ஐ.இ.கு.  செங்கோடையன் முடிவெய்தினார்

 

ஐ.சி.எஸ்.  செங்கோடையன்  அவர்கள்  ஒரு சிறு  பருவில்  காயம்  பட்டதின்  காரணமாக  இரத்தம்  விஷமாகி 29  ந்  தேதி  சென்னையில்  காலமானதாகக் கேட்டு  மிகவும்  வருந்துகிறோம்.

அவர்  ஈரோட்டிற்கு  6வது  மைலில்  உள்ள நஞ்சை  ஊத்துக்குளி  என்னும் கிராமத்தில் உள்ள ஒரு கொங்குவேளாள குலத்தில் பிறந்து  வளர்ந்து,  ஈரோட்டிலும்  கரூரிலும்  கல்வி  கற்று  அவரது  திறமையினால்  நமது  சர்க்காரால்  லண்டனுக்கு  ஐ.சி.எஸ். பரீட்øக்ஷக்கு அனுப்பப்பட்டு  அதில் தேறி  கலெக்ட்டராக  ஆனவர்.  கோயமுத்தூரில்  பிரபல  குடும்பஸ்தராய்  இருக்கும்  தோழர்  வெள்ளியங்கிரி  கவுண்டர்  அவர்களது வீட்டில்  அவரது சகோதரர்  தோழர்  பழனிச்சாமிக்  கவுண்டர்  அவர்களது  குமாரத்தியை  மணந்தவர். சமீபத்தில்  அவர்  அனந்தப்பூர்  ஜில்லாவுக்கு  கலெக்ட்டராக  மாற்றப்பட்டதாகக்  கேள்வி.

மிகவும்  வருணாச்சிரமச்  சார்பான  வீட்டில்  பெண் கொண்டிருந்தாலும்  கூட  தோழர்  செங்கோடையன்  அவர்கள்  சீர்திருத்தத்  துறையில்  மிகுதியும்  ஆர்வமுடையவர்.

அவர்  முதல்  முதல்  1919ல்  ஐ.சி.எஸ்.  பாஸ் செய்துவிட்டு  1920ல்  இங்கு  வந்த சமயம் அவருக்காக சிலர்  ஈரோடு  முனிசிபல் ஆபிசில்  ஒரு  பாராட்டுக்  கூட்டம்  நடத்தின  சமயத்தில்  ஒரு  பெருங்  கூட்டத்தில் அவர்  பதிலளிக்கும்  போது  “”இந்தியாவில்  என்றைய  தினம்  ஜாதி  ஆணவம்  மறைவு  படுகின்றதோ அன்றுதான் இந்தியா  விடுதலை  பெற்று  ஒரு சுதந்திர  நாடாக  உலகத்தில் விளங்க  முடியும்”  என்று  சொன்னவர்.

அப்படிப்பட்ட  ஒரு  சீர்திருத்த  வாதியும்,  இன்னமும்  எவ்வளவோ  முன்னுக்கு  வரக்  கூடியவரும்,  தமிழ்நாடு  கொங்கு  வேளாள  சமூகத்துக்கு  திலகமாய்  இருந்தவரும்.  நமது  தாலூக்காவாசியும்,  நமது  அயலாரும்  (பக்கத்து  பூமிக்காரரும்)  ஆகிய  தோழர்  செங்கோட்டையா  முடிவெய்தியது  கோவை  ஜில்லாவுக்கே  பெரியதொரு  நஷ்டம்  என்பதைத்  தெரிவித்துக்  கொள்வதோடு  அவர்களது  குடும்பத்தாருக்கும்  தோழர்  வெள்ளியங்கிரி   கவுண்டர்  அவர்களது  குடும்பத்தாருக்கும்  நமது  ஆழ்ந்த  துக்கத்தை  தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.  அவருக்கு  இப்போது  வயது  39.  ஒரு  பெண்  குழந்தையும்,  மனைவியும்,  65  வயதுடைய  தாயாரும்,  45  வயதுடைய  ஒரு தமயனும் இருக்கிறார்கள்.

பகுத்தறிவு  இரங்கல் கட்டுரை  02.12.1934

You may also like...