தோழர்  வரதராஜுலு

 

தோழர்  வரதராஜுலு  அவர்கள்  தோற்றுவிட்டார்  என்பதில் நாம்  சிறிதும்  ஆ÷க்ஷபிக்காமலும்   ஆ÷க்ஷபிப்பதும்  முடியாத   காரியம்  என்றும்  பலமான  தோல்விதான்  என்பதையும்  ஒப்புக்  கொள்ளுகிறோம். அவருக்கு  ஜஸ்டிஸ்  கட்சித்  தலைவர்  உள்பட  அநேகர்  ஆதரவளித்தார்கள்  என்றாலும்  தோல்வியே  ஏற்பட்டது  என்பது  உண்மைதான்.

ஆனால்  தோழர்  ஷண்முகம்  அவர்கள்  தேர்தலுக்கும்  தோழர்  எ.ராமசாமி  முதலியார்  அவர்கள்   தேர்தலுக்கும்  நடந்த  காரியங்கள்  தோழர்  வரதராஜுலு  நாயுடு  அவர்கள்  தேர்தலுக்கும்  நடந்ததா  இல்லையா  என்றால்  நடந்தது  என்றுதான்  சொல்ல வேண்டும்.  அதுவும்  நன்றாய்  நடந்தது  என்றுதான் சொல்ல வேண்டும்.  தோழர்  வரதராஜுலு   அவர்கள்  தேர்தலுக்கு  நிற்கும்  விஷயத்தைப்  பற்றி  தானே  முடிவு  செய்து  கொள்ளாமல்  தன்னையொத்த  இரண்டொரு  பார்ப்பனரல்லாத  காங்கிரஸ்வாதி,  தேசபக்தர்கள்  என்று  சொல்லப்படுகின்றவர்களை  கலந்து  ஆலோசித்தார்.  அதில்  சிலர்  அவரை  நிற்கச்   சொல்லி கட்டாயப்படுத்தியதோடு  தாங்கள்  ஊர்  ஊராய்,  கிராமம்  கிராமமாய்  தன்  சொந்தத்தில்  போய்க்கூட  நாயுடுவுக்காக  பிரசாரம்  செய்வதாய்  ஒப்புக்  கொண்டு   அவருக்கு  உற்சாகமூட்டினார்கள்.  இதை  நம்பியே  தோழர்  நாயுடு  அரைகுறையாய்  இருந்த  மனதை  கெட்டிப்படுத்திக் கொண்டார்.  அதோடு  காங்கிரஸ்  தலைவர்கள்  என்னும்  தென்னாட்டுப்  பார்ப்பனர்களை  தாராளமாக  எதிர்ப்பதாகவும்,  அவர்களுடைய  சூட்சிகளை  வெளிப்படுத்துவதாகவும்  ஒப்புக் கொண்டார்கள்.  கடைசியாக  வெற்றி  தோல்வியைப்  பற்றிக்  கூடத் தான் கவலைப்படுவதில்லை  என்றும்,  பார்ப்பன  சூட்சியை  வெளிப்படுத்த  தன்னுடன்  கூட  ஒத்துழைத்தால்  போதும்  என்றும் சொல்லிக்  கொண்டார்.  அதற்கெல்லாம்  சம்மதம்  கொடுத்து  அவரை  உற்சாகமூட்டிவிட்ட  தோழர்கள்  இரண்டொருவர்கள்  பார்ப்பனர்களின்  அடக்கு  முறைக்கு  பயந்து  கொண்டு  டாக்டர்  நாயுடுவை  காலை  வாரி  விட்டு  விட்டார்கள்.

வெளிப்படையாய்  எதிரிகளாகவோ,  பொறாமைக்காரர்களாகவோ  இருந்தவர்கள்  செய்யும்  காரியங்களைப்  பற்றியோ,  வையும்  வசவுகளைப்  பற்றியோ  குறை  கூறுவது  பயங்காளித்தனமாகும்.  அதற்கு  மார்பைக்  காட்ட வேண்டியதே  ஆண்மையாகும்.  ஆனால்  இந்த  மாதிரி  நம்பச் செய்து  கழுத்தை  அறுப்பது  என்பது  வெளிப்படுத்தித்  தீரவேண்டிய  காரியம்  என்பதோடு  பின்னால் மற்ற மக்களுக்கும்  ஒரு  படிப்பினைக்கு  இதை  பயன்படுத்திக்  கொள்ளச்  செய்ய வேண்டியதும்  அவசியமாகும்.

நிற்க  தோழர்  வரதராஜுலுவின்  யோக்கியதையை   தகுதியை  நிர்ணயிக்க இந்த தேர்தலே  ஒரு அளவு  கருவியாகி விடாது.

ஜர்மனியில்  ஹிட்லர்  ஜெயித்துவிட்டார்.  இன்றும்   100 தேர்தல்  வைத்தாலும்  அவரேதான்  ஜெயிப்பார்.  அதனாலேயே  அவர்  ஜர்மனி  ஜனப்பிரதிநிதியென்றோ,  அதற்குத்  தகுதியானவரோ  யோக்கியரோ  என்றோ  சொல்லிவிட  முடியுமா?  ஹிட்லரிசம்  மிரட்டி   ஓட்டு  வாங்கினால்  காந்தீயம்  (என்னும்  பார்ப்பனீயம்)  புரட்டு  பித்தலாட்டங்கள்  செய்து  ஓட்டுப்  பெறுகிறது.  இதனால்  (வெற்றி  தோல்வியில்)  மனிதர்களை  அளந்து  விட  முடியாது.

இந்த  நாட்டு  மக்களின்  இன்றைய  அறிவின்  அளவுக்கு  சாமிகள்  தாசி  வீட்டுக்குப்  போகும்  உற்சவத்தை  நிறுத்துவதற்கு  என்று  ஓட்டு  கேட்டால்  ஆயிரத்துக்கு  ஒரு  ஓட்டு  கூட  கிடைக்க மாட்டாது.  அது  போலவே  கடவுள்  பெண்களை  நிர்வாணப்படுத்தி  வேடிக்கை  பார்க்கும்  உற்சவத்தை  நிறுத்த  10,000 க்கு  ஒரு ஓட்டு  வீதம்  கூட  கிடைக்காது.  கட்டின  பணம்  பறிமுதல்  செய்யப்படுவதுடன்  பிரேரேபித்தவர்களும்  ஆமோதித்தவர் களுமாவது  ஓட்டுப் போடுவார்களா  என்பதும்  சந்தேகம்தான்.

இந்த மாதிரி  ஜனங்களிடம்  ஓட்டுப்   பெறாததினால்  தோழர்  வரதராஜுலுவின்  யோக்கியதை  போய்விட்டது  என்று  சொல்லப்படுமானால்,  வரதராஜுலு   அவர்களைப்  பற்றி  எவரும்  கவலைப்பட  வேண்டியதில்லை.

அவரவர்களுக்கு  உள்ள  யோக்கியதை  தேர்தலைப்  பொருத்து  அல்லவென்றும்,  தேர்தலில்  வெற்றி  பெற்றாலும்  தோல்வியுற்றாலும்  பொதுநலத்  தொண்டாற்ற  வேண்டிய  அளவு  தாராளமாய்  இடம்  இருக்கின்றது  என்றும் இதனால்  யாரும்  மூலையில்  உட்கார்ந்து கொள்ள வேண்டிய  அவசியமில்லை  என்றும்  தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஆனால்  கட்சி  நிலையைப்  பொருத்துப்  பார்ப்பதானால் அடுத்து  வரும்  தேர்தலில்  பார்ப்பனரல்லாதார்  கட்சி  ஜெயித்து  ஆக வேண்டும்.  காங்கிரஸ்  ஜெயித்தால்  கண்டிப்பாக  பார்ப்பனீயம்  வெற்றி  பெற்றது  என்றும்  பார்ப்பனரல்லாத  மக்கள்  நிலை  அதோ  கதி  ஆயிற்று  என்றும் தான்  முடிவு  ஏற்படும்.

ஆதலால்  தோழர்  வரதராஜுலு  நாயுடு  அவர்கள்  காங்கிரஸ்  பார்ப்பனர்கள்  ஆதிக்க  ஸ்தாபனம்  என்பதை  உண்மையாய்  உணருவார்களானால்  தைரியமாய்  அதை இன்னும்  வெளிப்படுத்தியே  ஆக வேண்டும்  என்றும்,  பார்ப்பனீயத்தை வெளியாக்கி அதை  ஒழிப்பதே  தேச  பக்தி  என்றும்  ஜீவகாருண்யம்  என்றும்  கருத  வேண்டுமென்றும்  தெரிவித்துக் கொள்கிறோம்.

பகுத்தறிவு  துணைத் தலையங்கம்  25.11.1934

You may also like...