ஜஸ்டிஸ் கட்சியின் புனருத்தாரணம்
ஜஸ்டிஸ் கட்சியில் சட்டசபை நடவடிக்கைகளைப் பொருத்தவரை கவனிப்பதற்கு என்று கவுன்சில் பார்ட்டி என்பதாக ஒரு பிரிவு இருந்து வரும் விஷயம் யாவரும் அறிந்ததாகும். அந்தப் பிரிவுக்கு முக்கிய கொரடாவாக அதாவது சட்டசபையைப் பொருத்தவரையில் மெம்பர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் கட்சி சார்பாய் தெரிவிப்பதற்காக தெரிந்தெடுக்கப்பட்டவரை கொரடா என்று சொல்லுவது. அந்த ஸ்தானத்தில் தோழர் குமாரராஜா முத்தய்யா அவர்கள் இருந்து வருகிறார்.
சமீபத்தில் இந்திய சட்டசபைக்கு நடந்த தேர்தல்கள் விஷயமாய் தோழர் ஷண்முகம் அவர்களுக்கும் தோழர் ராமசாமி முதலியார் அவர்களுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய காரணம், தோழர் குமாரராஜா முத்தய்யா செட்டியார் அவர்கள் சரியானபடி நடந்து கொள்ளாததே என்ற ஒரு அபிப்பிராயம் கட்சிப் பிரமுகர்களுக்குள் ஏற்பட்டுவிட்டது.
மேற்படி தோல்விகளானது தமிழ் நாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் நிலைமையை பாதிக்கக் கூடியதாய் போய்விட்டதால், அந்த வருத்தத்தை உத்தேசித்தும் மேலால் இந்தப்படி நேராமல் இருக்க வேண்டும் என்பதை உத்தேசித்தும் சில முன் ஜாக்கிரதையான நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாய்ப் போய்விட்டது.
ஆனபோதிலும், கட்சிப் பிரமுகர்களில் ஒருவரைப் பற்றியே இந்தப்படி நினைக்க வேண்டி ஏற்பட்டதானது சரியாய் இருந்தாலும், தப்பாய் இருந்தாலும் கட்சிக்கு மிகவும் நெருக்கடியான நிலைமை என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
ஜஸ்டிஸ் கட்சிப் பிரமுகர்கள் நெல்லூர் மகாநாட்டில் நடந்து கொண்ட போக்கானது கட்சியை எவ்வளவு கேவல நிலைக்குக் கொண்டு வர வேண்டுமோ அவ்வளவு கேவல நிலைக்குக் கொண்டு போய்விட்டது.
அதன் பிறகு தஞ்சாவூர் மகாநாடானது உலகமே சிறிக்கும் படியான நிலைமைக்குக் கொண்டு வந்துவிட்டது என்றாலும், பொப்பிலி ராஜா அவர்கள் கட்சித்தலைவர் ஸ்தானத்தை ஏற்றுக் கொண்டதின் பயனாய் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி நான்கு பேர் மதிக்கவோ அதைப் பற்றி நினைக்கவோ ஆகிய நிலைமையாவது இருந்து வந்தது.
ஆனால் இப்போது இந்திய சட்டசபைத் தேர்தல்களின் முடிவின் பயனாய் மறுபடியும் கேவல நிலைமைக்குப் போய்விடுமோ என்கின்ற பயமும் அதைரியமும் கட்சியில் அனுதாபமுடைய சுயநலமில்லாத ஒவ்வொருவருடைய மனதிலும் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையானது கட்சியின் பிரவி எதிரிகளாகிய பார்ப்பனர்களுக்கு மிகுந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தி விட்டது.
ஆகவே இந்த சமயத்தில் கட்சிப் பிரமுகர்கள் ஒன்று கூடி ஏதாவது ஒரு பந்தோபஸ்தானதும் நிர்மாணமானதுமான காரியத்தைச் செய்ய வேண்டியது மிகவும் அவசியமே யாகும். அதைப் பற்றி நமக்கும் பல தீர்மானங்களும் வியாசங்களும் வந்திருக்கின்றன.
தோழர் குமாரராஜா முத்தய்யா அவர்களும் ராஜா சர் அண்ணாமலை அவர்களும் கட்சிக்காக தாராளமாக பணம் உதவியும், செலவு செய்தும் இருப்பார்கள் என்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அதற்கு தகுந்ததற்கும் மேலான பலன்களை அவர்களும் அடைந்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் மறுக்கவில்லை.
யாதொரு சுயநலத்தையும் கருதாமல் கட்சிக்கு வேலை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமாகும். கண்டுபிடிக்கப்பட்டாலும் கட்சி “”பிரமுகர்கள்” அதை ஒப்புக் கொள்ளவுமாட்டார்கள். ஆதலால் அதைப் பற்றி பேசுவதில் பயனில்லை.
இப்போது 11ந் தேதியில் நடக்கப்போகும் கவுன்சில் பார்ட்டி மீட்டிங்கினால் கக்ஷியில் பிளவு ஏற்படாமல் படிக்கும் இனியும் இந்த மாதிரியான காரியங்கள் நிகழாமல் படிக்கும் இருக்கும் படியான ஒரு முடிவுக்கு வரவேண்டியது மிகவும் அவசியமான காரியமாகும்.
அதுவே ராஜ தந்திரமுமாகும். தோழர் பனக்கால் அரசர் இப்போது இருப்பாரேயானால் இந்த மாதிரி ஒரு மீட்டிங்கு போடாமலே இரண்டாம் பேருக்கு தெரியாமல் என்ன என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்துவிடுவார். ஆனால் இப்போது வெளிப்படையாகவே எல்லாம் செய்ய வேண்டியதாகி விட்டது. கட்சிகள் ஏற்பட்ட இந்த நிலையானது இன்று பார்ப்பனருக்கு மாத்திரமல்லாமல் அவர்கள் மூதாதைகளான அரசாங்கத்துக்கும் கொண்டாட்டமாய் விடும். ஏனெனில் இப்பிளவால் அரசாங்கம் ஜஸ்டிஸ் கக்ஷியை தங்கள் கை ஆயுதமாக உபயோகித்துக் கொள்ள கருதிவிடுவார்கள். எப்படி என்றால் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமல்லவா?
ஆகையால் சம ஒழுங்கு விதி சம்பந்தமான முறையில் இல்லாமல் தலைவர் தன் சொந்த முறையில் ஒரு கமிட்டியை ஏற்படுத்தி அவர்கள் மூலம் உண்மையைக் கண்டுபிடித்து தகுதி அற்றவர்களிடம் ராஜீனாமா பெற்றுக் கொள்ளுவது நல்ல காரியமாகுமென்று நமக்குத் தோன்றுகின்றது.
அப்படிக்கில்லையானால், ஜஸ்டிஸ் கக்ஷி கவுன்சில் பார்ட்டி மீட்டிங்கு மாத்திரமல்லாமல் தென் இந்திய நல உரிமைச் சங்க நிர்வாக சபை மீட்டிங்கும், ஜஸ்டிஸ் கக்ஷி கார்ப்பரேஷன் (முனிசிபல் ) பார்ட்டி மீட்டிங்கும் இப்படியே இன்னும் பலதுகள் போட வேண்டி வரும். பிறகு அவற்றில் இருந்து கக்ஷிகள் முளைக்கும். இந்த நிலையானது கொள்கை இல்லாமலும் கக்ஷிக்கு யாதொரு பயனும் இல்லாமலும், கட்சியின் பெயரைக் கொண்டும் பிழைத்து வருகின்ற கூட்டத்துக்கு ஒரு பெரிய வெள்ளாமையாக முடிந்து அவர்களது தொல்லைக்கும் விஷமத்துக்கும் கட்சி ஆளாக வேண்டி வரும் என்று பயப்படுகின்றோம்.
ஜஸ்டிஸ் கட்சியானது பணக்காரர் ஜமீன்தார்கள் ஆகியவர்கள் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதில் இந்த மாகாணத்தில் உள்ள எந்த ஜஸ்டிஸ் கட்சியாரையும் விட நாம் முன்னணியிலேயே இருக்கிறோம்.
இன்றைய நிலைமையைக் கூட அதற்கு அனுகூலமாகத்தான் நாம் கொள்ளுகின்றோம்.
ஆனால் சொந்த குரோதங்களுக்கும், பிளவுகளுக்கும், வீண் தொல்லைகளுக்கும் இடமில்லாமல் எவ்வளவு செய்து கொள்ள வேண்டுமோ அவற்றை செய்து கொள்ள வேண்டியது புத்திசாலித் தனமாகும்.
எதற்கும் தென்னிந்திய நலவுரிமைச் சங்க நிர்வாக மீட்டிங் ஒன்று முதலில் கூட்டி அதிலிருந்து ஒரு முடிவை முதலில் செய்து கொள்வது மிக்க பலந் தருவதாகும் என்று அபிப்பிராயப் படுகின்றோம்.
இது சம்மந்தமாக வந்த பல பல தீர்மானங்களையும் சேதிகளையும் வெளியிடாமல் அவர்களுக்கெல்லாம் நமது அபிப்பிராயத்தை தெரிவித்து விடவே இதை எழுதினோம். ஆதலால் அவ்விஷயங்களை பிரசுரிக்காததற்காக நேயர்கள் மன்னிப்பார்களாக.
பகுத்தறிவு கட்டுரை 09.12.1934