பத்திரிகாசிரியர் 

ஏ. ரங்கசாமி  ஐயங்கார்  மரணம்

ஏ. ரங்கசாமி  ஐயங்கார்  நீண்ட  நாள்  பத்திரிகை  ஆசிரியராகவிருந்து  வந்ததின்  பயனாக  தென்னாட்டில்  தமிழ்  பத்திரிகையாகிய  “”சுதேசமித்திரன்”  வாயிலாகவும்,  ஆங்கிலப் பத்திரிகையாகிய  “”இந்து”  பத்திரிகை  வாயிலாகவும்  மக்களுக்கு  அரசியல்  துறைகளை  ஒருவாறு  புகட்டிவருவதில்  முன்னேற்ற  மடைந்தவராவார்.  அவர்  மக்கள் விடுதலைக்கு  போராடும்  வழிகளிலும்  அவரது  வர்ணாசிரம  தத்துவங்களுக்கு  எவ்வித  உபாதைகளும்  உண்டாக்காமல்  பாடுபட்டு  வருபவர்களில்  தலைசிறந்து  விளங்கினார்.

காங்கிரஸில்  அவர்  மிக்க  ஊக்கத்துடனும்,  முயற்சியுடனும்  உழைத்துத்  தன்வசமாக்கி  தனது  கருத்துக்கிசைந்த  முறைகளில்  தொண்டாற்றி  வந்தவராவார்.  எந்த  காரியத்தில்  ஆனாலும்  தமக்கு  வேண்டியதை  எப்படியும்  பிரவேசித்து  செய்து  முடிக்குந்  திறமை  வாய்ந்தவர்.

வர்ணாச்சிரமத்தை  வெறுப்பவர்களைத்  தவிர  மற்றவர்களுக்கு  அவர்  எப்போதும்  விரோதியாக  இருந்துவந்தவரே  அல்லர்.  அத்துடன்  அவர்களை  தமது  பத்திரிகைகளிலும்  மிகுந்த  சலுகைகளுக்கு  பாத்திரர்களாக்கியும்  வைப்பார்.

பத்திரிகையை  முன்னேற்றமடையச்  செய்து  அதைப்  பெரும்பான்மையோரான  மக்களிடம்  பரவி  வரவேண்டுமென்கின்ற  விஷயத்தில்  அவரெடுத்துக்கொண்ட  சிரமமும்,  முயற்சியும்  அளவிடற்  பாலதன்று.  இத்தகைய  குணசமூகங்களோடு  வாழ்ந்து  வந்து  தமது  பகுதி  வயதினில்  நோய்வாய்ப்பட்டு  தமது  ஆருயிர்க் காதலி,  காதலர்களையும்,  துணைவரையும்  இஷ்டமித்திரர்  பந்து  ஜன  சமூகங்களையும்  விட்டுப்  பிரிந்ததானது  மிகவும்  துக்ககரமானதாகும்.  அன்றியும்  பத்திரிகை  உலகத்திற்கும்  மற்றுமுள்ள  நண்பர்களுக்கும்  ஒரு  ஈடுசெய்யக்  கூடாத  நஷ்ட்டமேயாகும்.  இன்னமும்  அவருடைய  விரோதிகளுக்கும்கூட  அவர்  பிரிவானது  அவ்விரோதிகளின்  புத்தி  கூர்மையையும்  ஊக்கத்தையும்  கொள்ளைகொண்டு விட்டதென்றே  சொல்லலாம்.  நமது  ஐயங்கார்  ஆருயிர்  துறந்தார்  என்பதைக்  கேழ்கும்போதே  மனம்  திடுக்கிட்டுவிட்டது.  இனிச்  செய்வதென்ன  இருக்கிறது.  உலகம்  இயற்கையின்  வழிசென்று  கொண்டிருக்கும்போது  அதையேதான்  சமாதானமாகக்  கொள்ள  வேண்டியவர்களாகிறோம்.

அவர்  குடும்பத்தவர்களுக்கு  நமது  மனமாழ்ந்த  துக்கத்தைத்  தெரிவித்துக்  கொள்ளுகிறோம்.

புரட்சி  துணைத் தலையங்கம்  11.02.1934

You may also like...