நாம்  எப்படி  நடந்துகொள்ள  வேண்டும்

 

வரப்போகும்  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  சுயமரியாதைக்  காரர்கள்  எப்படி  நடந்து  கொள்ள  வேண்டும்  என்பதைப்  பற்றியும்,  மேலால்  நடக்க  வேண்டிய  பிரசாரங்களைப்  பற்றியும்  எனக்குப்  பல  கடிதங்களும்,  கேள்விகளும்  வந்து  கொண்டிருக்கின்றன.  இவற்றுள்  தோழர்  இ.ஈ.நாயகம்  அவர்களுடைய  கடிதம்  முக்கியமானது.  சுயமரியாதைக்காரர்களுக்குத்  தேர்தல்  விஷயத்தில்  இன்ன  கட்சியைத்  தான்  ஆதரிப்பது  என்கின்ற  எவ்வித  நிபந்தனையும்  இது வரை  ஏற்படவில்லை  என்பது  யாவரும்  அறிந்ததே.  தேர்தல்களில் பார்ப்பனர்    பார்ப்பனரல்லாதார்  என்கின்ற  தன்மையை  மாத்திரம்  தான்  இதுவரை  சு.ம.காரர்கள்  கவனித்து  வருகிறார்கள்.  சுயமரியாதைக்காரர்கள்  ஏதாவது  ஒரு  கட்சியை  ஆதரிப்பது  என்கின்ற  நிலை  ஏற்பட  வேண்டுமானால்  வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்  என்கின்ற  கொள்கைக்குப்  பாதகமில்லாமல்  நமது  குறைந்த  பட்சக்  கொள்கையை  ஒப்புக்  கொள்ளக்  கூடிய  கட்சியைத்தான்  ஆதரிக்க  வேண்டி  வரும்.

ஜஸ்டிஸ்  கட்சியோ!  பார்ப்பனர்களைச்  சேர்த்துக்  கொள்ளப்  போகின்றது.  அதற்கேற்றாப்  போல்  சுயமரியாதைக்காரர்  பலருக்கும்  காங்கிரசில்  சேரலாமா  என்கின்ற  எண்ணம்  இருந்து  வருகின்றது.  சுயமரியாதைக்காரர்களுக்கு  ஜஸ்டிஸ்  கக்ஷியானது  பார்ப்பனர்களையும்  சேர்த்துக்  கொண்டு,  வகுப்புவாரிப்  பிரதிநிதித்  திட்ட  கொள்கையையும்  அது  வழவழா  செய்துவிட்டு,  பார்ப்பனரல்லாத  தொழிலாளிகள்  தாழ்த்தப்பட்டவர்கள்  ஆகிய  ஏழை  மக்கள்  விஷயத்தில்  தக்க  மாறுதலுக்கு  ஏற்பாடு  செய்து  அவர்களை  முன்னுக்குக்  கொண்டு  வரத்தக்க  கொள்கையும்,  திட்டமும்  கொண்டதாக  இல்லையானால்  சுயமரியாதைக்காரர்களில்  பலர்  காங்கிரசில்  சேருவதை  நாம்  ஆ÷க்ஷபிக்க  முடியாது.

காங்கிரஸ்  பார்ப்பனர்  ஆதிக்க  ஸ்தாபனம்  என்பதை  நாம்  ஒப்புக்  கொள்ளுகிறோம்.  ஆனால்  ஜஸ்டிஸ்  கக்ஷி  இன்று  பணக்காரர்கள்  ஆதிக்க  ஸ்தாபனம்  என்று  சொல்லத்தக்க  நிலையில்  இருப்பதை  யாராவது  மறுக்க  முடியுமா?  என்று  கேட்கிறோம். “”புழுத்ததின்  மீது  நாய்  விட்டை  இட்டது”  என்பது  போல்,  ஜஸ்டிஸ்  கக்ஷி  இந்நிலைமையில்  பார்ப்பனர்களையும்  சேர்த்துக்  கொள்வது  என்கின்ற  முடிவுக்கு  வந்து  விட்டால்  பிறகு  காங்கிரசுக்கும்,  இதற்கும்  என்ன  வித்தியாசம்  என்பது  நமக்கு  விளங்கவில்லை?

ஜஸ்டிஸ்  கட்சி,  பார்ப்பனர்களை  வேண்டுமானால்  சேர்த்துக்  கொள்ளட்டும்  என்றாலும்  அதன்  பிறகு  செய்யப்போகும்  காரியம்  என்ன  என்பதை  மக்களுக்கு  விளக்க  வேண்டாமா?  என்று  தான்  கேட்கின்றோம்.

சமுதாய  விஷயத்தில்  காங்கிரஸ்  பெரிதும்  பிற்போக்கான  புத்தியுடையது  என்பதையும்,  வகுப்புவாரி  பிரதிநிதித்துவத்திற்கு  முட்டுக்  கட்டை  போடுகின்றது  என்பதையும்,  பார்ப்பன  ஆதிக்கத்தைத்தான்  சுயராஜ்யம்  என்று  சொல்லப்படுகின்றது  என்பதையும்  நாம்  ஒப்புக்  கொள்ளுகிறோம்.

அது  போலவே  ஜஸ்டிஸ்  கட்சியும்  உண்மையான  வகுப்பு  வாரிப்  பிரதிநிதித்துவத்துக்கு  இடையூராக  ஆகிக்  கொண்டு  வருவதுடன்  சமுதாய  விஷயத்திலும்,  பொருளாதாரத்  துறையிலும்  மிகவும்  பிற்போக்கான  தன்மையில்  போய்க்  கொண்டிருக்கின்றது  என்று  தான்  சொல்ல  வேண்டி  இருக்கின்றது.

காங்கிரஸ்  ஸ்தாபனங்களில்  பார்ப்பனர்  எண்ணிக்கை  அதிகமாய்  இருப்பது  போலவே,  ஜஸ்டிஸ்  ஸ்தாபனங்களில்  பணக்காரர்களுடைய  எண்ணிக்கையே  அதிகமாய்  இருக்கின்றது.

காங்கிரசில்  எப்படி  பார்ப்பனக்  கூலிகளே  பெரிதும்  “”பார்ப்பனரல்லாதாராய்”  விளங்குகின்றார்களோ,  அது  போலவே  பணக்காரர்களின்  கூலிகளே  பெரிதும்  “”ஏழை  மக்களாகவும்,  தாழ்த்தப் பட்ட  மக்களாகவும்”  விளங்குகின்றார்களே  ஒழிய,  உண்மையான  ஏழைகள்,  தொழிலாளிகள்,  தாழ்த்தப்பட்டவர்கள்  என்பவர்களுக்கு  அதில்  இடமில்லாமல்  செய்யப்பட்டு  வருகிறது.

சுயமரியாதை  இயக்கம்  உண்மையான  சமத்துவ  நோக்கம்  கொண்டது  என்று  ஒரு நடு  நிலைமை  நியாயாதிபதியின்  தீர்ப்பைப்  பெற  வேண்டுமானால்,  இன்றைய  ஜஸ்டிஸ்  கட்சியையும்  காங்கிரசையும்  ஒன்று  போல  இல்லாவிட்டாலும்,  ஒன்றுக்கொன்று  பிரமாத  வித்தியாசம்  கொண்டதல்ல  என்றுதான்  கருதியாக  வேண்டும்  என்கின்ற  நிலைமை  ஏற்பட்டுவிட்டது.

சுயமரியாதை  இயக்கமானது  காங்கிரசினால்  அதன்  முழு  பலத்தோடு  எதிர்க்கப்பட்டு  வந்தது  உண்மை  என்றாலும்,  அதனால்  யாதொரு  கெடுதியும்  சு.ம.  இயக்கத்திற்கு  ஏற்பட்டுவிடவில்லை  என்று  தான்  சொல்ல  வேண்டியிருக்கிறது.  அதோடு  சுயமரியாதை  இயக்கம்  காங்கிரசையும்  அதன்  தலைவர்களையும்  சிறிதும்  தயவு  தாட்சண்யமின்றி  சமய  சந்தர்ப்பமின்றியும்  நண்பர்  நண்பரல்லாதவர்கள்  என்பதையும்  கவனியாமல்  வெளியாக்கியும்  எதிர்த்தும்  வந்திருக்கின்றது.

ஆனால்  சுயமரியாதை  இயக்கம்  ஜஸ்டிஸ்  கட்சியை  சமய  சந்தர்ப்பம்  இல்லாமல்  ஆதரித்தும்,  நல்லவர்  யார்,  கெட்டவர்  யார்?  பொது  நலத்  தலைவர்  யார்,  சுயநலத்  தலைவர்  யார்?  என்பதைக்  கவனிக்காமலும்  எல்லாச்  சமயத்திலும்  அவர்களது  எல்லாக்  காரியத்தையும்  ஆதரித்து  வந்திருக்கிறது.

இவற்றின்  பயன்  என்னவாய்  முடிந்தது  என்றால்  காங்கிரசினால்  சுயமரியாதை  இயக்கத்துக்கு  எவ்வித  கெடுதலும்  செய்ய  முடியவில்லை  என்பதோடு  காங்கிரஸ்காரருக்கு  சுயமரியாதை  இயக்கத்தை  தழுவ  வேண்டும்  என்கின்ற  எண்ணம்  சில  காங்கிரஸ்காரர்களிடமாவது  வந்து  இருக்கிறது.

ஜஸ்டிஸ்  கட்சிக்கோ  பல  நன்மைகள்  செய்யக்  கூடிய  சந்தர்ப்பமிருந்தும்  அது  சுயமரியாதை  இயக்கத்துக்கு  யாதொரு  நன்மையும்  செய்யவில்லை  என்பதோடு,  சுயமரியாதை  இயக்கத்தை  ஒடுக்க  ஜஸ்டிஸ்  கட்சியார்  முயற்சிக்கிறார்கள்  என்று  பொது  ஜனங்கள்  நினைக்க  வேண்டிய  அளவுக்கும்  தைரியமாய்  நடந்து  கொண்டதான  பலன்  தான்  ஏற்பட்டது  என்பதை  வருத்தத்தோடு  தெரிவிக்க  வேண்டி  இருக்கிறது.

எப்படி  இருந்தபோதிலும்  சுயமரியாதைக்காரர்கள்  சமூக  வாழ்வு  விஷயத்திலும்,  பொருளாதார  விஷயத்திலும்  தாழ்த்தப்பட்டு  ஜீவனத்துக்குக்  கஷ்டப்படும்    இழி  மக்களாய்க்  கருதப்படும்  பார்ப்பனரல்லாதார்  முன்னேற்ற  விஷயத்தைத்  தங்களது  முக்கிய  நோக்கங்களில்  ஒன்றாய்க்  கொண்டிருப்பதை  மாற்றிக்  கொள்ள  முடியாது.

சுயமரியாதைக்காரர்கள்  பொருளாதார  விஷயத்தையே  முக்கியமாய்  கருதுவதா?  அல்லது  ஜாதி,  மத  மூடநம்பிக்கை  ஆகியவைகளின்  கொடுமையிலிருந்து  மக்களை  விடுவிக்கும்  வேலையையே  முக்கியமாய்  கருதுவதா  என்பதை  இப்போது  ஒரு  முக்கிய  பிரச்சினையாக  சில  சு.ம.  தோழர்கள்  கிளப்பி  விட்டிருக்கிறார்கள்.  இதை  சீக்கிரத்தில்  முடிவு  கட்டித்தான்  தீர  வேண்டும்.

சமுதாய  விஷயத்திலேயே  உழைப்பதென்றாலும்  ஜாதி,  மத  மூட  நம்பிக்கை  விஷயத்தில்  உழைப்பதானாலும்  பொருளாதாரப்  பிரச்சினை  அதிலிருந்து  விலகியதாகாது.  எவ்விதப்  பிரசாரமும்,  சட்டத்திற்கும்,  சமாதான  தன்மைக்கும்  கட்டுப்பட்டு  செய்வதென்பதுதான்  சுயமரியாதைக் காரர்கள்  கொள்கை  என்பதை  நாம்  மறுபடியும்  ஒருதரம்  எடுத்துக்காட்ட  வேண்டியதில்லை.

ஆனால்  சட்டத்திற்கு  உட்பட்டு  செய்யப்படும்  பிரசாரம்  என்பதில்  ஜாதி  மத  பொருளாதார  மூடநம்பிக்கைகளை  ஒழித்தலும்,  உயர்வு  தாழ்வை  அகற்றலுமான  கொள்கை  சேர்ந்ததல்ல  என்று  அரசாங்கத்தார்  கருதுவார்களானால்  அது  விஷயத்திலும்  நாம்  சுயமரியாதைக்காரர்  சீக்கிரத்தில்  ஒரு  முடிவு  செய்து  கொள்ள  வேண்டியவர்களாய்  இருக்கிறோம்.

எனவே  இந்த  விஷயங்கள்  எல்லாம்  சமீபத்தில்  நடைபெறப்  போகும்  ஜஸ்டிஸ்  கட்சி  மகாநாடும்,  காங்கிரஸ்  மகாநாடும்,  மாகாண  மகாநாடும்  நடந்தவுடன்  சுயமரியாதை  மகாநாடோ,  அல்லது  சுயமரியாதை  இயக்கத்  தொண்டர்கள்  மகாநாடோ  ஒன்று  கூட்டி  அதில்  முடிவு  செய்து  கொள்ள  வேண்டியவர்களாயிருப்பதால்  அது  வரையில்  எல்லாத்  துறையிலும்  நம்  தோழர்கள்  பொருத்து  இருக்க  வேண்டும்  என்றும்,  அதை  எதிர்பார்த்தே  நானும்  பொருத்து  இருக்கிறேன்  என்றும்  தெரிவித்துக்  கொள்ளுகின்றேன்.  சுயமரியாதைச்  சங்கத்  தலைவர்  என்கின்ற  முறையில்  தோழர்  கீ.ஓ.ஷண்முகம்  அவர்களது  அபிப்பிராயமும்  இதில்  கலந்து  இருக்கிறது  என்பதையும்  தெரிவித்துக்  கொள்ளுகிறேன்.

ஈ.வெ.ராமசாமி

பகுத்தறிவு  தலையங்கம்  16.09.1934

You may also like...