுத்த  அவசியமில்லை.  அது  செலுத்தவும் முடியாது.  ஏனெனில்  ஜஸ்டிஸ் கட்சிக்கு  எல்லா  இந்திய  ஸ்தாபனம் என்பதாக ஒரு ஸ்தாபனம்   இல்லை என்பதோடு  ஜஸ்டிஸ்  கட்சி  ஏற்படுத்தப் பட்டதற்குக் காரணமே  தென் இந்திய  பார்ப்பனர்களின் கொடுமையைத்  தாங்க மாட்டாமல்  அதிலிருந்து தப்பி  ஒருவாறு  விடுதலை  பெற  வேண்டிய அவசியமேயாகும்.

ஆனால்  அதன்  எதிரிகளாகிய  பார்ப்பனர்கள்  அக்கட்சியை  ஒழிக்க  அரசியல்  போர்வையை  போத்திக்  கொண்டு  அதற்குள் இருந்து எதிர்த்து  வந்ததால்,  ஜஸ்டிஸ்  கட்சியும்  தனது லட்சியத்திற்கு  அரசியல் சம்மந்தமும்  வைத்துக்  கொள்ள  வேண்டியதாயிற்று  என்றாலும்  பார்ப்பனர்களுடைய  அரசியல் வேஷம்  எல்லா இந்தியாவைப்  பொருத்ததாகவும்,  ஜஸ்டிஸ்  கட்சியாருடைய அரசியல் சம்பந்தம் சென்னை மாகாணத்தை மாத்திரம் பொருத்ததாகவும் இருந்ததால் அரசியலில்   பார்ப்பனர்களோடு  சரியாய்ப்  போட்டிபோட  முடியாமலும்,  போட்டி போட வேண்டிய  அவசியமில்லாமலும் போய்விட்டது. ஆயினும்  எல்லா இந்திய  அரசியல்  என்னும் பேச்சின்  பேரால்  பார்ப்பனர்கள்  ஜஸ்டிஸ்  கட்சியைப் பற்றி  விஷமப் பிரசாரம்  செய்யாமல்  இருப்பதற்காகவும்  இந்திய சட்ட சபையில்  பார்ப்பனர்களால்  கெடுதி ஏற்படாமல்  இருப்பதற்காகவும்  ஒருவர்  இருவர்  அதிலும்  கலந்திருந்தால்  நலமாய்  இருக்கும்  என்று  கருதி  சிலர் அதில்  கலந்திருந்தார்கள்.

ஆனால்  அதில்  பார்ப்பனர்களுக்கு  இருந்த அளவு  ஊக்கமும்,  முயற்சியும்  ஜஸ்டிஸ்  கட்சியாருக்கு இருந்தது  என்று  சொல்ல முடியாது.

இருந்தபோதிலும்,  கிடைத்த அளவு  கிடைக்கட்டும்  என்கின்ற  அலட்சிய  புத்தி  மீதும்  போதிய  முஸ்தீபுகள் இருக்கின்றதா   இல்லையா  என்கின்ற கவலை  இல்லாமலும்  அதில்  பிரவேசித்தார்கள்.

இரண்டொரு ஸ்தான  விஷயத்தில்  சிறிது  கவலை  கொண்டார்களா னாலும்,  அந்தக்  கவலைக்குத் தக்க அளவு  நம்பிக்கை மோசத்துக்கு  ஆளாகிவிட்டதால்  இத்தோல்வி கட்சியின் எதிரிகளாகிய பார்ப்பனர்களுக்கு  அதிகமாய்ப்  பரிகசிக்க  இடம் கொடுத்துவிட்டது.

இரண்டாவது காரணம்

ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச்  சேர்த்துக் கொண்டதால்  பொது  ஜனங்கள்  அதைத் தப்பாக  உணர்ந்து  ஜஸ்டிஸ்  கட்சிக்கும்,  மற்ற  கட்சிக்கும்  வித்தியாசமில்லை  ஆதலால்  முதலில்  வந்து கேட்டவர்களுக்கும், வந்து கூப்பிட்டவர்களுக்கும் ஓட்டுப் போட்டால் போகிறது  என்று நினைத்திருந்த  காரணம்.  (பார்ப்பனரைச்  சேர்த்துக்  கொண்ட  காரணத்தையும்,  என்ன நிபந்தனையின்  மீது சேர்த்துக் கொள்வது  என்பதையும்  மக்களுக்குச் சரியாய் விளக்கிக்  காட்டாததால்  இது  ஏற்பட்டது)  இவற்றால் எல்லாம்  ஏதும் முழுகிப் போய்விடவில்லை  என்பது ஒருபுறமிருக்க,  நம்பிக்கை மோசம்  என்பதற்காக  எடுத்துக் கொண்ட  நடவடிக்கைகள்  கட்சிக்கு  சிறிது  தொல்லை ஏற்பட  இடமுண்டாகிவிட்டது.  பார்ப்பனர்கள்  பரிகசிப்பதற்கு  இதுவும்  ஒரு  அனுகூல  சம்பவமாய்  விட்டதால்  மேடைகளிலும்,  பத்திரிகைகளிலும்,  திண்ணைகளிலும்,  அவர்களது  ஆதிக்கத்திலிருக்கும்  கோர்ட்டுகளிலும்  இதே பேச்சாகவும்  கட்சிக்கு  பெரியதொரு  சங்கடமான  நிலைமை  வந்துவிட்டதாகவும்,  கட்சியே  ஒழிந்து  போய்விடும்  என்றும்   பேசி  பலவித கற்பனைகள்  செய்து விஷமப் பிரசாரமும் செய்து  வருகிறார்கள்.

நம்பிக்கை மோசம்  என்ற காரணத்துக்காக  வெளியேற வேண்டிய  அவசியத்துக்குள்ளான  செட்டிநாடு  (குடும்பம்  ஏராளமான  செல்வமுடைய  குடும்பமானதால்)  கட்சிக்கு  விரோதமாகப்  பார்ப்பனர்களுடன் சேர்ந்து  கொண்டு  செல்வத்தை  வாரி  இறைப்பதன்  பயனாய் கட்சியானது  மேலும் சிறிது தொல்லைக்கு  ஆளாக வேண்டி ஏற்பட்டுவிட்டது.

இதனால்  எல்லாம் கட்சியே  ஒழிந்து போகும்  என்றோ,  கட்சியே  ஒழிந்துபோனாலும்  கட்சிக் கொள்கைகள்  மறைந்து போகும்  என்றோ நாம்  பயப்படவில்லை.

பெருமாள்  போய்விட்டால்  பெரிய பெருமாளாய்  வருவான்  என்கின்ற  நம்பிக்கை  நமக்கு   உண்டு.

ஏனெனில்  அக்கட்சியின்  அடிப்படையான  கொள்கை  அவ்வளவு  முக்கியமானதும், அவசியமானதும்  என்பதும் நமது அபிப்பிராயம்.  ஆதலால்  அதைப்பற்றி  நாம் கவலைப்படவில்லை.

ஆனால் இந்திய  சட்ட சபைத் தேர்தல் முடிவு  தெரியப்பட்ட  கால  முதல், நாளது  வரை சுமார் இரண்டு மாத  காலமாக  கட்சியின்  எதிர்கால  நிலைமையைப் பற்றி  கவலை  எடுத்துக் கொள்ளும்படியும், கொள்கைகள்  வெற்றி  பெறத்தக்க  திட்டங்கள்  ஏற்படுத்த வேண்டும் என்றும்  பல  தோழர்கள்  கூப்பாடு போட்டு  வந்தும் அதைப் பற்றி  சிறிதும்  கவனித்ததாகக்  காணப்படாமல் இருப்பதை உத்தேசித்தே  கட்சிப் பிரமுகர்களின்  கவலையீனத்துக்கு வருந்த  வேண்டிய  நிலையில் இருக்கிறோம்.

இதைப்  பற்றியே  விருதுநகர் சேர்மென்  தோழர். வி.வி.ராமசாமி  அவர்கள்  ஒரு  அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.  அது  மற்றொரு  இடத்தில் பிரசுரித்திருக்கிறோம்.

அதன் சாரம்

இந்திய சட்டசபைத்  தேர்தல்  முடிவடைந்த  ஒரு மாத காலமாக கட்சியைச் சேர்ந்த  அனேகர்  கொதிப்பும்,  பரபரப்பும்,  உணர்ச்சியும்  கொண்டு  எவ்வளவு  முயற்சி  செய்தும் சென்னையில் உள்ள  தலைவர்கள்  முன்வராதது  பொருப்பற்ற காரியமாகும்  என்பதாக  குறிப்பிட்டிருக்கிறார்.  மற்றும்  நமது  கட்சிக்கு  ஒரு தாய்மொழி  தினசரியும்  மத்திய  பிரசார சபையும்  ஏற்படுத்த வேண்டும் என்றும்,  சீக்கிரத்தில்  ஒரு  விசேஷ மகாநாடு  கூட்ட வேண்டும்  என்றும்   வலியுறுத்துகிறார்.

கடைசியாக  இதைச் செய்யாவிட்டால்  ஜனங்களுக்குக் கட்சியின்  மீதுள்ள  நம்பிக்கை  சிதறுண்டு போய்  கொள்கையையும்  பரப்ப இடமே  இல்லாமல்  போய்விடும் என்றும்  எச்சரிக்கை செய்கிறார்.

இந்த அபிப்பிராயமேதான்  தமிழ்நாட்டு மக்களின்  உண்மையானதும், சரியானதுமான அபிப்பிராயமாகும்  என்பது நமது கருத்து.

இதற்குத்  தக்க  ஏற்பாடு  செய்யப் படவேண்டியது  தோழர்கள் பொப்பிலி  ராஜா, சர். ஷண்முகம் ஆகியவர்களின் கடமையாகும்.

தோழர்  பொப்பிலிக்கு  மந்திரி  பதவி போய்விட்டாலும்  ராஜா பதவி  போய்விடாது  என்கின்ற  தைரியம்  அவருக்கு  உண்டு  என்பதும்  தோழர் ஷண்முகத்துக்கு  இந்திய சட்டசபை  மெம்பர் பதவி  போய்விட்டாலும்  நிர்வாக  சபை  மெம்பர் பதவியோ  கவர்னர் பதவியோ  போய்விடாது  என்கின்ற தைரியம்  உண்டு  என்பதும் நமக்குத் தெரியும்.

ஆனால்  இந்த  நிலையில்  தக்கதொரு  முயற்சி  எடுத்துக் கொள்ளாவிட்டால், அதோடு கூடவே  நல்ல கொள்கையுடைய  கட்சியை  குலைத்து  மக்களுக்கு  துரோகம்  செய்துவிட்டு  போய்விட்டார்கள்  என்கின்ற  பழமொழியும் இவர்களை விட்டுப்போகாது  என்பதையும்   உணர வேண்டுகிறோம்.

முடிவாக  விருதுநகர் தோழர்  ராமசாமி  அவர்கள்  மேற்கண்ட  விஷயமாய் ஆராய்ந்து முடிவு  செய்யவும்,  பல தலைவர்களையும்   ஒன்று சேர்க்கவும்  விருதுநகரில்  ஒரு தலைவர்கள் மகாநாடு  கூட்டலாமா  என்று யோசிப்பதற்காக  விருதுநகர்  தென்னிந்திய  நல உரிமைச் சங்க  சார்பாக  ஒரு முன்  ஏற்பாடு  கூட்டம்  கூட்டப் போவதாகவும்  தெரிவித்து இருக்கிறார்.  அக்கூட்டம்  வெற்றி  பெற்று  அதன் பயனாய் விருதுநகரில்  பெரியதொரு  கூட்டம்  கூட்டி  ஏதாவது  ஒரு  நன்முடிவுக்கு  வர வேண்டுமென்றே நாம்  ஆசைப்படுகின்றோம்.

பகுத்தறிவு  கட்டுரை  30.12.1934

You may also like...