உண்மைத் தோழர் மறைந்தார்
சுயமரியாதை இயக்கத்தின் உண்மைத் தோழர் எஸ். ராமச்சந்திரன் அவர்கள் 26-2-33 ந் தேதி மறைந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் நாம் திடுக்கிட்டுப் போய் விட்டோம். நாம் மாத்திரமல்ல, சுயமரியாதை இயக்கத்தில் கடுகளவு ஆர்வமுள்ள எவரும் இச்சேதி கேட்டவுடன் திடுக் கிட்டிருப்பார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. தோழர் ராமச்சந்திரனை இழந்தது சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரு நஷ்டமேயாகும். தோழர் ராமச்சந்திரனைப் போன்ற உறுதியான உள்ளமும், எதற்கும் துணிந்த தீரமும் மனதில் உள்ளதை சிறிதும் எவ்விதி தாட்சண்யத் திற்கும் பின் வாங்காமல் வெளியிடும் துணிவும் சாதாரணமாக வெகு மக்களிடம் காண்பது என்பது மிக மிக அரிதேயாகும். பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்காக என்ற கிளர்ச்சி சுயமரியாதை இயக்கத்தில் வீறு கொண்டிருந்த காலத்தில் தோழர் ராமச்சந்திரன் அவர்கள் தாலூக்கா போர்டு முதலிய பல ஸ்தாபனங்களில் தலைவராய் இருந்த சமயம் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது “இனி இந்தக் கையால் ஒரு பார்ப்பனருக்காவது உத்தி யோகம் கொடுப்பதில்லை” என்று ஒரு உறுதிமொழி கூறி அதை ஒரு விரதமாய் கொண்டிருப்பதாக விளம்பரப்படுத்தினார். மற்றம் அவரது திருநெல்வேலி சு.ம. மகாநாட்டின் தலைமை உரையில் (1929-ம் வருஷத்தில்) வருங்காலத்தில் சுயமரியாதை இயக்கத்தால் ஏற்படும் பலன் இன்னின்னவை என்று குறிப் பிட்ட சயமத்தில்,
“உலகம் எல்லாம் வழங்கப்படும் ஒரு பாஷை ஏற்படும்.
உலகம் எல்லாம் ஒப்புக்கொள்ளும் ஒரு கொள்கை ஏற்படும்.
உலகம் எல்லாம் ஒரு ஐக்கிய ஆட்சி நாடாகும்.
உலகத்திலுள்ள சொத்துக்கள் பூமிகள் எல்லாம் உலகத்திலுள்ள மக்களுக்குச் சொந்தமாகும்.
வேலை செய்யாத சோம்பேரிகள் ஒருவர் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். குற்றங்கள் குறைந்து விடும் நோய்கள் அகன்று விடும். மனித ஆயுள் இரட்டித்து விடும். மக்கள் வாழ்வில் உள்ள கவலைகள், பொறாமை கள் நீங்கி ஒருவருக்கொருவர் அன்பும் நட்பும் கூட்டுறவு முயற்சிகளும் தாண்டாவமாடுவதுடன், மக்கள் சதா சந்தோஷத்துடன் இருப்பார்கள் என்று கர்ஜித்ததுடன், தீண்டாமை என்பது மதக்கொள்கையைச் சேர்ந்தது என்பது முழுப்புரட்டென்றும் அது முழுதும் பொருளாதார சூழ்ச்சியின் அடிப் படையைக் கொண்டது” என்றும் பேசி இருக்கிறார்.
இந்த தத்துவங்களில் ஒரு சிறிதும் மாற்றமில்லாமல் இன்று சு. ம. இயக்கம் வேலை செய்து வருவதைப் பார்ப்பவர்கள் இவ்வியக்கம் யாதொரு புதிய வழிகளிலும் செல்லவில்லை என்பதை உணர்வார்கள். தோழர் ராமச்சந்திரன் நல்ல வாக்கு விசாலமுள்ள வக்கீலாகவும் தகுந்த வரும்படியும் மேலும் மேலும் பெரிய நிலைக்கு வரக்கூடிய நிலையும் சௌகரியமும் இருந்தும் அவைகளை லட்சியம் செய்யாமல் இயக்கத்திலேயே கவலைக் கொண்டு மற்றவைகளை அலட்சியம் செய்து வந்த உண்மைச் சுயமரியாதை வீரரேயாவர். இவரது வயது 48, அதாவது 1884-ல் பிறந்தவர் இவ்விளம் வயதில் இப்படிப்பட்ட உற்ற தோழரை இழக்க நேர்ந்தமைக்கு யாரே வருந் தாமல் இருக்க முடியும்? இவருக்கு 4-ஆண் மக்களும் 3- பெண்மக்களும் உண்டு. இவரது வாழ்க்கைத் துணைவியார் ராமனாதபுரம் ஜில்லா போர்டு அங்கத்தவராகவும் சிவகங்கை தாலூகா போர்டு அங்கத்தவராகவும் தகுந்த கல்வி ஞானமுள்ளவராகவும் இருக்கின்றார்கள்.
எனவே இவ்வம்மையார் இயற்கையை மதித்து துணைவரின் பிரிவை சடுதியில் மறந்து அவரது சுயமரியாதை இயக்கத்தில் அவரது கொள்கை களையே கொண்டு உலக விடுதலைக்கும் உலக இன்பத்துக்கும் உழைக்க முன்வருவார்கள் என்றே ஆசைப்படுகின்றோம்.
குடி அரசு – இரங்கலுரை – 05.03.1933