ஆந்திரர்    தமிழர்  என்று  பிரிக்கப்பார்ப்பது

 

ஜஸ்டிஸ்  கட்சியிலிருந்து  நம்பிக்கை  இல்லாத்  தீர்மானத்தின்  காரணமாய்  வெளியேறி  விட்ட  தோழர்  குமாரராஜா  அவர்களுக்காக  குமாரராஜா  அவர்களை  ஆதரிக்க  ஆசைப்பட்டவர்களோ  அல்லது  அவரிடம்  கூலிபெற்றவர்களோ  ஜஸ்டிஸ்  கட்சியைத்  தாக்க  இதுசமயம்  தங்களுக்கு  வேறு  எவ்வித  கதியும்  இல்லாமல்  நிற்கதியாயிருப்பதை  முன்னிட்டு  மிக  இழிவான  மார்க்கத்தைக்  கைக்கொள்ளத்  துணிந்து  விட்டார்கள்.  “”பசி  வந்திடப்  பத்தும்  பறந்துபோம்”  என்கின்ற  பழமொழிப்படி  ஏதாவது  ஒரு  விஷயத்தில்  பசி  ஏற்பட்டு  விட்டால்  மானம்,  குலம்,  கல்வி,  அறிவு  ஆகியவைகளை  அவர்களில்  பலர்  வந்த  விலைக்கு  விற்று  விட்டு  மிக  இழிவான  காரியங்களில்  சிலர்  இறங்கி  விட்டதானது  மிகவும்  வெறுக்கத்தக்கதும்,  பரிதாபப்படத்  தக்கதுமான  விஷயமாக  ஆகிவிட்டது.

தோழர்  குமாரராஜா  அவர்கள்  மீது  நம்பிக்கையில்லாத்  தீர்மானம்  கொண்டு  வருவதற்கு  ஆதாரமான  பிரஸ்தாப  விஷயம்  தோழர்  ஆர்.கே.ஷண்முகம்  அவர்களுடைய  இந்திய  சட்டசபைத்  தேர்தலில்  செட்டிநாடு  ராஜா  சர்.அண்ணாமலையார்  அவர்களும்,  அவர்களது  குமாரரான  முத்தையா  அவர்களும்  நம்பிக்கைக்  குறைவாய்  நடந்து கொண்டார்கள்  என்பது  காரணமாகும்.  இவ்விஷயம்  ஒரு  சாதாரணமான  விஷயமா  என்றால்  பார்ப்பனர்களைத்  தவிர  அவர்களது  கூலிகளைத்  தவிர  வேறு  எந்தத்  தமிழ்  மக்களும்  ஆம்  என்று  சொல்லத்  துணிய  மாட்டார்.

தோழர்  ஷண்முகம்  அவர்கள்  வியாபாரிகளுடைய  தொகுதியில்  நிற்பதற்கு  காரணம்  செட்டிநாடு  ராஜா  சர்,  அவர்களுடைய  வாக்குறுதியே  தவிர  வேறொன்றும்  அவ்வளவு  பிரதானமாய்  இருக்கவில்லை.  அந்த  வாக்குறுதியானது  செட்டிநாடு  ராஜா    குமாரராஜா  அவர்களால்  தோழர்  ஷண்முகத்துக்கு  மாத்திரமல்லாமல்  கட்சித்  தலைவரான  பொப்பிலி  ராஜா  அவர்களுக்கும்,  மற்றும்  கட்சிப்  பிரமுகர்கள்  பலருக்கும்  நிபந்தனை  இல்லாமல்  கொடுத்ததொரு  வாக்குறுதியாகும்.  அது  மாத்திரமல்லாமல்  அவ்வாக்குறுதியானது  தோழர்  ஷண்முகம்  அவர்களை  உறுதியாக  நம்பிக்கை  கொள்ளச்  செய்ததுடன்  செட்டிமார்  சமூகத்தைப்  பொருத்தவரை  ஓட்டுக்கு  வேறு  எவ்வித  பிரயத்தனமோ  முயற்சியோ  எடுத்துக்  கொள்வதற்கு  இல்லாமலும்,  சந்தேகமோ  கவலையோ  படுவதற்கு  இல்லாமலும்  செய்து  விட்டது  என்பதில்  சிறிதும்  விவகாரத்திற்கு  இடமில்லை.

ஆனால்  தோழர்  சர். ஷண்மும்  அவர்கள்  தேர்தல்  தோற்றுப்  போய்  விட்டது  என்பதும்  செட்டிநாட்டைப்  பொருத்தவரை  பகுதிக்கும்  குறைவான  ஓட்டுகளே  சர். ஷண்முகத்துக்குக்  கிடைத்திருக்கிறது  என்பதும்  செட்டிநாட்டு  ராஜாவும்,  அவரது  குமாரரவர்களும்  ஒப்புக்கொள்ளுகிறார்கள்.

இது  ஒருபுறமிருக்க  தேர்தலின்  முக்கிய  சமயத்தில்  குமாரராஜா  அவர்கள்  சென்னையிலேயே  இருந்து  விட்டதும்  ராஜா  சர்  அவர்கள்  தேவகோட்டையிலேயே  யிருந்து  விட்டதும்  அவர்களே  ஒப்புக்கொள்ளக்கூடிய  காரியங்களாகும்.

இந்நிலையில்  செட்டிநாடு  ராஜா  அவர்கள்  தேர்தலுக்காக  அவர்கள்  கொடுத்த  வாக்குறுதியை  நிறைவேற்ற  எடுத்துக்  கொண்ட  முயற்சிகளுக்கு  அனுகூலமாய்  ருஜுவிடும்  விஷயம்  இரண்டு  அதாவது

சர்.ஷண்முகம்  தேர்தலுக்கு  செட்டி  நாட்டைப்  பொருத்தவரை  ஏற்பட்ட  செலவை  தான்  ஏற்றுக்  கொண்டிருப்பதாகவும்  தனது  மறுமகனார்  அவர்களை  ஓட்டுச்  சேகரிக்க  அனுப்பினதாகவும்  சொல்லப்படும்  விஷயங்களேயாகும்.

மூன்றாவதோ  தோழர்  சர். ஷண்முகம்  அவர்கள்  செட்டி  நாடு  ராஜா  சர்  அவர்களுக்கும்,  அவரது  மருமகனாருக்கும்  எழுதிய  நன்றியறிதல்  கடிதங்களாகும்.

இவற்றைத்  தவிர  வேறு  வழியில்  தங்களது  வாக்குறுதியை  நிறைவேற்றியிருப்பதற்கு  எவ்வித  சாதகமான  சமாதானத்தையும்  சொல்லவேயில்லை.  சொன்னதாக  தெரியவும்  இல்லை.  ஆதலால்  சர்  ஷண்முகம்  அவர்களும்  கட்சித்  தலைவர்களும்  மற்ற  பிரமுகர்களும்  கொண்டுள்ள  “”வாக்குறுதிப்படி  நடந்து  கொள்ளாததால்  மேலால்  நம்புவதற்கு  முடியாமல்  இருக்கின்றது”  என்ற  எண்ணம்  ஏற்பட்டிருப்பதை  மாற்றிக்கொள்ள  முடியவில்லை.

இதற்காக  ஏதாவது  ஒரு  வழியில்  பொது  ஜனங்களை  உத்தேசித்தாவது  சமாதானம்  சொல்ல  முயர்ச்சிக்காமல்  ஆந்திரர்  தமிழர்  என்கின்ற  அடிப்படையின்  மேல்  கட்சி  கட்ட  ஆரம்பித்தால்  அது  யோக்கியமான  காரியமாகுமா?  என்பதையும்,  அது  வெற்றி  பெருமா  என்பதையும்  குமாரராஜா  அவர்களும்  ராஜா  சர்  அவர்களும்  ஆழ்ந்த  யோசனை  செய்து  அதை  கைவிட்டு  வேறு  முயற்சியில்  ஈடுபட  வேண்டுமாய்  வேண்டிக்கொள்ளுகிறோம்.

ராஜா  சர்  அவர்கள்  கட்சிக்காக  பணம்  கொடுத்திருப்பதை  அப்படியே  ஒப்புக்கொள்ளுவோம்  என்றாலும்  தோழர்  ராமசாமி  முதலியார்  அவர்கள்  தேர்தலில்  பொப்பிலி  ராஜாவுக்கு  தன்  கையில்  இருந்து  10000ரூபாயுக்கு  மேற்பட்ட  செலவு  ஏற்பட்டிருக்க  குமாரராஜா  அவர்கள்  2500   ரூபாய்  தான்  கொடுத்திருக்கிறார்கள்.

இது  அவரது  அறிக்கையிலேயே  விளங்குகின்றது.  இந்த  2500ரூ  ராஜா  சர்  அவர்களும்  குமாரராஜா  அவர்களும்  இந்தக்  கட்சிக்காக  இந்த  பெரிய  முக்கிய  பிரச்சினைக்கு  உதவியது  மாபெரும்  காரியம்  என்றே  வைத்துக்  கொண்டாலும்  இந்த  2500  விட  எத்தனையோ  பங்கு  அதிகமான  தொகையை  தோழர்  ராமசாமி  முதலியாரின்  எதிர்  அபேட்சகர்  விஷயத்திலும்  மனமுவந்து  ராஜா  சர்  உதவி  இருப்பதாக  சொல்லப்படுவதும்  அதனால்  பொப்பிலி  ராஜா  அவர்கள்  கொடுத்த  10000  ரூபாயும்  வேறு  சிலர்  கொடுத்த  ரூபாயும்  அனேகர்  உழைப்பும்  வீணாய்  போய்  விட்டது  என்று  பஹிரங்கமாக  சிறு  குழந்தைகள்  முதல்  சென்னையில்  சொல்லிக்  கொள்ளப்பட்டு  வரும்  விஷயத்திற்கு  என்ன  சமாதானம்  என்று  தெரிய  மக்கள்  ஆசைப்படமாட்டார்களா  என்று  கேட்கின்றோம்.  மொத்தத்தில்  ராஜா  சர்  அண்ணாமலையார்  குடும்பம்  பார்ப்பனரல்லாதார்  இயக்கத்துக்காகவோ  அல்லது  நன்மைக்காகவோ  என்று  இதுவரை  எவ்வளவு  ரூபாய்  உதவி  இருக்கிறார்கள்  என்று  அவர்கள்  சொல்லுவதை  அப்படியே  ஒப்புக்கொண்டாலும்  அதை  விட.  எத்தùன  10  மடங்கு  அதிகமாய்  கட்சிக்கு  விறோதமானவர்கள்  வஞ்சகமானவர்கள்  என்னப்பட்ட  எதிரிகளான  பார்ப்பனர்களுக்கும்  அவர்களது  சமூகத்துக்கும்  அவர்களது  இயக்கங்களுக்கும்  கொடுத்திருக் கிறார்கள்  கொடுத்து  வந்து  இருக்கிறார்கள்  கொடுத்தும்  வருகிறார்கள்  என்பதை  யோசித்துப்  பார்க்கும்படி  வேண்டிக்  கொள்ளுகின்றோம்.

பார்ப்பனர்கள்    பார்ப்பனர்  அல்லாதார்கள்  என்கின்ற  பிரிவுகளையே  மிக  இழிவானது  வெறுக்கத்  தக்கது  என்று  சொல்லி  வந்த  பார்ப்பனர்கள்  இன்று  ஜஸ்டிஸ்  கட்சியை  ஒழிப்பதற்காக  வெட்டி  புதைப்பதற்கு  ஆக  தைரியமாய்  ஆந்திரர்கள்தமிழர்கள்  என்கின்ற  பிரிவினையை  ஏற்படுத்தி  விட்டு  அந்த  சாக்கில்  பார்ப்பனரல்லாதார்  உணர்ச்சியும்,  முயற்சியும்  அழிக்கப்  பார்க்கின்றார்கள்  என்றால்  அது  அச்சமூகத்துக்கு  எவ்வளவு  இழிவானதும்  துணிச்சலானதுமான  காரியம்  என்று  யோசிக்கும்படி  வேண்டுகின்றோம்.

ஜஸ்டிஸ்  கட்சி  ஏற்பட்டபிறகு  தமிழர்களை  விட  ஆந்திரர்கள்  ஒன்றும்  அதிகமாக  சாதித்துக்  கொண்டதாகச்  சொல்லிவிட  முடியாது.

உதாரணமாக  ஆந்திரர்  என்கின்ற  முறையில்  பனகால்  ராஜாவுக்கு  பரம்பரை  ராஜா  பட்டம்  கிடைத்திருந்தால்  தமிழர்  என்கிற  முறையில்  செட்டிநாட்டு  ராஜாவுக்கு  பரம்பரை  ராஜா  பட்டம்  கிடைத்திருக்கிறது.  ஒரு  ஆந்திர  பனகால்  முதல்  மந்திரி  ஆனால்  ஒரு  தமிழர்  டாக்டர்  சுப்பராயன்  முதல்  மந்திரி  ஆனார்.

மந்திரிகளில்  ஆந்திராவைச்  சேர்ந்த  1.  ஒரு  பனகால்,  2.  ஒரு  சர்.பாத்ரோ,  3.  ஒரு  சர்.கே.வி.ரெட்டி,  4.  ஒரு  முனிசாமி  நாயுடு,  5.  ஒரு  பொப்பிலி  ஆகிய  ஐந்து  பேர்  மந்திரி  ஆகியிருந்தால்  தமிழர்களில்  1.  ஒரு  சுப்பராயலு  ரெட்டியார்,  2.  ஒரு  சர்.சிவஞானம்  பிள்ளை,  3.  ஒரு  டாக்டர்  சுப்பராயன்,  4.  ஒரு  முத்தைய  முதலியார்,  5.  ஒரு  சேதுரத்தினம்  ஐயர்,  6.  ஒரு  பி.டி.ராஜன்  7.  ஒரு  குமாரசாமி  ரெட்டியார்  ஆகிய  ஏழு  பேர்கள்  மந்திரிகளாகி  இருக்கிறார்கள்.

ஜஸ்டிஸ்  கட்சி  ஏற்பட்ட  பிறகு  நிர்வாக  சபை  கவுன்சில்  மெம்பர்களில்  கூட  ஆந்திரர்  என்கின்ற  முறையில்  ஒரு  சர்.கே.வி. ரெட்டியார்  லா  மெம்பராயிருந்தால்  தமிழர்களில்  1.  ஒரு  கே. சீனிவாசய்யங்கார்,     2.  ஒரு  சர். உஸ்மான்,  3.  ஒரு  சர்.சி.பி.ராமசாமி  ஐயர், 4.  ஒரு  கே.ஆர். வெங்கிட்டராம  சாஸ்திரி,  5.  ஒரு  கிருஷ்ணநாயர்,  6.  ஒரு  பன்னீர்செல்வம்  ஆக  6  பேர்கள்  தமிழர்கள்  நிர்வாக  சபை  மெம்பராயிருக்கிறார்கள்.

ஹைக்கோர்ட்  ஜட்ஜிகளை  எடுத்துக்  கொண்டாலும்  சரி  சர்விஸ்  கமிஷனை  எடுத்துக்  கொண்டாலும்  சரி  மற்றும்  சர்க்காரால்  நியமிக்கப்பட்ட  சகல  பதவிகள்  உத்தியோகங்கள்  ஆகியவற்றில்  தமிழர்களை  எந்தத்  துறையிலும்  ஆந்திரக்காரர்கள்  மிஞ்சிவிட  வில்லை  என்பதை  எவ்வளவு  மூடனும்  சுலபமாய்  உணர  முடியும்.

அன்றியும்  ஜஸ்டிஸ்  கட்சியின்   சார்பாய்  இதுவரை  ஒரு  ஆந்திரர்  கூட  கார்பரேஷன்  பிரசிடெண்டாகவோ  மேயராகவோ  ஆனதில்லை.

மேலும்  இன்று  எந்த  தமிழனாவது  மனம்  துணிந்து  தைரியமாய்  தோழர்  பொப்பிலிராஜா  அவர்கள்  ஆந்திராக்காரர்  என்றாலும்  இந்த  மந்திரி  பதவியினால்  பணம்  சம்பாதிக்கவோ,  அல்லது  தனது  குடும்பத்துக்கோ,  எஸ்டேட்டுக்கோ,  தனது  சொந்தத்துக்கோ,  ஏதாவது  அனுகூலமோ  நன்மையோ  செய்து  கொள்ளவோ  வந்திருக்கிறார்  என்று  சொல்லக்கூடுமா  என்று  கேட்கின்றோம்.

சுயமரியாதைக்  கொள்கையைப்  பொருத்தவரையில்  கூட  டாக்டர்  சுப்பராயன்  அவர்கள்  ஒன்று  ராஜா  பொப்பிலி  இரண்டு  ஆகிய  இரண்டு  மந்திரிகள்  தான்  அவ்வியக்கத்தில்  கலந்து  கொண்டதை  தெரிவிக்கவோ  அல்லது  சில  கொள்கைகளையாவது  ஒப்புக்  கொள்ளுகின்றோம்  என்று  சொல்லவோ  தைரியமாய்  முன்வந்தார்களே  ஒழிய  மற்ற  எந்த  மந்திரியாவது  ராஜாவாவது  வாயினால்  உச்சரிக்கவாவது  இணங்கினார்களா  என்று  கேட்கின்றோம்.

கடப்பாரையை  விழுங்கி  விட்டு  அதை  ஜீரணம்  செய்ய  சுக்குக்  கஷாயம்  சாப்பிடுவது  போல்  மகத்தான  கெடுதியும்,  துரோகமும்  ஏற்பட்டு  விட்டது  என்று  குற்றம்  சாட்ட  வந்தால்  அதற்கு  சரியான  சமாதானம்  சொல்லுவதை  விட்டுவிட்டு  ஆந்திரர்  தமிழர்  என்கின்ற  கலகத்தையுண்டாக்கி  விட்டு  அதை  அடக்கி  விடலாம்  என்று  பார்ப்பது  காட்டு  வெள்ளத்தைத்  தடுப்பதற்கு  முரத்தை  ஏந்திக்கொண்டு  எதிரே  நின்றதுபோல  ஆகுமே  தவிர  வேறு  ஒன்றும்  இல்லை.

இதற்கு  முன்  கூட  ஒன்று  இரண்டு  தடவை  இந்த  முயற்சி  பார்ப்பனர்களால்  கிளப்பி  விடப்பட்டு  கடைசியாக  பார்ப்பனர்கள்  முழுத்  தோல்வி  அடைந்தார்கள்.

அதாவது  குருகுல  போராட்டம்  என்பதில்  சேரமாதேவி  ஆச்சிரமத்தில்  பார்ப்பனப்  பிள்ளைகளுக்கு  உள்ளே  சாப்பாடும்  பார்ப்பனரல்லாதார்  பிள்ளைகளுக்கு  வெளியே  வைத்துச்  சாப்பாடும்  போட்டு  பொதுப்  பணத்தில்  நடத்தி  வந்த  குரு  குல  ஆச்சிரமத்தைப்  பற்றி  தோழர்கள்  வரதராஜுலுவும்,  ஈ.வெ.ராமசாமியும்  கிளர்ச்சி  செய்து  வந்த  காலத்தில்  “”தமிழ்  நாட்டு  விஷயத்தைப்  பற்றி  ஆந்திர  தேசத்தாரான  ஒரு  நாயுடுவும்,  கர்நாடக  தேசத்தாரான  ஒரு  நாயக்கரும்  கிளர்ச்சி  செய்வது  நமக்கு  வெட்கமாக  இல்லையா?  ஆதலால்  அவர்களது  கிளர்ச்சியை  ஆதரிக்கக்  கூடாது”  என்று  காலஞ்சென்ற  தேச  பக்தர்  வி.வி.எஸ்.அய்யர்  அவர்களே  கிளப்பி  விட்டார்கள்.

காங்கிரஸ்  தொண்டர்கள்  சிலர்  இக்கிளர்ச்சிக்கு  உதவியும்  செய்தார்கள்.  இவ்விஷயம்  தோழர்  திரு.வி. கல்யாணசுந்திர  முதலியார்  அவர்களுக்கு  நன்றாய்த்  தெரியும்  அப்படி  இருந்தும்  குருகுலம்  அடியோடு  அழிந்ததே  தவிர  ஆந்திரர்  தமிழர்  பிரச்னை  சிறிது  கூட  பயன்படவில்லை.  அது  போலவே  மற்றொரு  சமயமும்  காங்கிரஸ்  கமிட்டியில்  கிளப்பப்பட்டு  தோழர்  திரு.வி. கல்யாணசுந்திர  முதலியார்  அவர்களே  அதைக்  கண்டித்து  வெற்றி  பெற்றார்.

ஆகையால்  தமிழ்  மக்கள்  என்று  தங்களை  சொல்லிக்  கொள்கிறவர்கள்  இம்மாதிரியான  பயனற்றதும்  விஷமத்தனமானதுமான  ஆந்திரர்  தமிழர்  என்ற  தேசாபிமானப்  புரட்டின்  மேல்  தங்கள்  வெற்றிக்கு  வழி  தேடி  அவமானமடையாமல்  பார்ப்பனர்  அல்லாதார்  என்கின்ற  விஷயத்திலேயே  கண்ணும்  கருத்துமாய்  இருந்து  அதில்  வெற்றி  பெற  உழைக்க  வேண்டுமென்று  எச்சரிக்கை  செய்கின்றோம்.

பகுத்தறிவு  கட்டுரை  16.12.1934

You may also like...