மீண்டும்  சுயராஜ்ய  கக்ஷியா?

 

காங்கிரஸ்  ஒழிந்து  விட்டதென்றும்  அதனால்  நமது  நாட்டின்  முன்னேற்றத்திற்கு  இதுவரையில்  விமோசனம்  ஏற்படவில்லை  என்றும்,  அதை  இன்னும்  உயிரோடு  வைத்துப்  பார்ப்பதில்  யாதொரு  சிறிய  நன்மையும்  பெற  முடியாதென்றும்,  ஆனால்  காங்கிரசை  உயிர்ப்பிக்க  காந்தி  பக்தர்கள்  முயற்சிப்பது  நாட்டின்  முன்னேற்றத்திற்கு  வேண்டுமென்றே  முட்டுக்கட்டை  போடுவதாகுமென்பதோடு,  அது  பெரும்  முட்டாள்தனமும்  தற்கொலைக்குச்  சமானமானதாகுமென்றும்,  இந்திய  மக்களில்  சகலரும்  இன்று  உணர்ந்து  இருக்கிறார்கள்.

இந்த  நிலையில்  சில  காங்கிரஸ்  தலைவர்கள்  சமீபத்தில்  டில்லியில்  கூடி,  சட்டசபைகளைக்  கைப்பற்றுவதா?  இல்லையா?  என்பதைக்  குறித்து,  தக்க  முடிவிற்கு  வர முயன்றார்கள்.  ஆனால்  இன்றைய  தினம்  காங்கிரஸ்  கக்ஷியில்  எந்த  இருவர்களுடைய  அபிப்பிராயமும்  ஒரே  விஷயத்தைக்  குறித்துங்கூட  முழுதும்  ஒன்றாக  பரிணமிப்பதில்லை  என்கிற  இரகசியம்  நாம்  அறிந்ததேயாததால்,  அவர்கள்  எந்த  முடிவிற்கும்  வராமல்  கலைந்து  போய்  விட்டார்கள்  என்பதில்  நாம்  சிறிதும்  ஆச்சரியப்படவில்லை.

வர்ணாசிரம  தர்மத்திற்கு  முலாம்  பூசி,  அது  வேண்டுமென்று  நம்பிக்கை  கொண்டிருப்போரும்,  பழைய  “”ராம”  ராஜ்யங்களை  சிருஷ்டித்து  அதுவே  குடிஆட்சி  என்று  நிலை  நிறுத்தக்  கங்கணங் கட்டிக்  கொண்டிருப்போரும்  ஜாதிப்  பாகுபாடுகள்,  தொழில்  வேற்றுமைகள்  இவைகளை  அறவே  ஒழிக்கப்  பயனுள்ள  வேலைகளைச்  செய்யாது,  இவைகளையே  இன்னும்  நீடித்து  வைத்திருக்க  விரும்புவோரும்,  தீண்டாமை  ஒழிய  வேண்டும்,  ஆனால்  ஹரிஜனம்  என்பதின்  பேரால்  தீண்டாதார்கள்,  சூத்திரர்களாகவே  மதிக்கப்படவேண்டுமென்போரும்,  மன்னர்கள்  சமஸ்தானாதிபதிகள்  முதலியோர்  சாஸ்வதமாக  ஆதிக்கமே  செலுத்தி  அரசுரிமை  செய்யட்டுமென்போரும்,  பிரிட்டிஷாருக்கு  இந்திய  அரசியலில்  முக்கிய  பாதுகாப்புகள்  இருக்கட்டுமென்போருமான  காங்கிரஸ்காரர்கள்  இன்று  சுயராஜ்ய  கட்சிப்  போர்வையைப்  போத்திக்  கொண்டு,  சட்டசபை  ஸ்தாபனங்களைக்  கைப்பற்ற,  “”தங்களின்  பூர்வ  கால  சம்பவங்களை”  மறந்து  விட்டு  வெளி  வந்து  விட்டார்கள்.

உதாரணமாக  நமது  மாகாண  தேசீயவாதியான  சத்தியமூர்த்தி  தனது  வடநாட்டுச்  சுற்றுப்  பிரயாணத்திற்கப்பால்  கீழ்கண்ட  செய்தியை  பத்திரிகை  நிருபருக்கு  அறிவுறுத்தியுள்ளார்.  அதாவது  “”ஜனங்களிடையே  கட்டுப்பாடு  ஏற்படுத்தி  மூன்று  கோடி  60  லக்ஷம்  ஓட்டர்களுக்கும்  ராஜீய  ஞானம்  உண்டு  பண்ணி,  அவர்களை  ஒன்று  திரட்டுவதே  நாம்  செய்யக்  கூடிய  வேலை.  காங்கிரஸ்  மகாசபை  ஜனங்களின்  உண்மையான  பிரதிநிதி  சபையென்பது  வாஸ்தவமாயின்,  ஓட்டர்களின்  ஆதரவைப்  பெற்று  அவர்களுடைய  பிரதிநிதிகளாக  இருந்து  காங்கிரஸ்காரர்கள்  வேலை  செய்ய  வேண்டும்.  யார்  தங்களுக்கு  தெளிவான  ஒரு  வழியைக்  காட்டப்  போகிறார்கள்  என்று  மகாஜனங்கள்  ஆவலாய்  இருக்கிறார்கள்.”

தோழர்களே!  சத்தியமூர்த்தி  போன்றவர்களின்  ஆதிக்கத்  தாண்டவத்திற்கு  இடங்கொடுக்கப்  போகின்றீர்களா?  இவர்கள்  முன்  இருந்து  சாதித்தது  நாம்  அறிந்தது  தானே!  மற்றும்  இப்பேர்க்  கொத்தவர்களின்  சிறிய  எண்ணமுங்கூட  நம்  நாட்டிற்கு  எவ்வளவு  அபாயகரமானதென்பதை  விளக்கிக்  கூறத்  தேவையில்லை.

நமது  இந்திய  சட்டசபை  மாகாண  சட்டசபைகள்  ஸ்தல  ஸ்தாபனங்கள்  முதலியவைகள்  இந்திய  பொதுஜன  பிரதிநிதித்துவம்  வாய்ந்ததாக  இருக்கிறது  என்பது  உண்மை.  ஆனால்  பொது  ஜனங்களுடைய  பிரதிநிதிகள்  மாத்திரம்  அங்கு  இல்லை.  அங்குள்ளவர்களில்  100க்கு  98  பேர்கள்  தங்களுக்கு  மாத்திரமே  தாங்களே  பிரதிநிதிகளென்னும்  பணக்காரக்  கூட்டத்தார்,  செல்வவந்தர்  கூட்டத்தார்,  வகை  துகை  அறியாத  படித்த  கூட்டத்தார்  முதலானவர்களாவார்கள்.

இதைப்  பார்த்து  இன்றையதினம்  நம்நாட்டிலுள்ள  ஒவ்வொரு  ஏழை  மகனும்,  கூலிக்காரனும்,  தொழிலாளியும்,  விவசாயியும்  கஷ்டப்பட்டு  அவதிப்படுபவனுமாகியவர்கள்,  அதிருப்திப்பட்டு  ஆத்திரமடைந்திருக்கிறார்கள்.  அவர்களுக்கு  ஒரு  நல்ல  மார்க்கம்  ஏற்பட  வேண்டியது  பெரிதும்  அவசியமே.

ஆனால்  இந்த  நிலையில்  சுயராஜ்யக்  கட்சியாரின்  சட்டசபைப்  பிரவேசம்,  கஷ்டப்பட்டு  அவதிப்பட்டு  கொடுமைப்படுபவருக்கு  எரிகிற  நெருப்பில்  எண்ணெய்  வார்ப்பது  போன்ற  கொடுமையாகுமேயன்றி,  வேறு  எந்த  சிறு  குண்டூசி  நன்மையும்  ஏற்படப்போவதில்லை  என்பது  பகிரங்க  ரகசியம்.

இன்றைய  மக்களின்  விழிப்பிற்குக்  காரணம்,  அவர்களின்  சுயமரியாதை  உணர்ச்சியேயாகும்.  இந்த  விழிப்பானது  நமது  தமிழ்நாட்டில்  மாத்திரம்  நின்றுவிடாது.  அகில  இந்தியா  முழுதும்  ஏற்பட்டிருக்கிறது.

சமதர்ம  சோஷியலிஸ்ட்  அபிப்பிராயங்களைக்  கொண்டு  கேரளத்திலும்,  பஞ்சாபிலும்,  பம்பாயிலும்,  மத்திய  மாகாணத்திலும்,  கான்பூரிலும்  இன்னும்  சில  இடங்களிலும்  தக்க  இயக்கங்கள்  ஆரம்பிக்கப்பட்டு  நல்ல  வேலைகள்  செய்து  வருகின்றனர். இன்றைய  தினம்  இந்தியாவில்  நிலைபெற்றுள்ள  எல்லா  விஷயங்களிலுமுள்ள  அதிருப்தியை  ஆங்காங்கு  வெளிக்காட்டி  வருகிறார்கள்.  அவர்களெல்லோரும் நம்  நாட்டில்  நிலவும்  பல்வேறு  விஷயங்களையும்,  முறைகளையும்  அடியோடு  மாற்றாமல்  நம்முடைய  ஜனசமூகத்திற்கு  எவ்வித  நன்மையையும்  கொண்டு வந்து விடுவதென்பது  முடியாத காரியமென்பதை  உணர்ந்திருக்கிறார்கள். பல  மக்கள்  கஷ்டப்படுவது,  சிலர்  சுகம்  அனுபவிப்பது  என்கிற  நிலை  எந்த  இடத்தில்  எந்த  அமைப்பில்  இருந்தாலும்  அடியோடு  அழிக்கவே  முயல  வேண்டும்.  முதலாளி  தொழிலாளி  என்கிற  பேதமோ,  ஆண்டான்  அடிமை  என்கிற  அமைப்போ,  தொண்டமான்  தோட்டி  என்கிற  தொல்லையோ,  ஏழை  பணக்காரன்  என்ற  வித்தியாசமோ  இன்றி,  எல்லோரும்  சரிநிகர்  சமமான  அந்தஸ்து  நிலை  எய்த  வேண்டுமென்கிற  அழுத்தமான  அபிப்பிராயம்  எங்கும்  ஊறிப்  போய்விட்டது.

ஆகையால்  சுயமரியாதைத்  தோழர்களே!  நாட்டின்  உத்வேகம்  நம்  பக்கமே  சார்ந்திருக்கிறதென்பதை  உணர்ந்து  நமது  இயக்க  லக்ஷியத்திற்கு  விரோதமானவர்களையும்   நம்  லட்சியத்தை  நன்கு  உணர சந்தர்ப்பம்  கொடுத்து நாமே  எங்கும்  ஆதிக்கமும்,  பலமும்,  செல்வாக்கும்  பெற  வேண்டுமென்பதில்  அதிகக்  கவலையும்  ஊக்கமுமெடுத்துத்  தளராது  உழைக்க  வேண்டுமென்று  கேட்டுக் கொள்ளுகிறோம்.

நமது  தோழர்  ம. சிங்காரவேலு  அவர்களின்  தமிழ்  மாகாணச்  சமதர்மப்  பேருரையில்  “”சமதர்ம  ஞானத்தைப்  பொது  மேடைகளிலிருந்து  தெரிவிப்பதுடன்,  சட்டசபைகளிலும்,  மற்ற  ஸ்தாபனங்களிலும்  நுழைந்து  பொது  மக்களிடம்  நெருங்க  வேண்டுமென்று”  கூறியிருப்பதை  ஒவ்வொருவருக்கும்  ஞாபகமூட்டுகிறோம்.

இந்தச்  சந்தர்ப்பத்தில்  சமீபத்தில்  4வது  சுயமரியாதை  மாகாண  மகாநாட்டை  நாளது  ஆகஸ்டு  மாதத்தில்  திருச்சியில்  கூட்டுவதென்று  நமது  சுயமரியாதைச்  சங்கத்தின்  மத்திய  சபைக்  கூட்டத்தார்  கடந்த  11ந்  தேதி  சென்னையில்  கூடி  தீர்மானித்திருப்பது  மிக  விசேஷிக்கத்  தக்கது.  இதன்  விபரம்  பிறிதொரு  பக்கத்தில்  பிரசுரித்திருக்கிறோம்.  எனவே,  நமது  தோழர்கள்  யாவரும்  நமது  இயக்க  வளர்ச்சிக்குத்  திருச்சியில்  ஒன்று  கூடி  மேற்காட்டிய  நல்ல  முடிவிற்கு  வரக்  கோருகிறோம்.

அதோடு  நம்நாட்டின்  பழைய  வர்ணாஸ்ரம  தர்மத்தை  யொத்த  இன்றைய   முதலாளி,  தொழிலாளி  என்ற  முறையையும்  புரோகிதர்  ஆட்சியையும்,  வியாபாரிகள்  கொள்ளையையும்  பணக்காரர்கள்,  சிற்றரசர்கள்  போன்றவர்களின்  ஆதிக்கத்தையும்  மறைமுகமாகவேனும்  ஆதரிக்க  ஒருப்படும்  எந்தக்  கட்சியானாலும்  அது  தக்கவாறு  திருத்தி  சமதர்ம  லக்ஷியம்  பெறச்  செய்வதும்  நமது  கடமையாகும்.    மற்றும்  நமது  இயக்க  வேலைத்  திட்டமாகிய  பொதுவுடமைத்  தத்துவத்தை  அதாவது  நிலங்கள்,  தொழிற்சாலைகள்,  போக்குவரத்து  வசதிகள்  முதலியனவற்றை  பொதுவாக்கி    அந்தந்த  ஸ்தாபனங்களில்  உழைத்துவரும்  விவசாயிகள்,  தொழிலாளர்கள்  முதலியவர்களுக்கு  அதனுடைய  வருமானங்கள்  யாவற்றையும்  உபயோகப்படச்  செய்து  உழைக்கத்தக்க  முன்னணி  வேலைத்  திட்டத்தை  தீவிரப்படுத்துமாறும்  கேட்டுக்  கொள்கிறோம்.

மற்றும்  தோழர்  இ.ஈ.  நாயகம்  அவர்களின்  கட்டுரையை  இவ்வாரம்  “”புரட்சி”யின்  3 ம்  பக்கம்  பிரசுரித்திருப்பதை  வாசகர்கள்  ஊன்றிப்  படித்தால்  எந்தத்  திட்டம்  மக்களுக்குப்  பயன்படுமென்பது  விளங்காமற்  போகாது.

புரட்சி  தலையங்கம்  18.03.1934

You may also like...