விளம்பரப் பிரசாரம்
காங்கிரஸ் திருவிழா கூடிக் கலைந்துவிட்டது. அதன் கொள்கையினால் எவ்வித மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. ஜஸ்டிஸ் கட்சி மகாநாட்டில் அதன் நிர்வாக விதிகளில் பார்ப்பனர்களைச் சேர்க்கலாம் என்ற ஒரு மாற்றம் செய்யலாமா? வேண்டாமா? என்பதே ஒரு முக்கிய பிரச்சினையாய் இருந்து அதன் பேரிலேயே எல்லா விவாதமும் நடந்து எப்படி அம்மகாநாடு முடிந்ததோ அது போலவே காங்கிரசிலும் அதன் நிர்வாக வேலைத் திட்டத்தில் அஹிம்சை, சத்தியம், ராட்டினம், கதர் என்பன போன்ற பயனற்ற வார்த்தைகளைப் பேசுவதிலும், இயற்கைக்கு விரோதமான அனுபவ சாத்தியமில்லாத தத்துவங்களை வலியுறுத்துவதிலுமே 5, 6 நாள்கள் செலவழிக்கப்பட்டு கடைசியாக பெரும்பான்மையான ஜனங்களுக்குப் புரியாத ஏதோ சில தீர்மானங்களுடன் முடிவு பெற்றது என்றுதான் சொல்ல வேண்டி யிருக்கிறது.
இதற்குப் பொது மக்களின் பணம் சுமார் 2, 3 லட்ச ரூபாய்க்கு மேலாகவே செலவாகி இருக்கலாம். பதினாயிரக்கணக்கான மக்களுக்கு 4, 5 நாளாவது வேலை கெட்டு இந்தத் திருவிழாவில் காலங் கடத்தப்பட்டு இருக்கலாம்.
இதன் பயனாய் ஒரு சிலருக்கு விளம்பரமும், சிலருக்கு தேர்தலில் ஓட்டுப் பெறுவதற்குச் சில தந்திரங்களும்தான் பெற ஏற்பட்டது என்பதல்லாமல் மற்றபடி தேசத்துக்கோ, மக்களுக்கோ ஒரு காதொடிந்த ஊசியளவு பயனும் ஏற்பட்டதில்லை என்பதே நமது அபிப்பிராயமாகும்.
சில பத்திரிக்கைகள் “”50000 ஜனங்கள் 80000 ஜனங்கள் வேடிக்கை பார்த்தவர்கள் உள்பட காங்கிரசுக்கு வந்தார்கள்” என்பதைக் காட்டி காங்கிரஸ் ஒரு பெரிய ஸ்தாபனம் மதிப்புக்குரிய ஸ்தாபனம் என்று எழுதி மகிழ்கிறார்கள். ஜனக்கூட்டத்தை மதித்து மக்கள் ஏமாந்த காலம் மலையேறிப் போய்விட்டது.
வெறும் அழுக்கையும், சேற்றையும் அள்ளிப் பூசிக் கொள்ளும் திருவிழாவாகிய மாமாங்கத்துக்கு 3 லட்சம் 4 லட்சம் ஜனங்கள் வந்திருந்தார்கள் என்றால், ஆண்களும், பெண்களும் தங்கள் தங்கள் “”மர்ம ஸ்தானம்” அரைவாசி, முக்கால்வாசி தெரியும்படியாக வேப்பிலையைக் கட்டிக் கொண்டு காட்டு மிராண்டிகள் போல் திரியும் பெரியபாளையத்து அம்மன் திருவிழாவுக்கு 50000 பேர் லட்சம் பேர் பெண்டு பிள்ளைகளுடன் ஆண்களும் பெண்களுமாய் கூடி நசுக்கப்படுகிறார்கள், உரசப்படுகிறார்கள் என்றால் அதுவும் நல்ல “”கல்வி அறிவு” உள்ளவர்களும், பி.ஏ., எம்.ஏ., படித்தவர்களும், ராஜாக்கள், ஜமீன்தார்கள், பிரபுக்கள், வியாபாரிகள் என்பவர்களும் இந்த ஆபாசங்களில் பெண்டுபிள்ளைகளுடன் பங்கு எடுத்துக் கொள்ளுகிறார்கள் என்றால் இந்த பம்பாய் பட்டணத்துக்கு இந்தியாவெங்கும் ஆயிரக்கணக்கான பத்திரிக்கைகளும், பதினாயிரக்கணக்கான கூலிப் பிரசாரகர்களும் சேர்ந்து 100க்கு 92 பேர்கள் தற்குறிகளாக உள்ள ஜனங்களிடத்தில் புராணப் புளுகுகள் போல் பொய்ப் பிரசாரம் செய்து ஒரு கூட்டம் கூடியதில் பதினாயிரக்கணக்கில் ஆட்கள் சேர்ந்ததாலேயே இதை ஒரு அதிசயமென்றோ, அந்தத் திருவிழாவுக்கு ஒரு தனிப்பட்ட மதிப்போ, உயர்வோ இருப்பதாகவோ அறிவாளிகள் மதித்துவிடுவார்களா என்பதை நாம் எடுத்துக் காட்ட வேண்டியதில்லை.
அங்கு நடந்த விஷேஷம் என்ன? அதனால் ஏற்பட்ட பலனென்ன? என்பதுதான் இங்கு முக்கிய கேள்வியாகும்.
அங்கு நடந்ததெல்லாம் காந்தியாரின் “”பெருமை”யையும், “”மகிமை”யையும் பற்றிய விளம்பரம் அல்லாமல் வேறு என்ன நடந்தது என்பதே நமது கேள்வி.
“”காந்தியார் பொக்கவாய்ச் சிரிப்பு ஒரு மோகனாஸ்திரம் போல் எல்லோரையும் மயக்கிவிட்டது.”
“”காந்தியார் தமாஷ் பேசி எல்லோரும் சிரித்தார்கள்” “”மொட்டைத்தலைக் குல்லாயை எடுத்து வழுக்கைத் தலையில் வைத்தார்” “”பெண்களை ஆண்களுக்கு இணங்க வேண்டாம் என்று சொன்னார். யாவரும் சிரித்தார்கள்.” “”காந்தியாரின் ஆத்ம சக்தி எல்லோரையும் மயக்கிவிட்டது” என்பது போன்ற அர்த்தமற்றதும், அநாகரீகமானதுமான வார்த்தை களாலும், கருத்துக்களாலுமே காந்திஜீ விளம்பரம் நடந்ததே தவிர கடுகளவாவது அறிவுக்கு ஏற்றதோ, அனுபவத்துக்கு ஒத்ததோ, மக்களுக்கு ஏற்றதோ, மனித சமூகத்துக்குப் பயன்தரத்தக்கதோ ஆகிய வழியில் ஒரு காரியமும் நடக்கவில்லை என்பதோடு அதற்காக எவ்வித முயற்சியும் செய்யப்படவுமில்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
மூடப் பக்தியும், குருட்டு நம்பிக்கையும், மக்களுக்குப் பிரபலமாக என்னனென்ன காரியங்கள் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து தலைவர்கள் எனப்படுவோர்களும், காந்தியாரும் “”வெற்றி” பெற்றார்கள் என்பதை வெட்கமில்லாமல் பாராட்டிக் கொள்ளுவதைப் பார்க்கும்போது மனித சமூகத்தில் பொது வாழ்வில் இன்னமும் எவ்வளவு அறிவீனம் இருந்து வருகிறது என்று துக்கப்படாமல் இருக்க முடியவில்லை.
இந்தக் காங்கிரசின் வெற்றியின் யோக்கியதையை விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மக்களை ஏமாற்றி, காந்தியாரும், அவர்களது இரண்டொரு முக்கிய சிஷ்யர்களும் தங்களை விளம்பரம் செய்து கொள்ளப் பாடுபட்டு வெற்றியடைந்தார்கள் என்பதல்லாமல் வேறு ஒன்றும் சொல்ல நமக்குத் தோன்றவில்லை.
காந்தி விலகிய இரகசியம்
காங்கிரஸ் பெருமை இவ்வாறாக இனி காந்தியார் விலகிய இரகசியத்தைப் பற்றி சிறிது ஆராய்வோம்.
காந்தியார், தான் முக்கியமாய்க் கருதிய இரண்டு விஷயங்களில் அதாவது சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு என்பவைகளில் காங்கிரசின் மூலம் தோல்வியடைந்து விட்டதையும் அவற்றில் பொது ஜனங்களுக்கும் தனது அத்தியந்த சிஷ்யர்களுக்கும் நம்பிக்கையில்லாமல் போய்விட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார்.
ஆனால் சத்தியாக்கிரகம், சட்டமறுப்பு ஆகிய இரண்டும் தன் மட்டில் தோல்வியடையவில்லை என்று இன்னமும் கருதிக்கொண்டிருப்பதாய் காட்டிக் கொள்ளுகிறார்.
இந்த நிலைமையில் காந்தியார் ஒன்றா சட்ட மறுப்பு, சத்தியாக்கிரகம் ஆகியவைகளை தான் கைவிட்டு விட்டதாகச் சொல்லி காங்கிரசில் இருக்க வேண்டும். அல்லது சட்டமறுப்பிலும், சத்தியாக்கிரகத்திலும் நம்பிக்கையில்லாத காங்கிரசிலிருந்து தான் விலகிவிட வேண்டும். இந்த இரண்டிலொரு நிர்பந்தத்தில் காங்கிரஸ்காரர்கள் காந்தியாரைக் கொண்டு வந்து வைத்து விட்டதால் அவர் விலகிவிட்டேன் என்று சொல்லித் தீர வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.
அன்றியும் லார்ட் வில்லிங்டன் அவர்களும் “”சட்ட மறுப்பை அடியோடு கைவிட்டுவிட்டோம். இனி சட்டத்திற்கு அடங்கி நடக்கின்றோம் என்று சொல்லாதவரை காங்கிரஸ்காரர்களுடன் எவ்வித சம்மந்தமும் வைத்துக்கொள்ள முடியாது என்றும், அடக்குமுறைச் சட்டங்களை நீக்க (கேன்சில் செய்ய) முடியாது” என்றும், கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டதால் காங்கிரஸ்காரர்கள் உத்தியோகம், பதவி, பட்டம் முதலியவைகள் பெறுவதற்கு முடியாமல் இருந்து வருகிறதாதலால் “”சட்ட மறுப்பில் நம்பிக்கையுள்ள காந்தியார் காங்கிரசிலிருந்து விலகி விட்டார். இனி காங்கிரசு சட்டத்துக்கு உட்பட்ட சபை ஆகி விட்டது. நாங்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் நல்ல பிள்ளைகள் ஆகிவிட்டோம். ஆதலால் நாங்கள் அதிகாரம், பதவி, பட்டம், உத்தியோகம் ஆகியவைகள் பெறுவதற்கும், அடைவதற்கும் தகுதி உடையவர்கள் ஆகிவிட்டோம்” என்று சொல்வதற்கு சவுகரியம் அளிப்பதற்கும் காந்தியார் விலகித் தீர வேண்டியதாய் இருந்தது.
இந்தக் காரணங்கள் அல்லாமல் காந்தியாரின் உள்துறைச் சிஷ்யர்களின் சிஷ்யர்கள் இரண்டொருவர் சொல்லும் காரணம் மற்றொன்று என்னவென்றால், தோழர் காந்தியார் காங்கிரசில் சர்வாதிகாரியாய் இருந்து வந்ததின் பயனாய் இந்தியாவுக்குள் சமதர்மக் கொள்கையும், பொதுவுடமைக் கொள்கையும் பரவாமல் காத்து வந்தாகவும், அதன் நன்றி விசுவாசத்தை இந்த அரசாங்கம் அறியாமல் காந்தியாரைச் சர்க்கார் அவமானப்படுத்திவிட்டதால் அவர் கோபித்துக் கொண்டு விலகிவிட்டதாகவும், இதனால் இனி இந்தியாவில் சமதர்மமும், பொதுவுடைமையும் பரவிவிடும் என்றும், அப்போது அரசாங்கத்தார் தமது தவறை உணர்ந்து மறுபடியும் காந்தியாரைத் தாம்பூலம் வைத்து அழைப்பார்கள் என்றும் சொல்லி திருப்தி அடைகிறார்கள்.
இவை எப்படி இருந்தாலும் சரி, காந்தியாரின் வாய் மொழியாகவே “”காங்கிரசைப் பலப்படுத்த வேண்டும், பரிசுத்தப்படுத்த வேண்டுமென்று சொல்லி அதற்காகத்தான் அவர் விலகினார்” என்று காந்தியார் பண உதவியும், ஆதரவும் பெற்று நடக்கும் பத்திரிகைகளே கூப்பாடு போடுகின்றன.
ஆகவே இதிலிருந்து காங்கிரஸ் பலமுள்ளதாக இல்லை என்பதும் பரிசுத்தமுள்ளதாக இல்லை என்பதும் விவகாரத்துக்கு இடமில்லாத விஷயங்களாகும்.
கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து செலவு செய்தும் “”லக்ஷக்” கணக்கான மக்களை ஜெயிலுக்கு அனுப்பியும், ஆயிரக்கணக்கானவர்கள் ராஜபோகங்களைத் துறந்து சந்நியாசிகளாகியும், நூற்றுக்கணக்கானவர்கள் ஆவி விட்டும் “”உலகம் போற்றும் மகாத்மா”வினால் சர்வாதிகாரப் பதவி ஏற்கப்பட்டும் நடத்தப்பட்ட காங்கிரஸ் தோல்வியுற்றும், அதன் கொள்கைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுமிருப்பதை கௌரவமாய், கண்ணியமாய் ஒப்புக்கொண்டு அதன் முட்டாள்தனமான கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமல் “”காங்கிரசில் உள்ளவர்களிடம் நாணயமில்லை. அவர்கள் வேஷக்காரர்கள், சுயநலக்காரர்கள்” என்றெல்லாம் பாடுபட்ட ஆட்கள் மீது பழி போட்டுவிட்டு “”காங்கிரசைப் பலப்படுத்தவும், பரி சுத்தப்படுத்தவும் நான் காங்கிரசை விட்டுப் போகிறேன்” என்றால் இனி வேறு எந்த வழியில் தோழர் காந்தி பலப்படுத்தி பரிசுத்தப்படுத்தப் போகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.
காங்கிரசை விட்டுப் போகும் காந்தியாரது சிஷ்யர்கள் “”மச்சான் செத்தால் நல்லதாச்சு அவருடைய கம்பளி நமக்காச்சு” என்று சொல்வது போல் காந்தியார் போனால் போகட்டும் ஆசிர்வாதம் செய்து அனுப்பலாம். அவருடைய பெயரால் ஓட்டுப் பெற்றுப் பதவி பெறலாம் அதிகாரத்துக்குப் போகலாம் என்கின்ற கருத்திலேயே ஒவ்வொருவரும் அறிக்கை வெளியிட்டு வருகிறார்களே தவிர, வேறு ஒரு வேலைத்திட்டமோ, வேலை மாற்றமோ ஏற்படுத்தும் விஷயத்தில் கவலைப்படவேயில்லை.
இன்றைய தினம் பம்பாய் காங்கிரசுக்குச் சென்று வந்த ஒருவரை அணுகி காங்கிரசில் என்ன விசேஷம் நடந்தது? என்று கேட்டால் அவர் என்ன பதில் சொல்லக் கூடும்? “”பெரிய கூட்டம்” “”காந்தியார் விலகிப் பயணம் சொல்லிக் கொண்ட காட்சி மிகப் பரிதாபமாய் இருந்தது” “”காங்கிரஸ் பிரசிடெண்ட் ராஜேந்திர பிரசாதே காந்தியார் கால்தொட்டுக் கும்பிட்டார்” “”இந்தச் சமயத்தில் எல்லோரும் கண்ணீர் விட்டார்கள்” என்பன போன்ற பாட்டிமார்கள் வர்ணிக்கும் அணி இலக்கணப்படிதான் வர்ணிப்பார்களேதவிர வேறு என்ன சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம்.
ஒரு பெரிய தேசத்தின் இரண்டு நாளைக்கு ஒரு தடவை கூட சமையல் செய்து சாப்பிட வகையில்லாத கோடிக்கணக்கான மக்களையுடைய தேசத்தில் முக்காலேயரைக்கால்வாசி ஜன சமூகம் ஆகிய சுமார் 30 கோடி மக்களை எழுத்து வாசனை இல்லாமல் பல்லாண்டுகளாக வைக்கப்பட்டிருக்கும் தேசத்தில் தேசத்தின் செல்வமெல்லாம் கல்லுக்கும், கூத்திக்கும், கள்ளுக்கும், சாராயத்துக்கும், விவகாரங்களுக்கும், வில்லங்கங்களுக்கும் பாழாக்கிக் கொண்டு, பாடுபடும் மக்கள் பட்டினியாயும், தற்குறிகளாயும், நோயாளிகளாயும் வீடு வாசல் அற்ற லம்பாடிக் கூட்டம் போல் நிழலில் கிடப்பவர்களாயும் இருக்கும் தேசத்தில் இப்படிப்பட்ட இந்த தேசத்துக்கும், இந்த ஜன சமூகத்துக்கும் தாங்கள்தான் பிரதிநிதிகள், தாங்கள்தான் தர்மகர்த்தாக்கள், தாங்கள்தான் தேசாபிமானிகள், தாங்கள்தான் தேச பக்தர்கள், தங்கள் ஸ்தாபனம் தான் பிரதிநிதி ஸ்தாபனம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு கூட்டத்தார்களின் நடவடிக்கையும், முயற்சியும் இந்த யோக்கியத்தில் இருக்குமானால் இனி இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் என்றுதான் விமோசனம் ஏற்படப் போகிறது? என்று கேட்கின்றோம்.
கிராம வேலையின் மூலம் சுயராஜ்யம்
நிற்க, 1921ல் ஒத்துழையாமை ஆரம்பித்த காலத்தில் நிர்மாணத் திட்டத்தின் மூலமேதான் சுயராஜ்யம் அடைய முடியுமென்று தோழர் காந்தியார் சொன்னதை நம்பி எவ்வளவு காரியம் செய்யப்பட்டது என்பது வாசகர்களுக்குத் தெரியாததல்ல. அதாவது கதர், மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, இந்து முஸ்லீம் ஒற்றுமை ஆகிய நான்கு காரியங்களுக்கும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டது. லக்ஷம் மெம்பர்கள் சேர்க்கப்பட்டது. 50, 60 ஆயிரம் பேர்கள் ஜெயிலுக்குச் சென்று மூத்திரம் பெய்யும் கலயத்தில் தண்ணீர் சாப்பிடும்படியான கஷ்டங்கள் அனுபவிக்கப்பட்டன.
இந்த சம்பவங்களில் “”ஒரு வருஷத்தில் சுயராஜ்யம், 6 மாதத்தில் சுயராஜ்யம், இதோ கண்ணுக்குத் தெரிகிறது சுயராஜ்யம், அதோ கண்ணுக்குத் தெரிகிறது சுயராஜ்யம்” என்றெல்லாம் சொல்லப்பட்டு ஒரு பயனும் ஏற்படாமல் போய் கடைசியாக நிர்மாண திட்டத்துக்கு ஜெயிலுக்குப் போகும் வேலை நிறுத்தப்பட்டு பிரசாரம் ஒத்தி வைக்கப்பட்டது.
அதற்குப் பின் கதர் ஒன்றினாலேயே சுயராஜ்யம் வரும் என்று சொல்லப்பட்டு அதற்காகப் பல லக்ஷம் ரூபாய்கள் வசூல் செய்யப்பட்டு அப்போதும், இதோ சுயராஜ்யம், அதோ சுயராஜ்யம், லங்காஷயரில் பஞ்சம் வந்து விட்டது, மான்செஸ்டரில் பட்டினி ஏற்பட்டுவிட்டது, வெள்ளைக்காரர்கள் மண்டி போட்டு சுயராஜ்யங் கொண்டு வந்து கொடுக்கப் போகிறார்கள் என்று சொல்லப்பட்டது.
பிறகு அதுவும் நடக்காமல் போகவே, உப்புச் சத்தியாக்கிரகம் ஆரம்பித்து சுயராஜ்யம் பெறாமல் வீடு திரும்புவதில்லை என்று சபதம் செய்து அதற்காக ஒரு பெரிய சட்டமறுப்பும் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கும் 40 ஆயிரம் 50 ஆயிரம் பேர்கள் சிறை செல்லவும், அடிபடவும், கைகால் முறியவும், உயிர் துறக்கவுமான கஷ்டங்கள் ஏற்பட்டு கடைசியாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தால் சட்ட மறுப்பை நிறுத்திவிடுவதாக வாக்குக் கொடுத்து விடுதலை பெற்று, பின்னும் எவ்வளவோ பட்டினி கிடந்தும் ராஜிக்குப் போயும் ஒன்றும் முடியாமல் இந்த காங்கிரஸ் கூட்டி இதிலிருந்து காந்தியார் விலகும் திருவிழா நடத்தப்பட்டது என்பதோடு அத்தியாயம் முடிந்தது என்றாலும் தோழர் காந்தியார் இப்போது “”கிராம சீர்திருத்த வேலை மூலம் சுயராஜ்யம் வாங்கப் போகிறேன்” என்று புதியதொரு வாக்குத்தத்தம் அல்லது வழி சொல்லுகிறார்.
இனி இதற்கு ஒரு ஸ்தாபனம் ஏற்படலாம். இதன் பேராலும், பல லட்சம் ரூபாய்கள் வசூல் செய்யலாம். பல வேலையில்லாத ஆட்களுக்கும், சோம்பேரிகளுக்கும், பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்த இருக்கிறவர் களுக்கும் வேலையும் நல்ல ஊதியமும் கிடைக்கலாம். இதன் அனுபவம் ஜனங்களுக்குத் தெரிந்து இதுவும் பயன்படவில்லை என்பதை உணர்ந்து இந்த வேலைத்திட்டத்தை வெறுக்கவும், இந்த ஸ்தாபனத்தை அலக்ஷியமாய் கருதவும் சில வருஷங்கள் பிடிக்கலாம். அதன் பிறகு காந்தியார் யார் மீதாவது குற்றம் கூறிவிட்டு அதை விடுத்து வேறு ஸ்தாபனம் ஆரம்பிக்கலாம். அதிலும் இதே கதி அடையலாம். அப்புறம் யாராவது கேட்டால், அதாவது இந்தப்படி ஜனங்களை ஏமாற்றி மோசவார்த்தை கூறி பல லக்ஷம் வசூலித்து இப்போது இப்படி ஆகிவிட்டதே இது யோக்கியமா என்று கேட்கக் கூடிய நிலைமை ஏற்பட்டால் அதற்கும் ஒரே பதிலாக “”பணக்காரர்களிடம் உள்ள பணங்களை வசூல் செய்து ஏழைகளுக்குக் கொடுத்து உதவி செய்தேனே ஒழிய வேறில்லை” என்று ஒரே வார்த்தையில் பதில் சொல்லி விடலாம். இதுதான் முடியப் போகும் காரியமாகும் என்பதை இப்போதே சொல்லி விடுகின்றோம்.
ஆனால் இந்த 14 வருஷ காலமாய் காந்தியாரின் இந்த திருவிளையாடல்களால் இந்தியா ஒரு கடுகளவாவது பொருளாதார இயல், சமுதாய இயல், அறிவியல், தொழிலியல் ஆகிய துறைகளில் முற்போக்கில்லாமல் தேங்கி இருந்து மற்ற நாடுகளைவிட எவ்வளவோ பின்னால் தள்ளப்பட்டுப் போய்விட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.
மேல் நாட்டார்கள் இந்தியாவை பரிகசிப்பதற்கு ஒரு வார்த்தை உபயோகித்து வருகிறார்கள். அது என்னவென்றால் உலகில் மற்ற தேசம் பொருளாதாரத்தை பிரதானமாகக் கருதி உலகாயுதத் துறையில் முன்னேறிக் கொண்டு போகின்றதேயொழிய இந்தியாவைப் போல ஆத்மீகத்துரையில் சிறிதும் முன்னேறவில்லை” என்று சொல்லுகிறார்கள். இது இந்தியா இன்னமும் காட்டுமிராண்டித் தன்மையில் மிருகப்பிராயத்தில் இருந்து வருகின்றது என்று சொல்லுவதற்கு வேறு பாஷைப் பிரயோகமேயாகும்.
ஆதலால் தோழர் காந்தியார் இந்தத் தடவையாவது இந்தக் காரியத்திலாவது அதாவது தான் “”காங்கிரசை விட்டு விலகிவிட்டேன்” என்று சொல்லும் காரியத்திலாவது உண்மையாயிருந்து நாணயத்தைக் காப்பாற்றினாரேயானால், இந்தியாவுக்கு சிறப்பாக ஏழை மக்களை சோம்பேரிக் கூட்டத்தார் ஏமாற்றி வஞ்சித்து வாழும் கொடுமையிலிருந்து விடுவிக்கும் பேற்றை அடையச் செய்யலாம். உலக பந்தயத்தில் மற்ற நாடுகளோடு இந்தியாவையும் சேர்த்து ஓட வைக்கலாம். அப்படிக் கில்லாமல் காங்கிரசுக்குத் தோல்வி என்றவுடன் ஓடிவிட்டு அதற்கு செல்வாக்கு ஏற்படும்போது (கண்டிப்பாக காங்கிரசு கொஞ்சகாலத்துக்குள் செல்வாக்குப் பெறத்தான் போகின்றது என்பதும் அப்போது இன்றைய தினம் காங்கிரசைப் புகழ்ந்து புராணம் பாடி இருக்கும் பார்ப்பனர்களே காங்கிரசை வசை புராணம் பாடப் போகிறார்கள் என்பதோடு) “”தேசத்தைக் காப்பதற்காக காங்கிரசுக்கு மறுபடியும் வந்து காப்பாற்ற வேண்டு” மென்று காந்தியாரை அழைக்கப் போகிறார்கள் என்பதும் உறுதியான காரியமேயாகும். மறுபடியும் உள்ளே வந்து புகுந்து கொள்ளுவதுமான காரியங்கள் பொது நலத்துக்கு யாதொரு காரியத்தையும் செய்துவிடாது என்பதோடு கடைசியாக ஒரு நாளைக்கு இந்தத் தந்திரங்களும், சூதுகளும் காந்தியாருக்குத் தற்கொலை செய்து கொள்ளுவதற்குத்தான் காரணமாக இருக்குமே ஒழிய வேறொன்றுக்கும் சிறிதும் பயன்படாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.
பகுத்தறிவு தலையங்கம் 04.11.1934