இந்திய சட்டசபைத் தேர்தலும் கீ.ஓ.கு.ம்
இப்போது அரசியல் உலகில் இந்திய சட்டசபைத் தேர்தல் பேச்சே எங்கு பார்த்தாலும் பிரமாதமாகப் பேசிக் கொள்ளப்படுகின்றது. கூடிய சீக்கிரத்தில் இந்திய சட்டசபை கலைக்கப்பட்டு இவ்வருஷத்திலேயே புதிய தேர்தல் நடைபெறப் போகின்றது யாவரும் அறிந்ததே.
இந்திய சட்டசபை ஏற்பட்டு சமீபகாலம் வரை அதாவது சுய மரியாதை இயக்கம் தோன்றும் வரை, நமது மாகாணத்தில் அது (இந்திய சட்டசபை) பார்ப்பனர்களுக்கே ஏகபோக மான்யமாயிருந்தது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் என்கின்ற சமூகம் மனிதத் தன்மையுடன் இல்லையென்றும், அறிவிலும் ஆற்றலிலும் மிக பிற்பட்டவர்கள் என்றும் இந்தியா முழுவதும் விஷமப்பிரசாரம் செய்வதற்கு பார்ப்பனர்களுக்கு மிக அனுகூலமுமிருந்து வந்தது. அதற்கேற்றார்ப் போல் இந்திய பத்திரிகை உலகமும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு வகையில் பார்ப்பன ஆதிக்கத்தில் இருப்பதால் பத்திரிகைகள் மூலமும் அவ்விஷமப் பிரசாரம் வெற்றி பெற அனுகூலமேற்பட்டது.
இப்போது தோழர்கள் சர்.ஆர்.கே. ஷண்முகம், ஏ. ராமசாமி முதலியார் முதலியவர்கள் இந்திய சட்டசபைக்குப் போக ஏற்பட்டதால் தென்னிந்தியப் பார்ப்பனரல்லாத மக்களின் தன்மை இன்னதென விளங்க இடமேற்பட்டதுடன் பார்ப்பன மக்களின் நம்மை நடத்தும் யோக்கியதையும் ஒருவாறு வெளியாக இடமேற்பட்டது.
இவர்களது (கீ.ஓ.கு அ.கீ.) கொள்கை என்ன? இவர்களால் மனித சமூகத்திற்கு ஏற்பட்ட நன்மை என்ன? என்ற விவகாரத்தில் இப்போது நாம் பிரவேசிக்கவில்லை என்றாலும், தென்னிந்திய பார்ப்பனர்கள் தேசபக்தர்கள் தேசாபிமானிகள் அரசியல் நிபுணர்கள் என்று சொல்லக்கூடிய அவர்களுடைய யோக்கியதைக்கும் நாணயத்திற்கும் திறமைக்கும் இவர்கள் இளைத்தவர்கள் அல்ல என்பதை கோபுரத்தின் மீது இருந்து கூறுவோம். இத்துடன் மற்றபடி இதுவரை இந்திய சட்டசபைக்கு பார்ப்பனர்கள் நமது பிரதிநிதிகளாய் போய் உட்கார்ந்து சாதித்ததை விட இவர்கள் ஒன்றும் குறைவாய் சாதித்துவிடவில்லை என்றும் பார்ப்பனர்களால் நமது மக்களுக்கு ஏற்பட்ட கெடுதியைவிட இவர்களால் ஒன்றும் அதிகமாய் ஏற்பட்டுவிடவில்லை என்றும் உறுதியாய் புள்ளி விவரங்களோடு எடுத்துக் காட்டுவோம்.
ஆனால் சமீபகாலமாக இந்திய சட்டசபையில் சர். ஷண்முகம் அவர்களின் அறிவு, ராஜதந்திரம், பொருளாதார நிபுணத்துவம் ஆகிய காரியங்கள் இந்தியா முற்றும் உணர்ந்து உலகம் அறிய ஆரம்பித்ததும், தோழர் ராமசாமி முதலியாரின் பேச்சும் விவகார ஞானமும் இந்தியா முழுவதும் தெரிய ஆரம்பித்ததும் தமிழ்நாட்டு பார்ப்பனர்களுடைய வயிறு பெட்ரோலில் நெருப்பு பிடித்ததுபோல் எறியத் துடங்கி விட்டதால் எப்படியாவது வரப்போகும் தேர்தலில் இவர்களை தோற்கடிக்க செய்ய வேண்டும் என்கின்ற எண்ணம் நமது பார்ப்பனர்களுக்கு இப்போது ஏற்பட்டு எங்கு பார்த்தாலும் அதே பேச்சாய் இருந்து வருகிறது. கோமணம் கட்டத் தெரியாத பார்ப்பனக் குழந்தை முதல், அய்யர்வாள், சாஸ்திரியார், ஆச்சாரியார் என்று சொல்லப்பட்ட பிரமுகர்கள் வரை “”எப்படி ஷண்முகத்தை தோற்கடிப்பது? எப்படி அவருக்கு இந்திய சட்டசபைத் தலைமைப் பதவி இல்லாமல் செய்வது” என்பதுதான் இப்பொழுது பெரிய கவலையாய் இருப்பதுடன் அதற்காக யாகம், ஜபம், தபம், மந்திரம் முதலியவை ஒவ்வொரு வீட்டிலும், திண்ணையிலும், பள்ளியரையிலும், கோர்ட்டுகளிலும், கிளப்புகளிலும் நடந்த வண்ணமாகவே இருக்கின்றன.
தோழர் ராமசாமி முதலியாரிடம் கூட பார்ப்பனர்களுக்கு அவ்வளவு அதிகமான ஆத்திரம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவரை சமயத்தில் சரிப்படுத்திக் கொள்ளலாம் அல்லது பயப்படுத்திவிடலாம் என்கின்ற நம்பிக்கை அவர்களுக்குண்டு. ஏனெனில் அவரும் சில சமயங்களில், தீண்டாமை, கோயில் பிரவேசம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் முதலிய பல விஷயங்களில் சமயம் போல் நடந்து கொண்ட வரானதால் அவரைப் பற்றி கூட அவர்களுக்கு அதிக கவலையில்லை. ஆனால், தோழர் ஷண்முகம் விஷயத்தில் அதுவும் அவர் இந்திய சட்டசபைத் தலைவர் ஆன பிறகு, அவரைப் பற்றி இமயமலைக்கும் கன்னியாகுமரிக்குமாக ஒரே தொடர்பாய் விஷமப் பிரசாரம் நடந்து வருகின்றது.
இப்போது பாட்னாவில் ஏற்படுத்தப்பட்ட சட்டசபை விவகார போர்டின் முக்கியமான வேலையே எப்படியாவது சர்.ஆர்.கே. ஷண்முகத்தை தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதும், எப்படியாவது அவர் அதற்குத் தலைவராகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுமேயாகும். அதற்காகவே இப்பொழுது காங்கிரசும் காங்கிரஸ் பக்தர்களும் காங்கிரசுக்காக சிறை சென்று “”தேச பக்தர்களான தியாகிகளும்” வேலை செய்யப்போகிறார்கள் என்பதும் உறுதியான காரியம். சில பார்ப்பனரல்லாதாரும் புத்தி இல்லாமலோ அல்லது பார்ப்பனர்களுக்கு பயந்தோ, பொறாமையாலோ கூடவே கோவிந்தா போடுகிறார்கள்.
இப்படிப்பட்ட சமயத்தில் தோழர் சண்முகம் இன்னமும் தான் என்ன செய்யப்போகிறார், எந்த தொகுதிக்கு நிற்கப் போகின்றார் என்கின்ற விஷயத்தை “”சிதம்பர இரகசியம்” போல் வைத்திருப்பது நல்லதல்ல என்பதே நமதபிப்பிராயம்.
இரண்டு தொகுதிகள் அவருக்கு முழு ஆதரவையும் அளிக்கத் தயாராய் இருக்கின்றன என்றே கருதுகின்றோம். அதாவது ஒன்று கோவை, சேலம், வடஆற்காடு ஆகிய ஜில்லாத் தொகுதி, மற்றொன்று இந்திய வியாபாரிகள் சங்கத் தொகுதி. இந்த இரண்டிலும் பூரண வெற்றியை இப்பொழுதே நிச்சயித்துவிடலாம். ஆனாலும் தோழர் ஷண்முகம் தனக்குள்ள பொருளாதார நிபுணத்துவம் வியாபார நிபுணத்துவம் ஆகிய இரண்டையும் உத்தேசித்து இந்திய வியாபாரிகள் பிரதிநிதியாக அங்கம் பெறுவதே சிலாக்கியமானதென்று நாம் கருதுகின்றோம்.
ஏனென்றால் தோழர் ஷண்முகம் அவர்கள் விஷயத்திலும் ரிசர்வு பாங்கி வியாபார விஷயத்திலும் தனது அபிப்பிராயங்களைச் சொல்லவும் அத்துறைகளில் பாடுபடவும் தனக்குள்ள உரிமையை வலியுறுத்த பயன்படும் என்பதோடு தென்இந்திய வியாபாரிகளும் தோழர் ஷண்முகத்தைத் தங்கள் பிரதிநிதியாய் அடையும் கௌரவத்தை பெற இரண்டு கையையும் நீட்டி வரவேற்கக் காத்திருக்கிறார்கள்.
ஆதலால் இவ்வாரத்திலேயே அவரது அபேக்ஷகத்துவத்தையும் இன்ன தொகுதிக்கு என்பதையும் வெளிப்படுத்திவிட வேண்டுமாய் விரும்புகிறோம்.
இதே சமயத்தில் தோழர் ஷண்முகம் அவர்கள் நமது சுயமரியாதை இயக்க சமதர்மத் திட்டத்திற்கு ஆதரவு கூறி இருக்கிறார் என்பதையும் இவ்விஷயத்தில் அரசியல் விஷயத்தை விட சமூகஇயல் அதாவது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் விஷயத்தை முக்கியமாய் கருதி தோழர் ஷண்முகம் அவர்களை நாம் விரும்புகிறோம் என்பதையும், பார்ப்பனரல்லாத மக்கள் யாவரும் இதை உணர்ந்து அவருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
புரட்சி துணைத் தலையங்கம் 27.05.1934