இந்திய சட்டசபைத் தேர்தல்
தோழர் சத்தியமூர்த்தி யாரை ஏமாற்றப்போகிறார்?
தோழர் கு. சத்தியமூர்த்தி சாஸ்திரிக்கு இப்போது சிறிது நெருக்கடியான சமயம் என்று சொல்லலாம். ஏனெனில் அவர் எப்படியாவது சமீபத்தில் நடைபெறப் போகும் இந்திய சட்டசபை அங்கத்தினர் பதவிக்கு ஒரு அபேக்ஷகராக நிற்க வேண்டுமென்று கருதி இருக்கிறார். சென்னையில் நிற்பதற்கு அவருக்குத் தைரியமில்லை, இருக்கவும் நியாயமில்லை. ஏனென்றால் சென்னை ஜனங்கள் தோழர் சத்தியமூர்த்தியை நேரில் அறிவார்கள். இந்திய சட்டசபையின் சென்னைத் தொகுதியானது சென்னை சட்டசபையின் யுனிவர்சிட்டித் தொகுதி மாதிரி 100க்கு 95 பேர்கள் பார்ப்பன ஓட்டர்களாய் இருக்கும் தொகுதியல்ல. பார்ப்பனரல்லாதார் பெரும்பான்மையோருடைய ஓட்டுகளைப் பெற்றாக வேண்டும். ஆதலால் அங்கு சென்னையில் நின்றால் கட்டின பணம் வாபீஸ் பெறுவது கூட சில சமயங்களில் கஷ்டமாகிவிடும்.
நமது மாகாணத்தில் பொதுவாக பார்ப்பனர்களுக்கு சிறப்பாக வர்ணாச்சிரமப் பார்ப்பனர்களுக்கு தகுதியாய் இருக்கும் தொகுதி தஞ்சை, திருச்சி ஜில்லாக்களின் தொகுதியாகும். இந்த ஜில்லாக்களின் பார்ப்பனரல்லாதாரே உத்தியோகம் பெறவும் மந்திரியாகவும் ஸ்தல ஸ்தாபனங்களில் தலைமைப் பதவி அங்கத்தினர் பதவி பெறவும் அதுவும் பெறும் வரையில் மாத்திரமே பார்ப்பனரல்லாதார் என்கின்ற பேச்சுப் பேசுபவர்களேயொழிய மற்றப்படி பார்ப்பனரல்லாதாரின் பொது விஷயங்களில் கவலை செலுத்துவதென்பது அருமையிலும் அருமையான காரியமாகும்.
இந்திய சட்டசபைக்கு தஞ்சை திருச்சி ஜில்லா சேர்ந்து ஒரு தொகுதியாக ஆன கால முதல் நாளது பரியந்தம் நமக்குத் தெரிந்த வரையில் அத் தொகுதிக்கு பார்ப்பனர்களே வந்திருக்கிறார்கள். அதுவும் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை நசுக்கக் கங்கணம் கட்டிக் கொண்ட பார்ப்பனர்களும் வர்ணாச்சிரமப் பார்ப்பனர்களும் பார்ப்பன சமூகத் தலைவர்களுமே வந்திருக்கிறார்கள். அதிலும் சென்னை முதலிய வெளியிடங்களில் இருந்தவர்களும் இருப்பவர்களுமான பார்ப்பனர்களே இங்கு வந்து வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். இதிலிருந்து திருச்சி, தஞ்சை பார்ப்பனரல்லாதாரின் வீரமும் சுயமரியாதையும் பார்ப்பனரல்லாதார் வகுப்பு அபிமானமும் எவ்வளவு என்று யாரும் சுலபமாய்த் தெரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட ஒரு தொகுதி இப்போது தோழர் சத்தியமூர்த்தி அவர்களுக்கு கேள்வி கேப்பாடு இல்லாமல் தாராளமாய் வழி திறக்கப்பட்டு இருந்தும் அவருக்கு எதிர்பாராத ஒரு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.
என்னவென்றால்? தஞ்சை, திருச்சி ஜில்லா பார்ப்பனர்கள் தங்கள் தொகுதிக்கு ஏதாவது ஒரு அபேக்ஷகரை ஆதரிக்க வேண்டுமானால் அவ்வபேக்ஷகர் பார்ப்பனராய் மாத்திரம் இருந்தால் போதாது. அபேக்ஷகர் சொந்த ஹோதாவில் எவ்வளவு மோசமானவராய் இருந்தாலும் சனாதன தர்மத்தை எவ்விதத்திலும் குலைக்காதவராகவும் அதைக் காப்பவராகவும் இருக்க வேண்டும். இப்போது இந்திய சட்டசபையில் சனாதன தர்மம் என்பதற்கு விரோதமான இரண்டு மசோதாக்கள் இருக்கின்றன. ஒன்று, தீண்டாமை விலக்கு மசோதா. மற்றொன்று கோவில் பிரவேசத் தடை நீக்கும் மசோதா. இவை இரண்டு தவிர மற்றும் விவாகரத்து, பெண்கள் சொத்துரிமை முதலிய மசோதாக்கள் ஆலோசனைக்கு வந்தாலும் வரலாம். சாரதா சட்டத்தை ஒழிக்க மறுபடியும் ஏதாவது சூழ்ச்சிகள் செய்யப்பட்டாலும் படலாம். இதனால்தான் தோழர் சத்தியமூர்த்தியின் நிலை சற்று நெருக்கடி என்று சொன்னோம். ஏனென்றால் தோழர் சத்தியமூர்த்தி இரகசியத்தில் உண்மையில் சனாதன தர்மிகளின் பிரதிநிதியாயும் வெளிப்படையில், வேஷத்தில் சனாதனிகளின் “”விரோதியான” காங்கிரஸ் பிரதிநிதியாயும் இருக்க வேண்டி இருக்கிறது.
தீண்டாமை விலக்கு மசோதாவும் கோவில் பிரவேசத் தடை விலக்கு மசோதாவும் காங்கிரசால் ஆதரிக்கப்பட்டுவிட்டது. இந்திய சட்டசபையில் சென்ற மூன்று நான்கு கூட்டங்களிலேயே இம்மசோதாக்களை நிறைவேற்றச் செய்வதற்காக தோழர் காந்தியவர்கள் தோழர் ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் அவர்களை டெல்லிக்கு அனுப்பி ஒவ்வொரு மெம்பரையும் பார்க்கச் செய்து எவ்வளவோ பிரயாசைப் பட்டிருக்கிறார் என்பது யாவரும் அறிந்ததே. அன்றியும், காங்கிரஸ் கொள்கையும் தீண்டாமை விலக்கு என்றும், அதன் தற்கால நிர்மாணத் திட்டம் தீண்டாமை விலக்கும் தீண்டாதவர்களுக்கு சகல கோயில்களும் திறக்கப்படச் செய்ய வேண்டியதென்றும் பொதுஜனங்கள் நம்பும்படி எவ்வளவோ காரியங்கள் செய்தாகிவிட்டது. அதற்காகப் பொது ஜனங்களிடம் ரூ.10 லக்ஷக் கணக்காக பணமும் வசூலித்தாய் விட்டது. ஆதலால் காங்கிரசுக்காரர் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் ஒவ்வொருவரும் இந்த மசோதாக்களை வேஷத்துக்காகிலும் ஆதரிக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். காங்கிரசின் நல்ல காலமோ, கெட்டகாலமோ, தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் இது சமயம் தென் இந்திய காங்கிரசிற்கு பிரதான புருஷ பதவியை சம்பாதித்து விட்டார். அதுமாத்திரமல்ல தேர்தலுக்கு அபேக்ஷகர்களை நிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்து தேர்தலையே நடத்த வேண்டிய தலைவர் பதவியையும் பெற்றுவிட்டார். ஒரு வண்டியின் முன் பின் பாரங்கள் எதற்காவது ஆட்களோ சாமான்களோ கிடைக்காவிட்டால் சில சமயங்களில் கல்லுகளை எடுத்து வைத்து பாரத்தைச் சரிப்படுத்திக் கொள்ளுவது வழக்கம். அதுபோல் எந்தக் கமிட்டியிலும் பார்ப்பனரல்லாதார் ஒருவர் இருவரை அதில் போட வேண்டுமே என்கின்ற அவசியத்துக்காக, தக்க ஆட்கள் இல்லாததால் தோழர் முத்துரங்க முதலியார் அவர்கள் போன்றவர்கள் ஒருவர் இருவர் தேர்தல் நியமன அதிகாரக் கமிட்டியில் போடப்பட்டிருந்தாலும் தோழர் சத்தியமூர்த்தியவர்களே பிரதான புருஷரும் தகுதி உடையவரும் சர்வாதிகாரியும் ஆகிய பதவியில் இடம் பெற்றிருக்கிறார். அப்படிப்பட்டவர் தானாகவே ஒரு தொகுதிக்கு அதுவும் தஞ்சை, திருச்சி ஆகிய வருணாச்சிரம தொகுதிக்கு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதில் அவர் என்னதான் தந்திரமும், புரட்டும் பொறுப்பற்ற அறிக்கையும் விடக் கூடிய யோக்கியதையும் சுதந்திரமும் உடையவராய் இருந்தாலும், இப்போது வெளிப்படையாய் இரண்டில் ஒன்று சொல்லித் தீரவேண்டி இருக்கிறது. அவர் சொந்த ஹோதாவில் அவருக்கு ஏதாவது ஒரு கொள்கை உண்டு என்று சொல்ல நமக்குத் தைரியம் வரவில்லை. ஆனாலும் பார்ப்பனத் தன்மைக்கும், அதன் உயர்வுக்கும், ஆதிக்கத்துக்கும் சிறிதாவது கெடுதிவர அவர் ஒரு நாளும் சம்மதிக்கமாட்டார். எப்போதும் சம்மதித்ததுமில்லை. அவரைவிட மேலான யோக்கியதையும், அந்தஸ்தும் உடையவர்கள் பார்ப்பனரல்லாதாரில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களில் பெரும்பாலோர் தங்கள் சுயநலத்துக்காக வகுப்பு நலனை மிகக் குறைந்த விலைக்கு விற்கக் கூடியவர்கள் என்று சொல்லலாம் என்பது நமது கருத்து. ஆனால் நமது சத்தியமூர்த்தி சாஸ்திரிகளோ, எந்தக் காலத்திலாவது எவ்வளவு நெருக்கடியான சொந்த அசௌகரியத்திலாவது பார்ப்பனீயத்தையோ, பார்ப்பன ஆதிக்கத்தையோ ஒரு கடுகளவுகூட விட்டுக் கொடுத்தார் என்று சொல்ல முடியாது. இந்த வழக்கமும், யோக்கியதையும் தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரி இடம் மாத்திரம் அல்ல. 100க்கு 99 15/16 பார்ப்பனர்களிடத்திலும் காணலாம். இதுவேதான் இந்நாட்டில் பார்ப்பனீயம் நிலைத்திருப்பதற்குக் காரணம் என்பதோடு, இந்தக் குணம் பார்ப்பனரல்லாதாரிடம் இல்லாததாலேயே அவர்களது முயற்சிகள் அடிக்கடி கவிழ்க்கப்பட்டு விடுவதற்கும் காரணம் என்று சொல்லலாம்.
ஆகவே தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் ஏதாவது ஒன்றைச் சொல்லி யாராவது ஒருவரை அதாவது காங்கிரஸ் பார்ப்பனரல்லாதாரையோ அல்லது வருணாச்சிரமிகளையோ ஏமாற்றியே ஆக வேண்டும். எப்படி இருந்தாலும் என்ன சொன்னாலும் அது வர்ணாச்சிரமப் பார்ப்பனர்களை ஏமாற்றினதாய் முடிவு பெறாது பார்ப்பனரல்லாதாரைத் தான் ஏமாற்றப்போகிறார் என்பது உறுதி . சமீபத்தில் தஞ்சை ஜில்லாவில் சில பார்ப்பனர்கள் மேற்கண்ட மசோதாக்கள் விஷயமாய்த் தோழர் சத்தியமூர்த்தியின் அபிப்பிராயம் என்ன என்று அவரைக் கேட்டபோது “”தீண்டாமை ஒழிய வேண்டியது தான். ஆனால் அதற்கு சட்டம் செய்வது என்பது கூடாத காரியம்” என்று சொன்னாராம்.
தீண்டாமை ஒழிப்புக்குச் சட்டம் செய்வதே கூடாத காரியம் என்று சொன்ன இவர், தீண்டாதாருக்குக் கோவில் பிரவேசம் ஏற்படச் சட்டம் செய்வதை எப்படி ஆதரிப்பார் என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். அது எப்படியோ போகட்டும். இப்போது நம்முடைய கேள்வி எல்லாம் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் காங்கிரசுக்காரர் என்று தன்னை சொல்லிக் கொண்டு “”தீண்டாமை விலக்குக்கு சட்டம் செய்வது கூடாது” என்று சொல்லலாமா? என்பதேயாகும். அது மாத்திரமல்ல, தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்று இந்திய சட்டசபைக்குப் போனால் தீண்டாமை விலக்கு மசோதாவை எதிர்ப்பாரா? ஆதரிப்பாரா என்றும் கேட்கின்றோம்.
காங்கிரசைப் பற்றி ஏதாவது குற்றம் சொல்லவோ, குறைகூறவோ யாராவது ஆரம்பித்தால் அவர்களைப் பற்றி தாறுமாறாகப் பேசவும் எழுதவும் நமது நாட்டில் அனேக தேசபக்தர்கள் இருக்கிறார்களே யொழிய, தேசியப் பத்திரிகைகள் இருக்கின்றனவே ஒழிய காங்கிரசின் இப்படிப்பட்ட யோக்கியதைகளைக் கவனித்து தக்கது செய்வது என்பதைக் கவனிக்க எவருமே யில்லை. நமது நாட்டின் வேலையில்லாத் திண்டாட்டமும் சோம்பேறி வாழ்க்கைப் பிரியமும் சேர்ந்து இப்படிப்பட்ட தேசபக்தர்களையும், தேசியப் பத்திரிகைகளையும் ஏராளமாக உற்பத்தி செய்துவிட்டது என்று சொல்ல வேண்டுமே யொழிய தேச பக்தர்கள் மீது குறைகூறவும் நமக்கு மனம் வரவில்லை.
இந்திய சட்டசபைத் தேர்தல்களைப் பற்றி காங்கிரஸ் எடுத்துக் கொண்ட கவலைக்கும், இந்திய சட்டசபைக்கு நமது மாகாண காங்கிரஸ்காரர்கள் போகவேண்டும் என்று ஆத்திரப்படுவதற்கும் உள்ள உண்மையான இரகசியம் இதிலிருந்து சுலபமாக விளங்கக் கூடும் என்று கருதுகின்றோம்.
ஆகையால், பார்ப்பனரல்லாத மக்கள் இந்திய சட்டசபை தேர்தல்களை இத்தனை நாள் அலக்ஷியமாய் விட்டிருந்தது போல் இல்லாமல் தக்கபடி கவலை செலுத்தி சமூக சமத்துவத்திற்கு பிறவி எதிரிகளான பார்ப்பனர்கள் அப்படிப்பட்ட ஸ்தானங்களுக்குப் போய் நமக்கு தொல்லை விளைவிக்காமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு தூரம் எழுதுகிறோம். குறிப்பாக தஞ்சை, திருச்சி ஜில்லாக்களின் தொகுதிக்கு எப்படியாவது ஒரு பார்ப்பனரல்லாதார் நின்று வெற்றி பெரும்படியாக செய்துவிட்டோமேயானால் தென்னிந்திய சமுதாயத் துறையில் ஒரு பெரிய புதிய சகாப்தத்தை உண்டு பண்ணியவர்களாக ஆகிவிடுவோம் என்பதோடு அந்தப்படி இல்லாமல் தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் இந்திய சட்டசபைக்கு போக நேர்ந்தால் பார்ப்பனரல்லாதார் நலனுக்கு பெரிய முட்டுக்கட்டை போட்டது போலாகுமென்பதையும் தெரிவித்துக் கொண்டு இதை முடிக்கின்றோம்.
புரட்சி தலையங்கம் 10.06.1934